home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

ஶ்ரீகாலா ராம மந்திர், நாஸிக், மஹராஷ்ட்ரா

ஶ்ரீஶர்மிந்தா மாருதி, ஶ்ரீகாலா ராம மந்திர், நாஸிக், மஹராஷ்ட்ரா

ஶ்ரீசுப்பிரமணிய சுவாமி


நாஸிக்

மேற்கு தொடர்ச்சி மலையில் வடக்கு பகுதியில் தக்ணத்தில் அமைந்துள்ளது நாஸிக் என்னும் அருமையான புண்ய க்ஷேத்திரம். சுற்றியிருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைகள் இவ்விடத்தை மிகவும் ரம்யமாகவும் ரமணியமாகவும் காட்டுகிறது. முப்பையிலிருந்து 185 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இத்தலம். அருகில் இருக்கும் திரியம்பகேஸ்வரத்தில் உற்பத்தியாகும் கோதாவரி நதி கரையில் இத்தலம் அமைந்துள்ளது மிகவும் குளிர்ச்சியான சூழலில் அமைந்திருக்கும் இத்தலம் மனதிற்கு அமைதியை தரும். இராமாயணகாலத்தில் அருகிலிருக்கும் பஞ்சவடியில் சூர்ப்பனகையின் மூக்கினை லக்ஷ்மணனன் அறுத்ததால் இத்தலத்திற்கு "நாஸிக்" என்று பெயர் வந்தது [மூக்கை நாசி என்று சொல்லுவார்கள்].

பஞ்சவடி

ஶ்ரீகாலா ராமர், நாஸிக், மஹராஷ்ட்ரா கோதவரியின் வடக்கு பகுதியில் இருக்கும் நகர்பகுதியிற்கு பஞ்சவடி என்று பெயர். இங்கு ஐந்து வட விருக்ஷங்கள் [ஆல மரம்] இருப்பதால் இப்பகுதிக்கு பஞ்சவடி என்று பெயர். ஶ்ரீமத் இராமாயணத்தில் ஶ்ரீஇராமர் தனது வனவாசத்தின் பதிமூன்றாம் ஆண்டு வர்ஷருதுவிற்கு பிறகு சரத்ருதுவின் பொழுது அகத்திய மாமுனிவரை தர்சித்து பின் பஞ்சவடியில் தங்குகிறார். இங்கு ஶ்ரீஇராமர் தங்குவதற்கு வசதியாக லக்ஷ்மணர் மரத்தினாலும் புல்லினாலும் குடில் அமைக்கிறார். அங்கு வந்த இராவணனின் தங்கை சூர்ப்பனகை தனது மூக்கு அறுப்பட்டு இலங்கை திரும்புகிறாள்.

அகாடாகள்

வடநாட்டில் சாதுகள் வசிக்கும் இடத்திற்கு "அகாடா" என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு அகாடாவிற்கும் தனி தனி தலைமைகுரு உண்டு, விதிமுறைகள் உண்டு, நடைமுறைகள் உண்டு. ஒரு அகாடாவை சேர்ந்த சாது அந்த அகாடாவின் விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாக பின்பற்றுவார்கள். இப்படி ஶ்ரீநிரஞ்சனி, ஶ்ரீஜுநாதத்தா [பைரவர்], ஶ்ரீமஹாநிர்வாணி, ஶ்ரீஅவஹானா, ஶ்ரீபஞ்ச அக்னி, ஶ்ரீநாகபந்தி கோரக்நாத், ஶ்ரீவைஷ்ணவ் பைராகி, ஶ்ரீநாகபந்தி என்பன போல் பல பிரிவுகள் சாதுகள் அகாடாவில் உண்டு.

கும்பமேளா

பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை சில நதிகரைகளில் கொண்டாடபடும் மிகவும் புனிதமான மஹோத்ஸவம் கும்பமேளா என்று பெயர். குறிப்பிட்ட சமயத்தில் அந்நதியில் நீராடுவது என்பது மிக புனிதமாக கருதப்படுகிறது. பாரத தேசத்தில் பல க்ஷேத்திரங்களில் நடக்கும் இந்த புனித நீராடல் விழாவில் அகாடாவை சேர்ந்த சாதுகள் நீராட வருவார்கள். இவர்களுக்கு முகூர்த்த நேரத்தில் அந்நதியில் நீராட முன்னுரிமை வழங்கப்படுகிறது. மகராஷ்ட்ராவில் திரியம்பகேஸ்வர் மற்றும் நாஸிக்கில் கும்ப மேளா கொண்டாடப்படுகிறது.

நாகபந்தி சாதுக்களும் ஶ்ரீஇராமரும்

பல காலங்களுக்கு முன் ஶ்ரீநாகபந்தி அகாடாவை சேர்ந்த சாதுகள் கோதாவரி நதிகரையில் பஞ்சவடியில் தங்கியிருந்தனர். கோதாவரி நதியில் நீராடும் போழுது அவர்களுக்கு சில மூர்த்தங்கள் கிடைத்தன. அம்மூர்த்தங்களில் ஶ்ரீஇராமர், ஶ்ரீசீதா, ஶ்ரீலக்ஷ்மணர் ஆகியவர்கள் மிகவும் துல்யமாகவும் அழகாகவும் வடிக்கப்பட்டு இருந்தனர். சாதுகளுக்கு பஞ்சவடியில் கோதாவரியில் கிடைத்ததால் இவர்கள் பஞ்சவடியில் தானாகவே திரும்பவும் வசிக்க வந்துள்ளனர் என்பதால் இவர்களை "சுயம்பூ" அல்லது "சுயம் ப்ரகட்" என்று அழைத்தனர்.

ஶ்ரீஇராமருக்கு திருக்கோயில்

இந்த நாகபந்தி சாதுகள் ஒரு பரணசாலை [மரத்தாலும் புல்லாலும் அமைக்கப்படும் குடில்] அமைத்து அவர்கள் கண்டேடுத்த ஶ்ரீஇராமர், ஶ்ரீசீதா, ஶ்ரீலக்ஷ்மணர் ஆகியோர்களின் மூர்த்தங்களை அதில் பிரதிஷ்டை செய்து தங்கள் வழக்கப்படி பூஜை செய்ய தொடங்கினர். ஶ்ரீஇராமர் தனது வசிகரத்தால் தனது பக்தர்களை ஈர்த்ததில் வியப்பில்லை. பஞ்சவடிக்கு புனித யாத்திரை வரும் பக்தர்கள் வாயிலாக இக்கோயிலை பற்றிய புகழ் மெல்ல மெல்ல பாரதம் முழுவதும் பரவியது.

சர்தார் ஶ்ரீஒதேகர்

இதன் பின், பல நாட்களுக்கு பிறது நாஸிக் பேஷ்வாகள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியானது. பஞ்சவடியில் இருந்த ஶ்ரீஇராமர் திருக்கோயிலும் அங்கிருக்கும் ஶ்ரீஇராமரும், ஶ்ரீமாதவ ராவ் பேஷ்வாவின் தாயாரான ஶ்ரீகோபிகாபாய் அவர்களின் கவனத்தை ஈர்த்தது. தனது வாழ்நாட்களுக்குள் மெத்தஅழகிய இந்த இராமருக்கு அழகிய கோயில் கட்டவேண்டும் என்ற எண்ணம் வந்தது. தனது படை தலைவரான சர்தார் ஶ்ரீரங்க ராவ்ஜி ஒதேகர் அவர்களை இதற்கான ஏற்பாடுகளை செய்ய சொன்னார் கோபிகாபாய். அன்று இரவே ஶ்ரீஒதேகர் கனவில் ஶ்ரீஇராமருக்கு கோயில் அதே இடத்தில் தான் கட்ட வேண்டும் என்று தெரிந்தது. இதனை அவருக்கு ஶ்ரீஇராமரிடமிருந்தே வந்த கட்டளையாக பார்த்தார். தனது பாக்கியத்தை நினைத்து பூரித்த அவர் ஶ்ரீஇராமருக்கு கோயில் மிக சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் தனது கவனம் முழுவதையும் செலுத்தினார்.

நாகபந்திகள் விதித்த நிபந்தனைகள்

முதல் காரியமாக ஒதேகர் நாகபந்திகளை கூப்பிட்டு அவர்களிடம் தனது கனவினை நிறைவேற்ற உதவி கோரினார். நாகபந்திகள் சில நிபந்தனையின் பேரில் இடத்தை கோயிலுக்காக விட்டு கொடுப்பதாக கூறினார்கள். முதலாவதாக இவர்களுக்கு வாழுவதற்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும். இரண்டாவதாக ஶ்ரீதத்த மஹராஜ் அவர்களின் பாதுகை அதே அரச மரத்தடியில் இருக்க வேண்டும், அருகில் இருக்கும் ஶ்ரீமாருதியின் மூர்த்தமும் அதே இடத்தில் இருக்க வேண்டும். மூன்றாவதாக தெற்கில் இருக்கும் ஶ்ரீகணபதியின் மூர்த்தம் இடம் மாற்றக் கூடாது. நான்காவதாக கட்டப்போகும் தர்மசாலை [தங்கும் விடுதி] நாகபந்தி அகாடா சாதுகளுக்கு கும்பமேளா சமயத்தில் மட்டும் ஒதுக்க வேண்டும். சர்தார் ஒதேகர் இவர்களின் இந்த எல்லா நிபந்தனைகளையும் ஒப்புக்கொண்டார். இன்றும் கும்பமேளா சமயத்தில், நாகபந்தி அகாடா சாதுகளுக்கு தர்மசாலா ஒதுக்கப்படுகிறது.

திருக்கோயில் கட்டுமானம்

ஶ்ரீகாலா ராம மந்திர், நாஸிக், மஹராஷ்ட்ரா 1778ஆம் ஆண்டு சர்தார் ஒதேகர் ஶ்ரீஇராமருக்கான திட்டமிடப்பட்ட பெரிய அளவிலான திருக்கோயில் கட்டுமானத்தை ஆரம்பித்தார். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு 1790ஆம் ஆண்டு மிக பெரிய அழகான கற்கோயில் முடிக்கப்பட்டது. இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராம்ஸேஞ் மலையிலிருந்து எடுத்து வர பட்ட க‍ரும் கற்களால் இக்கோயில் கட்டப்பட்டது. அக்காலத்தில் இருபத்திமூன்று இலக்ஷம் ரூபாய் செலவாயிற்று. அரசிடமிருந்து பணம் வரவில்லை என்பதால் கட்டுமானத்தை ஒதேகர் நிறுத்தாமல் தனது பணத்தை செலவு செய்து பணியை தொடர்ந்தார். தங்க முலாம் பூசிய கலசம் செய்ய பணம் இல்லாத பொழுது, ஒதேகரின் மனைவி தனது "நாத்னி" என்று சொல்லப்படும் சுமங்கலிகள் மூக்கில் அணியும் வைர ஆபரணத்தை விற்க சொல்லி கணவரிடம் கொடுத்தார். ஶ்ரீஇராமருக்கான கோயில் கட்டுவதில் ஶ்ரீஒதேகரின் ஈடுபாடும் உற்சாகமும் அளப்பறியாதது, எந்த தடங்கலையும் தாண்டி வர எடுத்த முயற்சி மிகவும் பலனுள்ளதாக முடிந்தது.

திருக்கோயில் கட்டுமான சமயத்தில்

இத்திருக்கோயில் கட்டி முடிக்க பன்னிரெண்டு ஆண்டுகள் ஆயின அல்லவா? அப்பொழுது ஶ்ரீஇராமர் பரிவார விக்ரஹங்களை தற்போதய மேற்கு நுழைவாயில் அருகில் வைத்து வழிபாடுகள் தீக்ஷித் அவர்களால் நடத்தப்பட்டன. தினசரி பூஜைகளை இவர்கள் நடத்தி வந்தனர். கோயில் கட்டி முடித்த பிறகு புதிய கர்ப்பகிரஹத்திற்கு இவ்விக்ரஹங்களை எடுத்துச்செல்ல முயற்சித்தனர். ஆனால் இவர்கள் மேற்கு வாயிலில் இருந்து நகர மறுத்தனர். ஒதேகர் அச்சமயம் மிகவும் புனிதரான ஶ்ரீதிம்ய்யாபுவா கோசாவி என்னும் முனிவரை நாடி உதவி கோரினார். அப்புனிதர் அங்கு வந்து ஶ்ரீஇராமரை வணங்கி, பின் தனது [சன்யாசிகள் வைத்திருக்கும்] தண்டத்தால் அவரை வேண்டினார். பார்த்தவர் வியக்கும் வண்ணம் ஶ்ரீஇராமர் தனது பரிவாரத்துடன் தனது புது மனை [கர்ப்பகிரஹம்] செல்ல தயாராகினார். பின் ஶ்ரீஇராம பரிவாரத்தினை புதிய கர்ப்பகிரஹத்தில் பிரதிஷ்டை செய்தனர். இன்றும் அப்புனிதர் உப்யோகித்த தண்டத்தை கர்ப்பகிரஹத்தில் தரிசிக்கலாம். வெள்ளி கவசமிட்டு தண்டம் உள்ளது. பன்னிரெண்டு ஆண்டுகள் ஶ்ரீஇராமர் வழிபாடு நடந்த இடத்தில் ஶ்ரீகணேசரை பிரதிஷ்டை செய்தனர்.

கோயில் வளாகம்

கோயில் வளாகத்திற்கு நான்கு நுழைவாயில்கள் உள்ளன. கிழக்கு வாயில் வழி நுழைந்தால், கோயில் முழுவதும் மேல்வளைவுகளுடன் கூடிய கூடங்களால் சூழப்பட்டுள்ளதை காணலாம். நடுவில் பல தூண்களுடைய பெரிய நீள்மண்டபமும், அதில் பக்தர்கள் குழுவாக இருந்து பக்தி பாடலகள் பாடிய வண்ணம் இருக்க காணலாம். எழுபதற்கு முப்பது அடி இருக்கும். பக்தர்கள் பாடுவதை கர்ப்பகிரஹத்தில் மூலவரால் கேட்க முடியும். இம்மண்டபத்தின் கிழக்கில் தனி மண்டபத்தில் ஶ்ரீமாருதி இருக்கிறார். கவனித்தால் ஶ்ரீமாருதியின் கண்கள் கர்ப்பகிரஹத்தில் உள்ள ஶ்ரீஇராமரின் திருப்பாதங்களை பார்த்த வண்ணம் இருப்பது தெரியும். ஶ்ரீஇராமரின் திருப்பதத்தினை பற்றினால் அவர் மனதில் இடமுண்டு என்பதை தெரிவிக்கின்றார் இந்த ஶ்ரீதாஸ மாருதி.

இந்த மண்டபத்தை ஒட்டி வலது புறம் மற்றொரு சிறிய மண்டபம் மேல்வளைவுகளுடன் உள்ளதை கவனிக்கவும். இங்கும் ஒரு ஶ்ரீமாருதி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் இருக்கிறார். இவருக்கு ஶ்ரீஶர்மிந்தா மாருதி என்று திருநாமம்.

பின் ஶ்ரீஇராமர் கோயில், பதினான்கு படிகள் ஏறினால் ஶ்ரீஇராமரை இருக்கும் கர்ப்பகிரஹத்தை பார்க்கலாம். பதினான்கு படிகள் என்பது அவரது வனவாசத்தை குறிகின்றது. பதினான்கு படிகளை கடந்தால் ஶ்ரீஇராமரை சரணடையலாம். என்பது அடி தொலைவு என்பது ஒன்றுமில்லை, ஶ்ரீஇராமர், ஶ்ரீசீதா, ஶ்ரீலக்ஷ்மணர் நமக்கு இங்கிருந்தே காட்சி தருகிறார்கள், பஞ்சவடியில் அவர்களை பார்க்கும் பொழுது நாம் இராமயணகாலத்திற்கே சென்று விடுவோம்.

பஞ்சவடியில் ஶ்ரீஇராம பரிவாரம்

மூன்று மூர்த்தங்களும் கறுங்கல்லால் ஆனாது. இவர்கள் சிலைகள் கருப்பாக இருப்பதால் இவரை காலாராமர் என்று அழைக்கின்றனர். காலா என்றால் மராத்தியிலும் ஹிந்தியிலும் கருப்பு என்று பொருள். ஶ்ரீஇராமர் ஆயுதங்கள் ஏதுமின்றி காணப்படுகிறார். அவரது இடது திருக்கரம் மார்பின் மேல் உள்ளது, இடது திருக்கரம் அவரது தாமரை பாதங்களை "தர்ஜினி முத்திரையில்" சுட்டி காட்டுகிறது. இறைவனின் மனதில் இடம் பிடிக்க அவரை சரணமடைவோம்.

ஶ்ரீசீதா தேவியாரும், ஶ்ரீலக்ஷ்மணரும் அவரின் பக்கத்தில் காணப்படுகிறார்கள்.

கோயில் பிரதக்ஷணம்

ஶ்ரீஶர்மிந்தா மாருதி, ஶ்ரீகாலா ராம மந்திர், நாஸிக், மஹராஷ்ட்ரா ஶ்ரீஇராமர், ஶ்ரீசீதா தேவியார், ஶ்ரீலக்ஷ்மணர் ஆகியோரை தரிசித்துவிட்டு கர்ப்பகிரஹத்தின் தெற்கு வாயில் வழியாக வெளியே வரவேண்டும். நாகபந்திகள் பிரதிஷ்டை செய்துள்ள ஶ்ரீகணபதி சன்னிதி தென்மேற்கில் தெரியும். அவரை வணங்கிய பின் மேற்கு நுழைவாயில் ஶ்ரீகணபதியை தரிசிக்கலாம். இவரை வணங்கிய பின், பிரகாரத்தின் வடக்கே திரும்பவும் அங்கு அரச மரங்களை பார்க்கலாம். முதல் அரச மரத்தின் கீழ் ஶ்ரீதத்தா மஹராஜ் அவர்களின் பாதங்களை பார்க்கலாம். அம்முனிவரின் பாதங்களை நமஸ்கரித்து ஆசிகள் பெறுவோம்.

சிறு மண்டபத்தில் ஶ்ரீமாருதி

மேலும் சற்று நகர்ந்தால் மேல்வளைவுகளுடன் கூடிய சிறிய மண்டபம் தெரியும். அதில் கிழக்கு நோக்கிய ஶ்ரீமாருதியும் தெரிவார். இம்மாருதிக்கு ஶர்மிந்தா மாருதி என்று திருநாமம். இதைதான் நாம் ஶ்ரீஇராமர் கோயிலில் நுழையும் முன் பார்த்தோம். இந்த ஶர்மிந்தா மாருதியின் மூர்த்தத்தையும் ஶ்ரீதத்தா மஹராஜின் பாதம் இவை இரண்டையும் தான் நாகபந்திகள் இடமாற்றம் செய்யகூடாது என்று நிபந்தனை விதித்தனர். இவருக்கு ஶர்மிந்தா மாருதி என்று ஏன் பெயர் வந்தது என்பது மிக சுவாரசியமான புராணம்

புராணம்

இக்கோயிலில் ஶ்ரீஇராமர் கோயில் கொண்டுள்ளார் என்பது அறிந்த விசயம். ஶ்ரீதத்தா மஹராஜ் வேதாந்தத்திலும் தர்ம சாஸ்திரத்திலும் தனக்குள்ள சந்தேகங்களை ஶ்ரீஇராமரிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்வார். அப்படி ஒரு சமயம் இருவரும் வேதாந்த விசயங்களில் ஆழ்ந்திருந்த பொழுது ஶ்ரீமாருதி அங்கு வந்தார். அங்கு இருந்த நிலையை பார்த்தவுடன் தனது செய்கைக்கு வருத்தப்பட்டு நாணி அங்கிருந்து பின் வாங்கினார். இதனை சித்தரிக்கும் வகையில் இங்கு மாருதி சற்றே தலையை கவிழ்த்த வண்ணமுள்ளார். கண்களில் நாணம் குடியிருப்பதை பார்க்கலாம். இவரிடம் ஆயுதங்கள் ஏதும் இல்லை என்பதும் பார்க்கலாம். "ஶர்மிந்தா" என்றால் நாணமுற்ற என்று பொருள். அதனால் தான் இங்கிருக்கும் மாருதிக்கு "ஶர்மிந்தா ஶ்ரீமாருதி" என்று திருநாமம்.

 

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஶ்ரீகாலா ராம மந்திர், நாஸிக்

 

அனுபவம்
வாருங்கள் ஶ்ரீகாலாராமர் திருக்கோயிலுக்கு, இங்கு ஶ்ரீதாஸமாருதியும், ஶ்ரீஶர்மிந்தா மாருதியும் "ஶ்ரீஇராம நாமம்" என்னும் ஆயுதத்தை கொண்டு நமக்கு பாதுகாப்பு அளித்து ஶ்ரீஇராமரிடம் அழைத்துச் செல்ல காத்திருக்கிறார்கள்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஜூலை 2017
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+