home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

வாரணாசியில் புனித கங்கை நதி


ஶ்ரீ சங்கட மோசன ஹனுமான் கோயில், வாரணாசி, உத்திர பிரதேசம்

ஜீகே கௌசிக்


வாரணாசி

விராட புருஷரிடமிருந்து உண்டான இருநதிகள் வருணா, அஸி என்பன என்று வாமன புராணம் கூறுகிறது. இந்த இரு புனித நதிகளுக்கு இடைப்பட்ட நிலம் வாரணாசி என்று பெயர் பெற்று மிக புண்ணிய பூமியாக கருதப்படுகிறது. இந்த புனித பூமி உலகம் தோன்றிய நாட்களாக பாரதத்தில் ருஷிகளாலும், மகான்களாளும் போற்றி புகழப்படுகிறது. சனாதன மார்க்கத்தில் இது ஒரு திவ்ய புனித க்ஷேத்திரமாக உள்ளது. ஆத்ம வித்யையை கற்கவும், ஒளி பெறவும் இந்நகரம் அனைவராலும் நாடப்படும் ஓர் இடம். ’காஸ்’ என்றால் ஒளிப்பது என்பது பொருள். அதனால் இவ்க்ஷேத்திரத்தைஸிபுரி அன்றும் அழைப்பர்.

தொன்று தொட்டு நிறைய ருஷிகளும் மகான்களும் இங்கு வாழ்ந்துள்ளார்கள். சமீபகாலத்தில் வாழ்ந்த ஶ்ரீகோஸ்வாமி துளஸிதாஸ், கபீர்தாஸ், ராமாநாத்ஜி அவர்கள் இப்புனித பூமியில் இருந்து சனாதன மார்க்கத்திற்கு செய்த தொண்டும், அவர்கள் வாழ்நாட்களில் இயற்றிய கவிதைகளும் மார்க்க தர்சனமும் போற்றி புகழப்பட வேண்டிய ஒன்று. அதிலும் ஶ்ரீகோஸ்வாமி அவர்கனின் காவியங்கள் பாமரன் முதல் பண்டிதர் வரை அனைவராலும் பாராட்டபடுகின்றது என்றால், அதன் எளிமையான நடையும், ஆழ்ந்த கருத்துகளும் பொதிந்துள்ளது என்பதனை சொல்லவும் வேண்டுமா?

ஶ்ரீதுளஸிதாஸரும் ஶ்ரீஹனுமாரும்

"யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர கிருதமஸ்தகாஞ்சலிம்" - எங்குகெங்கு எல்லம் ஶ்ரீராமரின் புகழ் பாடப்படுகிறதோ அங்குகெங்கு ஶ்ரீ ஆஞ்சநேயர் ஆனந்த கண்ணீருடனும் கை கூப்பிவித்த வண்ணமுள்ளர்’ என்பது யாவரும் அறிந்ததே. ஶ்ரீதுளஸிதாஸ் அவர்கள் தான் ஶ்ரீஇராம கதை சொல்லும் போழுதெல்லம் தன் முன் ஒரு மணையிட்டு பட்டு துணியால் அலங்கரித்து வைப்பது வழக்கம். ஶ்ரீ ஹனுமாருக்கான ஆசனம் இது. இன்றும் பலஉபன்யாசகர்கள் இதை பின்பற்றுகின்றனர். ஒரு முறை துளஸிதாஸ், வாரணாசி நகரில் இராமாயணம் சொல்லிக் கொண்டிருந்தார். கதைக்கு வந்திருக்கும் பக்தர்களிடையே ஹனுமாரை அவர் தேடுவார். தனக்கு பாக்கியம் இருந்தால் ஹனுமாரை தரிசிக்கலாமே என்ற ஆவல் அவருக்கு நாளுக்கு நாள் தாபமாக ஆயிற்று.

ஶ்ரீராமபக்த ஹனுமார்

இராமயண கதைக்கு தினமும் ஒரு குஷ்டரோகி வருவதும் தனியாக உட்கார்ந்து இராமயணத்தினை தன்னை மறந்து அனுபவிப்பதையும் துளஸிதாஸ் கவனித்தார். அவரது உள்மனம் குஷ்டரோகி ரூபத்தில் வருபவர் ஹனுமாராக தான் இருக்கும் என்று கூறியது. அன்று கதை முடிந்ததும் குஷ்டரோகியை பின் தொடர்வது என்று துளஸிதாஸ் நிச்சயத்துக் கொண்டார். அதன்படி இராம கதை அன்று முடிந்த உடன் அவரை பின் தொடர்ந்தார். ஆனால் ரோகியோ இவர் பிடியில் சிக்காமல் இவரை தவிர்த்துவிட்டு விரைந்தார்.

ஶ்ரீஹனுமத் தரிசனம்

நீண்ட நேர தொடரலுக்கு பின், துளஸிதாஸ் அம்மனிதரை ’லங்கா’ என்னும் இடத்தில் முந்தி சென்றார். வந்தவர் ஶ்ரீஆஞ்சநேயர் தான் என்ற திடமான நம்பிக்கையில் அவரது பாதங்களை பற்றினார் துளஸிதாஸர். "ஹே ஹனுமதே! என் தெயவமே! எனக்கு தரிசனம் கொடுக்க வந்தமைக்கு நன்றி. ஆனால் நான் இந்த ரூபத்தில் அல்ல, தங்களுடைய உண்மை ரூபத்தில் தாங்களை தரிசிக்க விரும்புகிறேன். அந்த பேறு எனக்கு கிடைக்குமா?" என்று ஆனந்தத்தில் திரு பாதங்களில் தன் சிரசை பதித்து கெஞ்சிக் கொண்டிருந்தார்.

ஶ்ரீராம தரிசனத்திற்கு வேண்டுகோள்

ஶ்ரீ சங்கட மோசன ஹனுமான் கோயில் நுழைவாயில், வாரணாசி, உத்திர பிரதேசம் குஷ்டரோகி ரூபத்தில் வந்தவர் ஹனுமார் தான். தனது பக்தனின் நியாயமான கோரிக்கையை அவரால் நிராகரிக்க முடியவில்லை. தனது உண்மை ஸ்வரூபத்தில் தனது பக்தன் துளஸிதாஸுக்கு தரிசனம் கொடுத்தார். ஹனுமாரின் தரிசனம் கிடைத்த துளஸிதாஸர் ஆனந்த வெள்ளத்தில் மிதந்தார். தன் நிலைக்கு வர சில நிமிடங்களாயின. உடனே "பிரபோ! உனது தரிசனம் கிடைக்க நான் என்ன தவம் செய்தேன். தாங்கள் தரிசனத்திற்கு பிறகு எனக்கு மறுபிறவி ஏது? கிடையவே கிடையாது. இறைவா மறுபிறவியில்லாததால் இப்பிறவியிலேயே ஶ்ரீ ராமரையும் தரிசிக்க உதவுங்கள்" என்றார். பக்தனின் இந்த அதீத ராம பக்தியை ஹனுமார் புன் முறுவலுடன் ஏற்றுக்கொண்டார். தனது வலது திரு கரத்தை உயர்த்தி இடது திருகரத்தை இதயத்தில் வைத்து "காலம் கனியட்டும். சித்ரகூடத்தில் உனக்கு ஶ்ரீராம தரிசனம் நடக்கட்டும்" என்று அருளினார்.

ஶ்ரீஹனுமாரிடம் கோரிக்கை

"என்னை சுகத்தின் எல்லைக்கு அழைத்துச் சென்ற தாங்கள் தரிசனம் எனது பாக்யமாக மட்டுமில்லாமல் தாங்கள் பக்தர்கள் எல்லோருக்கும் கிடைக்க அருள் புரிய வேண்டும். இவ்விடத்தில் தாங்கள் இருந்து எல்லோருக்கும் அருள் வேண்டும்." என்று ஶ்ரீதுளஸிதாஸ் அவர்கள் ஶ்ரீ ஆஞ்சநேயரை வேண்டிக் கொண்டார். பக்தனின் வேண்டுகோளுக்கு இணங்கி இங்கு ஹனுமார் சுயம்பூவாக அங்கு தோன்றி அருளினார்.

ஶ்ரீ சங்கட மேசன ஹனுமான்

பனாரஸ் ஹிண்டு பல்கலை கழகம் அருகாமையில் ’லங்கா’ என்னும் இடத்தில் வாரணாசியில் உள்ளது ஶ்ரீதுளஸிதாஸருக்கு ஹனுமார் தரிசன்ம் கொடுத்த இடம். சுயம்பூவாக தோன்றிய ஹனுமார், ஶ்ரீதுளஸிதாஸருக்கு எந்த வடிவில் தரிசனம் கொடுத்தாரோ அப்படியே அமைந்துள்ளார். வலது திருகரம் உயர்ந்து அபயமுத்திரையுடனும், இடது திருகரம் அவருடைய இதயத்தை தழுவியும் உள்ளார். எந்த விதமான் கஷ்டங்களுக்கும் இங்குள்ள சுயம்பூ ஹனுமாரை துதிப்பதால் நிவாரணம் அடையும் என்பதால் இந்த க்ஷேத்திரத்திலுள்ள இவரை "ஶ்ரீ சங்கட மேசன ஹனுமான்" என்று அழைக்கிறார்கள்.

ஶ்ரீ சங்கட மேசன ஹனுமான் கோயில்

சிறிய குடிலில் கோயில் கொண்டிருந்த ஹனுமாருக்கு காலப்போக்கில் மஹந்த்களால் கோயில் கட்டப்பட்டாது. இன்றும் அமைதியான சூழலில் இருக்கும் இக்கோயிலில் எப்பொழுதும் பக்தர்கள் நிறம்பி இருக்கிறார்கள். காலை ஐந்து மணிக்கு தீபாராதனையும், இரவு தீபாரதனை இரவு எட்டரை மணிக்கும் பக்தர்கள் சூழ நடைப்பெறுகிறது. மதியம் 12மணிக்கு ’போக்" [நிவேத்யம்] பிறகு மதியம் 3மணிக்கு கோயில் திறக்கிறது. இரவு பத்து மணிக்கு ’ஸயன ஆரத்தி’ தீபாராதனை நடைப்பெறும். அப்பொழுது மங்கிய விளக்கொளியில், சங்கட மோசன ஹனுமாரை கண்டவர்கள் தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

கோயிலில் செவ்வாய் கிழமையும் சனிகிழமையும் மிக விசேடமாக கொண்டாத படுவது ’அகண்ட நாம ஸங்கீர்த்தன்மும்’, ஶ்ரீராமசந்திர மான்ஸில் உள்ள சுந்தர காண்ட பாராயணமும். கார்த்திகை மாதம் வரும் கிருஷ்ண சதுர்தஸி அன்று அதிகாலை விசேடபூஜை நடைப்பெறுகிறது. கோயிலின் பிரம்மோஸ்ஸவம் சைத்ர மாதம் பௌர்ணமி அன்று நடைப்பெறும் நாலு நாட்கள் நடைப்பெறும் விசேட விழா இது. இராமாயணத்தினை பற்றிய விவாதங்களும், விராட் ஸங்கீதமும் இந்த நாலு நாட்களும் நடைப்பெறும். இதில் பங்கு கொள்வதை பல பண்டிதர்களும் பாகவதர்களும் பெரும் பேறாக கருதுகின்றனர்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "சங்கட மோசன ஹனுமான் கோயில், வாரணாசி"

 

அனுபவம்
அடுத்த முறை வாரணாசிக்குச் செல்லும்போது, ஸ்ரீ ஹனுமானை, சங்கட மோசனனாக நினைத்து தரிசனம் செய்யுங்கள். உங்களை பாதிக்கும் அனைத்து சிக்கல்களிலிருந்தும் விடுபட்டு, இதை சாத்தியமாக்கிய ஸ்ரீ துளசிதாஸ்ஜிக்கும் உங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுங்கள்

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: நவம்பர் 2015
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+