home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

ஶ்ரீவீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், அரகொண்டா, சித்தூர் மாவட்டம், ஆந்திர பிரதேசம்

ஶ்ரீவீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், அரகொண்டா, சித்தூர் மாவட்டம், ஆந்திர பிரதேசம்

ஶ்ரீ ஜி.வி.ர.குப்தா, கண்ணமங்கலம், வேலூர்


இராமயணகால இலங்கை போர்

சீதாபிராட்டியாரை திரும்ப அனுப்புமாறு இராவணனிடம், அவன் சகோதரன் விபீஷணன் வரை எல்லோரும் எடுத்துரைத்தார்கள். ஆனால் நல்ல ஆலோசனைகள் யாவையும் செவிடன் காதில் விழுந்தது போல் வீணாகின. இராவணன் சீதாபிராட்டியாரை திரும்ப அனுப்புவதில் எந்த இச்சையும் காண்பிக்கவில்லை. அதனால், திறமை மிக்க படையுடன் வந்த ஶ்ரீஇராமருடன் மாயா சக்தியுடன் கூடிய ராக்ஷச படையை கொண்ட இராவணன் போர்புரிய வேண்டி வந்தது.

போர் ஆரம்பித்ததிலிருந்து இராவணன் தன் படையில் பல திறமைசாலிகளையும், பல பலசாலிகளையும் இழந்தான்; ஶ்ரீஇராமரின் படை வெற்றியின் அருகாமையில் இருந்தது. அப்படியிருந்தும் இராவணன் சமரசம் பேச தயாராகயில்லை. தனது எஞ்சியிருக்கும் ஒரே மகன் மேகநாதன் என்னும் இந்திரஜித்தை ஆசீர்வதித்து போர்களத்திற்கு அனுப்புகிறான்.

போர்களத்தில் இந்திரஜித்

இராவணனின் மைந்தன் மேகநாதனுக்கு, தேவர்களின் தலைவன் இந்திரனையே வெற்றி கண்டான் என்பதால் இந்திரஜித் என்று பெயர் வழங்கலாயிற்று. போர்கலையில் வல்லவனான இந்திரஜித் பறைகள் முழங்க போர்களத்திற்கு ஆடம்பரமாக வருகிறான். எதிரிகளில் ஶ்ரீஇராமனை ஹனுமாரும், ஶ்ரீலக்ஷ்மணனை அங்கதனும் தூக்க, போர்முனையில் முந்தி நின்று இருந்தனர். நீலன் பின்படையை காத்து வந்தான். இராமனையும் லக்குவனையும் நேருக்கு நேர் போரிட்ட இந்திரஜித் இவர்களின் போர் திறமையை கண்டு ஆச்சரியப்பட்டான். இருந்தும் அவன் மனதில் தனது உடன்பிறப்புகளையும், மாமன், சின்ன அப்பாகளையும் அழித்தவர்கள் இந்த சகோதர்களே என்பது அவனது வேகத்தையும் இவர்களை வெல்ல வேண்டும் என்னும் வேட்கையையும் அதிகரித்தது. லக்குவனுடன் நீண்ட நேரம் போர் புரிந்த இவன் தனது மாயா சக்தியினால் போர்களத்திலிருந்து மறைகிறான். சூரிய மேற்கில் விழும் சமயம் இராமன், லக்குவனிடம் போர் புரிய கூறி வெளியேறுகிறார். அரண்மனை வந்த இந்திரஜித் மஹேந்திரனை களம் இறங்க சொல்கிறான்.

தொடரும் போர்

ஶ்ரீவீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், அரகொண்டா, சித்தூர் மாவட்டம், ஆந்திர பிரதேசம் இராவணனின் படையை மஹேந்திரனும், ஶ்ரீஇராமரின் படையை லக்குவனும் வழிநடத்த போர் நடக்கிறது. அகம்பன் என்னும் அரக்கனுடன் அனுமார் போர் புரிந்து கொண்டிருந்தார். அகம்பனை அழித்த பின் அனுமார், ராவணனின் படையினால் நான்கு திக்கிலும் சூழப்பட்டிருந்த லக்குவனுக்கு உதவ செல்கிறார். அச்சமயம் லக்குவன் பாசுபதாஸ்த்திரத்தை பிரயோகம் செய்து, இராவணனின் படையினை அழிக்கிறார்.

பிரம்மாஸ்த்திர பிரயோகம்

லக்குவன் பாசுபதாஸ்த்திரத்தினை பிரயோகம் செய்த செய்தி ராவணனையும், இந்திரஜித்துக்கும் எட்டியது. லக்குவன் மீது பிரம்மாஸ்த்திரத்தை பிரயோகம் செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டதாக இந்திரஜித் தீர்மானித்து போர்களம் புறப்படுகிறான். தனது மாயா சக்தியினால் தான் அரூபியாக இருந்து கொண்டு, மஹேந்திரனை இந்திரனின் ரூபம் கொள்ள செய்து வானரங்களுடன் போர் புரிய வைக்கிறான். லக்குவனும் வானரங்களும் தங்களுடன் இந்திரன் போர் புரிவதை நம்ப முடியவில்லை. அச்சமயம் பார்த்து இந்திரஜித் ஶ்ரீஇராமரின் படையை நோக்கி பிரம்மாஸ்த்திரத்தை பிரயோகம் செய்கிறான்.

பிரம்மாஸ்த்திர பிரயோகத்தின் பின் விளைவு

சோகம் என்பது சிறிய சொல், பிரம்மாஸ்த்திரத்தின் கடுமையை வர்ணிக்க. கம்பர் கணக்கற்ற கோடி அம்புகள் லக்குவனையும், கோடி கணக்கான அம்புகள் அனுமாரையும், கணக்கற்ற ஆயிரம் அம்புகள் அங்கதன், நீலன் மற்றும் ஏனையரையும் கட்டுபோட்டிருந்தது என்கிறார். மகிழ்ச்சியில் இந்திரஜித் போர்களத்தில் நடந்ததை சொல்ல ராவணனிடம் செல்கிறான்.

தனது படை பிரம்மாஸ்த்திரத்தால் அடிபட்டிருப்பதை, ஶ்ரீஇராமர் காண்கிறார். காண சகிக்க முடியாத காட்சி இது. இராமர் ஒவ்வொரு வீரர்களையும் முகாம்களையும் பார்த்த வண்ணம் வரும்பொழுது, லக்குவன் அம்பு குவியலிடை வீழ்ந்திருப்பதை பார்க்கிறார். சோகத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார், தன் தம்பியை இந்த நிலையில் பார்க்க அவரால் முடியவில்லை. கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து, பின் மூர்ச்சையும் ஆகிவிடுகிறார் ஶ்ரீஇராமர்.

இக்காட்சியினை கண்ட ஒற்றன் ராவணனிடம் சென்று இராமரும், லக்குவனும் பிரம்மாஸ்த்திரத்திற்கு பலியாகிவிட்டதாக சொல்கிறான். உண்மை என்று நம்பி ராவணன் அசோகவனம் சென்று சீதாபிராட்டியாரை புஷ்பக விமானத்தில் அழைத்து வந்து, போர்களத்தில் வீழ்ந்து கிடக்கும் சகோதர்களை காண்பித்து, சீதாபிராட்டியாரின் சோகத்தை சீண்டிவிடுகிறான்.

அனுமாரும் விபீஷணனும்

சிரஞ்சீவியான விபீஷணன் பிரம்மாஸ்த்திரம் பிரயோகிக்கப்பட்ட போர்களம் வந்து நடந்ததின் விளைவுகளையும், நட்டங்களையும் கவனிக்கிறார். முதலில் தன் கவனத்தை அனுமார் எங்குள்ளார் என்பதில் செலுத்தி, மூர்ச்சையாகியிருந்த அனுமாரை மூர்ச்சை தெளிவிக்கிறார். பின் இருவரும் நீண்ட ஆயுளை கொண்ட ஜாம்பவானை தேடுகின்றனர். பாதி நினைவிலிருந்த ஜாம்பவான் விபீஷணை பார்த்ததும், அனுமார் எங்கிருக்கிறார் என்று முதலில் வினவுகிறார். அனுமாரை கண்ட ஜாம்பவான் "நாம் எல்லோரும் எழுவோம், நிச்சயம் எழுவோம்" என ஆனந்த படுகிறார். ஜாம்பவான் மூலிகை மருந்தினைப் பற்றி கூறுகிறார், தோலையும் அதனால் உடலையும் காக்க வல்ல மருந்து மூலிகை நீல மலையில் கிடைக்கும் என்பதையும் தெரிவிக்கிறார்.

மருத்துவ மலை [சஞ்சீவி மலை]

மருந்தின் அவசியத்தையும், காலத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு அனுமார் பேருருவம் கொண்டு கடலை பின் தள்ளி வானிலே பறக்கலானார். கடலை தாண்டி, பாரத பூமியை கடந்து, ஹிமாலத்தை அடைந்தார். தேவர்களையும், இறைவனையும் வந்தித்து மருந்துமலை அடைந்தார். பொன்னிறமாக இருந்த அனுமார், வருங்கால அயன், இறப்பில்லா சிரஞ்ஜீவி நீலமலையினை கண்டார். இருளுக்கு அடைகலம் கொடுத்தது போல் கருப்பு நிறமுடையதாக அம்மலை காணப்பட்டது. வந்ததின் நோக்கம் அறிய அவா என்றனர் காக்கும் தேவர்கள். அனுமார் காரணம் கூறிய பின், மருந்து மலையினை எடுத்த இடத்தில் திரும்ப வைக்க வேண்டும் என்பதுடன் தேவர்கள் வழிவிட்டனர்.

அனுமார் மருந்து மலையினை பெயர்த்து எடுத்து, வந்த வழியே பாரத பூமியை கடந்து லக்குவனை காக்க வேண்டி, இலங்கையில் போர்களம் நோக்கி சென்றார். அங்கு லக்குவனை உயிர்பித்து, மற்றும் இதரவானரங்களை உயிர்பித்து, காயங்களை ஆற்றி, விளங்கா அங்கங்களை சரி செய்தது மருத்துவ மலையிலிருந்த மூலிகைகள். தேவர்களின் வாக்குக்கு இணங்க மருத்துவ மலையினை அதன் இடத்தில் திரும்ப வைத்தார் அனுமார்.

மருத்துவ மலையின் பிஞ்சுகள்

சஞ்சீவி பர்வதம் எனப்படும் மருந்து மலையை அனுமார் எடுத்து இலங்கை நோக்கி வருகையில் அம்மலையிலிருந்து, சில பல சிறிய, சற்றே பெரிய மலை பிஞ்சுகள் பாரத பூமியில் பல இடங்களில் விழுந்ததாக கருதப்படுகிறது. அப்படி பட்ட ஒரு மலைபிஞ்சு தற்பொழுதைய தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் விழுந்துள்ளது. அரகொண்டா என்று அழைக்கப்படும் இந்த இடம் ஆந்திராவிலுள்ள சித்தூர் அருகில் தாவனம் பள்ளி மண்டலில் உள்ளது. அரகொண்டா என்றால் தெலுங்கு மொழியில் அரை [பாதி] மலை என்று பொருள். ஸம்ஸ்கிருதத்தில் இதனி அர்த்தகிரி என்று அழைக்கிறார்கள். மிகவும் பிரபலமான கனிப்பக்கம் விநாயகர் திருக்கோயிலில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அரகொண்டா.

சஞ்சீவிராய புஷ்கரணி

சஞ்சீவிராய புஷ்கரணி, அரகொண்டா, சித்தூர் மாவட்டம், ஆந்திர பிரதேசம் அரகொண்டா என்று அழைக்கப்படுகிறது. சிறிய மலை தான். சுமார் இருபது நிமிடங்களில் ஏறிவிடலாம். அனுமாரின் திருக்கோயிலுக்கு முன் அழகிய புஷ்கரணி [திருக்குளம்] இருக்கிறது. இதனை "சஞ்சீவிராய புஷ்கரணி" என்று அழைக்கின்றனர். இத்திருக்குளத்தில் எப்பொழுதும் நீர் இருக்கும், வற்றுவதில்லை.

இத்திருக்குளத்தின் நீருக்கு மருத்துவ குணங்கள் பல உள்ளது எனப்படுகிறது. டி.பி. போன்ற வியாதிகளையும் குணப்படுத்தும் என்கிறார்கள். நாங்கள் இங்கிருந்து எடுத்து வந்த நீர் நான்கு மாதம் வரை கெடவில்லை.

ஶ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில்

இம்மலை சுமார் முன்னூறு அடி உயரம் இருக்கும். திருக்குளத்தை அடுத்து திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த க்ஷேத்திரத்தில் சுமார் முன்னூறு ஆண்டுகள் முன்னிருந்தே ஆஞ்சநேயருக்கு திருக்கோயில் இருக்கிறது. இங்கு ஶ்ரீஆஞ்சநேயர் கோயிலும், புஷ்கரணியும் தான் முக்கியமாக கருதப்படுகிறது. இருந்தும் தற்பொழுது சிறிய விநாயகர் கோயிலும், அனுமார் கோயிலுக்கு எதிரில் இருக்கும் மலையில் அய்யப்பனுக்கும் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. ஶ்ரீவீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில் சிறிதாக இருந்தாலும் பழமை மாறாது பவித்திரமாக அதே சமயம் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.

ஶ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி

ஶ்ரீவீர ஆஞ்சநேய ஸ்வாமி, அரகொண்டா, சித்தூர் மாவட்டம், ஆந்திர பிரதேசம் கர்ப்பகிரஹத்தில் மூலவர் ஶ்ரீவீர ஆஞ்சநேய ஸ்வாமி வடக்கு நோக்கி கௌபீனத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். செப்பு கவசம் பொற்றப்பட்ட திருமேனி சுமார் மூன்று அடி உயரம் இருக்கும். மூலவரின் அத்துனை அம்சங்களும் செப்பு கவசத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. மிக நேர்த்தியான வேலைபாடுகளுடன் இருக்கிறது. வலது திருக்கரம் அபய முத்திரையும், இடது திருக்கரத்தில் சௌகந்திகா புஷ்பத்தையும் தரித்துள்ளார். 300-400 ஆண்டுகள் முந்திய ஆந்திராவில் காணப்படும் ஆஞ்சநேய சிலாரூபங்களில் இருப்பது போன்று வால் தலைக்கு மேல் சென்று வாலின் நுனியில் சிறிய மணியுடன் காணப்படுகிறது. காதினின் குண்டலங்கள் உள்ளன. மார்பினை மணிமாலைகள் அலங்கரிக்கின்றன. பளபளக்கும் கண்கள் ஆசிகளை அளிக்கிறது.

விழாக்களும் தினசரி வழிபாடும்

காலை ஐந்தரை மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை திருக்கோயில் திறந்திருக்கும். சுமார் ஐம்பது அல்லது அறுபது பக்தர்கள் ஒரு சமயம் கர்ப்பகிரஹத்தின் முன் இருக்கும் மண்டப்பத்தில் அனுமதிக்கப் படுகிறார்கள். அஷ்டோத்திரம் சொல்லப்படுகிறது, துளசியும், துளசி தீர்த்தமும் பிரஸாதமாக கொடுக்கப்படுகிறது. பக்தர்கள் துளசி மாலையும் வெற்றலை மாலையும் இறைவனுக்கு அர்பணிக்கிறார்கள். பௌர்ணமி அன்று பக்தர்கள் அதிகமாக வருவார்கள் என்பதால் இரவு பதினொரு மணி வரை திருக்கோயில் திறந்திருக்கும்.

செல்வது எப்படி

சித்தூரிலிருந்து கனிபாக்கம் வழி அரகொண்டா செல்ல பஸ் வசதி உள்ளது. தமிழ் நாடு வேலூரிலிருந்து சித்தூருக்கு பஸ் வசதி உள்ளது. மலைஅடிவாரம் அடைந்தால் இருபது நிமிடத்தில் நடந்து ஏறி விடலாம், இல்லையேல் ஆட்டோகள் இருக்கிறது. மலை உச்சியில் சில சிறிய பெட்டி கடைகள் உள்ளன. படங்கள், புஷ்பங்கள், மாலைகள், குளிர் பானங்கள், காபி, டீ விற்க்கப்படுகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீவீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், அரகொண்டா, சித்தூர்"

 

அனுபவம்
அரகொண்டா சஞ்சீவிராயனின் கடாக்ஷம் நமக்கு நோய்யற்ற சீரிய வாழ்வை கொடுக்கும்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஏப்ரல் 2017
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+