ஶ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த
கேரே ஶ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில்
சிங்கேரி, கர்நாடகா

ஶ்ரீ ஜி.கே.கௌசிக்

சிங்கேரி
மேற்கு தொடர்ச்சி மலைகளிடையே அமைந்துள்ள மலைகளாலும், காடுகளாலும், நதிகளாலும் சூழப்பட்ட மிக அருமையான இடங்களை பார்க்க கண்கள் ஆயிரம் வேண்டும். சயத்திரி மலை தொடரில் அமைந்துள்ள சிங்கேரி மிகவும் புனிதமான க்ஷேத்திரம். இந்த க்ஷேத்திரத்தில் ஶ்ரீ ஆதி சங்கரர் மடம் ஒன்று நிறுவியுள்ளார்.

துங்கா நதியின் கரையில் அமைந்துள்ளது இப்புனித க்ஷேத்திரம். துங்கா நதியின் நீர் இவ்விடத்தில் ஸ்படிகம் மாதரியும், மிகவும் இனிமையாகவும் இருக்கும். ரிஷ்யசிங்க மஹரிஷியின் பெயரில் ரிஷ்யசிங்க மலை என்பதின் சுருக்கமே சிங்கேரி.

மஹரிஷி ஶ்ரீரிஷ்யசிங்கர்
விபாண்டக முனிவர் கடும் தவத்தில் இருந்தார். தவத்தின் வலிமையால் அவரது தேஜஸ் மிக உன்னதமாகவும் உக்கிரமாகவும் இருப்பதை கண்ட இந்திரன், அவரது தவத்தினை கலைக்க எண்ணி தனது சபையின் நர்தகியான ஊர்வசியை அவரின் தவத்தினை கலைக்க அனுப்பி வைத்தான். ஊர்வசியும் தனக்களிக்கப் பட்ட வேலையை செய்து முடித்தாள். ஆதன் விளைவாய் இவர்களுக்கு ஒர் மகன் பிறந்தான். அக்குழந்தை தலையில் மான் கொம்புடன் பிறந்தது ஆதலால் ரிஷ்ய சிங்கர் [ருஷ்ய சிங்கர்] என்று அழைக்கப்பட்டார். ஊர்வசி தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றிய பிறகு இந்திர லோகம் திரும்பினாள். பூலோகத்தில் விபாண்டக முனிவர் பெண்களை நம்புவது இல்லை என்ற முடிவுக்கு வந்தார். அதன் காரணமாக தனது மகன் ரிஷ்யசிகரை பெண் வாசனையில்லாமல் வளர்க்க முடிவு செய்து காட்டு பகுதியில் வளர்க்களானார். ரிஷ்ய சிங்கர் பெண் வாசனையே இல்லாமல் வளரலானார்.

மஹரிஷி ஶ்ரீரிஷ்யசிங்கர்

அருகிலிருக்கும் ராஜ்யத்தை ரோமபாதர் என்னும் அரசர் ஆண்டு வந்தார். அப்பிரதேசத்தில் மழையின்மையால் வறச்சி தலைவிரித்தாடியது. அங்கு நிலவும் வறச்சியை போக்க ரிஷ்யசிங்கர் போன்ற மிக தபவலிமைமிக்க முனிவர்களால் தான் முடியும் என்று அரசபை பண்டிதர்கள் கூறினார்கள். அதன்படி அரசர் விபாண்டக முனிவரை பல முறை வேண்டியும், திரும்ப திரும்ப முயற்சிகள் செய்த பின், அவர் ரிஷ்யசிங்கரை அவர்கள் ராஜ்யத்திற்கு அனுப்ப சம்மதம் தெரிவித்தார். ரோமபாதரின் ராஜ்யத்தில் ரிஷ்யசிங்கரின் புனிதமான கால் பட்டதும் கனத்த மழை பெய்ய ஆரம்பித்தது. சில நாட்களில் வரட்சி தீர்ந்தது, அரசன் தன் மகிழ்ச்சியையும் நன்றியும் தெரிவிக்கும் விதத்தில் தனது மகள் சாந்தாவை அவருக்கு திருமணம் செய்து வைத்தார்.

ரிஷ்யசிங்கர் ரோமபாதரின் ராஜ்யத்தில் இப்படி இருக்கும் சமயத்தில்தான் புத்திர காமேஷ்டி யாகத்தை நடத்தி வைக்க தசரத மகாராஜா அழைப்பு விடுத்தார். அவர் செய்த யாகத்தின் பலனாக தசரதருக்கு நான்கு தவதிரு புதல்வர்கள் பிறந்தனர்கள். சில வருடங்கள் கழித்து ரிஷ்யசிங்கர் தனது பிரதேசத்துக்கு திரும்பவும் தவத்தை மேற்கொள்ளவும் முடிவு செய்தார்.

அவர் நீண்ட தவத்திற்கு பிறகு அவரால் வழிபாடு செய்யப்பட்ட உருவற்ற லிங்க வடிவினில் சரணடைந்தார். சிங்கேரி அருகாமையில் சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள கிங்கா என்னும் இடத்தில் இன்றும் ரிஷ்யசிங்கர் சித்தி பெற்ற சிவ லிங்கத்தை தர்சிக்கலாம். இப்படி போற்ற தக்க மகானின் பெயரில் இவ்வூர் சிங்கேரி என்று அழைக்கப்படுகிறது.

புனித மிகு சிங்கேரி, கர்நாடகா
ரிஷ்யசிங்கரால் புனிதமான பூமியினை ஶ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அவர்கள் தன் காலத்தில் உருதிப்படுத்தினார். பகவத்பாதாள் தனது அத்வைத சித்தாந்தத்தை பரப்புவதற்காக நிருவிய பீடங்களில் ஒன்றினை இவ்விடத்தில் நிருவினார். மஹிஷிபுரத்தினை சேர்ந்த ஶ்ரீகுமாரில பட்டின் சீடரான ஶ்ரீமண்டல மிஶ்ரா அவர்களுடன் தனது அத்வைத சித்தாந்தத்தை முன் வைத்து வாதாடினார்.

மண்டல மிஶ்ரா பிரம்மாவின் அவதாரம் என்றும், அவரது மனைவியார் உபய பாரதி அவர்கள் சரஸ்வதி தேவியின் அவதாரம் என்றும் போற்றப்படுபவர்கள். பகவத்பாதளுக்கும் மண்டல மிஶ்ராவிற்கும் தர்க்கம் நடக்கவிருந்த நிலையில் நடுவராக இருக்க உபய பாரதியை இருவரும் வேண்டினர். தர்க்கத்தின் முடிவில் பகவத்பாதாள் அத்வைத சித்தாந்ததம் பலம் வாய்ந்தது என்பதனை மண்டல மிஶ்ரா ஒப்புக்கொண்டார். பகவத்பாதாள் அவர்களையே தனது குருவாகவும் அவர் ஏற்றுக்கொண்டார். அவர் சந்யாசம் வேண்டிய பொழுது, அவர் மனைவியார் உபய பாரதி தனது சுயரூபமான சரஸ்வதி தேவியாக காட்சி அளித்து தன் கணவர் சந்யாசியாகி விட்டதால் தான் பூலோகத்தை புறப்பட தயாராகி விட்டதாக அறிவித்தார். ஶ்ரீசுரேஶ்வராசார்யார் என்ற சந்யாஸ்ரம பெயருடன் பகவத்பாதளை மண்டல மிஶ்ரா பின் தொடர்ந்தார். உபய பாரதி அவர்களை பின் தொடர்ந்து வருவாள் என்றும் அவர்கள் திரும்ப பார்க்க வேண்டாம் என்றும் எங்கு அவர்கள் திரும்பி பார்க்கிறார்களோ அங்கு அவள் தனது சுயரூபத்திற்கு [சரஸ்வதி] மாறுவாள் என்பதும் நிச்சயக்கப் பட்டது.

ஶ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள்

ஶ்ரீபகவத்பாதாளும் சிங்கேரியும்
அத்வைத சித்தாந்தத்தை நிலைநிருத்த இருவரும் பல பல இடங்களுக்கு சென்றனர். உபய பாரதி என்னும் சரஸ்வதி அவர்களை பின்தொடர்ந்து வருகிறாள் என்பதனை அவளது சதங்கை ஒலி உறுதிபடுத்திய வண்ணம் அவர்களுக்கு கேட்டுக்கொண்டிருந்தது. கோடையின் உச்சத்தில் ஒரு மதிய வேளையில் அவர்கள் சிங்கேரிக்கு வந்து சேர்ந்தனர். துங்கா நதியில் நீராட சென்ற இடத்தில் அவர்கள் கண்ட காட்சி மிக பிரமிப்பாக இருந்தது. உச்சி வெய்யலில் நதி கரையில் ஓர் தவளை பிரசவ நேர வேதனையில் இருப்பதையும், தவளையின் இயற்கையிலேயே எதிரியான ஓர் நாகம் படமெடுத்து அந்த தவளைக்கு குடைபிடித்துக் கொண்டு வெய்யலின் கொடுமையை தணித்தது.

இயற்கையிலேயே எதிரியான தவளையும் நாகமும், பசுவும் புலியும் இந்த பிரதேசத்தில் ஒற்றுமையுடன் வாழ்வதை கண்ட பகவத்பாதாள் இப்பகுதி மிக புனிதமான பூமி என்று எண்ணியவண்ணம் திரும்பினார். முன்பே தீர்மானித்தபடி உபய பாரதி என்னும் சரஸ்வதி, சிங்கேரியில் துங்கா நதிகரையிலேயே ஸ்திரமாகிவிட்டாள்.

சிங்கேரி ஶ்ரீசாரதாம்பிகை திருக்கோயில்
ஶ்ரீசங்கர பகவத்பாதாள், உபய பாரதி ஸ்திரமான அவ்விடத்தில் ஶ்ரீசாரதாம்பிகையை பிரதிஷ்டை செய்தார்கள். அவ்விடத்தில் அத்வைத சித்தாந்தத்தை அவனிக்கு எடுத்துச் சொல்ல ஶ்ரீசுரேஶ்வராசாரியாவின் கீழ் மடம் ஒன்று நிருவினார்.

ஞானத்தின் உருவான ஶ்ரீசாரதாம்பிகையை, ஶ்ரீசங்கர பகவத்பாதாளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஶ்ரீசாரதாவை சிங்கேரியில் தரிசிக்க இன்று ஆயிரம் கோடி மக்கள் வருகிறார்கள். சிங்கேரியின் எல்லையை குறிக்கும் நான்கு மூலைகளில் ஶ்ரீசங்கர பகவத்பாதாள் ஶ்ரீகால பைரவர், ஶ்ரீவன துர்க்கா, ஶ்ரீகாளிகாம்பா, கேரே ஶ்ரீஆஞ்சநேயர் ஆகிய மூர்த்தங்களையும் பிரதிஷ்டை செய்துள்ளார்கள். இத்தெய்வங்கள் எல்லோராலும் பூஜிக்கப்பட்டு வருகிறது. எல்லையில் உள்ள இம்மூர்த்தங்கள் சிங்கேரியையும், ஶ்ரீசாரதாம்பிகை கோயிலையையும் எப்படி அன்னியர்கள் பிடியிலிருந்து காத்து வந்திருக்கிறார்கள் என்பது ஓர் சரித்திர உண்மை.

சிங்கேரியில் ஶ்ரீ ஆஞ்சநேயர்
ஶ்ரீசங்கர பகவத்பாதாள் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரே ஆஞ்சநேயர் இவர் தான். சிங்கேரியின் மேற்கு மூலையை பாதுகாக்கும் அவர் ’கேரே ஶ்ரீஆஞ்சநேயர்’ என்று புகழுடன் அழைக்கப்படுகிறார்.

இன்று சிங்கேரியின் புதிய பேரூந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். தற்போதய பேரூந்து நிலையம் இருந்த இடத்தில் பெரிய ஏரி இருந்தது. ’கேரே’ என்றால் கன்னடத்தில் கரை என்பது பொருள். ஏரிகரையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஶ்ரீஆஞ்சநேயரை ’கேரே’ ஶ்ரீஆஜ்சநேயர் என்று புகழுடன் அழைப்பது வழக்கமாயிற்று.

’கேரே’ ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில்
காலப்போக்கில் ’கேரே’ ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டினார்கள். இன்று நாம் இருப்பத்து ஏழு படிகள் ஏறினால் கோயில் பிரகாரத்தை அடையலாம். முன்னால் நீண்ட திறந்த வெளி. பின் நீள வாட்டில் பெரிய சந்நிதி. நடுவில் ஶ்ரீஆஞ்சநேயருக்கு கர்பகிரஹம். மிக எளிமையான கோயில்.

கேரே ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில்,சிங்கேரி, கர்நாடகா

கேரே ஶ்ரீஆஞ்சநேயர்
இப்புனித க்ஷேத்திரத்தில் கேரே ஶ்ரீஆஞ்சநேயர் சிறிய மூர்த்தமே ஆயினும் ஆகர்ஷ்ணம் மிகுந்தவராக அமைந்துள்ளார். தெற்கு நோக்கி இருக்கும் பகவான், கிழக்கு நோக்கி நடப்பது போல் காணப்படுகிறார். இடது திருக்கரத்தில் தாமரை புஷ்பத்தை வைத்துள்ளார், இறைவனின் வலது திருக்கரம் அபய முத்திரை தரித்து பக்தர்களுக்கு ஆசிகளை அளிக்கிறது. இரு திருக்கரங்களிலும் கேயூரங்கள் அணிந்திருக்கிறார். வளைந்து மேல் நோக்கி அமைந்துள்ள வாலின் நுனியில் சிறிய மணியுள்ளது. முன் நிற்கும் பக்தனின் கவனத்தை ஈர்ந்து இழுக்கும் ஒளிமயமான கண்கள். நம்மை மறக்க வைக்கும் உருவமாக காட்சி அளிக்கிறார் ஶ்ரீ ஆஞ்சநேயர்.

பூஜைகளும் வைபவங்களும்
வைதீக முறையில் இங்கு பூஜைகள் செய்யப்படுகிறது. பிரதி சனிகிழமை தீபோத்ஸவம் நடத்தப்படுகிறது. கிருத்திகா மாதம் கிருஷ்ணபக்ஷத்தில் பதினைந்து நாட்கள் வருடம்தோறும் உத்ஸவம் நடத்தப்படுகிறது. காலை ஒன்பது முதல் பன்னிரண்டு மணி வரையிலும், மற்றும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை திருக்கோயில் திறந்திருக்கும்.

அனுபவம்
மெய்சிலிர்க்கும் அனுபவத்தை தருவது சிங்கேரி க்ஷேத்திரம். ஶ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் அனுகிரத்தை இங்கு நாம் நன்கு உணர முடியும். ’கேரே’ ஶ்ரீ ஆஞ்சநேயரின் மகத்தான ஆசிகளை பெற்று அமைதியும், சாந்தத்தையும் பெறுவோம் என்பது தின்னம்.

தமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி
அக்டோபர் 2016

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.


காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே