ஸ்ரீ பிரசன்ன வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், மஹாலஷ்மி லே அவுட், பெங்களூரு.


மஹாலஷ்மிபுரா
மைசூர் மஹாராஜா காலத்தில், பெங்களூரை ஒட்டியுள்ள மஹாலஷ்மிபுரா என்கிற இடம், சேனைகளுக்கு துப்பாய்க்கி பயிற்சி முகாமாக இருந்தது. அங்கு உயர்வான இடத்தில், மிக பெரிய அளவில் ஒரு அழகான பாறை செங்குத்தாக நின்றுக் கொண்டிருந்தது. அப்பாரையின் கம்பீரம் அனைவரையும் கவர்ந்தது.

பெங்களூர் நகரம் விரிவு படுத்தப்பட்ட போது மஹாலஷ்மிபுரா என்ற இந்த இடம் வரை விரிந்தது, இவ்விடம் மஹாலஷ்மி லே அவுட் என்று பெயரிடப்பட்டது. குன்றுகளின் நடுவில் அமைந்திருக்கும் இந்த மாபெரும் பாறையும் இருக்கும் இடமும் சுற்றியுள்ள இடமும் அரசாங்கதினால் பொது இடமாக விடப்பட்டது.

மஹாலஷ்மி, மஹாலஷ்மி லே அவுட், பெங்களூரு, Sri Mahalakshmi, Mahalakshmi layout, Bangaluru

ஸ்ரீ ஆஞ்சநேயர் ஓவியம்
அப்படி மக்கள் வசதிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தின் ஈசான்ய மூலையில்(வடகிழக்கு) இந்த பாறை அமைந்தது. வாஸ்து சாஸ்திர படி ஈசான்யம் தெய்வீகமாக கருதப்படுகிறது. இங்கு குடி வந்த மக்கள் இதை உணர்ந்து ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமியின் உருவத்தை 22 அடி உயரமுள்ள அப்பாறையில் வரைந்து, அவ்வோவியத்திற்கு ஸ்ரீபிரஸன்ன வீர ஆஞ்சநேயர் என்று பெயரிட்டனர். 1973ஆம் ஆண்டு ஸ்ரீராமநவமி திங்கள் முதன்முறையாக இந்த வரைபடத்திற்கு பூஜை செய்யப்பட்டது. மக்களின் ஆர்வம் பெருகியது. மக்கள் ஒரு குழு அமைத்து, ஓவியத்தை சிலை ரூபம் கொடுக்க தீர்மானித்தனர். அரசாங்கத்திடம் மனு கொடுக்க அதற்கான அனுமதியும் பெற்றனர். இச்சிலை வடிக்கும் பொருப்பை ஸ்ரீசண்முகானந்த ஸ்தபதி அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. வடிக்கப்பட்ட ஸ்ரீபிரசன்ன வீர ஆஞ்சநேய ஸ்வாமிக்கு பிராண பிரதிஷ்டை, பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ சிவபால யோகி அவர்கள் முன்னிலையில் நடந்தது.

ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு கோயில்
வான்நோக்கி திகம்பர கோயிலிலேயே சில நாட்கள் குடி இருந்தார். அவருக்கு கோயில் கட்ட திர்மானித்து, 1977 மார்ச் 27 திங்கள் அன்று கைலாச ஆஸ்ரம பூஜ்ய ஸ்ரீஸ்ரீ திருச்சி ஸ்வாமிகள் அவர்கள் முன்னிலையில் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நடப்பட்டது. ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு 40 அடிக்கு 40அடியில் மூல கோயிலும், அதன் சற்று பின் மூன்று சன்னதிகளும் கட்டப்பட்டன. நடு சன்னதியில் பளிங்கினாலான ஸ்ரீராம, இலக்ஷ்மண, சீதா, ஆஞ்சநேயர்கள் வீற்றுள்ளனர். மற்ற இரு சன்னதியில் ஒன்றில் ஸ்ரீ அபய ஹஸ்த கணபதியும், மற்றதில் ஸ்ரீலஷ்மி தேவியும் வீற்றுள்ளனர். 1985 ஜூன் 10ம் திங்கள் அன்று ஆறறை அடி உயரமுள்ள தாமிர கலசம் விமானத்தில் பதிக்கப்பட்டது. பூஜ்ய ஸ்ரீஸ்ரீ அபிநவ ராமநாத சரஸ்வதி அவர்களின் திருக்கரத்தால் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

ஸ்ரீ பிரசன்ன வீர ஆஞ்சநேயர்
40 அடிக்கு 40 அடி உள்ள பிரதான கோயிலில் 22 அடி உயரத்திற்கு ஸ்ரீ பிரசன்ன வீர ஆஞ்சநேயர் கம்பீரமாக எழந்தருளியுள்ளார். விகாரம் 40 அடி உயரம், அதன் மேல் கோபுரம் 41 அடி உயரம், மொத்தம் 81 அடி உயரத்தில் கலசநுனி. ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி நின்ற மேனியில் தனது வலது கையில் மருந்து மலையும், இடது தொடையில் ஊன்றிய மறுகையில் கதையை பிடித்தவாறு மிக அழகாக காட்சி தருகிறார். அவரது கொஞ்சும் கேசங்கள் அழகாக முடிச்சிடப்பட்டுள்ளது. அவரது மார்பிலே ஸ்ரீராமரின் விக்கிரகம் பதிக்கப்பட்டுள்ளது. காதில் குண்டலமும், கழுத்திலே மணி ஆரங்களும், புஜங்களில் ஆபரணமும், கைகளிலே கங்கணமும், வலது முழங்காலிலே அழகான ஆபரணமும் அதில் அசைந்தாடும் மணியும், கால்களில் சதங்கையும், ஸ்ரீ பிரசன்ன வீர ஆஞ்சநேய ஸ்வாமி காண கண்கொள்ளா காட்சி. அவரது கம்பீரம் நம்மை தழுவி, நமக்கு உற்சாகத்தை ஊட்டுகிறது. இத்தனை உயரமாக இருந்தும் அவரது கடாக்ஷம் நம் மீது விழுந்து நம்மை அமைதிப்படுத்தி ஆறுதல் சொல்லி ஆட்கொள்கிறது.

பிரசன்ன வீர ஆஞ்சநேயர், மஹாலஷ்மி லே அவுட், பெங்களூரு, Prasanna Anjaneya, Mahalakshmi layout, Bangaluru

கோயில் வளாகம்
பதிமூன்று ஏக்கர் நில பரப்பில் கட்டபட்டுள்ள இந்த கோயில் மஹாலஷ்மிக்கு தனியாக ஒரு சன்னதி உண்டு. பன்னிரெண்டு அடி உயரமுள்ள அவள் ஐந்து அடி உயரத்திற்கு செதுக்கப்பட்ட மலர்ந்த தாமரை மீது அமர்ந்து நமக்கு அருள் பாலிக்கிறாள். இந்த ஊரின் பெயரே மஹாலஷ்மிபுரா அல்லவா? கொடிமரத்தில் அருகில் இரண்டு சிறிய மாடங்கள். ஒன்று ஸ்ரீ அபய ஹஸ்த கணபதி சன்னதியின் எதிரில் உள்ளது. மாடத்தில் வௌ஢ளை எருக்கும், மாடத்தின் எட்டு பக்கதிலும் அஷ்ட கணபதிகள் உள்ளனர். மற்றது ஸ்ரீலஷ்மி தேவியின் சன்னதியின் எதிரில் உள்ளது. மாடத்தில் துளசியும், மாடத்தின் எட்டு பக்கதிலும் அஷ்ட லஷ்மிகளும் உள்ளனர். கோயில் அருகில் தியான மண்டபம், அதில் கோதண்டராமரும் தியான ஆஞ்சநேயருடன் மிக அழகாக அமைக்கப் பட்டுள்ளது. அருகாமையில் மிகப்பெரிய நூலகம் கணக்கில் அடங்கா புத்தங்கள்.

சமூக சேவை
இலவச மருத்துவ வசதி, இலவச கண் அறுவை சிகிச்சை, நோயாளிகளுக்கு தங்க வசதி என்று ஏராளமான சமூக சேவையில் ஈடுபட்டுள்ளது கோயில் நிர்வாகம்.

அடுத்த முறை பெங்களூர் சென்றால் இந்த கோயிலுக்கு சென்று ஸ்ரீ பிரசன்ன வீர ஆஞ்சநேய ஸ்வாமியின் அருளை பெறுங்கள்.


ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே