home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீ மஹாவீர் [ஹனுமார்] கோயில், சுருளி, பூரி, ஒடிசா

திரு. பிரேமானந்த தாஸ், கட்டக்


சுருளி கிராமம்

ஒடிசாவின் தலைநகரம் புவனேஸ்வரிலிருந்து பூரி க்ஷேத்திரதிற்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சந்தன்பூர் தாண்டியவுடன் இடைப்படும் சுருளி சந்திப்பு அல்லது துலஸ்சோல்வா சந்திப்பு வரும். நீங்கள் மிக பழமையான ஹனுமான் கோயிலுக்கு செல்ல நினைத்தால் இந்த சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சுமார் பத்து கிலோமீட்டர் செல்லுங்கள். அமைதியான சிறிய கிராமமான ’சுருளி’ தாங்கள் மனதை கொள்ளைக் கொள்ளும். இச்சிறிய கிராமத்தில் அமைந்து இருக்கும் ஶ்ரீஹனுமானுக்கான கோயில் பிரம்மாண்டமானது. கிராமத்தின் அனைத்து வீதிகளும் கோயிலில் தான் முடியும். இவ்வழகிய சுருளி கிராமம் பூரி க்ஷேத்திரத்திலிருந்து இருபத்து இரண்டு கிலோமீட்டரும், புவனேஸ்வரிலிருந்து எழுபத்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

ஹனுமாரும் சுருளியும்

அயோத்தியா புரியில் ஶ்ரீராமரின் ராஜ்யம் நடைப்பெற்ற பொழுது மக்கள் எந்த சௌகரியத்திற்கும் குறைவின்றி சுகமாக இருந்தனர். ஹனுமார் பூரி க்ஷேத்திரத்திற்கு வந்து ஶ்ரீஜகன்நாதரை தரிசித்துவிட்டு அயோத்திக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது மாலை நேரம் வந்த்தால், சந்தியா வந்தனத்தை செய்வதற்காக தடாகத்தை கண்டு அங்கு தன் மாலை கடமையான சந்தியா வந்தனத்தை செய்தார். அப்படி அவர் அன்று தேர்ந்தெடுத்த தடாகம் உள்ள இடம் தான் இன்றைய சுருளி.

தான் தோன்றி ஶ்ரீமஹாவீர்

ஸ்ரீ மகாவீர் கோயில், சிரூலி, ஒடிசா முகப்பு, courtesy: google map ஒடியாவில் ஹனுமாரை ’மஹாவீர்’ என்ற நாமத்தினால் அழைக்கிறார்கள். சுருளியில் நீண்ட காலமாக பூசனையில் உள்ள ஶ்ரீமஹாவீர் தான் தோன்றி ஹனுமார். ஆறாம் நூற்றாண்டில் சோழகங்கா தேவ் என்னும் மன்னரால் இக்கோயில் விரிவு படுத்தி கட்டப்பட்டது. அப்பொழுது கோயில் முழுவதும் கருங்கல்லால் கட்டினார். அருகிலிருந்த தடாகத்திற்கு கருங்கற்களால் படி அமைத்துள்ளார். கோயிலின் அருகில் பூஜைக்கு உபயோக படுத்த என்றே புதிய கிணறு வெட்டியுள்ளார். ஐந்து ஏக்கர் பரப்பளவில் மிக அருமையான கோயில் வளாகமாக மாற்றிவிட்டார்.

சுருளி ஶ்ரீமஹாவீர்

மேற்கு நோக்கி அமைந்திருக்கும் தான்தோன்றி சுருளி மஹாவீர் மிக கம்பீரமாக சுமார் இருபது அடி உயரம் உள்ளார். பகவானின் திரு கரங்களில் ஶ்ரீசீதாதேவிக்கு கொடுக்கப்பட்ட மோதிரம், தேவியார் கொடுத்த சூடாமணியும் இருக்கிறது. பகவானின் கண்கள் தான் இங்கு விசேடமாக கொண்டாடப்படுகிறது. இவரின் இரு கண்களும் ஒரே திசையை நோக்கி அமையவில்லை. ஒரு கண் தென் திசை நோக்கியுள்ளது, மற்றது கருவறையில் உள்ள ஒரு துவாரத்தை நோக்கிய வண்ணமுள்ளது. காலை வேளையில் அந்த துவாரத்தின் வழியே நோக்கினால் பூரி ஶ்ரீஜகன்நாதர் கோயில் உச்சியிலுள்ள நீல சக்கரம் மிகத் தெளிவாக தெரியும்.

சுருளி மஹாவீர் அவர்கள் ஒரு விழியால் பூரி ஶ்ரீஜகன்நாதரையும் மறுவிழியால் ஶ்ரீரங்கநாதரையும் நோக்குவதாக அமைந்துள்ளது இக்காட்சி.

சுருளி ஶ்ரீமஹாவீருக்கு விசேட பூஜைகள்

ஒவ்வொரு மாதப்பிறப்பும் இங்கு விசேட பூஜைகள் நடைப்பெறுகிறது. செவ்வாய்தோறும் விமர்சையாக பூஜை செய்யப்படுகிறது. பகவானுக்கு அவல் நிவேத்தியமாக அளிக்கப்படுகிறது. ’படா-போக்’ என்னும் விசேட சாப்பாடு, கலவை அன்னம் ஆகியவைகளும் இறைவனுக்கு நிவேத்தியம் செய்யப்படுகிறது. ஒரு கிலோ அவல், பத்து கொப்பரை தேங்காய், அரை கிலோ பசும் நெய், அரை கிலோ வெல்ல சக்கரை இவைகளை கொண்டு தயாரிக்கப்படும் ’சூடாகஷா’ என்ற விசேட நிவேத்தியம் மஹா வீர்ருக்கு அளிக்கப்படுகிறது.

வருடத்தில் ஒரு நாள் [அன்று முழுவதும்] ஶ்ரீமஹாவீருக்கு துளசி நீர் மட்டும் நிவேத்தியம் செய்யப்படுகிறது.

பூஜை செய்யும் பண்டிதர்கள்

பிலாஷ்பூர் அருகாமையிலுள்ள சபரிநாராயண் கிராமத்திலிருந்து மஹாராஜா சோழகங்கா தேவ் அவர்களால் இங்கு அழைத்து வரப்பட்ட பண்டிதர்களே இன்றும் பரம்பரையாக சுருளி ஶ்ரீமஹாவீருக்கு பூஜை செய்து வருகிறார்கள்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீ மஹாவீர் [ஹனுமார்] கோயில், சுருளி, பூரி, ஒடிசா"

 

அனுபவம்
மனமெல்லம் நிறைந்து நிற்கும் சுருளி ஶ்ரீமஹாவீர் ஹனுமாரின் தரிசனம்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு பிப்ரவரி 2015
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+