home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

பெங்களூரூ கோட்டை, பேட்டைகள், நன்றி: விக்கி_பொது


யலங்கா கேட் ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், மைசூர் பாங்க் சர்கிள், பெங்களூரூ

டாக்டர் கௌசல்யா, பெங்களூரூ


பெங்களூரூ

பெங்களூரூ விஜயநகர சாம்ராஜ்யத்தின் அங்கமாக இருந்தது, கெம்பகௌடா (1513-1569) அவர்களின் பிரதிநிதியாக யலங்காவை தலைநகரமாக கொண்டு நிர்வாகித்து வந்தார். தனது தலைநகரை யலங்காவிலிருந்து பெங்களூரூக்கு மாற்றுவதால் உள்ள பல நன்மைகளை கவனித்த கெம்பகௌடா புதிய தலைநகரை மிகவும் கவனத்துடன் திட்டமிட்டு கோட்டையை மைய்யப்படுத்தி கட்டலானார். அனேகமாக புதிய நகரங்களை நதிகரையில் உருவாக்குவது வழக்கம். அதன்படி கெம்பகௌடா பெங்களூரூவை விருஷபவதி மற்றும் பஸ்சமவாஹினி நதிகரையில் உருவாக்கினார். விருஷபவதி பெங்களூரூக்கு மேற்கு எல்லையாக அமைத்தார்.

கெம்பகௌடாவின் பெங்களூரூ தலைநகரம்

விஜயநகர மன்னர் அச்சுதராயரின் அனுமதியுடன் புதிய தலைநகரத்தை 1527ஆம் ஆண்டு திட்டமிட்டபடி கட்ட தொடங்கினார் கெம்பகௌடா. அச்சுதராயர் இதற்காக நிதி உதவியும் செய்தார். இந்நகரம் நவீன நகரத்திற்கு வேண்டிய எல்லா வசதிகளுடன் திட்டமிட்டு கட்டப்பட்டது. [இன்றும் கெம்பகௌடா கட்டிய நகரம் பெங்களூரூவில் தனி நகரமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.] நகரத்திற்கு வேண்டிய படைதளம், குளங்கள், கோயில்கள், தனி தனி வணிகத்திற்கு தனி தனி வணிக சந்தைகள், கைவேலை கலைஞர்களுக்கு, கலை தொழிலாளர்களுக்கு, மற்ற பணி செய்பவர்களுக்கு என்று தனி தனி இடம் ஒதுக்கப்பட்டது. கோட்டை மண்ணால் ஆனது, கோட்டையை சுற்றி அகழி இருந்தது. நகரத்தின் பகுதிகளை வணிகத்துக்கு ஏற்ப அல்லது தொழிலுக்கு ஏற்ப பெயரிடப்பட்டது. அப்பகுதிகளை "பேட்" அல்லது "பேட்டா" என்று அழைப்பார்கள்.

பெங்களூரூவின் வணிக வட்டங்கள்

சிக்கா என்றால் கன்னடத்தில் சிறிய என்று பொருள், சிக்பேட் என்னும் பகுதியில் சிறிய வியாபாரங்கள் நடக்கும். பெரிய வியாபாரங்கள் தொட்டபேட்-இல் நடக்கும் [தொட்டா என்றால் பெரிய]. இப்படி நாகர்தபேட் - நகை வியாபாரம், கும்பராபேட் - குயவர்கள், அக்கிபேட் - அரிசி மண்டி, ராகிபேட் - ராகி மண்டி, காட்டன்பேட், பலிபேட் என்று பல இருந்தன. அகரஹாரா என்பது பண்டிதர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் ஒதுக்கப்பட்ட பகுதி. இன்றும் பழைய பகுதிகளில் [பேட்] வணிகம் அதுவாகவே இருக்கிறது.

பெங்களூரூவின் வாயில்களும் எல்லைகளும்

யலங்கா கேட் ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், மைசூர் பாங்க் சர்கிள், பெங்களூரூ நகரத்திற்கு இரண்டு பிரதான சாலைகள் இருந்தன. சிக்கபேட் சாலை கிழக்கு-மேற்காகவும், தொட்டபேட் சாலை தென்வடக்காகவும் இருந்தன. இவைகள் சந்திக்கும் இடம் தொட்டபேட் சதுக்கம் - என்பது அன்றைய பெங்களூரூக்கு மையமான பகுதியாக இருந்தது. கெம்பகௌடாவின் பின் இரண்டாம் கெம்பகௌடா பெங்களூரூல் பல கோயில்கள், குளங்கள் கட்டினார், கெம்பாபுரா, காரன்ஜிகரே போன்ற ஏரிகளும் வெட்டப்பட்டது. நகரத்திற்கு நான்கு காவல்மாடங்கள் கட்டினார், இவைகள் நகரத்தின் எல்லையை குறிப்பவைகளாக விளங்கின. இதை தவிர நகரத்திற்கு ஒன்பது வாயில்கள் கட்டினார். இவ்வாயில்கள், எந்த ஊரை நோக்கியுள்ளதோ அதன் பெயரால் அந்த வாயில்கள் அழைக்கப்பட்டன. கிழக்கில் உல்சூர் வாயில், மேற்கில் சொடிகோப்பா, வடக்கில் யலங்கா, தெற்கில் ஆனேகல் வாயில்கள் என இந்நான்கு வாயில்களும் பிரதான வாயில்களாக இருந்தன. மற்றவை வர்தூர், சார்ஜாபூர், கனகனஹல்லி, கேங்கிரி, யசவந்புரா ஆகியவை.

யலங்கா வாயில்

கெம்பகௌடாவின் பழைய தலைநகரமான யலங்காவிற்கு செல்ல உபயோகப்படும் வாயில் யலங்கா வாயில் என்பது தொட்டபேட் சாலையில் வடக்கு எல்லையில் இருந்தது. தொட்டபேட் சாலை என்பதை ஆங்கிலேயர்கள் காலத்தில் அவின்யூ ரோட் என்று மாற்றிவிட்டனர். யலங்கா வாயில் இன்றைய கெம்பகௌடா சாலையும் அவின்யூ சாலையும் சந்திக்கும் இடத்தில் இருந்தது. இன்று இந்த சந்திப்பை, மைசூர் பேங்க் [இன்று பாரதிய ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்] கட்டிடம் அருகாமையில் இருப்பதால் "மைசூர் பேங்க் சர்கிள்" என்றே அழைக்கிறார்கள். இருந்தும் அங்கு அக்காலத்தில் கட்டப்பட்ட ஶ்ரீஆஞ்சநேயருக்கான திருக்கோயிலை "யலங்கா கேட் ஆஞ்சநேயர் கோயில்" என்றே அழைக்கின்றனர்.

யலங்கா கேட் ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில்

யலங்கா கேட் ஶ்ரீஆஞ்சநேய சுவாமி, மைசூர் பாங்க் சர்கிள், பெங்களூரூ வாஸ்து சாத்திரப்படி பெங்களூரூ திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ளது. வடமேற்கில் நீர்நிலையமாக ஏரி வெட்டப்பட்டு தர்மாமம்புதி என்று அழைக்கப்பட்டது [இன்று இது மத்திய பஸ் நிலையமாக உள்ளது.] மற்றும் கிராம தேவதை ஶ்ரீஅன்னிம்மா [கபாலி திரைஅரங்கம் அருகில்] கோயில் கட்டப்பட்டது. விஜயநகர் சாம்ராஜ்ஜியத்தின் அங்கங்களான எல்லா ஊரிலும் ஶ்ரீஆஞ்சநேயருக்கு கோட்டைக்கு வாயிலிலும் ஊரின் எல்லையிலும் கோயில் அமைப்பது வழக்கம். பெங்களூரூ இதற்கு விதிவிலக்கல்ல. நகரத்தினை திட்டமிடும் போதே ஶ்ரீகாலி ஆஞ்சநேயர் கோயில் மேற்கு எல்லையில் இருந்தது. வடக்கு வாயிலாக யலங்கா கேட் இருந்தது. இங்கும் ஶ்ரீஆஞ்சநேயருக்கு திருக்கோயில் பெங்களூரூவின் காப்பாளராக கட்டப்பட்டது. பெங்களூரூ வாஸ்து சாத்திரப்படி கட்டப்பட்டதாலேயே இன்றும் புகழ் மங்காமல் விளங்குகிறது போலும்! யலங்கா கேட் திருக்கோயில் மிகவும் எளிமையான கோயில். கோயிலில் மூன்று சன்னிதிகள் உள்ளன. பிரதானமான சன்னிதி ஶ்ரீஆஞ்சநேயருடையது. இச்சன்னிதியின் இடதுபுறம் ஶ்ரீமஹாலக்ஷ்மி சமேத ஶ்ரீமந்நாராயணரை தர்சிக்கலாம். வலதுபுற சன்னிதியில் ஶ்ரீமஹாலக்ஷ்மியை தர்சிக்கலாம்.

யலங்கா கேட் ஶ்ரீஆஞ்சநேய சுவாமி

இந்த க்ஷேத்திரத்தில் ஶ்ரீஆஞ்சநேய சுவாமி ஈசான்யத்தை [வடகிழக்கு] நோக்கி அமைந்துள்ளார். மூர்த்தம் சுமார் மூன்று அடி உயரம் இருக்கும். மூலவர் எதிரிகளை எச்சரிக்கும் வண்ணம் தனது இடது திருப்பாதத்தை முன் வைத்துள்ளார். இது "சத்ரு சம்ஹாரம்" என்று கூறுவர், வலது திருப்பாதம் பூமியிலிருந்து சற்றே தூக்கி, நடக்க தயார் நிலையில் உள்ளது. திருப்பாதங்களை தண்டை அலங்கரிக்கிறது. அவரது இடுப்பில் "கடி சூத்திரம்" கட்டியிருக்கிறார். கச்சம் அணிந்துள்ளார். பிரம்மசாரியான அவர் மார்பினை பூணூல் அலங்கரிக்கிறது. அவரது இடையில் ஊன்றியுள்ள இடது திருக்கரத்தினில் கதையை பிடித்துள்ளார். கதை "பிரயோக" நிலையிலுள்ளது. அதாவது உபயோகிக்க தயார் நிலையில் உள்ளது. அவரது வலது திருக்கரம் தோளுக்கு மேல் உயர்ந்து "அபய முத்திரை"இல் உள்ளது. இருதிருக்கரங்களிலும் கங்கணம் காணப்படுகிறது. பிரணவ அக்ஷரத்தை போல் உள்ள வால் தலைக்கு மேல் எழும்பியுள்ளது. வளைந்த வாலின் நுனியில் சிறிய மணியுள்ளது. தோள்பட்டைகளை அணிகலங்கள் அலங்காரிக்கின்றன. மார்பினை மூன்று மணிமாலைகள் அலங்கரிக்கின்றன. அவரது கேசம் அழகாக முடிந்து இருக்கிறது. அவர் திருவாய் கோர பல் அலங்கரிக்கிறது. எதிரிகளுக்கு இவரை பார்த்தமாத்திரத்தில் பயம் ஏற்படும். ஆனால் பக்தர்களுக்கு ஒவ்வொரு அங்க அசைவிலும் விசேடத்திலும் இவருடைய அபயம் தெரியும். அபயம் அளிப்பவர் இவர் என்பது அவரது கண்களில் ஒளிரும் கருணையை உறுதிப்படுத்தும்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     யலங்கா கேட் ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், பெங்களூரூ

 

அனுபவம்
யலங்கா ஶ்ரீஆஞ்சநேயரின் கண்களை தரிசித்து, அவரது கடாக்ஷத்தை பெற்ற பக்தர் எல்லாம் தனது குறிகோளை நோக்கி முன்னேற ஊக்கம் பெறுவார்கள் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: நவம்பர் 2017
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+