home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் திருக்கோயில், சோளிங்கர்:: courtesy :: Sri Sathish Kumar, Google map

ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் திருக்கோயில், சோளிங்கர், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு

ஜீகே கௌசிக்


பக்த பிரஹல்லாதன்

ஹிரண்யகசுபுவின் மகன் பிரஹல்லாதனுக்கு இறைவனிடம் அசைக்க முடியாத நம்பிக்கை. ஹரி என்னும் பரம் பொருள் எங்கும், எதிலும் வியாபித்துள்ளார் என்பது அவனது உறுதியான கருத்து. ஆனால் அவன் தந்தை ஹிரண்யகசுபுவுக்கு ’தான்’ தான் பரம் பொருள் என்று வாதிடுவார். நாரயணனை துதிக்கும் தன் மகனை பல சோதனைக்கு உள்ளாக்கினான். எல்லா சோதனைகளிலும் இறை அருளால் வெற்றி கண்டான் பிரஹல்லாதன். இதை அவன் தந்தையால் பொருக்க முடியவில்லை. இறைவன் எல்லா இடத்திலும், ஒவ்வொரு துரும்பிலும் உள்ளதாகக் கூறிய பிரஹல்லாதனை நிரூபணம் செய்யச் சொன்னார். துரும்பில்லை தாங்கள் பேசும் பேச்சிலும், ஒவ்வொரு வார்த்தையிலும், எழுத்திலும், எழுப்பப்படும் ஒலியிலும் ஹரி உள்ளார் என்றான் பிரஹல்லாதன். ஆத்திரமடைந்த அவன் தந்தை ’இருந்தால் வரச்சொல் என்று கொக்கரித்த வண்ணம் அருகிலிருந்த தூணை தன் கதையால் ஓங்கி அடித்தார்.

ஆச்சரியம்! பாதி மனிதனாகவும் [நரன்] பாதி சிங்கமாகவும் [சிம்ஹா] இறைவன் ஹரி அத்தூணிலிருந்து வெளிப்பட்டார். அந்த அந்தி மாலை நேரத்தில், வெளியும் உள்ளும் இல்லாமல் வாசற்படியில் கீழும் [பூமி], மேலும்[ஆகாசம்] இல்லாமல் தனது மடியிலேயே, மனிதனும், விலங்குமில்லா நரஸிம்ஹராக ஹிரண்யகசுபுவை வதம் செய்தார் ஹரி.

லக்ஷ்மி நரசிம்மர் [நரஸிம்ஹர்]

Yoga Narasimha, Sholingur Temple ஹரியின் எல்லா அவதாரங்களிலும் ஸ்ரீ நரசிம்மர் அவதாரம் பெருமை சற்றே அதிகம். தனது பக்தனின் நம்பிக்கையை நிலைநாட்டுவதற்காக பக்தன் வேண்டிய உடன் அவதரித்ததினால் ஹரி பக்தர்களால் ஸ்ரீநரசிம்மர் சற்று உயர்வாக கொண்டாடப்படுகிறார். ஆனால் ஸ்ரீநரசிம்மர் ’உக்ராவதாரம்’ என்பதால் அவர் சாந்தமான நிலையில் இருப்பதை பூசிப்பதை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஸ்ரீநரசிம்மர் லக்ஷ்மியுடன் இருக்கும் பொழுது சாந்தமாக இருக்கிறார் என்பதால் இவரை ’ ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்’ என்று பூசனைச் செய்கிறார்கள்.

அதனால் ஸ்ரீநரசிம்மரை வழிபடுவது கொடுமையான தீயசக்திகளையும் அழிக்க வல்லது என்பது தின்னம். ஸ்ரீநரசிம்மரின் மற்றொரு சாந்த ஸ்வரூபம் யோக நிஷ்டையில் உள்ள ஸ்ரீயோக நரசிம்மர். இப்படிப்பட்ட ஸ்ரீயோக நரசிம்மர் தமிழ்நாட்டில் திருத்தணியிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சோளிங்கரில் கண்டு தரிசிக்கலாம். சோழசிங்கபுரம் என்னும் பெயர் மருவி சோளிங்கர் என்று ஆயிற்று. ஒரு நாழிகை என்பது இருபத்து நான்கு நிமிடங்கள் கொண்டது. நாழிகையை கடிகை என்றும் குறிப்பிடுவர். இந்த க்ஷேத்திரத்தில் ஸ்ரீயோக நரசிம்மரை ஒரு கடிகை தியானம் செயதால் முக்தி கிடைப்பது உறுதி. அதனால் இத்க்ஷேத்திரத்திற்கு ’கடிகாசலம்’ என்று ஒரு சிறப்பு திருநாமம் உண்டு.

ஸ்ரீயோக நரசிம்மர் சுமார் நானூறு அடி உயரமுள்ள மலை மீது குடிகொண்டுள்ளார். கோயிலின் முக்கிய துவாரம் வடக்கு நோக்கியுள்ளது. பகவான் கிழக்கு நோக்கியுள்ளார். அமைதியுடன் யோக நிலையிலுள்ள பகவான் நம்பிக்கையுடன் வரும் அனைத்து பக்தர்களுக்கும் தனது யோக நிலையிலேயே கடாக்ஷிக்கிறார். தாயார் அமிர்த்த வல்லியையும் இங்கு தரிசித்து ஆனநதம் அடையலாம்.

யோக ஆஞ்சநேயர்

Solingar Yoga Anjaneya பெரிய மலையிலிருந்து கீழே இறங்கி சற்றே தூரத்தில் சுமார் இருநூறு அடி உயரமாக காணப்படுவது சிறிய மலை. சிறிய மலை என்று அழைக்கப்படும் அம்மலையின் மேல் ஸ்ரீயோகஆஞ்சநேயருக்கான கோயில் அமைந்துள்ளது. மேற்கு நேக்கி அமைந்துள்ள இக்கோயிலில் மேற்கு நேக்கி ஸ்ரீயோக ஆஞ்சநேயர் குடிகொண்டுள்ளார். ஸ்ரீஆஞ்சநேயர் ஸ்ரீயோக நரசிம்மரை பார்த்த வண்ணம் யோக நிலையிலுள்ளார்.

நான்கு திருகரங்களுடன் யோக நிலையில் அமர்ந்திருக்கும் ஆஞ்சநேயரின் மேல் இரு திருகரங்களையும் பகவான் ஸ்ரீயோக நரசிம்மரால் கொடுக்கப்பட்ட சங்கும் சக்ரமும் அலங்கரிக்கின்றன.

சன்னதிதின் எதிரில் தெரியும் துவாரத்தின் வழி நோக்கினால் ஸ்ரீயோக நரசிம்மர் குடி கொண்டுள்ள கோயில் தெரியும். நித்யம் பகவானை தியானித்து யோக நிலையிலுள்ள ஸ்ரீயோக ஆஞ்சநேயரை கண் குளிர தரிசிப்போம்.

இங்குள்ள திருகுளத்திற்கு ’ஹனுமத் தீர்த்தம்’ என்பது திருநாமம்.

தலப்புராணம்

Solingar Chadurbuja Anjaneya ஸ்ரீயோக நரசிம்மருக்கு சோளிங்கரை தவிர இடங்களிலும் கோயில்கள் உண்டு. ஆனால் யோக ஆஞ்சநேயருக்கு இங்கு மட்டுமே கோயில். அவர் இங்கு யோக மூர்த்தியாக மட்டுமல்லாமல், அஹிம்சை மார்க்கத்தை நிலை நாட்டியவரும் ஆவார்.

இந்திரதூமன் என்னும் அரசர் ஒருமுறை கவரிமானை வேட்டையாடி அதனை துரத்திக் கொண்டே சோழசிம்மபுரம் காட்டுக்குள் நுழைந்தார். அவர் துரத்தி வந்த மான் அங்கு சின்ன மலையில் ஏறத்தொடங்கியது. மன்னனும் விடாமல் மலை மீது ஏறினான். ஆனால் அவன் கண்முன்னே அம்மான் ஜோதி ஸ்வரூபமாக மாறி பின் மறைந்துவிட்டது. ஆச்சரியமடைந்த மன்னர் அன்று முதல் அஹிம்சையை பின்பற்றினார். ஸ்ரீயோக நரசிம்மரின் விருப்பப்படி மன்னனை அஹிம்சை பாதையில் திருப்ப, ஸ்ரீயோக ஆஞ்சநேயர் மானை ஆட்கொண்டு ஜோதி ஸ்வரூபமாக மன்னருக்கு அருளினார். சோழசிம்மபுரத்தில் கும்போதரன் என்னும் அரக்கனின் அட்டகாசத்தை மன்னர் இந்திரதூமன் அஹிம்சை முறையிலேயே அடக்கி, அந்த ஊருக்கு அமைதியைக் கொணர்ந்தார்.

மலைக்கோயில்களின் உத்ஸவ மூர்த்திகள் இரண்டு கி.மீ. தொலைவில் ஊர் மத்தியில் உள்ள பக்தவத்ஸலம் கோயிலில் உள்ளது. நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் மிக விஸ்தாரமாகவும், அழகாகவும் உள்ளது.

சோளிங்கர் ஸ்ரீயோக ஆஞ்சநேயர்

ஸ்ரீயோக ஆஞ்சநேயர், மனநோயாளிகளை குணப்படுத்தும் வலிமையுள்ளவர். நோயாளி இந்த க்ஷேத்திரத்திலுள்ள ’ஹனுமத் தீர்த்தம்’ என்னும் குளத்தில் நீராடிய பின் ஸ்ரீயோக ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய வேண்டும். நம்பிக்கையுடன் இதை செய்யும் நோயாளி தனது மனநிலை சரியாவதை கண்கூடாகப் பார்க்கலாம்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     " "ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் திருக்கோயில், சோளிங்கர்"

 

அனுபவம்
இந்த கோவிலில் பிரார்த்தனை செய்தால், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை யோக அஞ்சநேயர் குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது. நோயாளி செய்ய வேண்டியதெல்லாம் புனிதமான ஹனுமந்த தீர்த்தத்தில் குளித்துவிட்டு யோக ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்வதுதான். குணமாவது உறுதி.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு ஏப்ரல் 2014
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+