home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ வியாசராஜா பிரதிஷ்டை ஹனுமான்

ஸ்ரீபாதராஜ மடம், நரசிம்ம தீர்த்தம், முல்பாகல், கோலார், கர்நாடகா

ஜிகே கௌசிக்

ஶ்ரீபாதராஜாவின் பட்டாபிஷேகம்


முல்பாகல்

நரசிம்ம தீர்த்தம், முல்பாகல், கோலார், கர்நாடகா முல்பாகல் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலை நகரம் ஆகும். கோலார் நகரத்திலிருந்து முப்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த பழமையான நகரம் பெங்களூரு மற்றும் திருப்பதியை இணைக்கும் பிரதான நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இந்த இடம் வேத பண்டிதர்கள் பலர் வாழ்விடமாக இருந்துள்ளது. இங்கு இயங்கிய வேத மையங்கள் கடந்த கால மன்னர்களின் ஆதரவால் குறிப்பாக விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆதரவால் நடைப்பெற்று வந்தது. முல்பாகல் மகாபாரத காலத்திற்கு முன்பே புகழ் பெற்று விளங்கியது.

முல்பாகல் பெயர் காரணம்

பாரம்பரிய மைசூரு ராஜ்ஜியத்தின் கிழக்கு எல்லையாக இது இருப்பதால், இது முதலபாகிலு என்று பெயர் பெற்றது. முதலபாகிலு என்றால் கன்னட மொழியில் "கிழக்கு கதவு" என்று பொருள். முதலபாகிலு முலபாகிலு ஆனது இப்போது முல்பாகல் என்று ஆங்கிலேயர்கள் காலத்தில் மாறியது.

தற்போதைய முல்பாகலின் பரிணாமம்

இந்த இடத்தின் முந்தைய பெயர்கள் பாஸ்கர க்ஷேத்திரம், கதலிஷா-வன் மற்றும் அர்ஜுனபுரம் ஆகும். திரேதா யுகத்திலிருந்தே இந்த இடம் புனிதமானதாக கருதப்படுகிறது. இக்ஷ்வாகு வம்சத்தின் குல குருவான வசிஷ்ட முனிவர் திரேதா யுகத்தில் ராமர்-சீதா-லக்ஷ்மணர் விக்ரஹங்களை இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார். துவாபர யுகத்தின் போது, ​​ஸ்ரீ ஸ்ரீநிவாஸரின் விக்ரஹம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. மகாபாரதப் போருக்குப் பிறகு, ஸ்ரீ அர்ஜுனன் தனது தேரின் கொடிக் கம்பத்தில் இருந்த ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு நன்றி செலுத்தும் வகையில் ஸ்ரீ ஆஞ்சநேயரின் திருவுருவத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்.

முன்பே கூறியது போல் இந்த இடம் பல அறிஞர்களால் வேதம் கற்பிக்கும், கற்கும் மையமாக திகழ்ந்துள்ளது. இத்திருத்தலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய மாபெரும் வேத வித்வான் ஸ்ரீபாதராஜ தீர்த்தரை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். இவரது புலமையை அப்போதைய விஜயநகர அரசர் ஸ்ரீ சாளுவ நரசிம்ம தேவராயர் தகுந்த முறையில் கௌரவித்துள்ளார்.

வியாச குகை, ஸ்ரீபாதராஜ மடம், நரசிம்ம தீர்த்தம், முல்பாகல், கோலார், கர்நாடகா விஜயநகர மன்னன் ஸ்ரீ சாளுவ நரசிம்ம தேவராயர் ஸ்ரீபாதராஜரை தனது குருவாகக் கருதி அவருக்கு அனைத்து அரச மரியாதைகளையும் வழங்கினார். குரு ஸ்ரீபாதராஜருக்கு ரத்னா அபிஷேகம் செய்து கௌரவித்தார்.

ஸ்ரீ ஸ்ரீபாதராஜரின் சுருக்கமான சுயசரிதைக்கு இங்கே கிளிக் செய்யவும்.

முல்பாகலில் ஸ்ரீ வியாசராஜா மற்றும் ஸ்ரீபாதராஜா

இன்றைய பஜார் தெருவில் உள்ள ஸ்ரீபாதராஜ மடம் ஸ்ரீபதராஜா ஆரம்பத்தில் தங்கி தனது சீடர்களுக்கு வேதம் கற்பித்த இடமாகும். இத்தலத்தில் ஸ்ரீ லக்ஷ்மிநாராயண ஸ்வாமியை இவர் பிரதிஷ்டை செய்துள்ளார். இங்குதான் ஸ்ரீ ஸ்ரீபாதராஜா இளைஞர் ஸ்ரீ வியாசராஜவின் வித்யா குருவானார். இந்த இரண்டு மகான்களும் அவர்கள் மீது வானத்திலிருந்து மலர் மழை பொழிந்து ஆசீர்வதிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சி நடந்த புனிதமான இடத்தை நினைவு கூறும் வகையில் துளசி செடியை வைத்து பராமரிக்காப்படுகிறது. ஸ்ரீ வியாசராஜர் ஸ்ரீபாதராஜரிடம் பன்னிரண்டு ஆண்டுகள் இவ்வளாகத்தில் வேதம் கற்றார்.

ஸ்ரீ வியாசதீர்த்தர் ராஜ குருவாகிறார்

முன்பு கூறியது போல, விஜயநகர சாம்ராஜ்யத்தின் பேரரசரால் ஸ்ரீபாதராஜருக்கு ராஜகுருவின் அந்தஸ்து வழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில் பேரரசர் ஸ்ரீபாதராஜரை விஜயநகரின் தலைநகருக்கு தனது ஆச்ரமத்தை மாற்றம் செய்யச் செல்லி கேட்டுக் கொண்டார். வயதாகிவிட்டதால் முல்பாகுலில் இருந்து இவர் செல்ல மறுத்துவிட்டார். தனக்கு பதிலாக இவர் ஸ்ரீ வியாசதீர்த்தத்தை அங்கு அழைத்து செல்ல அவர் பரிந்துரைத்தார்.

நாளடைவில், விஜயநகரப் பேரரசின் ராஜா-குருவாக ஸ்ரீ வியாசராஜர் ஆனார். சங்கம வம்சத்தினரிடம் இருந்து துளுவ வம்சத்திற்கு ராஜ்ஜியம் மாறிய போதும், ஸ்ரீ வியாசராஜர் ராஜ குருவாகத் தொடர்ந்து அரசர்களுக்கு ஆலோசனை வழங்கி வந்தார்.

முல்பாகுலில் கங்கை

ஸ்ரீபாதராஜ மடம் தற்போது முல்பாகுல் புறநகரில் உள்ள நரசிம்ம தீர்த்தம் என்ற இடத்தில் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ யோக நரசிம்ம ஸ்வாமி இருக்கும் இந்த இடத்தில் ஸ்ரீபாதராஜா தனது ஆசிரமத்தைக் குடியமர்த்தியிருந்தார். ஸ்ரீ யோக நரசிம்ம ஸ்வாமியின் சந்நிதியின் புனிதம் காரணமாக ஸ்ரீபாதராஜா இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார். ஸ்ரீபதராஜா மற்றும் ஸ்ரீ வியாச தீர்த்தர் அவர்கள் காலத்தில் இங்கு வாழ்ந்தனர். முதிர்ந்த வயதில் ஸ்ரீபாதராஜா கங்கா ஸ்நானம் செய்ய விரும்பினார். கங்கா மாதா அவரது விருப்பத்தை அறிந்ததும், அவர் முன் தோன்றி, தான் நரசிம்ம தீர்த்தத்திற்கு வந்து நிரந்தரமாக குடியிருப்பேன் என்றும் தாங்கள் கங்கையை தேடி சிரமபட வேண்டாம் என்று கூறினாள். எனவே இன்றும் ஸ்ரீ நரசிம்ம தீர்த்தத்தில் நீராடுவது கங்கையில் நீராடுவதின் பலனை அளிக்கும் என்பது உண்மை.

இத்தலத்தில் ஸ்ரீபாதராஜர் பிருந்தாவனத்தைக் கொண்டுள்ளார். ஸ்ரீ வியாசராஜர் தவம் செய்த "வியாச குகை" உள்ளது. குகை அவரது வித்யா குரு ஸ்ரீபாதராஜரின் பிருந்தாவனத்தை நோக்கிய வண்ணமுள்ளது.

ஸ்ரீ வியாச தீர்த்தரும் ஸ்ரீ ஹனுமாரும்

ஸ்ரீ வியாசராஜா பிரதிஷ்டை ஹனுமான், ஸ்ரீபாதராஜ மடம், நரசிம்ம தீர்த்தம், முல்பாகல், கோலார், கர்நாடகா ஸ்ரீ வியாசதீர்த்தர் தென்னிந்தியாவின் பல்வேறு இடங்களில் ஸ்ரீ ஹனுமாருக்கு பல கோவில்களை கட்டியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஸ்ரீ ஆஞ்சநேயரை பல்வேறு இடங்களில் நிறுவும் இந்த மகத்தான பணி முல்பாகலில் முதல் ஸ்ரீ அனுமன் பிரதிஸ்தாபனை நிறுவுவதன் மூலம் அவரால் தொடங்கப்பட்டது. ஸ்ரீ வியாசராயர் முல்பாகல் நகரில் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணரை தனது வித்யா குரு நிறுவிய அதே இடத்திற்கு அருகில் முதல் ஹனுமான் விக்ரஹத்தை நிறுவினார். ஸ்ரீ வியாசராஜ பிரதிஷ்டை செய்த ஸ்ரீ ஆஞ்சநேய சந்நிதி ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் சந்நிதிக்கு மிக அருகில் தெற்கு நோக்கி உள்ளது. இதுபற்றிய விவரங்கள் நமது தளத்தில் "ஸ்ரீபதராஜ மடம், பஜார் வீதி, முல்பாகல்" என்ற கட்டுரையில் இடம் பெற்றிருந்தன. விவரங்களுக்கு தயவுசெய்து எங்கள் தளத்தில் அப்பக்கத்தைப் பார்வையிடவும்.

ஸ்ரீ வியாசராஜர் முல்பாகுலில் உள்ள நரசிம்ம தீர்த்தத்தில் ஸ்ரீ ஹனுமாரை பிரதிஷ்டை செய்துள்ளார். ஸ்ரீ அக்ஷோப்ய தீர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்டு ஸ்ரீபாதராஜ தீர்த்தரால் வழிபடப்பட்ட ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியின் சன்னிதானத்திற்கு அருகில் ஸ்ரீ வியாசராஜர் இதற்கான இடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தார். இது ஸ்ரீ வியாசராஜரின் இரண்டாவது அனுமன் பிரதிஷ்டானமாகும்.

இந்த க்ஷேத்திரத்தின் ஸ்ரீ ஆஞ்சநேயர்

இந்த க்ஷேத்திரத்தின் பகவான் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் விக்ரஹம் கடினமான கிரானைட் கல்லால் ஆன புடைப்பு சிலை [அர்த்த ஶிலா] சுமார் ஒன்பது அடி உயரம் உள்ளது. இறைவன் தனது இடது தாமரை பாதத்துடன் மேற்கு நோக்கி நடந்து செல்வதைக் காணலாம். அவரது வலது தாமரை பாதம் தரையில் இருந்து சற்று உயர்ந்து காணப்படுகிறது. அவருடைய பாதங்கள் இரண்டும் நூபுரம் மற்றும் தண்டை அலங்கரிக்கின்றன. அவர் வேட்டி கச்சம் வைத்து அணிந்துள்ளார் அதனை அலங்கார பட்டிகை ஒன்று பிடித்துள்ளது. அவரது இடது கை, இடது இடுப்புக்கு அருகில், சௌகந்திகா மலரின் தண்டைப் பிடித்துள்ளார். அவரது இடது தோளுக்கு மேல் அம்மலர் காணப்படுகிறது. மணிக்கட்டில் கங்கணமும் மேல் கரத்தில் நூபுரமும் அணிந்துள்ளார். அவர் தனது மார்பை அலங்காரமான ஆபரணங்கள் அணிந்துள்ளார். பிரபு யக்ஞோபவீதம் மற்றும் உத்தரியம் அணிந்துள்ளார். வலது திருக்கரத்தை மேலே உயர்த்தி அவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரபுவின் வால் வளைந்த முனையுடன் அவரது தலைக்கு மேலே உயர்த்து காணப்படுகிறது. இறைவன் காதுகளில் அணிந்துள்ள குண்டலம் அவரது தோளைத் தொடுகிறது. அவரது கேசம் அழகாக கட்டப்பட்டிருக்கிறது, அதனை அலங்காரமான 'கேச-பந்தா' நிலையில் பிடித்துள்ளது. அவரது பளபளப்பான கண்கள் பக்தர்களின் மீது கருணையை பொழிகின்றது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஸ்ரீபாதராஜ மடம், நரசிம்ம தீர்த்தம், முல்பாகல்"

 

அனுபவம்
அவர் முன் உங்களை சமர்ப்பியுங்கள். ஸ்ரீ யோக நரசிம்மர் மற்றும் ஸ்ரீ முக்யபிரான் சந்நிதியை நீங்கள் உணரலாம். எதுவும் கேட்காதீர்கள். எதனை வேண்டியும் பிரார்த்தனை செய்யாதீர்கள். தியானம் செய்யவும், இடைவிடாது தியானிக்கவும். நீங்கள் இதுவரை சாதித்ததை நினைத்துப் பாருங்கள். நீங்கள் நேர்மையான வழியில் புதிய உயரத்திற்கு வழிநடத்தப்படுவீர்கள்.   

தமிழாக்கம் :திரு. ஹரி சுந்தர்
பதிப்பு: ஜூன் 2022


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+