home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

தாஸ ஆஞ்சநேயர், புது அக்ரஹாரம், திருவையாறு, தமிழ் நாடு

ஜீகே கௌசிக்


திருவையாறு

திருவையாறு க்ஷேத்திரத்தில் ஐந்து நதிகள் ஓடுவதால், ஐ+ஆறு என்னும் பொருள் பட இவ்விடத்திற்கு திரு ஐ ஆறு, திவையாறு என்று பெயர் வந்தது. காவேரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய நதிகள் இங்கு ஓடுகின்றன.

கர்நாடக் சங்கீதத்தில் நாட்டம் உடையவர் அனைவருக்கும் திருவையாறு என்றால் ஶ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் முக்தி அடைந்த இடம் என்பது தான் நினைவில் வரும். அவர் ஶ்ரீராமரிடம் அதீத பக்தி கொண்டிருந்தவர். ஶ்ரீராம தர்சனம் கிடைக்கப் பெற்று பல கீர்ததனைகள் எழுதியுள்ளார். அவர் பாடிய ’பஞ்சரத்ன கிருதி’ என அழைக்கப்படும் ஐந்து கீர்த்தனைகளை அவர் அதிஷ்டானம் முன் அவருடைய நினைவு நாள் அன்று பாடுவதை எல்லா சங்கீத வித்வான்களும், ஆர்வர்களும், பெரும் பேறாக கருதுவார்கள். அன்று திருவையாறு வருவதையே அவர்கள் ஆன்மீகமாக நினைப்பவர்கள்.

திரு ஐயாரப்பன் கோயில்

இந்த க்ஷேத்திரத்தில் நாயன்மார்களால் பாடல் பெற்ற திரு ஐயாரப்பன் கோயில் கொண்டுள்ளார். சக்தியின் திருநாமம் தர்மஸம்வர்தினி என்பதாகும். சோழர்களால் திருபணி செய்யப்பட்ட கோயில் இது. திரு ஐயாரப்பன் தான் தோன்றியாக மண்ணிலால் ஆன லிங்கவடிவில் உள்ளர். அவருக்கு அதனால் புனுகினால் மட்டுமே அபிஷேகம். கோயிலின் தென் மேற்கு பகுதியிலிருந்து ’ஐயாரப்பா’ என்று அழைத்தால் ஏழு முறை எதிரொலிக்கும்.

அம்பாள் தர்மஸம்வர்தினியின் கோயில் திருஐயாரப்பன் கோயிலை ஒட்டியே உள்ளது. மற்ற சிவன் கோயில்களில் இருப்பதுப் போலில்லாமல் அம்மனின் சன்னதி தனிக் கோயிலாகவே அமைக்கப்பட்டு உள்ளது. மற்றும் மற்ற கோயில்களில் அம்மன் தென்திசை நோக்கி இருப்பதுப்போல் இல்லாமல் இக்கோயிலில் கிழக்குதிசை நோக்கியுள்ளார். திருஐயாரப்பன் கோயில் பாணியிலிருந்து சற்றே வேறுபட்டு காணப்படும். கலை திறனுடன் அமைந்துள்ளது இக்கோயில். இவ்விடத்தில் ஶ்ரீராமர் கோயில் கொண்டிருந்ததாகவும் பின் அவரை அருகாமையிலுள்ள ’புது அக்ரஹாரத்திற்கு’ மாற்றி அமைத்ததாகவும் சொல்லுவார்கள்.

புது அக்ரஹாரம்

மோஹனாம்பாள் என்னும் மராட்டிய அரசி காவேரியின் தென்கரையில் ’பஞ்சநாத மோஹனாம்பாள்புரம்’ என்ற பெயரில் ஒரு புதிய குடியிருப்பு கட்டி அங்கு பல அந்தணர்கள் வசிக்க ஏற்பாடுகள் செய்தாள். புதியதாக ஏற்படுத்தப்பட்ட இதை ’புது அக்ரஹாரம்’ என்று பெயரிட்டார். புது அக்ரஹாரத்தில் ஶ்ரீ பட்டபிராமர் கோயில் ஒன்று அமைத்து காவேரியின் வடகரையிலிருந்த ஶ்ரீராமரை இங்கு புனர் பிரதிஷ்ட்டை செய்வித்தாள்.

ஶ்ரீ பட்டபிராமர் கோயில்

புது அக்ரஹாரத்தில் ஶ்ரீ பட்டபிராமர் தன் பரிவாரங்களுடன் மிக கம்பீரமாக உள்ளர். இவர்களின் அமைப்பு தியான ஸ்லோகத்தில் குறிப்பிட்டதுப் போல் உள்ளது.

வாமே பூமிஸுதா புரஸ்து ஹநுமந் பச்சாத் ஸுமித்ராஸுத:
ஶத்ருக்நோ பரதச்ச பார்ஶ்வதலயோர்-வாய்வாதிகோணேஷ்வபி|
ஸுக்ரீவஶ்ச விபீஷணஶ்ச யுவராட் தாராஸுதோ ஜாம்பவான்
மத்யே நீலஸரோஜகோமலருசிம் ராமம் பஜே ஶ்யாமளம்|| 1

வைதேஹீஸஹிதம் ஸுரத்ருமதலே ஹைமே மஹாமண்டபே
மத்யே புஷ்பகமாஸநே மணிமயே வீராஸநே ஸுஸ்திதம்|
அக்ரே வாசயதி ப்ரபஞ்ஜநஸுதே தத்த்வம் முநிப்ய: பரம்
வ்யாக்யாந்தம் பரதாதிபி: பரிவ்ருதம் ராமம் பஜே ஶ்யாமளம்||2

ஶ்ரீராமர் வீராஸனத்தில் வீற்றுள்ளார். அவரது இடது திருகரம் கால் முட்டியில் மேல் படிந்தும், வலது திருகரம் ஞானமுத்திரையையும் காண்பிக்கிறது. ஶ்ரீ அனுமாரின் ஒரு திருகரம் ஶ்ரீராமரின் திருபாதத்தினை பற்றியுள்ளது, மற்ற திருகரத்தினை தனது திருவாய் அருகில் ’தாஸ பாவத்தில் வைத்துள்ளார். ஶ்ரீசிதாதேவி ஶ்ரீராமரின் இடதுபுறம் உள்ளார் [வாமே பூமிசுதா]. ஶ்ரீசிதாதேவியின் ஒரு திருகரம் தாமரையையும் மற்ற திருகரம் ’ஐஸ்வரிய தான’ முத்திரையிலும் உள்ளது. மற்ற திருதலங்களில் ஶ்ரீரமரின் வலது புறம் காணப்படும் ஶ்ரீசிதாதேவி, இச்க்ஷேத்திரத்தில் இடதுபுறம் காணப்படுகிறார். அவர் அருகில் ஶ்ரீ சத்ருகுணன் சாமரம் வீசுகிறார். ஶ்ரீராமரின் வலதுபுறம் ஶ்ரீ லக்ஷ்மணன் கைகூப்பியபடியுள்ளார். அருகில் பரதன் வெண்குடையை பிடித்துள்ளார்.

பக்தர்களை மெய்மறக்க செய்யும் ஶ்ரீராமரும் அவரது பரிவாரமும். இந்த ராமபரிவாரத்தின் அருகில் கையில் வீணையுடன், ராமநாமம் பாடிய வண்ணம் ஶ்ரீ ஆஞ்சநேயரின் மற்றுமொரு சிலை. பக்தர்களின் கால்களை அங்கேயே கட்டி போட வைக்கும் கண் கொள்ளா காட்சியிது.

மூலவர் மூர்த்திகளும் உத்ஸவ மூர்த்திகளும் இங்கு ஒரே மாதரியுள்ளது, வேறு எங்கும் இப்படி இருப்பதாக் தெரியவில்லை. உத்ஸவமூர்த்தியில் ஶ்ரீராமர் வீராஸனத்தில் அமர்ந்து ’தத்வ ஞான முத்திரை’ தரித்து தத்வ ஞான் உபதேசம் செய்பவர் போல் உள்ளார். [விளக்கம் ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் அவர்களின் "ராமகுருவின் சிஷ்ய ஹநுமார்" கட்டுரையை படிக்கவும்]

ஶ்ரீ லக்ஷ்மணர் தனது வில்லுடன், ஶ்ரீராமரின் வில்லையும் சேர்த்து பிடித்துள்ளார், அதே சமயம் ஶ்ரீராமருக்கு வெண் சாமரமும் வீசுகிறார் இது தனிச்சிறப்பு. முட்டியிட்டு அமர்ந்துள்ள ஶ்ரீ அனுமார், ராமாயணத்தை ஒரு திருகரத்திலும், மற்ற திருகரத்தில் ஜப மாலையுடனும் காணப்படுகிறார் இது மற்றுமொரு தனிச்சிறப்பு.

சங்கீத மும்மூர்த்திகள்

தியாகராஜ ஸ்வாமிகள், முத்துஸ்வாமி தீக்ஷிதர், ஸ்யாமா ஸாஸ்த்ரிகள் இம்மூவரும் சங்கீத மும்மூர்த்திகள் எனப்படுவர். தியாகராஜ ஸ்வாமிகள் நாரத பந்ததியை பின்பற்றுபவர் என்றும் முத்துஸ்வாமி திக்ஷிதர் ஹனுமத் பந்ததி பின்பற்றுபவர் என்றும் பிரபலம். முத்துஸ்வாமி திக்ஷிதரரும் தியாகராஜ ஸ்வாமிகளும் இக்கோயில் ஶ்ரீபட்டாபிராமரின் தரிசனதிற்கு பிறகு ’மாமவ பட்டாபிராமா..’ கீர்த்தானையை மணிரங்கு ராகத்தில் பாடினார் என்பதும் பிரபலம். இக்கோயிலில் மற்றொரு தனிச்சிறப்பு சங்கீத மூர்த்திகளில் இருவரால் பூஜிக்கப்பட்டுள்ளது என்பதாகும்.

இக்கோயிலின் பஞ்ச அநூபம் - தனிச்சிறப்பு

இராமயண புத்தகம் படிக்கும் தாஸ ஆஞ்சநேயர், புது அக்ரஹாரம், திருவையாறு முதல் தனிச்சிறப்பு: மற்ற திரு தலங்களில் ஶ்ரீராமரின் வலது புறம் காணப்படும் ஶ்ரீசிதாதேவி, இச்க்ஷேத்திரத்தில் இடதுபுறம் காணப்படுகிறார்.

இரண்டாம் தனிச்சிறப்பு: ஒரு திருகரத்தினால் ஶ்ரீராமரின் திரு பாதத்தினை பற்றியும், மற்ற திருகரத்தின் தனது திருவாய் அருகில் ’தாஸ பாவத்தில் வைத்துள்ள ஶ்ரீ அனுமார்.

மூன்றாம் தனிச்சிறப்பு: மூலவர் மூர்த்திகளும் உத்ஸவ மூர்த்திகளும் இங்கு ஒரே மாதரியுள்ளது, வேறு எங்கும் இப்படி இருப்பதாக் தெரியவில்லை.

நான்காம் தனிச்சிறப்பு: தனது வில்லுடன், ஶ்ரீராமரின் வில்லையும் சேர்த்து பிடித்து, அதே சமயம் ஶ்ரீராமருக்கு வெண் சாமரமும் வீசும் ஶ்ரீ லக்ஷ்மணர்.

ஐந்தாம் தனிச்சிறப்பு: ராமாயணத்தை ஒரு திருகரத்திலும், மற்ற திருகரத்தில் ஜப மாலையுடனும் காணப்படும் முட்டியிட்டு அமர்ந்துள்ள ஶ்ரீ அனுமார் .

தற்போதய கோயில்

கோயிலுக்கு இராஜ கோபுரமில்லை, நுழைந்த உடன் கொடி மரமும், பலிபீடமும் உள்ளது. ஶ்ரீகருடரும், ஶ்ரீஆஞ்சநேயரும் கைகூப்பிய வண்ணம் கொடிமரத்தின் அருகிலுள்ள மண்டபத்தில் காணப்படுகிறார்கள். அவர்களின் அனுகிரஹத்துடன் எதிரிலுள்ள மண்டபத்தில் நுழைந்தால் எதிரே கர்பகிரஹம். கோயிலுக்கு என்று ஏதும் தனி வருவாய் கிடையாது. பக்தர்களின் காணிக்கையைக் கொண்டு கோயிலை நிர்வாகிக்கிறார்கள். பக்தர்கள் உதவியினால் மட்டுமே நடக்கும் உத்ஸவங்களில் கலந்துக்கொண்டு இறைவனின் அருளை பெறவேண்டுகிறோம்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "தாஸ ஆஞ்சநேயர், புது அக்ரஹாரம், திருவையாறு"

 

அனுபவம்
ஆடம்பரம் அறவே அற்ற ஆஞ்சநேயரை, ஆடம்பரம் அற்ற இக்கோயிலில் தரிசிக்கலாம். தாஸ ஶ்ரீஆஞ்சநேயர் அருளை அள்ளி பருகலாம், ஆடம்பரமற்று முக்தி நிலை அடையலாம்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஜனவரி 2016
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+