home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

ஸ்ரீ அஞ்சனா தேவி - ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில், ஆகாச கங்கை, திருமலை, ஆந்திரா

ஜி.கே.கௌசிக்


சேஷ மற்றும் கருட மலைகள்

கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் பகுதியான சேஷாசலம் மலைகள், இந்தியாவின் தெற்குப் பகுதியில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது. மேற்கு மற்றும் வடமேற்கில் ராயலசீமா மலைப்பகுதியும், வடகிழக்கில் குண்டேரு நதியால் உருவாக்கப்பட்ட நந்தியால் பள்ளத்தாக்கும் இதற்கு எல்லைகளாக உள்ளன.

சேஷாசலத்தில் அமைந்துள்ள திருப்பதி க்ஷேத்திரம் புகழ்பெற்ற தலங்களில் ஒன்றாகும். ஸ்ரீ வெங்கடேசப் பெருமானின் இருப்பிடம் இங்கு உள்ள ஏழு மலையின் உச்சியில் உள்ள திருமலையில் இவர் கோயில் கொண்டுள்ளார். இவருக்கு இதனால் "சப்தகிரிநிவாசர்" என்றும் ஏழுமலையான் என்ற பெயருமுண்டு.

அஹோபிலம் க்ஷேத்திரம் ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் நந்தியாலுக்கு அருகில் (சுமார் 60 கி.மீ.) உள்ளது. இவ்விடம் கிழக்குத் தொடர்ச்சி மலையின் கருடாத்ரி என்று அழைக்கப்படும் மலைகளில் அமைந்துள்ள இவ்விடம் திருப்பதிக்கு வடமேற்கே சுமார் 250 கிமீ தொலைவில் உள்ளது. இந்த மலைத்தொடரில் ஒன்பது நரஸிம்ஹர்கள் கோயில் கொண்டுள்ளனர். மலையின் அடிவாரத்தில் ஸ்ரீ பிரஹலாத வரதன் என்று அழைக்கப்படும் நரசிம்மருக்கு ஒரு கோயிலும் உள்ளது. [அஹோபிலம் பற்றி மேலும் படிக்க]

திருப்பதி மற்றும் அஹோபிலம் ஆகியவை கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். மலையின் அமைப்பு ஶ்ரீஆதிசேஷனின் உருவத்தை ஒத்து இருக்கிறது என்பதால் கிழக்குத் தொடர்ச்சி மலை மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. ஶ்ரீஆதிசேஷனின் மகுட பகுதியாக திருமலையும், நடுப்பகுதியாக அஹோபிலமும், வால் முனையாக ஸ்ரீசைலமும் அமைந்துள்ளது. எனவே, இந்த மூன்று க்ஷேத்திரங்களும் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகின்றது. திருமலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரரும், அஹோபிலத்தில் நவ நரசிம்மரும், ஸ்ரீசைலத்தில் மாலிகார்ஜுனரும் வாசம் செய்கிறார்கள் என்பது குறிப்பிட தக்கது.

ஏழுமலை - சேஷாசலம்

திருப்பதியில் இருக்கும் திருமலை மலைகள் சேஷாசலம் மலைத்தொடரின் ஒரு பகுதியாகும். மலைகள் கடல் மட்டத்திலிருந்து 853 மீட்டர் உயரத்தில் உள்ளன. ஆதிசேஷனின் ஏழு தலைகளைக் குறிக்கும் வண்ணமாக ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளதால், திருப்பதி திருத்தலம் சேஷாசலம் எனப்படுகிறது. வெங்கடாத்ரி என்ற ஏழாவது சிகரத்தில் இறைவனின் உறைவிடம் உள்ளது, எனவே இறைவன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா என்று அழைக்கப்படுகிறார். சப்தகிரி என்றும் அழைக்கப்படும் ஏழு மலைகள் சப்தரிஷியை குறிக்கின்றன. அதனால் இறைவனுக்கு சப்தகிரிநிவாசா என்று பெயர். ஏழு மலைகள் 1. வ்ருஷபாத்ரி - நந்தி மலை, (சிவனின் வாகனம்), 2. அஞ்சனாத்ரி - அனுமனின் தாயார் அஞ்சனா தேவி தவம் செய்த மலை, அனுமன் பிறந்த இடம், 3. நீலாத்ரி - நீலாதேவி மலை - இது. நீலாதேவிக்கு வெங்கடேசப் பெருமான் வழங்கிய வரம் காரணமாக. பக்தர்கள் அளிக்கும் தலைமுடியை நீலாதேவி ஏற்றுக்கொள்கிறாள் என்று நம்பப்படுகிறது, 4. கருடாத்ரி அல்லது கருடாசலம் - கருடன் மலை, விஷ்ணுவின் வாகனம், 5. சேஷாத்ரி அல்லது சேஷாசலம் - சேஷா மலை, விஷ்ணுவின் தாசரான ஆதிசேஷன், 6. நாராயணாத்ரி. – நாரத முனி மலை, 7. வெங்கடாத்ரி – பெருமாள் ஶ்ரீவெங்கடேஸ்வரர் மலை

அஞ்சனாத்ரி மலைகள் மற்றும் ஸ்ரீ அஞ்சனாதேவி

ஸ்ரீ மதங்க மகரிஷி விசித்திரமான தோரணையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்ததை அவ்வழியே வந்த புஞ்சிகஸ்தலா என்ற அப்சரஸ் பார்க்க நேரிட்டது. மகரிஷி இருந்த தோரணை புஞ்சிகஸ்தலாவிற்கு ஒரு குரங்கை நினைவூட்டியது அதனால் அவள் மகரிஷியை பார்த்து எள்ளி நகைத்தாள். தவம் கலைந்த மகரிஷி அவளை குரங்காகப் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த புஞ்சிகஸ்தலா தன் செயலுக்கு மகரிஷியிடம் மன்னிப்புக் கேட்டாள். பாப விமோசனதிற்கு அவள் குரங்காகப் பிறந்து சிவபெருமானை நோக்கித் தவம் செய்ய வேண்டும் என்றும், அதன் நற்பயனாய் ஸ்ரீராம அவதார காலத்தில் அவருக்கு உதவி செய்யும் ஒரு குழந்தையைப் பெறுவாள் என்றும் மகரிஷி கூறினார்.

அவள் மீண்டும் குரங்காகப் பிறந்து ஸ்ரீ கேசரி என்ற வானர அரசனை மணந்தாள். வால்மீகி ராமாயணத்தின் கூறியுள்ளபடி, மால்யவன் மலையிலிருந்து கேசரி அவர்கள் கோகர்ணா என்ற மற்றொரு மலைக்கு குடிபெயர்ந்தார். ரிஷிகளின் விருப்பப்படி, வானர அரசன் கேசரி ஷம்பசாதனன் என்ற அரக்கனை [கோகர்ணா] கடல் கரையில் வதம் செய்தார்.

ஸ்ரீ மதங்க மகரிஷி கூறியபடி, அஞ்சனா தேவி சேஷாசலம் மலைத்தொடரில் அமைதியான இடத்தில் தவம் மேற்கொள்கிறாள். தற்போது இந்த மலை அஞ்சனாத்ரி என்றும் சேஷாசலத்தின் சிகரங்களில் ஒன்றாகவும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் ஸ்ரீ அனுமனின் வார்த்தைகளின்படி, ஸ்ரீ ஆஞ்சநேயர் அந்த மகா வனரமான கேசரியின் மனைவி (ஸ்ரீ அஞ்சனா தேவியின்) வயிற்றில், காற்றின் கடவுளின் [மருட்-வாயு] அருளால் பிறந்தார். மேலும் அவர் தனது செயல்பாட்டின் மூலம் இவ்வுலகில் அனுமன் என்ற பெயரைப் பெற்றதாகக் கூறுகிறார்.

ஜாபாலி மற்றும் அஞ்சனாத்ரி மலை

ஸ்ரீ அஞ்சனா தேவி தவம் செய்த மலையே தற்போது திருமாலை தொடரில் அஞ்சனாத்ரி என்று அழைக்கப்படுகிறது. “ஜபாலி [ஜாபாலி] ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில், திருப்பதி, ஆந்திர பிரதேசம்” என்ற நமது இணைய தள பக்கத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும் இந்த அஞ்சனாத்ரி மலைக்கும் உள்ள தொடர்பை விரிவாகக் கூறியிருந்தோம். "ஸ்ரீ ஜாபாலி மகரிஷி" மற்றும் அவர் இந்த மலையில் தவம் செய்ததைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு பக்தர்கள் தயவுசெய்து அந்தக் கட்டுரையைப் பார்க்கலாம்.

இவையெல்லாம் ஸ்ரீராமாயண காலத்தில் நடந்தவை, கலியுகம் மற்றும் அஞ்சனாத்ரி மலைக்கு வருவோம்.

ஸ்ரீ பெரிய திருமலை நம்பி

திருமலையில் வெங்கடேசப் பெருமாளுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்து கொண்டிந்தவர் ஸ்ரீ பெரிய திருமலை நம்பி என்பவர் உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவர் ஆவார். அவர் ஸ்ரீ ராமானுஜரின் தாய்வழி மாமன் ஆவார். அவர் ஸ்ரீமத் ராமாயணத்தில் ஒரு விற்பன்னர் ஆவார். ஸ்வாமி ஆளவந்தார் அவர்கள் ஸ்ரீ ராமாயணத்தின் சம்பிரதாய ஞானத்தை பெறுவதற்கு ஸ்ரீ ராமானுஜரை ஸ்ரீ பெரிய திருமலை நம்பியிடம் கற்பதற்கு அறிவுறுத்தினார். எனவே, ஸ்ரீ நம்பியிடம் இருந்து அப்பொக்கிஷத்தைப் பெற திருமலைக்குச் செல்லும்படி ராமானுஜரை அறிவுறுத்தினார்.

ஸ்ரீ ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீ ராமானுஜர், மலையின் மீது கால் வைக்காமல் மலையை மண்டியிட்டு தனது முழங்காலினால் ஏறினார். ஸ்ரீ பெரிய திருமலை நம்பி, கோவிலில் தீர்த்த கைங்கர்யத்தை முடித்துக் கொண்டு, ஸ்ரீ ராமானுஜரைப் எதிர்கொண்டு அழைக்க இறைவனின் பிரசாதத்துடன் இறங்கி வந்தார். இந்த முதிர்ந்த வயதில் ஸ்ரீ நம்பி தன்னைச் சந்திக்க வருவதைப் பார்த்த ஸ்ரீ ராமானுஜர், தானே வருவதற்கு பதில் இளையவர்களை (அல்லது, குறைந்த) அனுப்பியிருக்கலாம் என்று கூறினார். ஸ்ரீ நம்பி, தன்னை விட சிறியவர்கள் யாரையும் காணாததால், தாமே வந்திருப்பதாக பதிலளித்தார் அந்த ராமாயண வல்லுநர். மண்டியிட்டு மலை ஏறிய ஸ்ரீராமானுஜரைக் கண்ட அவர், தாங்களே மலையை இவ்வாறு ஏறினால், சாதாரண பக்தர்களால் தைரியமாக யாத்திரை செய்ய முடியாது என்றார். இதையே பகவத் கைங்கர்யமாகக் கருதுமாறு வேண்டினார். இந்த மகா அறிஞரின் பக்தியும் எளிமையும் வியக்கதக்கது தான்.

தாதாச்சாரியாரும் ஆகாச கங்கையும்

முன்பு கூறியது போல், பெரிய திருமலை நம்பி அவர்கள் வெங்கடேசப் பெருமாளுக்கு தினமும் காலை பூஜைக்காக பாபவினாசனம் அருவியில் இருந்து நீர் கொண்டு வந்து தீர்த்த கைகர்யம் செய்து கொண்டிருந்தார். ஸ்வாமின் தனது வயது முதிர்ந்த காலத்திலும், பாபவினாசனம் அருவியிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து வெங்கடேஸ்வரருக்கு சேவை செய்து வந்தார். பகவான் அவர் மீது கருணைக்கொண்டு ஒரு வேட்டைக்காரனின் உருவம் எடுத்து ஆச்சாரியார் முன் நின்று தாகம் தீர்க்க தண்ணீர் வேண்டினார். ஆச்சாரியர் அவர்கள் வெங்கடேசப் பெருமானுக்காக தீர்த்தம் எடுத்து செல்லப்படுவதால் வேட்டைக்காரக்கு நீர் கொடுக்க மறுத்துவிட்டார். ஸ்வாமி அவர்கள் தண்ணீர் பானையுடன் நகரும் போது, ​வேட்டைக்காரன் பானையின் மீது அம்பு எய்து அதனால் பானையில் துளை போட்டு அதன் வழி வரும் நீரை பருகினான். ஆச்சாரியார் பெரிய திருமலை நம்பி, வேட்டைக்காரனின் செயலால் வருத்தமடைந்து, பாபவினாசனத்திலிருந்து திரும்பவும் தண்ணீர் கொண்டு வரத் திரும்பினார். அதை கண்ட வேட்டைக்காரர் ஆச்சார்யாவிடம் "தாதா! கவலைப்படாதே! வேறொரு புதிய அருவியிலிருந்து தண்ணீர் கொண்டு வர கோயிலுக்கு அருகில் ஒரு இடத்தை உருவாக்குவேன்."" என்று கூறினார். வேட்டைகாரன் உருவிலிருந்த பகவான் தனது அம்பினால் அஞ்சனாத்ரி மலையில் உள்ள இடத்தைத் தாக்கினார், அப்பொழுது மலையிலிருந்து புனித நீர் வெளியேறியது. வேட்டைகாரன் தனது உண்மை ரூபமான வெங்கடேசப் பெருமாளாக ஆச்சாரியர் முன் காட்சியளித்தார். பின் ஆச்சாரியார் திருமலை நம்பியிடம் தனக்கு ஆகாசகங்கையில் இருந்து மட்டுமே ஆராதனைக்கு புனித நீரை கொண்டு வரும்படி கூறினார், ஆச்சாரியார் மகிழ்ச்சியடைந்து தனது கடைசி மூச்சு வரை தினமும் தீர்த்தம் கைங்கர்யம் செய்தார். இன்றும் ஆச்சாரியார் பெரிய திருமலை நம்பியின் வாரிசுகள் வெங்கடேசப் பெருமாளுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்கிறார்கள். இந்த ஆச்சார்யாவின் நினைவாக, ஆச்சாரியார் பெரிய திருமலை நம்பி பின்னர் தாதாச்சாரியார் என்று அழைக்கப்பட்டார். அவரது சந்ததியினரும் தாதாசாரியர்கள் என்று அறியப்படுகிறார்கள்.

ஸ்ரீ அஞ்சனா தேவி-ஸ்ரீ பால ஆஞ்சநேயர், ஆகாச கங்கை, திருமலை :: courtesy: http://news.tirumala.org இவ்வாறாக ஸ்ரீ பெரிய திருமலை நம்பியின் அதீத பக்தியினாலும், அர்ப்பணிப்பினாலும் இன்று ஆகாச கங்கை எனும் புனித தீர்த்தம் நமக்கு கிடைத்துள்ளது என்பதை நினைவில் கொள்வோம்.

இந்த மலையில் ஸ்ரீ அஞ்சனா தேவி செய்த தவம், ஆகாச கங்கையை வெளிக்கொணர இந்த குறிப்பிட்ட மலையை இறைவன் தேர்ந்தெடுக்க வைத்தது என்றால் மிகையாகாது.

ஸ்ரீ அஞ்சனா தேவி கோவில்

ஆகாச கங்கைக்கு அருகில் ஸ்ரீ அஞ்சனா தேவியுடன் இருக்கும் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு ஒரு சிறிய கோவில் இருந்தது. இதுகுறித்து TTD வெளியிட்டுள்ள குறிப்பில் கூறியிருப்பதாவது: திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் அபிஷேகம் மற்றும் இதர சடங்குகளுக்காக ஆகாச கங்கையில் இருந்து தினமும் புனித நீர் கொண்டு வரப்படுவதாக கோயில் புராணம் கூறுகிறது. இங்குதான் அஞ்சனாதேவி தியானம் செய்து ஆஞ்சநேயரை தன் மகனாகப் பெற்றெடுத்ததால், இத்தலத்திற்கு அஞ்சனாத்ரி என்றும் பெயர் வந்ததாக பண்டைய நூல்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த 2014ம் ஆண்டு இதே கோவில் புதுப்பிக்கப்பட்டு மகா சம்ப்ரோக்ஷணம் செய்யப்பட்டது.

கோயிலில் கர்ப்பகிரகம் மட்டுமே உள்ளது. மலையின் மீது கட்டப்பட்டதால் கர்பகிரகத்தை சுற்றி வர சிறிய பாதையே உள்ளது. கோவில் விமானத்தில் நான்கு புறமும் ஸ்ரீ ஆஞ்சநேயரின் சுண்ணாம்பு கலவையால் செய்யப்பட்ட உருவங்கள் உள்ளன. உள்ளே நுழையும் பக்கம் யோக ஆஞ்சநேயரும், இடது பக்கம் அபய ஆஞ்சநேயரும், பின்புறம் சஞ்சீவ ஆஞ்சநேயரும், வலது பக்கம் பக்த ஆஞ்சநேயரும் உள்ளனர்.

இதுவரை செய்த பாவங்களை போக்க பக்தர்கள் ஆகாச கங்கை நீரால் ப்ரோக்ஷணம் [प्रोक्षण] செய்யலாம். ஸ்ரீ ஆஞ்சநேயரின் புனித தாயாரான ஸ்ரீ அஞ்சனா தேவியையும், ஹனுமான் என்று பெயர் பெற்ற வலிமைமிக்க ஸ்ரீ பால ஆஞ்சநேயரையும் தரிசனம் செய்யுங்கள்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஸ்ரீ அஞ்சனா தேவி - ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில், ஆகாச கங்கை, திருமலை

 

அனுபவம்
இந்த அமைதியான சூழ்நிலையில் ஸ்ரீ அஞ்சனா தேவி மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் என்னும் ஹனுமார் ஆகியோரை தரிசனம் செய்யுங்கள், இந்த பெருமை மிகுந்தவர்களின் ஆசீர்வாதத்தை நீங்கள் உணரலாம் அனுபவிக்கலாம் - உலகில் வேறெதுவும் பெரிது உளதோ?    

தமிழாக்கம் :திரு. ஹரி சுந்தர்
பதிப்பு: ஜனவரி 2022


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+