home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

ஶ்ரீசஞ்சீவிராய பெருமாள் திருக்கோயில், மண்ணச்சநல்லூர், திருச்சி, தமிழ்நாடு


ஶ்ரீசஞ்சீவிராய பெருமாள் திருக்கோயில், மண்ணச்சநல்லூர், திருச்சி, தமிழ்நாடு

ஶ்ரீ எல். பாலகிருஷ்ணன், சென்னை


மண்ணச்சநல்லூர்

ஸ்ரீ சஞ்சிவராயன் கோயில் விமானம், மண்ணச்சநல்லூர், திருச்சி,தமிழ் நாடு மண்ணச்சநல்லூர் திருச்சியிலிருந்து பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து இங்கு வருவதற்கு பஸ் வசதியுள்ளது. வரும் வழி முழுவதும் கண்களுக்கு குளுமை தரும் பசுமை நிறைந்த வயற்காட்டை பார்க்கலாம். இந்த புறநகர் விவசாய பொருள்களின் வியாபார கேந்திரமாக இயங்குவதால் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் வியாபாரங்களை பார்க்கலாம்.

மானச்சநல்லூரில் வியாபாரம்

அருகில் இருக்கும் கிராமங்களில் விளையும் நிலவிளை பொருள்களை இங்கு கொண்டு வந்து வியாபாரம் செய்கிறார்கள். நிலவிளை பொருள்கள் வணிகமே இங்கு முக்கிய வியாபாரம். இப்புறநகரில் பல எண்ணை செக்குகள் உள்ளன. செட்டியார்கள் அரிசி, பருப்பு, எண்ணை முதலிவற்றை கொள்முதல் செய்து வியாபாரம் செய்கின்றார்கள். இவர்களுக்கு தென் இந்தியாவில் பல ஊர்களில் வியாபார சம்பந்தமான தொடர்புகள் உண்டு. பல ஆண்டுகளாக நாயக்கர்கள், கர்நாடக நவாப், பிரன்ச், ஆங்கிலேயர் என பலர் தங்களது ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்ள அருகில் இருக்கும் திருச்சிராபள்ளி, சமயபுரம் போன்ற இடங்களில் போர்புரிந்துள்ளனர். இதனால் இங்கு இருக்கும் வியாபாரிகளுக்கு பல ஊர்களில் தொடர்பு உண்டாயிற்று.

மண்ணச்சநல்லூர் திருக்கோயில்கள்

இந்த புறநகரில் பேருந்து நுழையும் பொழுது ஶ்ரீபூமிநாதர் திருக்கோயில் உங்களை வரவேற்க்கும். இக்கோயிலின் புராணத்தின் காரணமாக இவ்வூருக்கு மண்ணச்சநல்லூர் என்று பெயர் வந்தது என்பர். ஶ்ரீஆஞ்சநேயருக்கு இங்கு இரண்டு கோயில்கள் உள்ளன. முதலாவது முக்கிய மார்கொட் இருகில் இருக்கும் வன்னியர் சங்கத்தின் அருகில் இருக்கிறது. மற்றொன்று மேல அக்ரஹாரம் என்னும் இடத்தில் இருக்கிறது.

சஞ்சீவிராயனுக்கு திருக்கோயில்

ஸ்ரீ சஞ்சிவராயன் கோயில் வளாகம், மண்ணச்சநல்லூர், திருச்சி,தமிழ் நாடு முன்னூற்று ஐம்பது ஆண்டு பழைமை வாய்ந்த இந்த அனுமார் கோயில் வியாபாரிகளான செட்டியார்கள் பராமரிப்பில் உள்ளது. இந்த க்ஷேத்திரத்தில் அனுமாருக்கு "சஞ்சீவிராயர்" என்று பெயர், கோயிலுக்கு "ஶ்ரீசஞ்சீவிராய பெருமாள் திருக்கோயில்" என்று பெயர். இவை இக்கோயில் நாயக்கர் காலத்தியது என்பதனை தெரிவிக்கிறது. இத்திருக்கோயில், இப்புறநகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது, ஶ்ரீபூமிநாதர் கோயிலில் இருந்து நடக்கும் தொலைவில் உள்ளது. சுற்று சுவர்களுடனும் மூன்று நிலை உள்ள ராஜ கோபுரமும் [சற்று உயரம் குறைவானதாக இருந்தாலும் அழகாக இருக்கிறது] அதன் மேல் மூன்று கலசங்களும் கோயிலை அறிவிக்கிறது. ராஜ கோபுரம் உடைய புராணமான ஆஞ்சநேயர் கோயில்களில் இதுவும் ஒன்று. மற்றவை காஞ்சிபுரம் ஐயன்குளம், தஞ்சை வீர பிராதபன் ஆகும். நுழைவு வளையத்தில் ஶ்ரீஇராமர், சீதா பிராட்டியார் அமர்ந்திருக்க, அருகில் பரதர், சத்ருகுணன் நின்றிருக்க, அனுமாரும் லக்ஷ்மணர் பாதத்தில் அமர்ந்திருகும் புடைப்பு சிலையும், இவர்கள் எல்லோருக்கும் பக்கத்தில் விபீஷணனும் சுக்ரீவனும் நின்றிருக்கிறார்கள். மிக அருமையான கலைப்படைப்பு இது.

ஶ்ரீசஞ்சீவிராய பெருமாள் திருக்கோயில் வளாகம்

திருக்கோயிலின் வடக்கு நோக்கியிருக்கும் ராஜகோபுரம் வழியாக நுழைந்தால் கோயிலின் வெளி பிரகாரத்தில் வருவோம். கோபுரத்தின் எதிரில் பெரிய கல்தூண் உள்ளது கல்தூணையும் உள்ளடக்கி ஓடு வெய்த மேற்கூறையுடன் கூடிய பெரிய மண்டபம். மண்டபத்தின் இருந்து கிழக்கு-மேற்காக கர்ப்பகிரஹம் அமைந்துள்ளது. மண்டபத்திலிருந்தே கர்ப்பகிரஹத்தை பார்க்கலாம். கர்ப்பகிரஹத்திற்கு முன் சிறிய முன்மண்டபம் இருக்கிறது. கர்ப்பகிரஹத்தின் மேல் விமானத்தில் நான்கு மூலையிலும் கருடர் இருக்கிறார். ஶ்ரீதேவி, ஶ்ரீபூதேவி சமேத ஶ்ரீவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் விமானத்தின் மூன்று பக்கத்திலும் இருக்கிறார்.

கல் தூண்

பதினாறு பட்டையுடன் இருக்கும் இக்கல் கம்பம் தற்சமயம் கொடி கம்பம் போல் இருக்கிறது. இம்மாதரி கம்பங்கள் நாயக்கர் கால வேலைபாடு என்பதை இதே போன்று அரியலூர், மன்னார்குடி, காஞ்சிபுரம், வல்லம், ஶ்ரீரங்கம் முதலிய இடங்களில் இருக்கும் கம்பங்கள் காட்டுகின்றது. இக்கற்தூணின் மேல் இருந்த ஶ்ரீஆஞ்சநேயரின் விக்ரஹம் தற்சமயம் கர்ப்பகிரஹத்தினுள் வைத்திருக்கிறார்கள்.

கல்வெட்டு

ஸ்ரீ சஞ்சிவராயன் கோயில் வளாகம், மண்ணச்சநல்லூர், திருச்சி,தமிழ் நாடு மண்டபத்திலிருந்து முன் மண்டபத்தில் நுழைந்தால், 1704ஆண்டு தேதியிட்ட இக்கோயிலைப் பற்றிய கல்வெட்டு ஒன்று இருக்கிறது. இது இக்கோயில் மிக பழைமையானது என்பதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் பிரதிநிதிகளான நாயக்கர்கள் காலத்திலிருந்தே இக்கோயில் முன்னூரு ஆண்டுகளாக இருக்கிறது என்பது தெரிகிறது

கர்ப்பகிரஹத்தில் மூர்த்தங்கள்

முன்மண்டபத்திலிருந்து கர்ப்பகிரஹத்தில் உள்ள மூர்த்தங்களை தர்சிக்கலாம். ஶ்ரீகருடாழ்வார், ஶ்ரீஆஞ்சநேயர் [இரண்டு], நவநீத கிருஷ்ணர், நாகர். முன்னமே கூறியது போல் இங்குள்ள ஶ்ரீஆஞ்சநேயர் மூர்த்தங்களில் ஒன்று கற்தூண் மேல் இருந்தது. எல்லா மூர்த்தங்களுக்கும் பூஜை முறையே செய்யப்படுகிறது. ஶ்ரீசஞ்சீவிராயரின் உத்ஸவ மூர்த்தமும் இங்கே உள்ளது.

ஶ்ரீசஞ்சீவிராய பெருமாள்

கூப்பிய கரங்களுடன் [அஞ்சலி ஹஸ்தம்] ஶ்ரீசஞ்சீவிராயர் தரிசனம் தருகிறார். திருக்கரங்கள், திருப்பாதங்கள், மார்பு, கழுத்து எல்லா அங்களுக்கும் அணிகலங்கள் அணிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய வால் பாதத்திற்கு அருகில் சுருண்டு இருக்கிறது. பகவானின் கண்கள் மலர்ச்சியுடன் தீர்க்கமாக பக்தரை நேராக பார்க்கிறது. ஆனந்தம் கண்களில் ததும்புகிறது.

விழாக்கள்

ஶ்ரீசஞ்சீவிராயரின் உத்ஸவ மூர்த்தம் 1929ஆம் ஆண்டு செய்யப்பட்டது. சமீபத்தில் 14.09.1972 மற்றும் 20.01.2002 ஆகிய நல்நாளில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பிரதி சனிகிழமை பகவானுக்கு விசேட திருமஞ்சனம் செய்யப்படுகிறது. மார்கழியில் ஆஞ்சநேய ஜயந்தி மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் திருவோணம் அன்று ஶ்ரீசஞ்சீவிராயர் நகர் வலம் வருவார்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஶ்ரீசஞ்சீவிராய பெருமாள் திருக்கோயில், மண்ணச்சநல்லூர், திருச்சி

 

அனுபவம்
"திரியோதாக்ஷர" மந்திரத்தின் வலிமையை உணர வேண்டும், ஹனுமாரின், மகரதுவஜின் மகிழ்ச்சியை உணர வேண்டும் என்றால் பேட் துவாரகா வாருங்கள். மனமகிழ்ச்சியுடன் திரும்புவது தின்னம்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஶ்ரீ ஹநுமத் ஜயந்தி சிறப்பு பதிப்பு: டிசம்பர் 2017
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+