home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

வக்கலேரி ஶ்ரீஆஞ்சநேய குடி, தொட்டபேட், கோலார், கர்நாடகா


வக்கலேரி ஶ்ரீஆஞ்சநேய குடி, தொட்டபேட், கோலார், கர்நாடகா

ஜி.கே.கௌசிக்


கோலார்

வக்கலேரி ஶ்ரீஆஞ்சநேய குடி, தொட்டபேட், கோலார், கர்நாடகா கோலார், முன் காலத்தில் கோலாஹாலா, குவாலாலா, கோலாலா என்றும் கோலாஹாலபுரா என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இன்று கர்நாடகத்தில் உள்ள இந்நகரம் மூன்றாம் நூற்றாண்டில் ஸ்தாபனம் செய்யப்பட்டது, இன்றைய பெங்களூரை விட மிகவும் பழமையானது. ஶ்ரீகோலாரம்மா திருக்கோயில் இரண்டாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டுள்ளது, ஶ்ரீசோமேஸ்வரா திருக்கோயிளும் மிக பழமையானது, இதனால் இந்நகரம் மிகவும் பழமையானது என்பதும் முக்கியத்வம் வாய்ந்ததாகவும் இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.

கோலார் பெயர் காரணம்

பரசுராமரின் தந்தை ரிஷி ஜமதக்னி, இங்கு இருக்கும் மலையில் தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் கேட்டதை அளிக்கும் சுரபி என்ற தெய்வீக பசு இருந்தது. ஒரு சமயம் மன்னன் கார்த்தவீர்ய அர்ஜுனன் (சஹஸ்ரார்ஜுனன்) தன் படையுடன் ஜமதக்னி முனிவரை தரிசிக்க இங்கு வந்தான். அற்புதமான சுரபி என்னும் பசுவைப் பற்றி அறிந்ததும், ஒரு ரிஷிக்கு அத்தகைய பசு தேவையில்லை, இப்படிப்பட்ட பசு மன்னரிடமே இருக்க வேண்டும் ஆதலால் அந்த பசுவை தன்னிடம் கொடுக்க வேண்டும் என்று கோரினார். அது தனது மத சடங்குகளுக்குத் தேவைப்பட்ட பால் நெய் என்று எல்லாவற்றையும் அளிப்பதால் ரிஷி ஜமதக்னி பசுவைப் பிரிய மறுத்தார். மறுப்பை கேட்ட மன்னன் கோபத்தில் ரிஷி ஜமதக்னியின் தலையை வெட்டினான். ரிஷி ஜமதக்னியின் மகன் பரசுராமர் இந்த நிகழ்வை தன் தாயார் கூறக் கேட்டார் பரசுராமர், கோபம் கொண்டவர் மன்னரின் முழுப் படையையும் அழித்தார். அதன் பின் தனது கோடரியால் கார்த்தவீர்ய அர்ஜுனனின் தலையை வெட்டி சாய்த்தார். பின்னர் பரசுராமர் முழு க்ஷத்திரிய இனத்தின் தலையை துண்டிப்பதாக சபதம் செய்தார். இந்த சம்பவம் இங்குள்ள மலைகளில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இடம் 'கோலாஹலா' (கார்த்தவீர்யார்ஜுனனின் மரணத்தை கொண்டாடுவது என்று பொருள்) என்ற வார்த்தையிலிருந்து அதன் பெயரைப் பெற்றதாகவும், பின்னர் அது மருவி கோலார் ஆனது என்றும் கூறப்படுகிறது.

குவலால என்ற பெயர் கி.பி 5 ஆம் நூற்றாண்டிலும் அதற்குப் பிற்பட்ட காலங்களிலும் உள்ள கல்வெட்டுகளில் காணப்படுவதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்பகுதி கோவலால, குவலலா, கோலாலா, கோலாஹாரா என்று அடுத்தடுத்த கல்வெட்டுகளில் அழைக்கப்படுகிறது. ஆய்வாளர்கள் மற்றொறு கருத்தும் முன் வைக்கிறார்கள் அதாவது "குவல்" என்பது சிவப்பு தாமரை [கன்னடத்தில் நைடிலி] மற்றும் "ஆலா" என்பது ஆலமரமாகும். தாமரைக்குளம் அதன் கரையில் ஒரு ஆலமரத்துடன் இருந்ததால் இப்பெயர் தோன்றியிக்கலாம் என்பதே அது.

கோலார் நகரமும் அதன் நீர் நிலைகளும்

பண்டைய காலத்தில் மன்னர்கள் நகரங்களை நதிக்கரையில் நிறுவினார்கள். பல பழமையான நகரத்தை பார்த்தால் இது தெரிகிறது. நதி இல்லாத காலத்தில், ஏரிகள் போன்ற பெரிய நீர்நிலைகளுக்கு அருகில் நகரங்கள் எழுப்பப்பட்டன. நகரம் உருவானவுடன் குடிமக்களின் நலனுக்காக அதிக நீர்நிலைகள் கட்டப்படுகின்றன.

மூன்றாம் நூற்றாண்டில் மேற்கு கங்கா வம்சத்தை நிறுவியவர் திரு கொங்கனிவர்மன் மாதவா ஆவார். அவர் தெற்கு சமவெளியில் உள்ள இந்த இடத்தை கோலாரை தனது தலைநகராகக் கொண்டு நிறுவினார். மேற்கு கங்கா வம்சம் பண்டைய கர்நாடகாவின் முக்கியமான ஆளும் வம்சமாகும், இது கிபி 350 முதல் 1000 வரை நீடித்தது. தென்னிந்தியாவில் பல்லவப் பேரரசு வலுவிழந்து கொண்டிருந்த காலத்தில் மேற்கு கங்கர்கள் தங்கள் ஆட்சியைத் தொடங்கினர் என்பது பொதுவான நம்பிக்கை. மேற்கு கங்கா இறையாண்மை சுமார் 350 முதல் 550 CE வரை நீடித்தது, ஆரம்பத்தில் கோலாரில் இருந்து ஆட்சி செய்து பின்னர், அவர்களின் தலைநகரை காவேரி ஆற்றின் கரையில் உள்ள தலக்காடுக்கு மாற்றி கொண்டனர்.

கோலாரின் மேற்கு எல்லையாக அம்மேரள்ளி கெரே என்ற ஏரியும், வடக்கு எல்லையாக கொடிகேண்ணூர் ஏரியும், கிழக்கு எல்லையாக கோலரம்மா ஏரியும் உள்ளது. முந்தைய காலங்களில் கோலாரில் பல ஏரிகள் இருந்திருக்க வேண்டும், ஏனெனில் இந்த இடத்திற்கு அருகில் ஆறு இல்லை. அண்மைக்காலம் வரை கீழ் கோட்டே பகுதியின் மேற்குப் பகுதி ஏரியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இன்று கீழ் கோட்டை ஏரி வறண்ட பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. கொடிகேண்ணூர் ஏரி வறண்டு, "கொடிகேண்ணூர் வாடர் ஒர்க்ஸ்" மட்டுமே உள்ளது. வறண்டு கிடக்கும் இந்த ஏரியின் அருகிலேயே கரஞ்சி கட்டே [ஏரி கரை என்று பொருள் படும் கன்னட சொல்] என்ற பகுதி கொடிகேண்ணூர் ஏரி இங்கு இருந்ததை நினைவுபடுத்துகிறது. கோலரம்மா ஏரி ஏற்கனவே சுருங்க ஆரம்பித்துவிட்டது.

கோலாரில் வோக்கலேரி கிராம மக்கள்

வக்கலேரி ஶ்ரீஆஞ்சநேய குடி, தொட்டபேட், கோலார், கர்நாடகா தொட்டபேட்டையில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீ வக்கலேரி ஆஞ்சநேயர் கோயிலில் வரலாறு, தற்போதைய புதிய பேருந்து நிலையம் அருகே ஏரி இருந்ததை நமக்கு உறுதி செய்கிறது.

வோக்கலேரி கிராமம் கோலருக்கும் மாலூருக்கும் நடுவில் அமைந்துள்ளது. ஏறக்குறைய நூற்று அறுபது ஆண்டுகளுக்கு முன், இந்த கிராமத்தில் இருந்து சிலர் சில கிராமப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நிர்வாகத் தலைமை அலுவலகமாக இருந்த கோலாருக்கு வந்தனர்.

தல புராணம்

வோக்கலேரி கிராம மக்கள் கோலாரில் தங்கியிருந்தபோது, ​​தற்போதைய தொட்டபேட்டையில் உள்ள கீழ் கோட்டை பகுதியில் உள்ள ஏரியில் குளித்தனர். அவர்கள் ஏரியில் நீராடும்போது கல்லில் மோதியுள்ளனர். அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து குளிக்கும் போது மீண்டும் ஒரு கல்லில் மோதினர். இது அவர்களுக்கு ஒர் கல் தங்களை துரத்துவது போல் இருந்தது. அவர்களில் ஒருவர், மற்ற நீச்சல் வீரர்களுக்கும் கல்லை நீரிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்று கூறினார். கிராமத்தில் இருந்து வந்த மக்கள் குழுவினர் எல்லோரும் தண்ணீரில் இருந்து அந்த கல்லை வெளியே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஏரியில் இருந்து கல் வெளியே கொண்டு வரப்பட்டபோது, ​​அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், அது சாதாரண கல் அல்ல, ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் விக்கிரகம். அதை கண்ட அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆனால், சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர்கள் விக்ரஹத்தை தூரத்தில் இருக்கும் தங்கள் கிராமத்திற்கு கொண்டு செல்ல முடியாது என்பதை உணர்ந்தனர். எனவே அடுத்த நடவடிக்கையாக தங்கள் கிராமத்தைச் சேர்ந்த உள்ளூர் மக்களிடம் உதவி கோரினர்.

அவர்களின் உதவியுடன் ஶ்ரீஅஞ்சநேயரின் மூர்த்தியை ஏரியிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்ட அதே இடத்தில் நிறுவினார்கள். ஶ்ரீஆஞ்சநேயரை மழை வெய்யலில் இருந்து காவந்து செய்ய சிறிய கொட்டகை அமைத்தனர். அதன் பின் தினசரி பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

வக்கலேரி ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில்

வோக்கலேரி கிராமத்து மக்களால் விக்ரஹம் "ஜல-வாச"த்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டது என்பதாலும் இந்த கிராமத்து மக்களால் கோவில் பராமரிக்கப்பட்டது என்ற எளிய காரணத்திற்காக இந்த கோவில் "வக்கலேரி ஆஞ்சநேய குடி" என்று அழைக்கப்படுகிறது.

வக்கலேரி ஶ்ரீஆஞ்சநேயர், தொட்டபேட், கோலார், கர்நாடகா பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்ரீ உத்தராதி மடத்தின் பீடாதிபதியான ஸ்ரீ சத்யதீர தீர்த்தரால் ஸ்ரீ ஆஞ்சநேயர் புனர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். மைசூர் மன்னர் நான்காம் ஸ்ரீ கிருஷ்ணராஜ உடையார் கோயிலுக்கு விஜயம் செய்தார். அவர் இந்தக் கோயிலுக்கு நன்கொடை அளித்ததாகக் கூறப்படுகிறது.

கோவில் மிகவும் எளிமையானது, கிழக்கு நோக்கி உள்ளது. முக்கிய பரபரப்பான தொட்டபேட்டை சாலையில் அமைந்துள்ள, நுழைவாயில் கடைகளுக்கு இடையில் உள்ளது. முதலில், திறந்த முற்றத்தில் ஒரு தீப ஸ்தம்பத்தைப் பார்க்கிறோம். இது கோயிலை வலம் வருவதற்கான பாதையில் இருக்கிறது. கோவிலை சுற்றி வலம் வருவதற்கு நான்கு அடி பாதை அமைக்கப்பட்டுள்ளது. தீப ஸ்தம்பத்தை தாண்டி முக மண்டபம், பின் [கர்ப்பகிரகம்] கருவறை வருகிறது. முக மண்டபத்தில் இருந்து பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்யலாம். மத்வ சம்பிரதாய முறைப்படி பூஜைகள் இக்கோயிலில் நடத்தப்படுகின்றன.

வக்கலேரி ஸ்ரீ ஆஞ்சநேயர்

ஸ்ரீ ஆஞ்சநேயரின் மூர்த்தம் சுமார் நான்கு அடி உயரம் கொண்டது. பிரபவளியும் மூலவரும் ஒரே கிரானைட் கல்லால் ஆனது. பிரபுவின் புடைப்பு வடிவத்தில் ’அர்த்தசிலா’ சிலையாகச் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம், ஆனால் உண்மையில் ஒரு முழுச் சிற்பம் கொண்ட சிலை. பிரபவளி எளிமையான ஆனால் விரிவான நுணுக்கமான கலை வேலைப்பாடுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இறைவனின் திருவுருவம் கிழக்கு நோக்கி இருக்கும் போது, ​​இறைவன் வடக்கு நோக்கியும், நடந்து செல்லும் தோரணையிலும் இருக்கிறார். அவரது இரண்டு தாமரை பாதங்களும் ‘தண்டை’ மற்றும் ‘நூபுரம்’ அணிந்துள்ளன. இடது முழங்காலில் இறைவன் சங்கிலி போன்ற நகையொன்று அணிந்துள்ளார். வேட்டியை ‘கச்சம்’ வைத்து அணிந்திருக்கிறார். ஒரு அலங்காரமான உத்திரியாம் அவரது இடுப்பில் இருக்கிறது. இடது திருக்கரத்தை அவர் தனது இடுப்பில் வைத்திருக்கிறார், அதில் சௌகந்திகா மலரின் தண்டைப் பிடித்திருப்பதும் காணப்படுகிறது. அவரது இடது தோளுக்கு மேல் இம்மலர் காணப்படுகிறது. உயர்த்தப்பட்ட வலது திருக்கரம் 'அபய முத்திரை' காட்டுகிறது. பஞ்சுபோன்ற கன்னங்கள் கொண்ட பிரகாசமான வசீகரமான முகம். பார்க்க மிகவும் கவர்ச்சியாகவும் அழகாகவும் இருக்கின்றது. குண்டலம் அணிந்த நீண்ட காதுகள், கோரபால் [துருத்திக்கொண்டுள்ள பற்கள்], பெரிய மீசை என்று பிரபு மிகவும் கவர்ச்சிகரமாகவே உள்ளார். ஆனால் பிரபுவின் பிரகாசமான கண்கள் பிரமிக்க வைக்கும் அழகு கொண்டவை. அவர் தனது 'கேசம்' கலையாமல் இருக்க அலங்கார ’தலை பட்டை’யை அணிந்துள்ளார். அவரது தலையில் சிறிய கிரீடம் காணப்படுகிறது. பிரபுவின் வால் உயர்ந்து, தலைக்கு பின்னால் சென்று சௌகந்திகா மலருக்கு அருகில் இடது பக்கம் முடிவடைகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     வக்கலேரி ஆஞ்சநேய குடி, தொட்டபேட், கோலார், கர்நாடகா

 

அனுபவம்
பல வருடங்களாக ஜல வாசத்தில் இருந்த பிரபு, தம் பக்தர்களை ஆசிர்வதிக்க, அவர்களின் கவலைகளையும் கஷ்டங்களையும் முடித்து வைக்க ஜலவாசத்தில் இருந்து வெளியே வந்தார். இந்த க்ஷேத்திரத்து பிரபுவை பிரார்த்தனை செய்து அவருடைய ஆசீர்வாதங்களின் பலனைப் பெறுங்கள் - எல்லா கவலைகளையும் துன்பங்களையும் கழுவுங்கள்.   

தமிழாக்கம் :திரு. ஹரி சுந்தர்
பதிப்பு: டிசம்பர் 2021


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+