home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில், வெண்ணைத்தாழி மண்டபம், மன்னார்குடி, தமிழ்நாடு


ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில், வெண்ணைத்தாழி மண்டபம், மன்னார்குடி, தமிழ்நாடு

ஜி.கே.கௌசிக்


மன்னார்

ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில், வெண்ணைத்தாழி மண்டபம், மன்னார்குடி, தமிழ்நாடு தென் இந்தியாவில் ’மன்னார்’ என்னும் சொல் ஶ்ரீகிருஷ்ணரை குறிக்கும் சொல்லாக உள்ளது. குறிப்பாக கோயிலின் மூலவர் ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி என்று இருக்கும் இடத்தின் பெயர் மன்னார் என்ற வார்த்தையுடன் தொடர்புடையதாக இருக்கிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தனது இடது திருக்கரத்தால் பசுவை அணைத்துக்கொண்டு, வலது திருக்கரத்தால் சாட்டையைச் சுழற்றும் பாவனையில் ‘வேத்ர பாணி’யாக [वेत्रैकपाणि], நின்று சேவை சாதிக்கும் திருக்கோலத்தினை “மன்னார்” என்று அழைப்பது வழக்கிலுள்ளது.

மன்னார் என்ற சொல்லுக்குப் பகைவர் என்று விக்சனரி பொருள் கொள்கிறது. [சூடாமணி_நிகண்டு] ஆனால் அபிதான சிந்தாமணி மன்னார் என்பதின் பொருள் "வீரநாராயண புரத்துப் பெருமாள்" என கொள்கிறது. அனேகமாக மகாவிஷ்ணுவைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ‘மன்னனார்’ என்ற சொல் காலப்போக்கில் “மன்னார்” ஆகிவிட்டதோ.

ஸ்ரீவில்லிபுத்தூரில் மூலவர் 'ரங்க மன்னார்' என்று அழைக்கப்படுகிறார். திருநெல்வேலி மாவட்டம் ஆள்வார் குறிச்சி அருகே உள்ள மன்னார்கோவிலில் மூலவர் ஸ்ரீ ராஜகோபால சுவாமி ஆவார். திருநெல்வேலி பாளயம்கோட்டை ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி "அழகிய மன்னார்" என்று அழைக்கப்படுகிறார். திருநெல்வேலி, விஜயநாராயணத்தில் உள்ள ஸ்ரீ ராஜகோபால சுவாமிக்கு கோவில் மூலவர் "அழகிய மன்னார்" என்று அழைக்கப்படுகிறார். இவை அனைத்திலிருந்தும் ’மன்னார்’ என்னும் சொல் ஸ்ரீ ராஜகோபாலன் என்று அழைக்கப்படும் கோபாலனுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் ஊகிக்க முடியும்.

மன்னார்குடி

திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடி மிகப்பெரிய நகரமாகவும், டெல்டா பகுதியில் நான்காவது பெரிய நகரமாகவும் உள்ளது. மன்னார்குடி ஏழாம் நூற்றாண்டில் இடைக்கால சோழர்களால் ’அக்ரஹாரம்’ கிராமமாக நிறுவப்பட்டது. சோழர், விஜயநகரப் பேரரசு, தில்லி சுல்தானகம், தஞ்சாவூர் நாயக்கர்கள், தஞ்சாவூர் மராட்டியர்கள் மற்றும் பிரிட்டிஷ் பேரரசு உள்ளிட்ட பல்வேறு அரசாட்சியின் கீழ் இந் நகரம் இருந்துள்ளது. ராஜகோபாலசுவாமி கோவிலுக்கு பெயர் பெற்றது மன்னார்குடி நகரம். காட்டு மன்னார்குடியை வேறுபடுத்தும் வகையில் இந்த க்ஷேத்திரம் ராஜ மன்னார்குடி என்று அழைக்கப்படுகிறது.

மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவில்

அழகிய விளக்குகளுக்கு பெயர் பெற்ற க்ஷேத்திரம் வேதாரண்யம், அழகிய தேருக்கு பெயர் பெற்ற க்ஷேத்திரம் திருவாரூர், அழகிய தெருக்களுக்கு பெயர் பெற்ற க்ஷேத்திரம் திருவிடைமருதூர், அழகிய மதில்களுக்கு பெயர் பெற்ற க்ஷேத்திரம் மன்னார்குடி ஆகும். அந்த அழகிய சுவர்கள் அமைந்துள்ள ராஜகோபாலசுவாமி கோயில் இருப்பது மன்னார்குடியில் அழைக்கப்படும் ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம் ஆகும்.

இக்கோயில் முதன்முதலில் முதலாம் குலோத்துங்க சோழனால் (கி.பி. 1070-1125), செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பு கலவைக் கொண்டு கட்டப்பட்டது. இதற்கு ஸ்ரீ ராஜாதி ராஜா சதுர்வேதி மங்கலம் என்று பெயர் சூட்டப்பட்டது, கோயிலைச் சுற்றி மன்னார்குடி நகரம் வளரத் தொடங்கியது. சோழப் பேரரசின் அடுத்தடுத்த மன்னர்கள், மூன்றாம் இராஜராஜ சோழன், மூன்றாம் ராஜேந்திர சோழன் மற்றும் தஞ்சாவூர் நாயக்கர்களின் மன்னர்களான அச்சுத தேவராயா ஆகியோர் கோயிலை விரிவுபடுத்தினர். மன்னார்குடியின் வரலாறு இராஜகோபாலசுவாமி கோயிலை மையமாகக் கொண்டது.

ஸ்ரீ ஆஞ்சநேயர் சந்நிதி, வெண்ணை தாழி மண்டபம், மன்னார்குடி கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்திற்குள் நுழையும் முன், முன்புறத்தில் கருட ஸ்தம்பம் - ஒரு ஒற்றைத் தூண், 50 அடி உயரத்தில் ஒரு சிறிய கருடன் சன்னதியுடன் உள்ளது. இது கோயிலின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றாகும். இக்கோயிலில் கிழக்கு நோக்கிய பெரிய ராஜகோபுரம் உள்ளது. பிரதான கர்ப்பகிரஹம், பல மண்டபங்கள், ராஜகோபுரம், த்வஜ ஸ்தம்பம் இவை எல்லாம் நேர் அச்சில் அமைந்துள்ளது. கர்பகிரஹத்தில் ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி சத்யபாமா மற்றும் ருக்மணியுடன் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கிறார். கோவில் வளாகத்தில் 16 கோபுரங்கள், 7 பிரகாரங்கள், 24 சன்னதிகள், ஏழு மண்டபங்கள் மற்றும் ஒன்பது புனித தீர்த்தங்கள் உள்ளன. உற்சவ (ஊர்வலத் தெய்வம்) வெண்கல உருவம் சோழர் காலத்தைச் சேர்ந்தது. கோயில் குளம் ஹரித்ரா நதி என்று அழைக்கப்படுகிறது, இது இருப்பத்துமூன்று ஏக்கர் பரப்பளவில் உள்ளது, இது இந்தியாவின் மிகப்பெரிய கோயில் குளங்களில் ஒன்றாகும். கருவறையைச் சுற்றி இரண்டாவது பிரகாரத்தில் செங்கமலத்தாயார் (ஹேமபுஜவல்லி) சன்னதி அமைந்துள்ளது. கோயிலில் ஆயிரம் தூண் மண்டபம் உள்ளது.

வெண்ணை தாழி திருவிழா

பதினெட்டு நாட்கள் முக்கிய திருவிழாவான பிரம்மோத்ஸவம் பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. எல்லா திருவிழா நாட்களும் சிறப்பானது என்றாலும் தேர் திருவிழா மிக பெரிய விசேடமாக கொண்டாட படுகிறது. பக்தரைக் கவரும் மற்றொரு திருவிழா ‘நவநீத சேவை’ அல்லது மிகவும் பிரபலமான ‘வெண்ணைத் தாழி’ திருவிழா ஆகும். ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமிக்கு இந்த தனிச்சிறப்பு வாய்ந்த இத்திருவிழா இந்த கோவிலில் தேரோட்டத்திற்கு முந்தைய நாள் கொண்டாடப்படுகிறது. பிரம்மோத்ஸவத்தின் பதினாறாம் நாள் சுவாமி கோயிலில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனி மண்டபத்திற்கு பல்லக்கில் வலம் வருவார். குழந்தையாக காணப்படும் சுவாமி தனது இடது கையில் வெண்ணெய் நிரம்பிய பானையை ஏந்தியவாறும், வலது கையால் பானையிலிருந்து புதிய வெண்ணெயை எடுப்பதற்கும் இருக்கும் நிகழ்ச்சி நடைப்பெறும். சுவாமி குழந்தை என்பதால் தவழும் தோரணையில் இருப்பார், இந்த கோலத்தில் அவரது சரணாவிந்தம் இரண்டையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இத்திருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு கோபாலனுக்கு வெண்ணெய் சாற்றவும், சரணம் தரிசனம் செய்யவும் வழிபாடு செய்கின்றனர்.

ஊர்வலம் "வெண்ணை தாழி மண்டபம்" என்று அழைக்கப்படும் மண்டபத்தில் முடிவடைகிறது. வழி முழுவதும் பக்தர்கள் கோபாலனுக்கு வெண்ணெய் சமர்ப்பித்து அவரது தாமரை பாதங்களை தரிசனம் செய்வார்கள். இம்மண்டபத்தை சுவாமி வந்தடைந்ததும் இளைபாருவார், மாலை வரை இம்மண்டபத்தில் சுவாமி வாசம் செய்துவிட்டு, மாலையில் ராஜ வேடமிட்டு குதிரையில் [குதிரை வாகனத்தில்] மீண்டும் கோயிலுக்கு திரும்புவார்.

வெண்ணை தாழி மண்டபம் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில்

ஸ்ரீ ஆஞ்சநேயர், வெண்ணை தாழி மண்டபம், மன்னார்குடி இந்த மண்டபம் தஞ்சாவூர் பாணியில் பெரிய பெரிய தூண்களுடன் கட்டப்பட்டுள்ளது. முகப்பில் மூன்று அலங்கார வளைவுகள் உள்ளன. மத்தியில் உள்ள அலங்கார வளைவில் மையத்தில் சங்கு, சக்கரம் மற்றும் திருமண் சின்னம் உள்ளது, இதன் இருபுறமும் கோபிலர், கோப்ராலயர் என்னும் இரண்டு மகரிஷிகள் சுதை உருவில் காணப்படுகிறார்கள். மற்றும் சற்று தள்ளி தனியாக இருஅலங்காரவளைவுகள் இருபுறமும் காணப்படுகிறது. வலதுபுறம் காணும் வளைவில் "வெண்ணைத்தாழி" கிருஷ்ணனும், இடதுபுறம் உள்ள வளைவில் ஆஞ்சநேயர் உருவங்கள் சுதை வடிவில் அமைக்கப்பட்டுளது.

வெண்ணை தாழி என்னும் இந்த பெரிய மண்டபத்தின் நடுவில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சந்நிதி உள்ளது. சுற்றிலும் அகலமான பாதை இருப்பதால் பக்தர்கள் சந்நிதியை வலம் வரலாம். இக்கோயிலின் ஆஞ்சநேயர், குறிப்பாக சனிக்கிழமையன்று ஏராளமான பக்தர்களை ஈர்க்கிறார்.

ஶ்ரீஆஞ்சநேயர்

பிரபுவின் மூர்த்தம் சுமார் ஐந்தரை அடி உயரம் இருக்கும். ஶ்ரீஆஞ்சநேயர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் "பக்த ஆஞ்சநேயராக" சேவை சாதிக்கிறார். பிரபுவின் திருபாதங்களை தண்டை மற்றும் ’நூபூரம்’ என்னும் ஆபரணங்கள் அலங்கரிக்கின்றன. முழங்கால் அருகில் அழகிய ஆபரணம் காணப்படுகிறது. அவர் கச்சம் வைத்து வேட்டி கட்டியுள்ளார், அது அவரது வலுவான துடையை மேலும் வலுவானதாக எடுத்துக் காட்டுகிறது. இடுப்பில் உத்திரியத்தை சுற்றி கட்டியுள்ளார். பிரபு கையின் இருதளங்களும் குவித்து ’அஞ்சலி’ முத்திரையில் வைத்துள்ளார். மணிகட்டில் கங்கணமும், மேல் கையில் கேயூரமும் அணிந்துள்ளார். மார்பினை இரு மணி மாலைகள் அலங்கரிக்கின்றன. முப்புரி நூல் அணிந்துள்ளார். நீண்ட காதுகளில் குண்டலங்கள் காணப்படுகிறது. பிரபுவின் அழகிய நீண்ட புருவங்கள் அவரது அழகிய, பிரகாசிக்கும் கண்களுக்கு மேலும் அழகும் பிரகாசமும் சேர்க்கிறது. ஒருங்கே சீவி வாரப்பட்டுள்ள கேசம் பிரபுவின் பின்புறம் நீண்டு பின் குடுமியாக கட்டி வைக்கப்பட்டுள்ளதும், அவரது நீண்ட வால் பிரபுவின் திருபாதங்கள் அருகில் இருப்பதும் பக்தர்களுக்கு பார்வையில் தெரிவதில்லை.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில், வெண்ணைத்தாழி மண்டபம், மன்னார்குடி

 

அனுபவம்
பிரம்மோத்ஸவ விழாவின் ஐந்தாம் நாளில் ஸ்ரீராமராகக் காட்சியளிக்கும் ஸ்ரீ வித்யா ராஜகோபால ஸ்வாமி, பிரம்மோத்ஸவத்தின் பதினைந்தாம் நாளில் உடல் முழுவதும் வெண்ணெய் தடவி ‘நவநீத சோரன்’ என்று போற்றப்பட்டு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு இம்மண்டபத்திற்கு வந்து தரிசனம் கொடுக்கிறார். வெண்ணை தாழி மண்டபத்தில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயரும் வெண்ணெயை விரும்புபவர் தான் என்பது விசேடமே. இருவரும் இறைவனின் பக்தியின் தத்துவார்த்த அடையாளமான ‘நவநீதம்’ மூலம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.   

தமிழாக்கம் :திரு. ஹரி சுந்தர்
பதிப்பு: ஜனவரி 2022


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+