ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர், புன்னைநல்லூர், தஞ்சாவூர்


தஞ்சாவூர் என்று சொன்னாலே நமக்கு நினைவுக்கு வருவது இராஜராஜ மாமன்னன் கட்டிய பெரிய கோயில் தான். அதை அடுத்து நமக்கு நினைவுக்கு வருவது திருப்புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு திருமங்கையாழ்வார் திருமந்திர உபதேசம் பெற்ற மாமணிக் கோயில் நினைவுக்கு வரும். திருப்புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலிருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் உள்ள பழமை வாய்ந்த அருமையான கோயில் ஸ்ரீகோதண்டராமர் கோயில். இக்கோயிலைப் பற்ற வெளியுலக்கு அதிகம் தெரியாது.

இக் கோயில் தஞ்சையை ஆண்ட மகாராஷ்டிர மன்னரான ஸ்ரீபிரதாப்சிங், (கி.பி. 1739-1763) அவர்களால் கட்டப்பட்டதாகும். பின்பு ராணி எமுனாம்பாள் பாஹிசாகேப், சிவாஜி மன்னரின் பட்டமகிஷியான ஸ்ரீகாமாக்ஷியம்பா பாஹிசாகேப் (கி.பி.1836-92), ஆகியோர் கைங்கரியங்கள் பல செய்துள்ளனர். சிவாஜி மன்னரின் பௌத்திரர் சீனியர் சத்ரபதி ஸ்ரீமந்ராஜா பாபாஜி ராஜா சாகேப் அவர்கள் தற்கால டிரஸ்டி.

கோதண்டராமர், தஞ்சை kothanda Ramar, Tanjavurமூலவர்கள் ஸ்ரீராமர், இளையபெருமாள், சீதாப்பிராட்டியார், ஆஞ்சநேய ஸ்வாமி நால்வரும் மூர்த்திகளும், சாளக்ராம மூர்த்திகள். அவர்களின் திவ்ய கம்பீர தோற்றம்- மனம், சொல், செயல் மூன்றையும் ஒருநிலைப் படுத்தும் விசேஷ தரிசனம்.

மூன்று உற்சவ மூர்த்திகளும் அபூர்வ பிம்பங்கள், கோதண்டராமனாகச் சேவை சாதிக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை விட்டுக் கண் அகல மறுப்பதில் வியப்பில்லை. மந்தஹாஸம் மலரும் திருமுக மண்டலமும், மணிகள் அசைந்தாடிச் சிற்றொலி எழுப்பும் வளைந்த கோதண்டத்தை ராகவன் லாவகமாக ஏந்தியிருக்கும் எழிற்பாங்கும், மூன்று வளைவுடன் கூடிய திருமேனியும் நம்முள் பக்தியுணர்வுடன் கலையுணர்வையும் தூண்டி நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன. வலதுப்புறம் சாமுத்திரிகா லட்சணங்களுடன் தாயார் ஜானகியும், இடப்புறம் இளையப் பெருமாளும் சேவை சாதிக்கிறார்கள்.

ஜயவீர ஆஞ்சநேயர், தஞ்சை JayaVera Anajneya, Tanjavurஇக் கோயிலில் மூலவர்களுடன் இருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி தவிர, தனி அலங்கார மண்டபத்திலும் எழுந்தருளியுள்ளார். அண்ணல் ஸ்ரீராமனின் மோதிரத்தை அன்னை ஸ்ரீசீதாப்பிராட்டியிடம் கொடுத்து தாயாரின் துயர் துடைத்தவர் ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமி. பின்பு அன்னையைக் கண்ட செய்தியினை ஸ்ரீராமபிரானிடம் கூற வருபவர் ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர். இத்திருநாமம் கொண்ட ஆஞ்சநேய ஸ்வாமி இத் தனி அலங்கார மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார். தூக்கிய வலக்கையும், வெற்றிச் சின்னமாகிய தாமரை ஏந்திய இடக்கையுமாக விசுவ ரூபமாக, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார் ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர்.

சாதிக்க முடியாதையும் சாதித்தவர் (அன்னையை காண கடலை தாண்டியவர்), வீரன் (எதிரியாம் இராவணனின் இலங்கையில் புகுந்தவர்) ஜயம் கொண்டவர்- கொடுப்பவர் (கடலை தாண்டி, எதிரியாம் இராவணனின் இலங்கையில் அன்னையை கண்டவர்), இந்த க்ஷேத்திரத்தில் குடியிருக்கும் ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர். இந்த ஸ்ரீ ஜயவீர ஆஞ்சநேயர் நம் எல்லோருக்கும் நல்வாழ்வு அளிக்க வேண்டிப் பிராத்திப்போம்.


இக் கோயிலைப் பற்றிய மேல் விவரங்களுக்கு :

சி. வேங்கடேசன் பட்டாசாரியார் அவர்கள்,
ஸ்ரீகோதண்டராமர் கோயில்.
மாரியம்மன் கோயில் (தபால்)
தஞ்சாவூர் - 613501

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே