ஶ்ரீகோபிநாத சுவாமி திருக்கோயில் இரட்டை ஆஞ்சநேயர்,
பட்டீஸ்வரம், கும்பகோணம், தமிழ் நாடு

ஶ்ரீ ஜி.கே.கௌசிக்

பழயாறை
கும்பகோணத்திற்கு அருகாமையிலுள்ள பழயாறை ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்களின் தலைநகரமாக செயல் பட்டுவந்தது. அக்காலத்தில் சோழர்களால் கட்டப்பட்ட சீறிய கோயில்கள் பல அருகாமையில் இருந்தது. அக்காலத்தில் மிக சிறப்பாக இருந்த சோழர்கள் தலைநகரமும், கோயில்களும் இன்று அதிகம் காணப்படவில்லை. பல இடங்களில் தொன்மை மிகு கோயில்களின் சிதைவுகளே காணப்படுகின்றன. ஶ்ரீ சோமநாதர், வடதளி என்னும் வள்ளளார், கீழாட்டை, மீட்றளி போன்ற தொன்மையான கோயில்களின் மிச்சங்களே இன்றைய பழயாறை பகுதிகளில் நமக்கு பார்க்க கிடைக்கின்றன. சமய குறவர்களால் பாடல் பெற்ற பட்டீஸ்வரம், சக்தி முத்தம், தாராசுரம், திருநல்லூர் திருகோயில்களும் பழயாறையை சுற்றியே அமைந்துள்ளது. சோழர்கள் தங்கள் தலைநகரை தஞ்சாவூருக்கு மாற்றிய போதும் பழயாறையின் மீது இருந்த அக்கரை குறையவில்லை.

ஶ்ரீகோபிநாத சுவாமி திருக்கோயில்,பட்டீஸ்வரம், குமபகோணம், தமிழ் நாடு இன்றய பட்டீஸ்வரம், சக்திமுத்தம் திருக்கோயிலை சுற்றியுள்ள இடங்களே அன்றய பழயாறை. ஒன்பதாவது நூற்றாண்டில் பல திருக்கோயில்கள் சோழர்களால் இங்கு சிவனை முதற்கொண்டு கட்டப்பட்டாலும், விஷ்ணுவை பிரதானமாக கொண்டு கோயில் ஒன்று எழுப்பியுள்ளனர்.

அப்படி மிக பிரம்மாண்டமாகவும், மிகுந்த கலை நயத்துடனும் கட்டப்பட்ட கோயில் தான் ஶ்ரீகோபிநாத சுவாமி திருக்கோயில். பல திக்குகளில் ஏழு இராஜகோபுரங்களுடன் கூடிய திருக்கோயில் என்றால் அதன் பரப்பளவை ஊகித்துக்கொள்ளலாம். மூன்றாம் குலோதுங்கன் காலம் உள்பட எல்லா சோழ மன்னர்களாலும் சீரும் சிறப்புமாக பராமரிக்கப்பட்டு வந்தது இக்கோயில். பல மன்னர்கள் தங்கள் காலத்தில் பல மண்டபங்களை கட்டி வைத்துள்ளனர். மாலீகாபுரின் படையெடுப்புக்கு பின்பும், விஜயநகர மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டுள்ளது இக்கோயில்.

ஆனால் இன்றைய நிலை வேறுபட்டது. பட்டீஸ்வரத்தினை நோக்கி அமைந்துள்ள கோயில் கோபுரத்தின் ஏழு அடுக்குகளில் முதல் இரண்டு அடுக்குகளே உள்ளது, அவைகளிலும் செடிகளும், புதர்களும் மண்டிகிடகிகிறது. கோயிலின் பின்புறம் மற்றொரு இராஜகோபுரம் இருந்ததற்கான அடையாளமாக அதன் எச்சம் உள்ளது. ஶ்ரீருக்மணி, சத்யபாமா உடனுரை அருள்மிகு கோபிநாதர் ஆகியோர் இருக்கும் மூலஸ்தானம் கோயிலில் கர்பகிரஹம், முன் மண்டபம் ஆகியவைகளை சற்றே பழுதுபார்த்திருக்கிறார்கள். இக்கோயில் பட்டீஸ்வரம் கோயில் நிர்வாகத்தின் கீழ் வருகிறது.

ஶ்ரீஆஞ்சநேயரும் ஶ்ரீபீமனும்
வாருங்கள் சற்று இக்கோயிலின் தலபுராணத்தை நினைவு கூறுவோம். மகாவிஷ்ணு ஸ்ரீஇராமராக அவதரித்து மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதனை நமக்கு படிப்பித்தார். அவரை உதாரணமாகக் கொண்டு அவர் அடி பின்பற்றி முழுமையாக அவரிடம் சரணடைந்து தன்னையே அர்பணித்தவர் ஸ்ரீ ஆஞ்சநேயர். அவதார காலம் முடிந்து ஸ்ரீஇராமர் வைகுண்டம் சென்றபொழுதும் அவரின் கீர்த்தனங்களை கேட்டு மகிழ்ந்து அவ்வானந்தத்தில் திளைக்க வேண்டி ஸ்ரீஇராமருடன் வைகுண்டம் செல்ல மறுத்து இவ்பூவுலகில் இருப்பவர் ஸ்ரீ ஆஞ்சநேயர். யுகம் யுகமாக சிரஞ்சீவியாக இருப்பர் ஶ்ரீ ஆஞ்சநேயர்.

ஶ்ரீஆஞ்சநேயரும் ஶ்ரீபீமனும் மகாபாரதகாலத்தில் பாண்டவர்கள், கௌரவர்களின் கட்டாயத்தால் வனவாசம் சென்றனர். கானகத்தில் அவர்கள் இருந்தப் போது பாஞ்சாலி மிக நளினமான சுகந்தமான வாசனை குறிப்பிட்ட திசையிலிருந்து வருவதை உணர்ந்து பீமனிடம் கூறினாள். அவ்வாசனை தெய்வீக மலரான ஆயிரம் இதழ்கள் கொண்ட ஸஹஸ்ரதள பங்கஜம் என்னும் புஷ்பத்திலிருந்து சௌகந்திகா [சுகமான மணம்] வருவதாக பீமன் கூறினான். தனக்கு அம்மலர் வேண்டுமென பாஞ்சாலி வேண்டினாள். பீமன் சுகந்தமான வாசனை எங்கிருந்து வருகிறதோ அந்த திக்கில் பயணித்தான். கோபிநாத சுவாமி கோயில் தற்போது உள்ள இடத்தில் இருந்த தடாகத்திலிருக்கும் ஸஹஸ்ரதள பங்கஜத்திலிருந்து வருவதை பீமன் கண்டான். மலரை எடுக்க சென்ற பாதையில் நடுவில் தடங்கலாக ஒரு வானரம் படுத்திருந்தது. பீமன் தான் ஸஹஸ்ரதள பங்கஜ புஷ்பத்தினை தேடி செல்வதாகவும் வானரத்தை வழி விடுமாறும் கூறினான். தான் ஒரமாக படுத்திருப்பதால் பாதையில் நடக்க தான் தடங்கலாக இல்லை என்று கூறியது அவ்வானரம். இதை கேட்ட பீமன் வெகுண்டான். தான் முதியவன் என்பதால் தன் வாலை கூட தான் நகர்த்தமுடியவில்லை அதனால் தன் வாலை நகர்த்திவிட்டு மேலே செல்லக்கூறியது அவ்வானரம். அவ்வானரத்தின் வாலினை நகர்த்திவிட்டு மேலே செல்ல பீமன் தலைப்பட்டான். ஆனால் வானரத்தின் வாலினை பீமனால் நகர்த்த முடியவில்லை. பீமன் என்றாலே பலசாலி என்றுப் பொருள். அவனாலேயே நகரத்த முடியவில்லை என்றவுடன் அவனுக்கு அவ்வானரம் யார் என்று புரிந்து விட்டது. தனது ஆணவத்தை குறித்து வருந்தினான், மன்னிப்புக் கேட்டான். ஆணவமற்ற வலிமையே வலிமை மிக்கது என்பது பீமனுக்கு புரிந்தது. வாயுவின் அம்சமான ஆஞ்சநேயரை, ஆணவம் நீங்கிய பீமன் வணங்கி ஆசிகள் பல பெற்றான். ஶ்ரீஆஞ்சநேயரின் அருளுடன் ஸஹஸ்ரதள பங்கஜ மலரினை பாஞ்சாலிக்காக பெற்றான்.

இத்திருக்கோயிலிலுள்ள ஶ்ரீஆஞ்சநேய சுவாமி ஶ்ரீஇரட்டை ஆஞ்சநேயர், பட்டீஸ்வரம், குமபகோணம், தமிழ் நாடு
ஸஹஸ்ரதள பங்கஜம் என்னும் புஷ்பம் பூத்திருந்த தடாகம் இருந்த இடம், ஶ்ரீபீமனும் ஶ்ரீஆஞ்சநேயரும் கால் பதித்த இடம் ஶ்ரீகோபிநாத சுவாமி கோயில் தற்போது உள்ள இடம். மகாபாரத காலத்தினை நினைவு கூறும் இடத்தில் ஶ்ரீகோபிநாதர் கோயில் கொண்டிருப்பது விசேடமில்லையா. ஆனால் இக்கோயில் இரட்டை ஆஞ்சநேயர் கோயில் என்றுதான் இன்று பிரபலம். இக்கோயிலில் உழவாரபணிகள் மேற்கொண்ட பொழுது, முதலில் கிடைத்த விக்ரஹம் ஶ்ரீஆஞ்சநேயர் தான், இரண்டாவதாக கிடைத்த விக்ரஹமும் ஶ்ரீஆஞ்சநேயர் தான். கோயில் கொண்டுள்ள கோபிநாதரின் கோயிலை பழைய நிலைமைக்கு கொண்டு வருவதற்கு மிகுந்த மன தைரியம், ஆள்படை, பொருள் செலவு என்று பல வேண்டியுள்ளதால் தானோ என்னவோ, ஶ்ரீஆஞ்சநேயர் இரட்டையாக இங்கு வந்துள்ளார்.

துவாபர யுகத்தில் ஶ்ரீஆஞ்சநேயர் ஶ்ரீகிருஷ்ணரின் {ஶ்ரீகோபிநாதரின்] சீடனான பீமனை சந்தித்த இடம் என்பதாலோ என்னவோ, தானே முன் நின்று கோயிலை செப்பனிட முன்வந்துள்ளார் போலும். இரு ஆஞ்சநேயர்களும் ஸஹஸ்ரதள பங்கஜத்தை கையில் வைத்திருப்பதும் இதனை தான் குறிக்கிறது.

அனுபவம்
இங்கு குடிகொண்டுள்ள இரட்டை ஆஞ்சநேயர்கள் தாங்களுக்கு சக்தியும், மனதிடமும், தைரியமும் அளிக்க வல்லவர்கள். வாருங்கள் வேண்டுங்கள் பெற்றுச்செல்லுங்கள்.

தமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி
செப்டம்பர் 2016

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.


காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே