home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

போஜ்தால், போபால் ஏரி உபயம்: ஷோயப் மக்பூல், யூடியூப்


ஶ்ரீ ஹனுமான் மந்திர், கட்லாபுரா, ஜஹாங்கீராபாத், போபால், மத்திய பிரதேசம்

ஶ்ரீ ராம்பிரபு மிஶ்ரா, போபால்


போபால்

போபால் ஏரிகளின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இயற்கை அழகு மிகுந்த இந்நகரம் பழைமையும் புதுமையும் கலந்த அற்புதமான நகரமாகும். பதினொன்றாம் நூற்றாண்டில் இது ராஜா போஜ் என்பவரால் நிறுவப்பட்டு ’போஜ்பால்’ அழைக்கப்பட்டது. அனால் இன்றைய நகரம் தோஸ்த் முகமது [1707-1740] என்னும் ஆப்கானிய சிப்பாயினால் நிறுவப்பட்டதாகும். அவரது சந்ததியினர் போபாலை அழகான நகரமாக உருவாக்கினர்.

போபாலின் உள்ள இரண்டு ஏரிகள் இந்த பெரிய பழைய நகரத்தின் மையமாகும். இந்த இரண்டு ஏரிகளின் கரையோரங்களில் அமைந்துள்ள நினைவுச் சின்னங்களை பார்த்தால் இந்நகரத்தின் வளர்ச்சியை நாம் நன்கு அறியலாம். போபால் இன்று ஒரு பன்முகம் கொண்ட நகரமாக விளங்குகிறது; பழைய நகரம் அதன் சந்தைகள் மற்றும் சிறந்த பழைய மசூதிகள் மற்றும் அரண்மனைகள் இன்னும் அதன் முன்னாள் ஆட்சியாளர்களின் பிரபுத்துவ முத்திரையை தாங்கி நிற்கிறது. அவர்களின் வாரிசுகளாக 1819 முதல் 1926 வரை போபாலை ஆட்சி செய்த சக்திவாய்ந்த பேகங்கள் விட்டு சென்றவைகள் குறிப்பிட தக்கவை, பூங்காக்கள், தோட்டங்கள், பரந்த வழிகள் மற்றும் நெறிப்படுத்தப்பட்ட நவீன கட்டிடங்கள் முதலியனவாகும். நாட்டின் பெரும்பாலான நகரங்களை விட இது பசுமையாகவும், தூய்மையாகவும் உள்ளது ஆச்சரியமில்லை.

போபாலின் கருவான மேல் ஏரி மற்றும் கீழ் ஏரி

ஶ்ரீ ஹனுமான் மந்திர், கட்லாபுரா, ஜஹாங்கீராபாத், போபால் அப்பர் ஏரி என்று அழைக்கப்படும் மேல் ஏரி, மறைந்த பர்மார் மன்னர் போஜ் என்பவரால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. ஆறு சதுர கி.மீ. பகுதியில் அமைந்திருக்கும் மேல் ஏரியை மேம்பாலம் கீழ் ஏரியில் இருந்து தனித்து காட்டுகிறது. சுற்றுலா பயணங்கள் இந்த ஏரியை சுற்றிப்பார்க்க பாய்மரம், துடுப்பு மற்றும் மோட்டார் படகுகள் என்று வசதிகள் உள்ளன. கீழக்கரை ஏரியின் வரலாறு சுமார் இருநூறு ஆண்டுகள் பழமையானது. இது 1794 ஆம் ஆண்டில் நபாப் ஹயாத் முகமது கான் அரசில் அமைச்சராக இருந்த சோடே கான் என்பவரால் கட்டப்பட்டது. [நவாப் ஹயாத் முஹம்மது கான் பகதூர் (1736-1807); 1777 முதல் 1807 வரை ஆட்சி செய்தார்.] இந்த ஏரி கட்டப்படுவதற்கு முன்பு, பல கிணறுகள் இங்கு இருந்தன, அவை விவசாய மற்றும் பல அனுகூலங்களுக்காக தண்ணீர் எடுக்க பயன்படுத்தப்பட்டன. ஆனால் ஏரி உறுவாக்கிய பிறகு அனைத்து கிணறுகளும் இந்த ஏரியில் இணைந்தன. கீழ் ஏரி 7.99 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்பு, ஏரி அதிகபட்சமாக 11.7 மீட்டர் மற்றும் குறைந்தபட்சம் 6.16 மீட்டர் ஆழம் இருந்தது.

போபால், ஆட்சி செய்த வம்சங்கள்

பல வம்சங்கள் நகரத்தில் தங்கள் முத்திரையை பதித்துள்ளன. ராஜபுத்திரர்கள், ஆப்கானியர்கள் மற்றும் மொகலாயர்களால் கட்டப்பட்ட கோட்டைகளின் முன்புற எச்சங்கள் கடந்த காலத்தின் போர்கள், வெற்றிகள் மற்றும் தோல்விகளைப் பற்றி அமைதியாக பேசுகின்றன. இந்த சின்னங்கள் கடந்த காலத்தின் மகத்துவத்திற்கு சாட்சியமாக உள்ளன மற்றும் கண்களுக்கு ஒரு அற்புதமான விருந்தளிக்கின்றன. நகரத்தின் எச்சங்களைப் பார்த்தும், கடந்த காலத்தில் இருந்த பல்வேறு கலாச்சாரங்களின் அடிசுவடிகளை அறியலாம். மிகவும் குறிப்பிடத்தக்க, தைரியமான, புரட்சிகரமான, மக்களை நேசிக்கும் ஒரு பெண் ஆட்சியாளர் க்குத்சியா ஆவார். இவர் அப்போதைய ஆட்சியாளர் கவுஸ் முகமது கான் மற்றும் பேகம் ஜீனத்தின் மகள் ஆவார்.

க்குத்சியா பேகம் மற்றும் நவாப் ஜஹாங்கீர்

Qudsia Begum (also known as Gohar Begum), Bhopal  1819 ஆம் ஆண்டில், 18 வயதான க்குத்சியா பேகம் (கோஹர் பேகம் என்றும் அழைக்கப்படுகிறார்) அவரது கணவர் நாசர் முகமது கானின் படுகொலைக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்தார். போபாலின் முதல் பெண் ஆட்சியாளர் இவர். இவர் படிப்பறிவில்லாதவராக இருந்தபோதிலும், துணிச்சலானவர் மற்றும் இவர் பர்தா பாரம்பரியத்தைப் பின்பற்ற மறுத்துவிட்டார். தனது இரண்டு வயது மகள் சிகந்தர் தன்னைத் தொடர்ந்து ஆட்சியாளராக வருவார் என்று அறிவித்தார். ஆண் குடும்ப உறுப்பினர்கள் யாரும் அவளது இம்முடிவிற்கு எதிர்ப்பு கூறத் துணியவில்லை. அவள் தன் குடிமக்களை நன்றாகக் கவனித்துக் கொண்டாள். ஒவ்வொரு இரவும் அவளுடைய நகரத்தில் எல்லோரும் உணவு உட்கொண்டார்கள் என்ற செய்தி வந்த பின்னரே அவள் இரவு உணவை எடுத்துக் கொண்டாள். அவர் போபாலில் ஜமா மஸ்ஜித் (மசூதி) மற்றும் அவரது அழகிய அரண்மனை 'கோஹர் மஹால்' (நாசர் பாக் என்றும் அழைக்கப்படுகிறது) கட்டினார். அவர் 1837 வரை ஆட்சி செய்தார், அதற்குள் அவர் தனது ஒரே மகள் சிகந்தர் பேகத்தை மாநிலத்தை ஆளுவதற்கான முழு நிர்வாக அதிகாரத்தையையும் வழங்கினார்.

பேகம் சிகந்தரின் கணவர் ஜஹாங்கீர் முகமது கான், பேகம் க்குத்ஸ்லாவுடனான ஒப்பந்தத்தின் காரணமாக மாநிலத்தின் ஆட்சியாளரானார். புதிய நவாப் ஜஹாங்கீர், ஒரு கவிஞராக இருந்தவர், வேசிகள், நடனமாடும் பெண்கள், மது மற்றும் களிப்புடன் அரண்மனையின் சூழலை மாற்றினார். அவர் ஒரு புதிய புறநகர்ப் பகுதியைக் கட்டி, அதற்கு ஜஹாங்கீராபாத் என்று பெயரிட்டார். தான் வளர்ந்த கோஹர் மஹாலை விட்டு தனக்கென புதியதாக இங்கு ஒரு அரண்மனையைக் கட்டினார்.

ஸ்ரீ ராய் சலன்லால்

அன்றைய ஆட்சியாளர்களுக்கு சேவை செய்து வந்த ராய் சலன்லால், ஸ்ரீ அனுமனின் தீவிர பக்தர். அவர் என்றும் ஸ்ரீ ஹனுமார் கோயிலுக்குச் செல்லத் தவறியதில்லை. கோஹர் மஹால் முக்கிய ராஜ அலுவலமாக செயல்பட்டு வந்ததால், ராய் சலன்லால் அவர்களும் அருகிலேயே வசித்து வந்தார். இவர் தினமும் கோஹர் மஹாலுக்கு அருகில் உள்ள ஹனுமார் கோயிலுக்குச் சென்று வந்தார். [அன்றைய அனுமன் கோவில் தற்போதைய தாஜ்மஹாலுக்கு அருகில் இருந்ததாக கூறப்படுகிறது]. புதிய நவாப் ஜஹாங்கீர் ஆட்சிக்கு வந்து தனக்கென புதிய நகரமாக ஜஹாங்கீராபாத்தை உருவாக்கிய பிறகு அரசாங்க அலுவல்களுக்காக ராய் சலன்லால் ஜஹாங்கீராபாத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.

அனுமன் கோவிலுக்கு தினசரி வருகை

ஶ்ரீ ஹனுமான் மந்திர், கட்லாபுரா, ஜஹாங்கீராபாத், போபால் இந்நிலையில் பழைய அரண்மனைக்கு அருகில் உள்ள அனுமன் கோவிலுக்கு வழக்கமாக சென்று வரும் ஸ்ரீ ராய் சலன்லால், தினமும் கோவிலுக்கு செல்வது சிரமமாக இருந்தது. ஜஹாங்கீராபாத் மற்றும் ஷாஜஹானாபாத் [தற்போதைய பெயர்] இடையேயான தூரம் அதிகமாக இருப்பதால், ராய் சலன்லால் அவர்களால் வாரத்தில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே ஶ்ரீ ஹனுமார் கோயில் செல்ல முடிந்தது. இந்த ஏற்பாடு அவருக்கு சங்கடமாக இருந்தது, எதையோ பறிக்கொடுத்த மாதிரி இருந்தது. தினமும் ஶ்ரீஹனுமாரை வணங்க வேண்டுமானால் ஜஹாங்கீராபாத்தில் ஸ்ரீ ஹனுமாருக்கு ஒரு கோயில் கட்டுவதற்கு நவாபிடம் கோரிக்கை வைப்பது நல்லது என்று அவர் நினைத்தார்.

நவாப் இடம் ஒதுக்கினார்

ஸ்ரீ ராய் சலன்லால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நவாபிடம் ஸ்ரீ ஹனுமாருக்கு கோயில் கட்டுவதற்கு நிலம் ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டார். நவாப் அவரிடம் கோயிலுக்கான தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார். அதன்படி அரசாங்க உயர் அதிகாரியான ஸ்ரீ ராய் சலன்லால் கீழ் ஏரிக்கு அருகில் கோயிலுக்காக ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தார். நவாப் ஜஹாங்கீர் முஹம்மது கான் ஸ்ரீ ஹனுமாருக்கு திருக்கோயில் கட்டுவதற்கான அந்த இடத்தை ஒதுக்கினார்.

கட்லாபுராவின் ஸ்ரீ ஹனுமான் மந்திர்

ஶ்ரீ ஹனுமான் மந்திர், கட்லாபுரா, ஜஹாங்கீராபாத், போபால் ஸ்ரீ ஹனுமாரின் பக்தரான ஸ்ரீ ராய் சலன்லால், தற்போது கீழ் ஏரிக்கு அருகில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்லாபுரா என்று அழைக்கப்படும் இடத்தில் இறைவனுக்கு கோயிலைக் கட்டினார். 1840 ஆம் ஆண்டு மூர்த்தம் ஸ்தாபிக்கப்பட்டு பிராணபிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை, பஜனை மற்றும் அன்னதானத்துடன் ஒரு பெரிய விழா நடைபெற்றது.

அன்றிலிருந்து அனைத்து தரப்பு மக்களும் இக்கோயிலுக்குச் சென்று ஸ்ரீ அனுமனின் அருளைப் பெறுவது வழக்கம். கோவிலின் பின்னணியில் கீழ் ஏரி இருப்பதால், இங்குள்ள வளிமண்டலம் குளிர்ச்சியாகவும், இதமாகவும், அமைதியாகவும் இருப்பதால், பக்தர்கள் தெய்வத்தை தியானிக்க வசதியாக இருக்கிறது.

ஜஹாங்கீராபாத் கட்லாபுராவின் ஸ்ரீ ஹனுமார்

ஜஹாங்கீராபாத்தின் கட்லாபுராவின் ஸ்ரீ ஹனுமார் மூர்த்தம், புடைப்பு சிலையாக [அர்த்த ஷிலா] வடிவில் கிழக்கு நோக்கியும், மந்திரின் கதவு வடக்கு நோக்கியும் உள்ளது. ஸ்ரீ ஹனுமார் தனது இடது கரத்தில் கதையைப் பிடித்துள்ளார். அபய முத்திரையில் இருக்கும் அவரது வலது திருக்கரத்தால் அச்சமின்மையையும், பக்தர் தேடும் பிற உன்னதமான பிரார்த்தனைகளுக்கும் அருள் செய்கிறார். அமைதியான சுற்றுச்சூழலில் உள்ள இந்தக் கோயிலுக்குச் சென்றால், பக்தர்களின் மனக்கவலைகள் தளர்த்துவதுடன், உள் அமைதியும் கிடைக்கும்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீ ஹனுமான் மந்திர், கட்லாபுரா, ஜஹாங்கீராபாத், போபால்"

 

அனுபவம்
அமைதியான சுற்றுச்சூழலில் உள்ள இந்தக் கோயிலுக்குச் சென்றால், பக்தர்களின் மனக்கவலைகள் தளர்த்துவதுடன், உள் அமைதியும் கிடைக்கும் என்பது உறுதி.    

தமிழாக்கம் :திரு. ஹரி சுந்தர்
* ஆசிரியர் மத்தியப் பிரதேச காவல்துறையில் பணிபுரிகிறார்
பதிப்பு: மார்ச் 2022


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+