home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

ஸ்ரீ படே ஹனுமார் திருக்கோயில், ப்ரயாகை, அலகாபாத், உத்திர பிரதேசம்

ஸ்ரீ ஸ்ரீபதி, புது தில்லி


ப்ரயாகை :

ப்ரயாகை, அலகாபாத், உத்திர பிரதேசம் இன்று நாம் அலகாபாத் என்று அழைக்கும் நகரம் மிக பழமையானது. வேதகாலம் முதல் இருக்கும் இவ்விடத்திற்கு ப்ரயாகை என்பது பழமையான பெயர். ஆஹவனீயம் கிழக்கிலும், கார்ஹபத்யம் மேற்கிலும், தக்ஷிணாக்னி தெற்கிலும் கொண்டு மூன்று அக்னிகளினால் பிரம்ம தேவர் இவ்விடத்தில் வேள்வி [யாகம்] செய்திருக்கிறார். “ப்ர” என்றால் பெரிய என்று பொருள். இது மிக பிரம்மாண்டமான யாகமானதால் இவ்விடத்துக்கு “ப்ரயாகம்” என்று பெயர். இதுவே மருவி “ப்ரயாகை” ஆயிற்று. மூன்று அக்னி என்பதை குறிக்கும் ’திரிதாக்னி’ என்று மற்றொருப் பெயரும் இவ்விடத்திற்கு உண்டு.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் கூடும் பிரயாகையில் கங்கையும் யமுனையும் நமக்கு தெரிகின்றது, சரஸ்வதி ’அந்தர் வாஹினி’ என்பதால் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை.

குருவம்சத்தை சார்ந்த ஹஸ்தினாபுரி அரசர்கள் இவ்விடத்தில் குஷம்பி என்றப் பெயரில் பெரிய நகரத்தை உருவாக்கி தங்களது தலைநகரமாக்கினார்கள்.

ஸ்ரீ ராமர் வனவாசம் சென்றபொழுது இங்குள்ள ஸ்ரீ பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் தங்கிவிட்டு, சித்ரகூடத்துக்கு போகிறார். பின்வரும் சரித்திர காலத்தில் ப்ராயாகை மௌரியர்களாலும் குப்தர்களாலும் ஆளப்பட்டது. பின்பு குசன் சாம்ராஜ்யத்தில் இருந்தது. பதினைந்தாம் நூற்றாண்டில் கன்னூஜ் அரசர்களிடமும், பின் முகலாயர் காலத்தில் அக்பர் இதனை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். ப்ராயாகை என்ற பெயரை அல்லா-கா-பாத் என்றும் மாற்றம் செய்தார்.

ப்ரயாகையின் மகிமை:

மகாபாரதப் போர் முடிந்த நிலையில் ’எத்தனை மக்கள் மாண்டுள்ளார்கள், எத்தனை சகோதரர்களையும் உறவினரையும் கொன்று குவித்துள்ளோம். எத்தனை பாபம் நமக்கு’ என்று வருத்தப் பட்டார் தருமர். மகா பாதங்களை போக்க வழி தேடினார். ஸ்ரீ மார்க்கண்டேய மகரிஷி கூறினார் “யுதிஷ்டிரா! இதற்கு ஒரே வழி கங்கை யமுனை சரஸ்வதி கூடும் திரிவேணி சங்கமத்தில், ப்ரம்மாவால் பெரிய வேள்வி நடத்தப்பட்ட ப்ரயாகையில் ஸ்நானம் செய்வது தான். பாபங்களை போக்குவதில் வலிமையான இடம் இது என்பதால் ’ப்ராயக் ராஜ்’ என்று பெயர். சந்தேகபடாமல் அங்கு ஸ்நானம் செய்து எல்லா பாபங்களையும் அறவே அற்று இரு” என்றார். அப்படிப்பட்ட இடம் ’சங்கம்’, ’ப்ரயாகை’, ’ப்ரயாக்ராஜ்’, ’த்ரிதாக்னி’ என்று அழைக்கப்படும் இந்த க்ஷேத்திரம்.

மஹா கும்ப மேளா

த்ரிதாக்னி என்னும் ப்ரயாகை, ப்ரயாகைகளில் முதன்மையான என்று பொருள்பட ’ப்ரயாக் ராஜ்’ என்று அழைக்கப்படும் இவ்விடத்திற்கு, பாரததேசத்திலுள்ள அனைவரும் ஒரு முறையேனும் ப்ராயாகைக்கு வந்து ஸ்நானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த அளவுக்கு உயர்ந்த புண்ணிய ஸ்தலமாக கருதப் படுகிறது. இப் புண்ணிய பூமியில் நடக்கும் கும்ப மேளாவிற்கு கோடி கணக்கான மக்கள் உலகில் எல்லா இடத்திலிருந்தும் வருவது இன்றும் நடக்கும் அதிசயம். கங்கை, யமுனா, ஸரஸ்வதி கூடும் ’சங்கம்’ என்னும் புணித பூமியில் எப்படி கோடி கணக்கான மக்கள் ஒரே நாளில் ஸ்நானம் செய்கிறார்கள் என்பது உலக மகா அதிசயமே.

இங்கு சங்கத்தில் ஸ்நானம் செய்ய வருபவர்கள் திரும்ப போய் விடுகிறார்கள், ஆனால் ஒரு ராம பக்தர் இங்கிருந்து போக மறுக்கிறார். ப்ரியாகையின் ஆனந்தத்தை அனுபவித்து கொண்டே ராம நாம த்யானத்தில் உள்ளார். ஆம்! நமது ராம பக்த அனுமார் ப்ராயகையில் குடிக்கொண்டுள்ளார். அவர் இங்கு வந்த நிகழ்ச்சி மிக சுவாரிசியமானது.

படே ஹனுமான் கோயில் உருவான சரித்திரம்

படே ஹனுமார் திருக்கோயில், ப்ரயாகை, அலகாபாத், உத்திர பிரதேசம் ப்ரயாகையிலிருந்து சுமார் முன்னூறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள கன்னூஜ் நகரத்தினைச் சேர்ந்த செல்வந்தரான வியாபாரி ஒருவர் இருந்தார். ஆனால் அவருக்கு மக்கட்செல்வ பேறில்லாதது மிகப் பெரிய குறையாக இருந்தது. அவர் ஹனுமாரிடம் அளவில்லாத பக்திக் கொண்டவர். அவரை வேண்டாத நாள் இல்லை. ஒரு நாள் தனது பூஜையின் பொழுது அவருக்கு ஹனுமானுக்கு தான் கோயில் கட்டினால் தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என தோன்றியது.

இதன் விளைவாக மிக பெரிய ஹனுமாரின் சிலை ஒன்றை வடிக்கச் செய்தார். சிலையை புனிதமான கங்கை நதியில் நீராட்டினார். ஆனால் கூடியிருந்த சில மகான்கள் சிலையை புனிதமான ’திரிவேணி சங்கம்’ க்ஷேத்திரத்தில் நீராட்டி பின் ஸ்தாபனம் செய்ய சொன்னார்கள். அதன்படி செல்வந்தரும் சிலையை திரிவேணி சங்கமத்திற்கு ஹனுமாரின் சிலையை எடுத்து வந்தார். வரும் வழியில் உள்ள அனைத்து நதிகளிலும் சிலையினை நீராட்டினார்.

ஹனுமாரின் அருளாசி

படே ஹனுமார் திருக்கோயில், ப்ரயாகை, அலகாபாத், உத்திர பிரதேசம் ப்ரயாகையில் புனித கங்கை, யமுனை, சரஸ்வதி கூடும் சங்கமத்தில் அப்பெரிய சிலையினை நீராட்டினார். அன்றிரவு செல்வந்தரின் கனவில் ஹனுமார் எழுந்தருளி அவருக்கு குழந்தை பாக்யம் உண்டு என்றும், ஆனால் தான் இங்கு சங்கமத்திலேயே இருக்க விரும்புவதால் தன்னை இங்கேயே விட்டுவிட்டுச் செல்லுமாரும் அருளினார். தனக்கு சந்தான பாக்கியம் அருளிய ஹனுமாரின் ஆசிப்படி நன்றியுடன் சிலையை ப்ரயாகையிலேயே விட்டுவிட்டு தன் ஊரான கன்னூஜ்க்கு திரும்பினார்.

நாளடைவில் நதிகளின் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலும், கால ஓட்டத்தில் நதிகளின் மாறுபட்ட போக்கினாலும் ஹனுமாரின் சிலை நதியின் நீரிலும் கோடை காலத்தில் நதிகரை மணலிலும் இருந்து பிறகு பூமிக்கு அடியில் மண்ணுக்கு அடியில் புதைந்து விட்டது.

மீண்டும் ஹனுமாரின் லீலை

இச்சம்பவம் நடந்து பல நாட்களுக்கு பிறகு ஸ்ரீ ஹனுமார் உபாஸகரான ஸ்ரீ பாலகிரி என்னும் மகான் சங்கம கரையில் வாழ்ந்து தினமும் சங்கமத்தில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நதியில் நீராடும் முன் தன்னுடைய திரிசூலத்தை நதிகரையில் ஊன்றிவிட்டு செல்வது அவர் வழக்கம். ஒரு முறை மாக மாதத்தில் [தமிழ் மாதம் தை-மாசி] அவர் அப்படி தன் திரிசூலத்தை பூமியில் ஊன்றியப் பொழுது ஏதோ கல்லில் மோதும் சத்தம் வரவே சற்று ஆச்சரியத்தில் அவர் தனது சிஷ்யர்களின் உதவியால் கவனமாக அவ்விடத்தை தோண்டச்செய்தார்.

அவருக்கு அற்புதமான ஹனுமாரின் விக்ரஹம் தெரிந்தது. நீண்டு படுத்த நிலையில் இருந்த மிகப் பெரிய ஹனுமார் சிலையை பார்த்து ஆனந்தத்தில் ஆழ்ந்து விட்டார். சங்கமத்தில் நீராடி ஸ்ரீ படே ஹனுமாருக்கு [பெரிய ஹனுமார்] பூஜைகள் செய்து வழிபடலானார்.

ஹனுமாருக்கு கோயில்

படே ஹனுமார் திருக்கோயில்-திபாவளி தினத்தன்று, ப்ரயாகை, அலகாபாத், உத்திர பிரதேசம் படுத்த நிலையில் இருக்கும் ஹனுமாரை நிற்க வைக்க மேற்கொள்ளப் பட்ட முயற்சிகளும் அவரை சற்றே உயரமான இடத்திற்கு மாற்ற எடுக்கப் பட்ட முயற்சிகள் யாவையும் தோல்வி அடைந்தது. ஸ்ரீ படே ஹனுமார் அங்கேயே கோயில் கொள்ள விரும்புகிறார் என்பதை இது உணர்த்தியது. மகான் ஸ்ரீ பாலகிரி அவர்கள் ஸ்ரீ படே ஹனுமாருக்கு அங்கேயே கோயில் கட்ட தீர்மானித்து அங்கே கொடி மரம் நட்டார், பின் அங்கே கோயிலும் கட்டினார். அதன் பழக்கமாக இன்றும் ஸ்ரீ ஹனுமார் பக்தர்கள் தங்களின் வேண்டுகோள் நிறைவேறிய உடன் ஸ்ரீபடே ஹனுமார் கோயிலுக்கு கொடி மரம் சமர்பணம் செய்கிறார்கள்.

கி.பி 1119ம் வருடம் அன்றைய அரசரால் மூன்று இஸ்ரா அளவு நிலம் ஸ்ரீ படே ஹனுமாருக்கு கோயில் கட்ட ஒதுக்கப்பட்டது. கோயிலை நிர்வாகிக்க ஸ்ரீ பாலகிரி கத்தி [gadhi - பீடம்] ஸ்தாபிக்கப் பட்டது. மகான் ஸ்ரீ பாலகிரியின் சீடர்களான ஸ்ரீ புருஷோதம்நாத் கிரி, ஸ்ரீ விசாரநாத் கிரி முதலிய மகான்கள் இப்பீடத்தை அலங்கரித்திருக்கிரார்கள். தற்போது ஸ்ரீநரேந்திரநாத் கிரி தலமையில் இப்பீடம் இயங்கி வருகிறது.

ஸ்ரீ படே ஹனுமாரும் ஸ்ரீ கங்கா தேவியின் பூஜையும்

படே ஹனுமார், ப்ரயாகை, அலகாபாத், உத்திர பிரதேசம் ஸ்ரீ படே ஹனுமார் கோயில் கங்கை கரையில் அமைந்துள்ளதால் ஒவ்வொரு வருடமும் கங்கை கரை புரண்டு ஓடும்போது ஹனுமனின் கால் வரை தண்ணீர் வந்து செல்லும். சில வருடங்களில் கங்கையின் வெள்ளம் அதிகமானால் ஹனுமார் ஜல வாசம் செய்வார். அப்பொழுது பூஜைகள் தடைபடாமல் இருக்க சற்றே உயரமான இடத்தில் மாற்று சிலை அமைத்துள்ளார்கள். ஸ்ரீ படே ஹனுமார் ஜல வாசம் இருக்கும் சமயத்தில் இம்மாற்று ஹனுமாருக்கு பூஜைகள் செய்யப்படும்.

முன்பு வருடா வருடம் கங்கை ஸ்ரீ படே ஹனுமாரை பூஜிக்க வரும் இச்சம்பவம் ப்ரயாக் வாசிகளுக்கு ஆனந்தத்தை அளிக்கும். ஆனால் தற்போது இது எப்பொழுதாவதே நடைபெறுகிறது. முதலாவது காரணம் திஹரி அணை கட்டப்பட்டது, அடுத்து கங்கையின் போக்கில் அங்கங்கே கட்டப்பட்டுள்ள சிறிய சிறிய அணைகள் ஆகும். இருந்தும் சுமார் நான்கு அல்லது ஐந்து வருடத்திற்கு ஒரு முறையாவது கங்கை ஸ்ரீ படே ஹனுமாரை பூஜிக்க வருகிறாள்.

படே ஹனுமார்

ப்ரயாகையில் இருக்கும் மிகப் பெரிய ஹனுமார் என்று பொருள் படும் ஸ்ரீ படே ஹனுமார் தனது உருவத்தில் மட்டுமல்லாமல் பிரதாபத்திலும் ’பெரிய’ தான். கண்கொள்ளா காட்சியாக இருக்கும் அவர் உருவம், ஸ்ரீராமரையும் ஸ்ரீலக்ஷ்மணரையும் பாதாள லோகத்தில் அஹி ராவணிடமிருந்து மீட்ட சம்பவத்தை காண்பிக்கிறது.

வலது திருகரத்தில் கதைத்திருக்கிறார். அவரது வலது பாதத்தின் கீழ் அஹி ராவணன் காணப்படுகிறான். அவரது இடது பாதத்தின் அருகில் அஹி ராவணனின் ஆராதனை தெய்வமான காமதா தேவி இருக்கிறாள். ஸ்ரீ இராமரும் ஸ்ரீ லக்ஷ்மணரும் அவரது இடது தோளின் மேல் காணப்படுகிறார்கள். ஸ்ரீ படே ஹனுமாரின் கண்கள் மிக கூர்மையாக கவனமாக இருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     " ஸ்ரீ படே ஹனுமார் திருக்கோயில், ப்ரயாகை, அலகாபாத் "

 

அனுபவம்
இறைவனின் தர்சனம் பக்தர்களுக்குக் கொடுக்கும் செய்தி - ’உண்மை’ மட்டுமே மேலோங்குகிறது என்பதே ஆகும். அவருடைய பக்தர்களின் அனைத்து நியாயமான, அடக்கமான விருப்பங்களையும் இந்த க்ஷேத்திரத்து ஸ்ரீ படே ஹனுமான் அருளுவார் என்பது உறுதி.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு அக்டோபர் 2013
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+