home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயசுவாமி திருக்கோவில், செட்டிசத்திரம், நீடாமங்கலம் தாலுகா, தமிழ்நாடு


ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயசுவாமி திருக்கோவில், செட்டிசத்திரம், நீடாமங்கலம் தாலுகா, தமிழ்நாடு

ஜி.கே.கௌசிக்


செட்டிசத்திரம்

தமிழ்நாடு செட்டிசத்திரம் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலை ஒட்டிய ஏரி நான் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தென் இந்திய பயணம் சென்றிருந்தேன். ஒவ்வொரு முறையும் கோவில்களுக்கு சென்று வருவது பழக்கம். அம்முறை நான் கோவில் வெண்ணி ஊருக்கு சென்று ஸ்ரீ வெண்ணிக்கரும்பீஸ்வரரையும் சௌந்தர்ய நாயகியையும் தரிசனம் செய்தேன். அங்கிருந்து நீடாமங்கலத்தில் உள்ள ஶ்ரீராமர் கோயிலுக்கு செல்ல விரும்பினேன். தஞ்சாவூர் நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் போது காத்திருந்த மற்றொருவருடன் கோவில்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். உரையாடிக் கொண்டிருந்த போது, அந்த இடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள செட்டிசத்திரம் கிராமத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஒரு பழமையான கோயில் இருப்பதாகச் சொன்னார். பழமையான ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தேன். அந்த நபர் சொன்னது போல் நாகப்பட்டினம் மெயின் ரோட்டை கடந்து மெயின் ரோட்டுக்கு செங்குத்தாக ரோட்டில் செல்ல ஆரம்பித்தேன். ஒரு சைக்கிள் ஓட்டுபவர் எனக்கு சிறிது தூரம் லிப்ட் கொடுத்தார். என்னை முன்னவல்கோட்டையில் விட்டுவிட்டு அதே வழியில் இன்னும் சிறிது தூரம் சென்று கொல்லன்பட்டிக்கு அருகில் இருக்கும் அனுமன் கோவிலைப் பற்றி விசாரித்துக் கொள்ள சொன்னார். கோயில் வலது பக்கம் வரும் என்றும் சொன்னார்.

ஸ்ரீ ஹனுமான் கோவில்

அவருக்கு நன்றி கூறி நடக்க ஆரம்பித்தேன், சிறிது நேரத்தில் ஒரு பெரிய ஏரியை ஒட்டி இருந்த கோவிலை அடைந்தேன். தாமரை மலர்கள் நிரம்பிய பெரிய ஏரியை பின்னணியாகக் கொண்ட கோவிலின் காட்சி தூரத்தில் இருந்தே மெய்சிலிர்க்க வைத்தது. கோயிலின் அழகிய விமானம் வெகு தொலைவில் இருந்து மிகவும் கவர்ச்சியாக தெரிந்தது. கோயில் அதன் கட்டமைப்பு மற்றும் தோற்றம் மிகவும் எளிமையாக இருந்தது. இக்கோவில் மூலவர் இருக்கும் கர்ப்பகிரகம் மற்றும் அதன் முன்பு ஒரு மண்டபத்தையும் கொண்டிருந்தது. திறந்த அம்மண்டபம் நாலாபுறமும் இரும்பு கிரில் போடப்பட்டிருந்தது. கிரில் கதவு மூடப்பட்டு இருந்தது, இது கோவில் மூடப்பட்டாலும் பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்ய வசதியாக இருந்தது.

மூடிய கிரில் கதவு வழியாக ஆஞ்சநேயரை தரிசனம் செய்வதைத் தவிர கோயிலின் பெரும்பகுதியை என்னால் பார்க்க முடியவில்லை. இறைவன் பிரமாண்டமாகவும், பார்ப்பதற்கு மிகவும் இனிமையானவராகவும் இருந்தார். மூர்த்தம் கல்லால் ஆனது என்றாலும் அது செம்பு உலோகத்தால் ஆனது போல் ஜொலித்தது. செப்பு உலோகப் பூச்சு கொண்ட இந்த பிரமாண்ட மூர்த்தத்தை பார்ப்பது அரிதான காட்சியாக இருந்தது.

நான் இறைவன் முன் சில ஸ்லோகங்களை சொல்லி பிரார்த்தனை செய்து கொண்டேன். இறைவன் இங்கிருந்தே மிகவும் தெளிவாக தெரிவதால் வழக்கம் போல் அவரின் உருவத்தை ஓவியமாக வரைந்து கொண்டேன். கோயிலைப் பற்றி அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தேன். கோயிலின் வரலாறு தெரியாது என்றும் நீடாமங்கலத்தில் இருக்கும் அர்ச்சகர் ஸ்ரீ ராவ்ஜி அவர்கள் கோயிலைப் பற்றிய விவரங்களைச் சொல்லலாம் என்று சொன்னார்கள். இந்த கோவிலில் பூஜை செய்து வருபவர் நீடாமங்கலத்தை சேர்ந்த ராவ்ஜி. கொல்லன்பட்டி பற்றி விசாரித்தேன், அதற்கு கோவிலுக்கு எதிரே உள்ள இடம் கொல்லன்பட்டி என்று ஊரில் பெயர் ஆனால் ஊர் பெயர் செட்டிசத்திரம் என்று சொன்னார்கள். இக்கோயில் செட்டிசத்திரம் அனுமன் கோயில் என்று தான் அழைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்கள்.

கோவில் விவரங்களை அறியும் முயற்சி

ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயசுவாமி கோவில், செட்டிசத்திரம், நீடாமங்கலம் தாலுகா, தமிழ்நாடு-உபயம்:ஸ்ரீ சுப்பு இது நடந்த பிறகு சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பின், எனது நண்பர் சுப்பு  ஜெர்மனியில் இருந்து வாங்கிய டிஜிட்டல் கேமராவுடன் டெல்லியிலிருந்து தஞ்சாவூருக்கு சென்றார். அப்போது இந்தியாவில் டிஜிட்டல் கேமராக்கள் அறிமுகப்படுத்தப்படவில்லை. செட்டிசத்திரம் அனுமன் கோயிலுக்குச் சென்று கோயிலின் தல புராணத்தைப் பற்றி விசாரிக்கும் படியும், கோயிலின் சில படங்களை எடுக்கும்படியும் அவரிடம் கேட்டுக் கொண்டேன். அவர அங்கு சென்றிருந்த போதும் கோயில் மூடப்பட்டிருந்தது, மேலும் கிராம மக்களிடமிருந்து கோயிலின் புராணத்தைப் பற்றிய எந்த விவரங்களையும் அவரால் சேகரிக்க முடியவில்லை. ஆனால் அவர் கோயிலின் சில படங்களை எடுத்தார்.

கோயிலின் புராணத்தை பற்றிய யோசனை

தஞ்சாவூரில் உள்ள நண்பர்கள் மூலம் கோவிலைப் பற்றிய விவரங்களைத் தேட நான் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இவ்வளவு பெரிய ஆஞ்சநேயர் சிலையை தஞ்சாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூரில் பெரிய அனுமார் சிலை என்று  "சூடாமணி ஆஞ்சநேயர்" என்று அழைக்கப்படும் அனுமரை சொல்லலாம். இந்த இரண்டைத் தவிர, அருகில் எந்த ஒரு பிரம்மாண்டமான சிலை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தஞ்சாவூரில் உள்ள பல ஆஞ்சநேயர் கோவில்களில் "சூடாமணி ஆஞ்சநேயர்" கோவிலும் ஒன்றாகும், இந்த கோவில் செட்டி சத்திரத்திலிருந்து தொலைவான இடத்தில் உள்ளது மற்றபடி அருகில் வேறு அனுமன் கோவில் இருப்பதாக தெரியவில்லை. இந்த தொலைதூர கிராமத்தில் இந்த கோவில் எப்படி வந்தது என்பது நம் கற்பனைக்கே விடப்பட்டுள்ளது.

இந்த இடத்திற்கு தஞ்சாவூர் நாயக்கர் தொடர்பு?

எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது இந்த கோவிலுக்கு எதிரில் உள்ள இடம் கொல்லன்பட்டி என்று அழைக்கப்படுகிறது, அதாவது ’இரும்பு/பொன் கொல்லர்கள் வசிக்கும் இடம்’ என்று பொருள் கொள்ளலாம். இங்கு ஆயுதம் தயாரிப்பதற்கான பட்டறை அல்லது உற்பத்தி வசதி இருந்திருக்கலாம். இரண்டாவதாக கோயில் அமைந்துள்ள சாலை ராயபுரம் செல்லும் சாலை. "ராயபுரம்" என்ற பெயர் பொதுவாக ராயர்களுடன் தொடர்புடைய ஒரு கிராமமாக வழங்கப்படுகிறது, அதாவது. விஜயநகரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மன்னர்கள் மற்றும் இந்த வழக்கில் பெயர் தஞ்சாவூர் நாயக்கர்கள் காலத்தில் வழங்கப்பட்டிருக்கலாம். மூன்றாவதாக நடந்து செல்லக்கூடிய தூரத்தில் “அய்யன்பேட்டை” என்ற ஊர் உள்ளது. தஞ்சாவூர் நாயக்கர்களின் ஆலோசகர் மற்றும் மந்திரியான ஸ்ரீ கோவிந்த தீட்சிதருடன் தொடர்புடைய தலத்தை “அய்யன்பேட்டை” என்ற பெயர் சுட்டிக் காட்டுகிறது. முதலில் ஸ்ரீ ஹனுமான் சிலை மராட்டிய காலத்து மூர்த்தங்கள் போல் இல்லாமல் முழு மூர்த்தமாக செதுக்கப்பட்டுள்ளது. கடைசியாக "செட்டிசத்திரம்" கிராமத்தின் பெயரில் காணப்படும் 'சத்திரம்'. சத்திரம் என்றால் பயணிகள் ஓய்வு இல்லம். அன்றைய யாத்ரீகர்கள் சென்ற பாதையில் இந்த தற்போதைய கிராமம் இருந்திருக்கலாம். இந்த யாத்திரிகர்கள் பாதையில் அமைந்த அனைத்து சத்திரங்களிலும் ஒரு கோயிலும் அருகில் குளமும் அமைக்கப்பட்டிருந்தன என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து பார்த்தால், தஞ்சாவூர் நாயக்கர்கள் காலத்திலும் மராட்டியர்கள் காலத்திலும் இந்த இடம் பரபரப்பாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்க தூண்டுகிறது.

ஜெய வீர ஆஞ்சநேயர்

ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயசுவாமி, செட்டிசத்திரம், நீடாமங்கலம் தாலுகா, தமிழ்நாடு-உபயம்:ஸ்ரீ சுப்பு சிலை புடைப்புச் சிலை [அர்த்த சிலை] போல் இருந்தாலும், சிலையின் பின்புறம் முழுமையான சிலையின் அனைத்து அம்சங்களுடனும் செதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயசுவாமி தெற்கு நோக்கிய காட்சியில் கிழக்கு நோக்கி செல்வது போல் காட்சியளிக்கிறார்.

அவர் தாமரை பாதங்கள் இரண்டையையும் தரையில் உறுதியாக ஊன்றியுள்ளார். நூபுரம், தண்டை எனப்படும் அணிகலன்கள் இரண்டும் தாமரை பாதங்களுக்கு அழகு சேர்க்கிறது. அவரது ஆடுதசை, முழங்கால் மற்றும் தொடை ஆகியவை வலுவாகவும் நன்கு உறுதியாகவும் உள்ளது. அவர் இடையில் கச்சம் அணிந்துள்ளார், கச்ச துணியின் ஒரு தலைப்பு பகுதியை இரு கால்களுக்கு இடையில் விழும்படி கட்டியிருப்பதால் தொடை பகுதியின் உறுதி மிகவும் தெளிவாகத் தெரிகிறது. கச்சத்தை அலங்காரமாக இடுப்பில் கட்டியுள்ளார், அதில் பிச்சுவா எனப்படும் சிறிய கத்தியை வைத்திருக்கிறார். அகன்ற மார்பும், இறுகிய வயிறும் இறைவனின் மாபெரும் சக்தியை காட்டுகின்றது. முப்புரி நூல் அவரது பரந்த மார்பின் குறுக்கே காணப்படுகிறது மேலும் மணிகளால் ஆன மூன்று மணி மாலைகள் மார்பை அலங்கரிக்கிறது. இடது தொடையில் வைக்கப்பட்ட அவர் சௌகந்திகா மலரின் தண்டை இடது கையில் பிடித்துள்ளார். அம்மலர் இடது தோளுக்கு மேலே உயர்ந்து காணப்படுகிறது. அவர் தனது வலது கையை தலைக்கு மேல் உயர்த்தி ’அபய முத்திரை’ காட்டி பக்தர்களின் பயத்தை போக்குகிறார். மேலும் இரு கைகளில் கேயூரமும் மணிகட்டில் கங்கணமும் அவர் அணிந்துள்ளார். அவரது தோள்களை 'புஜ வளையம்' என்ற அணிகலம் அலங்கரிக்கிறது. அவரது கன்னங்கள் பளபளப்பாகவும் புஷ்டியாகவும் இருப்பதால் அவரது அழகை மேலும் அதிகரிக்கிறது. காதுகள் பெரியவையாக அதில் அவர் அணிந்திருக்கும் குண்டலம் அவரது மார்பைத் தொட்டு காணப்படுகிறது. அவருடைய கேசம் நேர்த்தியாக சீவப்பட்டு முடிச்சுப் போடப்பட்டிருக்கிறது. கிரீடம் போல வைரம் பதிக்கப்பட்ட 'கேச பந்தம்' எனப்படும் தலைப் பட்டையால் கேசம் ஒருங்கே வைக்கப்படுகிறது. பிரபுவின் கண்களில் கருணை ததும்பி நிரம்பி வழிகின்றது. இந்தக் கண்களை ஒரு முறை பார்த்தால், பக்தன் தன் பார்வையையும், எண்ணத்தையும், இறைவன் மீதுள்ள கவனத்தையும் நிலைக்க செய்வது உறுதி.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயசுவாமி கோவில், செட்டிசத்திரம்

 

அனுபவம்
பிரம்மாண்டமான சாந்த ஸ்வரூபி பிரபு பக்தர்களின் கவனத்தை ஈர்க்கும் சக்தி வாய்ந்தவர் என்பது அவரை கண்ட மாத்திரத்தில் பக்தர்களின் உணர்வார்கள். பின் அவரது பக்தர்கள் தங்கள் கவலைகளை மறந்து சாந்தம் அவர்களை சூழ்வதையும் மெய்மறந்து கவலையற்று இருப்பார்கள் என்பது உறுதி.   

தமிழாக்கம் :திரு. ஹரி சுந்தர்
பதிப்பு: பிப்ரவரி 2022


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+