home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

ஶ்ரீமன்கி ஹனுமான் திருக்கோயில், கௌஸலி, ஹிமாசல பிரதேசம்

டாக்டர் ஶ்ரீ நிதின் ஸிந்ஹா எம்.டி.[M.D.]*


கௌஸலி

கௌஸலி என்னும் அருமையான அழகான மலைபிரதேசம் ஹிமாசல பிரதேசத்தில் கால்காவிலிருந்து 40 கி.மீ தொலைவிலும், சண்டிகரிலிருந்து 65 கி.மீ. தொலைவிலும் உள்ளது. கால்கா வரை இரயில் வண்டியில் சென்று, அங்கிருந்து பஸ்ஸிலோ அல்லது டாக்ஸியிலோ கௌஸலியை சுமார் ஒன்னரை மணி நேரத்தில் அடையலாம். சிம்லாவை விட கௌஸலியில் மிக அழகான, பார்க்க பல இயற்கை காட்சிகளுடன், அதே சமயம் மிக எளிமையான மக்களையையும் சந்திக்கலாம். கால்காவிலிருந்து நான் டாக்ஸியில் பயணித்த பொழுது, அது ஒரு தனி அனுபவமாகவே இருந்தது. கண் கொள்ளா இயற்கை காட்சிகள், இனிமையான இளம் குளிர் காற்று, அதைவிட பேரானந்தம் தருவது - என்னை தழுவி சென்ற மேக கூட்டங்கள். மேக கூட்டங்களிடையே நாம் புகுந்து செல்வது என்பது மிக மிக புதிய மறக்க முடியாத அனுபவம். சிம்லாவை போல் கௌஸலி பெரிய கோடை தலம் இல்லை, இங்கு காணுவதற்கு என்று தனியாக ஒன்றும் இல்லை. ஆனால் இந்த தலம் நமக்கு நல்ல அமைதியையும் ஓய்வையும் கொடுக்கும் இடம். பதற்றத்திலிருந்து விடுபட்டு, நம் நரம்புகளுக்கு நல்ல ஓய்வு கொடுக்க முடியும்.

மன்கி பாய்ன்ட், கௌஸலி

மன்கி பாய்ன்ட் என்பது கௌஸலியில் இருக்கும் ஒரு குன்றின் உச்சி முனை. மன்கி என்னும் ஹனுமார் பக்தர், இம்மலை உச்சியில் ஹனுமாருக்காக கோயில் கட்டினார். அதனால் அவர் பெயராலேயே இம்மலை உச்சியை மன்கி பாய்ன்ட் என்று அழைக்கப் படுகிறது. ஆனால் மக்கள் இதனை மங்கி (monkey) பாய்ன்ட் என்றே அழைக்கின்றனர். உள்ளூர் வாசிகள் கூப்பிடும் விதத்தில் மன்கி பாய்ன்ட் என்றும் கோயிலை ஹனுமானா கோயில் என்றும் அழைப்பதே உச்சிதம் என்பேன். கௌஸலி பஸ் நிலயத்திலிருந்து மன்கி பாய்ன்ட் சுமார் நான்கு கி.மீ. தொலைவு இருக்கும். இங்கிருந்து டாக்ஸிகள் கிடைக்கும். ஒரு டாக்ஸிக்கு ரூ.400/ரூ500 என்று வாங்குகிறார்கள். சில பக்தர்கள் மலை உச்சி வரை நடந்தே செல்கிறார்கள்.

மன்கி பாய்ன்ட்க்கு பிரயாணம்

கீழிருந்து வந்த டாக்ஸி மன்கி பாய்ன்ட்டில், விமானப் படையின் விமான தளத்து நுழைவு வாயிலில் விட்டுவிட்டது. விமான தளத்தின் உள்ளே தான் ஹனுமானா கோயில் உள்ளது. புகைபடத்துடன் கூடிய அடையாள அட்டை இருந்தால் தான் உள்ளே போக முடியும். அதிர்ஷ்ட வசமாக என்னிடம் அடையாள அட்டை இருந்தது. நீங்கள் மறக்காமல் அடையாள அட்டை எடுத்து வரவும்.

தாங்கள் எடுத்து செல்லும், மொபைல், கமிரா முதலியவைகளை விமான தள நுழைவாயிலிலேயே பாதுகாப்பாக வைத்துவிட வேண்டும்.

மன்கி பாய்ன்ட் நமக்கு கண்ணுக்கு இப்பொழுது தெரிகிறது. சுமார் அரை கி.மீ. உயரத்தில் உள்ளது கோயில். குன்றின் கீழ் விமான படையினரின் மனைவியர்களால் நடத்தப்படும் சிறிய சிற்றுண்டிசாலை உள்ளது. டீ,காபி, முதலியன கிடைக்கின்றன. கோயில் உள்ள குன்று மிகவும் செங்குத்தான ஏற்றம்.

அந்த அரை கி.மீ. தூரமும் வைஶ்ணவ தேவியில் உள்ளது போல், மேலே கூரை கிடையாது. பாதையும் சற்று கரடு முரடாகவே இருக்கும். பாதையின் இருபுறமும் இருக்கும் பாறைகளில் சற்றே இளைபாரலாம் அவ்வளவே. பாறைகளில் ’ராமசந்திர மானஸ்’இல் இருந்து ஸ்லோகங்கள் எழுதியுள்ளார்கள். வழியில் நிறைய குரங்குகள் உள்ளன. ஆனால் அவைகளுக்கு நாம் எதையும் புசிக்க கொடுக்க வேண்டாம் என்பது உள்ளூர் வாசிகளின் வேண்டுகோள்.

மலையுச்சி

மலையுச்சியை அடைந்த பிறகு, உச்சி இடது பாதத்தின் வடிவில் இருப்பது தெரியும். மலையுச்சியை ஶ்ரீஹனுமானாவின் கால் பதிந்து இப்படி ஆனதாக கூறப்படுகிறது. சஞ்சீவி பர்வதத்தை எடுத்து செல்கையில் ஶ்ரீஹனுமானாவின் கால் இம்மலையுச்சியில் பதித்ததினால் இப்படி ஆனது. அப்படி பதிந்த பாதத்தின் குதிகால் இருக்கும் இடத்தில் அவருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. மன்கி என்னும் பக்தரால் கட்டப்பட்டது இக்கோயில். கோயில் பக்கத்தில் ’ஹெலி பாட்’ [helipad] உள்ளது. நம்மால் ஶ்ரீஹனுமானாவின் இடது திரு பாதத்தின் கட்டை விரல் பதிந்த இடம் வரை செல்ல முடியும்.

மன்கி பாய்ன்ட் ஶ்ரீஹனுமானாவுக்கு திருக்கோயில்

மேக கூட்டத்தின் இடையில் அமைந்திருக்கும் இக்கோயிலை காணும் பொழுது சொர்கத்தில் இருப்பது போன்ற உணர்வே மேல் தூக்கி நின்றது. காண்பது நிஜமாகவே இருப்பதால், ஶ்ரீஹனுமானா வாயுபுத்திரன் என்பதை தெள்ளத்தெளிவாக தெரிவிப்பதுப் போல் இருந்தது. அங்கு கோயில் கொண்டிருக்கும் ஶ்ரீஹனுமானாவின் சிலாரூபம் தனது இடது திருக்கரத்தில் சஞ்சீவி மலையையும், வலது திருக்கரத்தில் கதையும் வைத்துள்ளார். கோயிலில் சிறிய சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கோயில் அருகில் சிறிய சிற்றுண்டிசாலை உள்ளது. மேலே ஏறுவதும், கோயிலில் இருந்தது, கீழே இறங்கியது எல்லாம் எனக்கு இரண்டு மணி நேரம் ஆகியது.

நம்புங்கள். மலையுச்சியை அடைந்த பிறகு, நீங்கள் திரும்பி வர விரும்ப மாட்டீர்கள். அருமையான சுகமான மெல்லிய காற்றும், மன்கி பாய்ன்ட் வாயுபுத்திரனின் அருளாட்சியும், தாங்களை ஆனந்தத்தில் ஆழ்த்திவிடும். சொர்க்கம் என்பது தனியா?

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீமன்கி ஹனுமான் திருக்கோயில், கௌஸலி"

 

அனுபவம்
மன்கி பாய்ன்ட் வாயுபுத்திரனின் அருளாட்சி தாங்களை ஆனந்தத்தில் ஆழ்த்திவிடும். சொர்க்கம் என்பது இதுதான்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: பிப்ரவரி 2017
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020 | the author is practicing medicine in Delhi


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+