home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

ஜாஹூ குன்று ஸ்ரீ ஹனுமார், சிம்லா,ஹிமாசல பிரதேசம்

சர்தார் பி. ஸ். தாரா அவர்கள், சண்டிகர்


ஏழு மலைகள்

ஸ்ரீ ஹனுமார் கோயில், ஜாஹூ குன்று, சிம்லா,ஹிமாசல பிரதேசம் ஏழு மலை என்ற உடன் நமக்கு நினைவுக்கு வருவது திருப்பதி தான். சேக்ஷாத்ரி, வேதாத்ரி, அஞ்சனாத்ரி, ரிஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி என்பன. அவைகளில் ஏழாவது மலை ’வேங்கடாத்ரி’யில் ஸ்ரீ பாலாஜி கோயில் கொண்டுள்ளார். ’அத்ரி’ என்றால் வடமொழியில் மலை என்று பொருள். அஞ்சனாத்ரி என்னும் மலையில்தான் ஸ்ரீ அஞ்சனாதேவி ஈசனை குறித்து தவம் மேற்கொண்டாள். ஈசனின் அருளால் அஞ்சனை தாய்மை எய்து ஸ்ரீ ஆஞ்சநேயரை மகனாக அடைந்தாள். அவள் தவம் செய்த பூமியாதலால் அம்மலைக்கு அஞ்சனாத்ரி என்று பெயரிட்டார்கள்.

சிம்லாவும் ஏழுமலையும்

பழைய ஸ்ரீ ஹனுமார் கோயில், ஜாஹூ குன்று, சிம்லா,ஹிமாசல பிரதேசம்- உபயம்: விக்கி ஹிமாசல பிரதேசத்தின் தலைநகரமான சிம்லாவும் ஏழு மலைகளால் ஆனது. ஆங்கிலேயர்கள் காலத்தில் இது இந்தியாவின் கோடைக்கால தலை நகரமாக இருந்தது. உலகிலேயே நகர்புறத்தில் காடு உள்ள இடம் சிம்லா மட்டுமே. இங்குள்ள ஏழு மலைகளில் ’காமனாதேவி’ குடிக்கொண்டுள்ள காமனாவும், ஜாஹூ மிக பிரபலம். இவ்ஏழு மலைகளில் மிக உயரமானது ஜாஹூ மலை. இரண்டாயிரத்து நானூற்று ஐம்பத்து ஐந்து அடி உயரம். இச்சிகரம் சிம்லாவின் மகுடம் போல் உள்ளது. அச்சிகரத்தில் உள்ள சிறிய கோயில் மகுடத்திற்கு மணியாக இரத்தினமாக அமைந்துள்ளது என கூறினால் மிகையாகாது. மால் ரோடிலிருந்து ஒன்னரை கிலோ மீட்டர் தூரம் ஏறினால் சிகரத்தை அடையலாம். சிம்லாவிற்கு மணியாக உள்ள கோயிலையும் உள்ளேயிருக்கும் ஒளிர்மிகு மாணிக்கத்தையும் தர்சிக்கலாம் வாருங்கள்.

ஹனுமாருக்கு கோயில்

ஜாஹூ சிகரத்தில் அடைந்த உடன் நம்மை வரவேற்ப்பவர் வானரங்கள் தான். அவைகள் பக்தர்கள் கொடுக்கும் பிரஸாதத்தை பெறுவதற்காக செய்யும் குரும்புகள், சேட்டைகள் பல. ஒரு செருப்பை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு பிரசாதம் கேட்கும் பாணியே அலாதிதான். வெகு காலங்களாக பூசிக்கப்பட்டு வரும் இடம் இது. ஆனால் சரித்திரத்தில் அனனன்டேல் என்ற இப்பகுதியை ஆங்கிலேயர்கள் தங்களின் கோடைக்கால தலைநகரமாக தேர்ந்தெடுத்ததிலிருந்து தான் இவ்விடத்தினைப் பற்றிய விவரங்கள் தெரிகிறது. தொன்று தொட்டு பூசிக்கப்பட்டு வந்த இடத்தில் முதலில் 1837-ல் புதிய கட்டடம் கட்டப்பட்டது. பின் 1920ம் ஆண்டு ஹிமாசலத்திற்கே உரிய கலைப்பாணியில் கோயிலின் கட்டமைப்பு மாற்றி அமைக்கப்பட்டது.

தலப்புராணம்

புதிய ஸ்ரீ ஹனுமார், ஜாஹூ குன்று, சிம்லா,ஹிமாசல பிரதேசம் இந்த இடம் பூசனைக்கு உரிய இடமானதுப் பற்றி இரண்டு விதமான புராணங்கள் நிலவுகின்றது. இலங்கை போர் களத்தில் லக்ஷ்மணர் மூர்ச்சையாகி இருந்த பொழுது சஞ்சீவி மலையை தேடி அனுமார் வடதிசை நோக்கி வான்வழிச் சென்றார். அப்படி போகும் போது மேலிருந்து நோக்கும் போது அடர்ந்த காடாக தெரிந்த ஜாஹூ சிகரத்தை சஞ்சீவி என நினைத்து இங்கு இறங்கினார் என்பர். [இப்பொழுதும் இது அடர்ந்த காட்டு பகுதியாக தான் திகழ்கிறது].

சற்றே மாறாக அப்படி பறந்து சென்றப் பொழுது அனுமாரின் காலணி இங்கு விழுந்ததாக கூறுவார்கள்.

எது எப்படியானாலும் நெரிச்சல், கும்பலுக்கு அப்பால் அமைதி காக்கும் இவ்விடத்தில் அனுமார் கோயில் கொண்டிருப்பது நமக்காக தான். காட்டு பகுதியின் நடுவில், மரங்களிடையே பாயும் காற்று உருவாக்கும் சங்கீதத்தின் பின்ணனியில் நாம் நம்மை மறந்து நமக்குள் ஐய்க்கியமாகிவிட காற்றின் மைந்தன் ஏதுவாகிறான்.

அனேகமாக சிம்லா வருபவர்கள் இக்கோயிலுக்கு வருகிறார்கள். பார்க்க மட்டும் வராமல் பக்தியுடனும் சிரத்தையுடனும் வந்தால், மன நிம்மதியுடன் திரும்புவது திண்ணம். அந்தி மயங்கும் வேளையிலோ, அல்லது சூரியோதய காலத்திலோ இந்த இடம் மனநிம்மதியை வளர்க்கும். அதுவும் மழைகாலத்திலோ குளிர்காலத்திலோ இங்கிருந்து உதய சூரியனை பார்த்தால் அதனை வாழ்நாளில் மறக்க முடியாது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     " "ஸ்ரீ ஹனுமார் கோயில், ஜாஹூ குன்று, சிம்லா"

 

அனுபவம்
பக்தியுடனும் சிரத்தையுடனும் வந்து ஜாஹூ ஹனுமாரை தர்சித்தால், மன நிம்மதியுடன் திரும்புவது திண்ணம்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு டிசம்பர் 2013
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+