home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீ சோளா ஹனுமான் மந்திர், போபால், மத்திய பிரதேசம்

ஶ்ரீ ராம் பிரபு மிஸ்ரா, போபால்


போபால்

பழமையும் புதுமையும் சேர்ந்த கலவையில் ஒளிர்விடும் அருமையான சரித்திரம் படைத்த புதுமை நகரம் போபால் மத்திய பிரதேசத்தில் தலைநகரம். பதினொராம் நூற்றாண்டில் போஜ ராஜாவினால் ஸ்தாபிக்கப் பட்ட போஜ்பால் என்னும் நகரம் இவ்விடம். இன்று நாம் காணும் நகரம் தோஸ்த் மொகமத் என்னும் ஆப்கான் நாட்டு இராணுவ தளபதியால் அமைக்கப்பட்டது. அவருடைய வம்சத்தினர் போபால் நகரத்தை வண்ணமிகு அழகு சித்திரமாக மாற்றியுள்ளனர்.

போபாலை ஆண்ட அரசர்கள்

ராஜா போஜ் காலத்திலிருந்து பல பரம்பரைகள் இம்மண்ணை ஆண்டதற்கான தொல்லியல் சான்றுகள் பல இங்கு கிடைத்துள்ளன. ராஜபுத் மன்னர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட பல கோட்டைகளும் கோயில்களும் இன்றும் இருக்கின்றன. தொடர்ந்து ஆண்ட அரசர்கள் பல கோயில்கள், கோட்டைகள், தோட்டங்கள் என இந்நகரத்திற்கு அழகு சேர்த்தனர். பல அரசர்கள் மதசார்பற்று கோயில்களுக்கு வந்து சேவித்துள்ளனர். இவை அனைத்தும் இந்நகரித்தின் பெருமையும் மதிப்பும் உரிய நகரமாக உயர்த்தியதில் வியப்பில்லை.

சோளா ஹனுமான் மந்திர்

ஶ்ரீராமரிடமும், ஶ்ரீஹனுமாரிடமும் அதீத பக்தி கொண்ட மன்னர் ராஜா விக்ரம் ஷா, தனது காலத்தில் பல கோயில்கள் கட்டினார். அப்படி அவரால் கட்டப்பட்ட கோயில்களுக்குள் ஒன்று தற்பொழுது "சோளா ஹனுமான் மந்திர்" என்றழைக்கப்படும் அனுமனுக்கான கோயில் அது. போபால் மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து சுமார் இரண்டரை கி.மீ. தொலைவில் விதிஶா, சான்சி செல்லும் பாதையில் உள்ளது. இந்நகரின் மிக பழமையான ஶ்ரீஹனுமார் கோயிலாக இது கருதப்படுகிறது. ஶ்ரீ அனுமார் இங்கு சிலாரூபத்தில் இருந்ததை ஒட்டி 1405 ஆண்டு ராஜா விக்ரம் ஷா கோயில் எழுப்பியுள்ளார். புனர் ஜீர்ணோத்ரம் அவர் முன்னிருந்து நடத்தியுள்ளார்.

மற்ற அரசர்களின் பங்களிப்பு

ஶ்ரீ சோளா ஹனுமான் ஸ்வாமி, போபால், மத்திய பிரதேசம் சோளா மந்திரில் உள்ள ஶ்ரீ ஹனுமாரிடம் விக்ரம் ஷாவிற்கு பின் வந்த மன்னர்களையும், பேகங்களையும் கவர்ந்திருக்கிறார். அவர்களும் தங்கள் ஆட்சிகாலத்தில் பக்தர்ககளின் தேவைக்கு ஏற்ப கோயிலை விரிவு படுத்தியுள்ளனர். போபாலை ஆண்ட பேகம் ஷாஜகான், பேகம் குஷ்ரிஷா போன்றார்கள் இக்கோயிலுக்கு வருவதும் பல கைங்கரியம் செய்திருப்பதையும் இதற்கு உதாரணமாக கூறலாம். கோயில் விசேட நாட்களில் ஏழைகளுக்கு உணவளிப்பதில் இவர்கள் பங்கு பெரிதாகும்.

போபாலை ஆண்ட கான் பரம்பரை

சென்ற நூற்றாண்டில் போபாலை யார் ஆள்வது என்று ஶ்ரீ ஹபிபுல்லா கான், ஶ்ரீ வாலி ஹைதர் கான் என்ற இரு சகோதர்களிடையே சர்ச்சை. இருவரும் தங்களுக்கு தான் உரிமை என்ற கூற்றினால், லண்டன் ’ப்ரைவி கவுன்சில்’ இல் வழக்கு நடந்தது. இரு சகோதர்களும் தங்கள் நியாத்தை எடுத்துரைக்க மிக உயர்ந்த வழக்குரைஞர்களை அமர்த்தினார்கள். தர்க்கங்கள் முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்து இரு சகோதர்களும் பதட்டத்தின் உச்சத்தில் இருந்தனர்.

ஹபிபுல்லா கான்னின் மந்திரி

ஹபிபுல்லா கான் அவர்களுக்கு ஶ்ரீஅவத் நாராயணன் என்பவர் மந்திரியாக இருந்தார். சோளா ஹனுமாரின் மீது அதீத பக்தி கொண்டவர் இவர். ஹபிபுல்லா கான் தன் மந்திரி அவத் நாராயணனுடன் பல முறை சோளா ஹனுமார் கோயிலுக்கு வந்துள்ளார். வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்து ஆவலின் எல்லையில் பதட்டத்தின் விளும்பில் இருக்கும் ஹபிபுல்லா கானை அவத் நாராயண் சமாதான படுத்தினார். சோளா ஹனுமாரிடம் நம்பிக்கை வைத்து நிதானத்தை கடைபிடிக்க கூறினார். ஹபிபுல்லா கான் தான் ஆட்சியில் அமர்ந்தால் கோயிலுக்கு செல்லும் பாதையை புதிதாக அமைத்து தரவும், வருடாவருடம் கோயில் அருகில் ராம்லீலா நடத்தவும் உறுதிபூண்டார்.

ஶ்ரீஹபிபுல்லா கானின் வெற்றி

பொறுமையிழந்த ஹபிபுல்லா கான் வழக்கின் முடிவை தெரிந்து கொள்ள லண்டன் செல்ல முடிவு செய்தார். அக்காலத்தில் லண்டன் செல்ல போபாலில் இருந்து பம்பாய் [முப்பை] இரயிலில் சென்று அங்கிருந்து லண்டனுக்கு கப்பலில் செல்ல வேண்டும். ஹபிபுல்லா கானும் பம்பாய்க்கு சென்றார். அங்கிருந்து இரண்டு நாட்களில் லண்டன் செல்ல கப்பல் ஏற வேண்டும்.

கப்பல் ஏற வேண்டிய நாள் அன்று, அவர் ’பிரைவி கவுன்சில்’ வழக்கில் வெற்றி பெற்றார் என்றும், அவரை போபால் நவாபாக நியமிக்கவும் தீர்ப்பு வழங்கப் பட்டதை தெரிவிக்கும் செய்தி வந்தது. அவரை ஆனந்தத்தில் ஆழ்த்தியது இச்செய்தி. போபாலுக்கு விரைந்து வந்த முதல் காரியம், தான் வேண்டி கொண்ட மாதிரி சோளா ஹனுமார் கோயிலுக்கு புதிய சாலை அமைத்தது தான். ராம்லீலா நடத்தவும் ஏற்பாடு செய்தார்.

இன்றும் ஶ்ரீராம் லீலா சோளா ஹனுமார் கோயில் வளாகத்தில் நடைபெறுகிறது. ஹபிபுல்லா கான்னின் பரம்பரையை சேர்ந்தவர்கள் இன்றும் இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறார்கள். சோளா ஹனுமார் தனது பக்தர்களுக்கும் தன்னையே நம்பினவர்களுக்கும் அருள் புரிகிறார்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீ சோளா ஹனுமான் மந்திர், போபால், மத்திய பிரதேசம்"

 

அனுபவம்
இன்று இக்கோயிலில் செவ்வாய் கிழமையும் சனி கிழமையும் பக்தர்கள் திரளாக கூடுகிறார்கள். போபால் மற்றும் அருகில் இருக்கும் இடங்களிலிருந்து வருபவர்கள் எண்ணிக்கை ஹனுமார் வரப்பிரசாதி என்பதை நிரூபிக்கிறது.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஏப்ரல் 2016
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+