ஸ்ரீ திரிநேத்திர தசபுஜ வீர ஆஞ்சநேய ஸ்வாமி, அனந்தமங்கலம், தரங்கம்பாடி, நாகை


ஸ்ரீ திரிநேத்திர தசபுஜ வீர ஆஞ்சநேய ஸ்வாமி
[முக்கண்ணும் பத்து கைகளும் கொண்ட ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமி]

நாகைக்கும் மயிலாடுதுறைக்கும் நெடுஞ்சாலை தரங்கம்பாடி,திருக்கடையூர் வழியே செல்கிறது. தரங்கம்பாடிக்கும் திருக்கடையூருக்கும் இடையே அனந்தமங்கலம் என்ற பசுமை நிறைந்த தலம் உள்ளது. இத் தலத்தில் பல நூறு ஆண்டுகட்டு முன்பு விஐய நகர மன்னர்கள் காலத்தில் இருந்த மண்டலத் தலைவரால் மிக அழகான கோயில் அருள்மிகு ராஜகோபால பெருமாளுக்காக எழுப்பபட்டது. அந்த ஆலயத்தை அடுத்து அழகிய சிறிய ஆலயம் ஒன்று. அது தான் திரிநேத்திர தசபுஜ ஆஞ்சநேயரின் மூல ஆலயம். மூலவர் சதுர்புஜங்களோடு கையில் சங்கு, சக்கரம், சாட்டை, நவநீதம் ஆகியவற்றுடன் காட்சி தருகிறார். இவரின் சன்னதி வடக்கு நோக்கி அமைந்துள்ளது. எதிர்புறம் உள்ள திருக்குளம் அனுமாத் தீர்த்தம், பல பிணிகளை நீக்கும் தீர்த்தமாக இது பக்தர்களால் போற்றபடுகிறது.

இம் மூல சதுர்புஜ ஆஞ்சநேயரின் உற்சவ மூர்த்தி "ஸ்ரீ திரிநேத்திர தசபுஜ வீர ஆஞ்சநேய ஸ்வாமி" (முக்கண்ணும் பத்து கைகளும் கொண்ட ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமி). பஞ்சலோகத்தால் ஆன இந்த நாலரை அடி உயரமுள்ள உற்சவ திருமேனி, தெற்கு திசை நோக்கி ஸ்ரீ இராஜகோபால ஸ்வாமி கோயிலில் குடி கொண்டுள்ளார். இத் திருமேனியை பார்க்க பார்க்க மனத்தில் பரவசமான ஆனந்தம் பரவும், பொங்கும்.

முக்கண்ணும் பத்து கைகளும் கொண்ட ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமியின் மிக அபூர்வமான ஓர் திருமேனியை வேறு எங்கும் காணமுடியாது. இந்த அபூர்வமான கோலம் ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமி ஏன் தரித்தார் என்பது மிக சுவாரஸ்யமான ஒரு விஷயம்.

இலங்கை யுத்தம் முடிந்து ஸ்ரீராமபிரான் அயோத்திக்கு திரும்பி கொண்டு இருந்தார். வழியில் பரத்வாஜ மகரிஷி வரவேற்று ஆசி கூற, அவருடைய ஆஸ்ரமத்தில் ஸ்ரீராமர், சீதா பிராட்டி, லக்ஷ்மணன், ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமி ஆகியோர் தங்கினர். அப்போது அங்கு திரிலோக சஜ்சாரியும் திரிகால ஞானியுமான நாரத மாமுனிவர் வந்து சேர்ந்தார். முனிவரை ஸ்ரீ ராமபிரான் வணங்கி ஆசிப் பேற்று கொண்டார். "ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியே, முக்கியமான விஷயமாகவே உன்னை சந்திக்க வந்துள்ளேன். இலங்கையில் யுத்தம் முடிந்தாலும் பிரபோ தாங்கள் வில்லுக்கு இன்னும் வேலையுள்ளது." என்று நாரத மாமுனிவர் கூறிய வார்த்தைகள் ஸ்ரீ ராமபிரானை திகைக்க வைத்தது. "முனிபுங்கவா தாங்கள் என்ன கூறுகிறீர்கள்? சற்று விளக்கமாக கூறுங்கள்" என்று வேண்டினார்.

"ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியே, தாங்கள் இலங்கையில் ராவணன் முதலிய அரக்கர்களை அழித்தாலும், அரக்கர்களின் வாரிசுகள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். இலங்கை யுத்தத்துக்கு பழிக்கு பழி வாங்க சபதம் செய்துள்ளார்கள். இரக்த பிந்து, இரக்த ராக்ஷ்சகன் என்ற இரண்டு அசுரர்கள் கடலுக்கு அடியில் அமர்ந்து தவம் செய்கிறார்கள். இவர்களின் தவம் பூர்த்தியானால் சக்தி மிகுந்த வரங்களை பெற்று விடுவார்கள் பிறகு அவர்களால் உலகுக்கு பெரும் அழிவு ஏற்படும் எனவே இவர்களை நீங்கள் உடனே சம்ஹாரம் செய்ய வேண்டும்" என நாரத மாமுனிவர் ஸ்ரீ ராமரை வேண்டிக் கொண்டார்.

"முனிவரே, தாங்கள் கூறுவதை ஏற்கிறேன். ஆனால் நான் இப்போழுது அயோத்தி செல்வதை தாமதித்தால், குறிப்பிட்ட நாளுள் நான் அயோத்தி திரும்பாத காரணத்தால் தம்பி பரதன் தீக்குண்டம் இறங்கி உயிரை விட்டு விடுவான்." என்று கூறிய ஸ்ரீராமபிரானுக்கு, தம்பி லக்ஷ்மணனை அனுப்ப நாரதர் ஆலோசனை கூறினார். தன்னின் நிழலாக தனக்காக கானகத்திலும் இலங்கையிலும் சேவை செய்த அவ்விளைய பெருமாளை பிரிய மனமில்லாமல் ஸ்ரீ ராமர் இருக்கையில், தன் ஆசானின் கண்களிலிருந்தே அவருடைய மனம் அறிந்த ஸ்ரீ ஆஞ்சநேய மஹா பிரபு "தாங்கள் ஆணைக்கு காத்திருக்கிறேன் பிரபு" என்றார். "ஆஞ்சநேயா இந்த சம்ஹாரம் உன்னால் நடக்கட்டும்" என ஸ்ரீராமபிரான் ஆசி கூறி தனது கோதண்டத்தையும், பாணம், நவநீதம் என்னும் ஆயுதத்தையும் வழங்கினார். அரக்கர்களை ஆணிவேரோடு அழிக்கும் யுத்தமல்லவா? தேவர்கள் வாழ்த்தினர். திருமால் சங்கு, சக்கரம், மத்தகக்ஷ்ஷம் கொடுத்து ஆசி புரிந்தார். ஸ்ரீதேவி பத்மமும், ஸ்ரீசக்தி பாசமும் கொடுத்து ஆசி புரிந்தார்கள். நான்முகன் அங்குசம் கொடுத்து ஆசி புரிந்தார். கருடர் தன் இறக்கைகளை கொடுத்து ஆசி புரிந்தார். ஸ்ரீ சிவ பெருமான் திரிசூலத்தையும் தன் மூன்றாம் கண்ணையும் கொடுத்து ஆசி புரிந்தார். ஸ்ரீ ஆஞ்சநேயரும் தயாரானார். எப்படி? அவரது ஐந்து வலது கைகளில் சுதர்ஸனம், திரிசூலம், அங்குசம், பாணம், மத்தகக்ஷ்ம் ஆயுதங்கள்; இடது ஐந்து கைகளில் சங்கு, பத்மம், பாசம், கோதண்டம், நவநீதம் ஆயுதங்கள்; மூன்றாம் கண் நெற்றியை அலங்கரிக்க, அம்பரி முழவதும் பாணங்களும், இறக்கை சகிதம் ஸ்ரீ ஆஞ்சநேயரும் தயாரானார். ஸ்ரீ ராமபிரானின் ஆசியுடனும், தேவர்களின் ஆசியுடனும் யுத்ததில் அவ்விரு அரக்கர்களையும் அழித்தார் ஸ்ரீ ஆஞ்சநேய மஹா பிரபு. தான் மேற் கொண்ட இந்த இராம கார்யத்தை பூர்த்தி செய்த ஆனந்நத்தில் இருக்கும் அவரது அபூர்வ இந்த திருகோல காட்சி தான் "ஸ்ரீ திரிநேத்திர தசபுஜ வீர ஆஞ்சநேய ஸ்வாமி". ரம்மியமான, இயற்கை அழகுடன் கூடிய இடத்தில் ஆனந்தமான மனதுடன் அவர் அமர்ந்த இடம் ஆனந்தமங்கலம். இன்று இந்த கிராமம் அனந்தமங்கலம் என அழைக்கப் படுகிறது.

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும், அனந்தமங்கலம் சென்றால் ஆனந்தம் கிடைக்கும் என்பது பழமொழி. நாமெல்லோரும் தேடும் ஆனந்ததை வழங்க ஆஞ்சநேய ஸ்வாமி அனந்தமங்கலத்தில் நமக்கு அள்ளி தர காத்துள்ளார் வாருங்கள்.

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே