home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

பங்க் ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில் நுழைவாயில், தஞ்சாவூர்


பங்க் ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில், தஞ்சாவூர், தமிழ் நாடு

ஜீகே கௌசிக்


தென்னகத்தின் நெற்களஞ்சியம்

தென்னகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கபடும் தஞ்சாவூர், காவேரி நீர்பாசனத்துடன் சீரும் சிறப்புமாக இருக்கும் இடம். கலாசாரத்தின் மையமாகவும் இது விளங்குவதில் ஆச்சரியமில்லை. சோழர்கள், தில்லி சுல்தான், பின் நாயகர்கள், மராட்டியர்கள் என அனைவரும் ஆட்சி புரிந்த இடம். மாற்றோர்கள் படையேடுப்பாலோ அல்லது உள்கலகத்தினாலோ தஞ்சாவூரின் கலாசாரம் அதிகமாக பாதிக்கப் படவில்லை. சோழர்கள் காலத்தில் செழிப்பின் உச்சத்தில் இருந்தது தஞ்சாவூர்.

தஞ்சாவூரின் பெருமை

இறைவனிடம் நம்பிக்கையும், அதை ஒட்டிய கலாசாரமும் தஞ்சாவூர் வாழ் மக்களுக்கு தானாக அமைந்த இயல்பு. தஞ்சையிலும் தஞ்சாவூரை சுற்றியும் சைவர்களாலும் வைஷ்ணவர்களாலும் முக்கியமாக கருதப்படும் அனேக கோயில்கள் உள்ளன. நாயன்மார்களும், ஆழ்வார்களும் பல கோயில்களை பெருமை படுத்தி பாடல்கள் பாடியுள்ளார்கள். நாயன்மார்கள் பாடிய க்ஷேத்திரங்களை ’பாடல் பெற்ற தலம்’ என்றும், ஆழ்வார்களால் பாசுரங்கள் பெற்ற தலங்கள் ’திவ்ய தேசம்’ எம்றும் அழைப்பார்கள். திருமங்கை ஆழ்வாரால் பாசுரங்கள் பெற்ற மூன்று திவ்ய தேசங்கள் தஞ்சையில் உள்ளது. தஞ்சை மாமணி கோயில் என்ப்படும் திவ்ய தேசத்தினையும் அங்குள்ள ஶ்ரீ நீலமேக பெருமாளையும் அறியாத வைஷ்ணவர்கள் அறிதே.

தஞ்சன் என்னும் அரக்கன் இங்கு பல கொடுமைகளை புரிந்து வந்துள்ளான். அவ்வரக்கனை அழித்து ஶ்ரீ நீலமேக பெருமாளும், ஶ்ரீ தஞ்சபுரீஸ்வரும் அவ்வரக்கனின் வேண்டுகோளுக்கு இணங்கி இவ்விடத்திற்கு ’தஞ்சாவூர்’ எனப் பெயர் இட்டனர்.

தஞ்சை கோட்டையும் அரண்மனையும்

தஞ்சையை தலைநகரமாக கொண்டு ஆண்ட சோழ மன்னன் ராஜராஜனால் எழுப்பப்பட்டது ராஜராஞ்சீஸ்வரம் என்னும் பெரியுடையார் கோயில், தற்பொழுது பெரிய கோயில் என்றே அழைக்கப்படுகிறது. தஞ்சாவூர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது இக்கோயில் தான். இதனை மய்யமாக கொண்டு முதலில் நாயகர் ஆட்சியில் செவ்வப்ப நாயகர் பெரிய கோட்டை எழுப்பி அரசாண்டார். இக்கோட்டையினை சிவக்கோட்டை என்று அழைப்பர். பின் வந்தவர்கள் இக்கோட்டைக்கு வெளியே புதிய கோட்டை ஒன்றினை தோற்றி வைத்தனர். கோட்டையினுள் அரண்மனையும் கட்டினார்கள். முதலில் கோட்டையின் புறம் இருந்த ஊர் பின்னர் மராட்டியர்கள் காலத்தில் கோட்டயின் உள்ளும் நிர்மாணிக்கபட்டது. தற்காலத்தில் புதிய கோட்டை இருக்குமிடத்தை அரண்மனை என்றே அழைக்கிறார்கள்.

தஞ்சாவூரின் மையம்

பழைய தஞ்சாவூர் நகரத்திற்கு மையமாக இருந்த அரண்மனை பகுதியே. இன்று மற்ற எல்லா நகரங்களைப் போல தஞ்சாவூரும் வளர்ந்து விட்டது. இருந்தும் இன்றும் அரண்மனை பகுதி மக்களை கவர்த்தான் செய்கிறது. நாயகர்களாலும் மராட்டியர்களாலும் கட்டப்பட்ட தர்பார் இன்றும் பார்க்க அழகாக இருக்கிறது. அக்காலத்தில் எவ்வளவு மெருகுடன் இருந்திருக்கும் என்பது வியக்க வைக்கிறது. மாடமாளிகை என்று சொல்லப்படும் பெரிய கோபுரம் இப்பொழுது இருப்பதை விட மிக உயரமாக இருந்ததாகவும், அதன் மேலிருந்து ஶ்ரீரங்கம் கோபுரங்களை தர்சித்தார்கள் என்றும் சொல்லப் படுகிறது. மராட்டிய மன்னர் ஶ்ரீ சர்போஜி பழைய நூல்களையும், தஸ்தாவேஜுகளௌயும் மிக பெரிய நூலகம் அமைத்து பாதுகாத்தார். அவர் தொடங்கிய ’சரஸ்வதி மஹால்’ நூலகம் இன்னும் பெருமளவில் பழைய நூல்களை பாதுகாத்து வருகிறது.

தஞ்சாவூர் நாயக்கர்கள்

விஜயநகர சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியாக 14-ம் நூற்றாண்டில் செவப்பா நாயகர் தஞ்சாவூருக்கு வந்து தனது தனி ராஜ்யத்தை ஸ்தாபனம் செய்தார். முதலில் சிவகோட்டையும் பின் அதற்கு வெளியே தனிக்கோட்டையும் கட்டினார். தஞ்சாவூரை தலை நகரமாகக் கொண்டு நாயகர்கள் சுமார் நூற்றி இருபத்து ஐந்து வருடங்கள் ஆட்சி புரிந்தனர். விஜயநகரத்தில் இருந்து வந்த நாயகர்கள் ஶ்ரீ ஆஞ்சநேயரிடம் பக்திக் கொண்டவர்களாக இருந்ததில் வியப்பில்லை. தங்களின் சனாதன தர்மத்தில் இருந்த ஈடுபாட்டையும், எதிரிகளை எதிர்கொள்ளும் தைரியத்தையும், திறமையையும், ஆஞ்சநேயர் தான் தாங்களுக்கு அள்ளி கொடுக்கிறார் என்பதில் அவர்களுக்கு சிறிதும் ஐயமில்லை.

அரண்மனை வளாகம்

Bunk Sri Anjaneya Swami Temple, Palace Complex, Thanjavur தற்போதய அரண்மனை வளாகத்திற்கு கிழக்கு வீதியில் உள்ள நுழைவு வாயில் வழியாக சென்றால் இடது சாரியில் ராஜா பள்ளிகூட கட்டிடம் வரும். அதை தாண்டி இடதுபுறம் திரும்பினால் அரண்னையில் வடக்கு வாயில் வரும். வலது புறம் தற்போது தீயணைப்பு படை நிலையம் உள்ளது. பிரமிக்க தக்க சுதை வேலைபாடுகளுடன் அமைத்துள்ளது இவ்வாயில். இதனை அரண்மனையின் பிரதான வாயிலாக நாயகர்களும், மராட்டியர்களும் வைத்திருந்தனர். இவ்வடக்கு வாயிலில் நுழைந்தால் இடது சாரியில் அக்காலத்தில் சிப்பாய்கள் தங்குவதற்கான பங்குகள் இருக்கின்றன். நாயகர்கள் காலத்தில் படை தளபதியாக இதுந்த ஓப்பில் நாயகர் பெயரிலேயே இன்றளவும் இப்பங்குகளுக்கு ’ஓப்பில் நாயகர் பங்க்’ என்று அழைக்கப் படுகிறது.

நாயகர்கள் காலத்திலேயே ஶ்ரீரகுநாத நாயக்கர் காலத்தை [1600-1645] பொற்காலம் என்று சொல்லலாம். அவர் ஶ்ரீராமரிடம் அளவுவில்லா பக்தி கொண்டவர் இவர். இராமாயணத்தை படிப்பதிலும், பரப்புவதிலும் ஈடுபாடு உள்ளவராக இருந்தார். அதனால் அவரை ’இராமாயண அனவிருத ராமகர்ணாமிருத சேவகன்’ என்று பட்டமும் அலங்கரித்தது.

வடக்கு வாயில்

ரகுநாத நாயகர் வடக்கு வாயிலில் தனது இஷ்ட தெய்வமான ஶ்ரீராமருக்கு கோயில் கட்டினார். தான் அரண்மனையிலிருந்து வெளியே செல்லும் முன் ஶ்ரீராமரை வணங்கிவிட்டு செல்ல விரும்பியதால் இந்த ஏற்பாடு. ஶ்ரீராமருக்கான சன்னதி கிழக்கு பார்த்து இருந்தது. இச்சன்னதிக்கு எதிரில் ஒப்பில் நாயக்கர் பங்கில் மேற்கு நோக்கி ஆஞ்சநேயருக்கு, ஒரு சன்னதி நிர்மானிக்கப்பட்டது. இங்குள்ள ஆஞ்சநேயர் கை கூப்பிய நிலையில் எதிரில் உள்ள ஶ்ரீராமரை வணங்கிய வண்ணம் இருப்பார்.

காலப்போக்கில் ஶ்ரீராமரும் அவரது பரிவாரங்களும் காணாமல் போயினர். தற்பொழுது அந்த சன்னதியை சுவரால் மூடிவிட்டார்கள். இருந்தபொழுதும் ஆஞ்சநேயர் ஶ்ரீராமர் இருந்த இடத்தை பார்த்த வண்ணம் உள்ளார்.

ஒப்பல் நாயக்கர் பங்க் ஆஞ்சநேயர்

ஒப்பல் நாயக்கர் பங்க் ஆஞ்சநேயர் கோயில் என்று அழைக்கப்படும் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. உயரிய மேடை மீது ஶ்ரீ ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் உள்ளார். கோயிலில் நுழைந்ததும் மஹாகணபதியும் நவநீத கிருஷ்ணரும் இடது புறம் உள்ளனர். விஜயநகர் மன்னர்களோ அவர்களது பிரதிநிதிகளோ கட்டிய ஆஞ்சநேய ஸ்வாமி கோயிலில் ஶ்ரீ கிருஷ்ணரும், அல்லது அவர்களால் கட்டப்பட்டகிருஷ்ணர் கோயில்களில் ஆஞ்சநேயரும் அமைவது [அமைப்பது] வழக்கம். இங்கு மேலும் சிறிய வடிவில் அம்பாளும், ஜயவீர ஆஞ்சநேயரும் வலதுபுறம் உள்ளனர்.

அஞ்சலி ஹஸ்தனாக சுமார் நான்கடி உயரத்தில் கம்பீரமாக நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் காட்சி அளிக்கிறார். தங்கம் போல் மின்னும் கண்கள் நம்மை ஈர்பதில் வியப்பில்லை. நினைத்ததை அள்ளி வழங்கும் வள்ளல் அவர் என்பது அக்கண்களில் தெரிகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "பங்க் ஶ்ரீ ஆஞ்சநேயர் கோயில், தஞ்சாவூர்"

 

அனுபவம்
ஒரு முறை தரிசித்து இவ்வாஞ்சநேய வள்ளலை வணங்குவோர் வளம் பெறுவார் என்பது திண்ணம்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: டிசம்பர் 2015
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+