home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

கர்பகிரஹத்தின் முகப்பு - ஶ்ரீ சுந்தர வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், திருப்பத்தூர்


ஶ்ரீ சுந்தர வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், தர்மராஜா கோயில் வீதி, திருப்பத்தூர், தமிழ்நாடு

ஜி.கே.கௌசிக்


திருப்பத்தூர்

சென்னை-பெங்களூரு இடை செல்லும் இரயில் வழியில் தமிழ்நாட்டில் இருக்கும் திருப்பத்தூர் நகரம் மிகவும் பழமையான நகரமாகும். ஜோலார்பேட்டை சந்திப்பு இங்கிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின் போதும் இது தனி வருவாய் கோட்டமாக இருந்தது. சோழர்கள் காலத்திலும் இது தனிப்பெருமையுடன் ஶ்ரீ மாதவ சதுர்வேதி மங்களம் என்ற பெயருடன் நிகரலி சோழ மண்டலத்த்தின் கீழ் திகழ்ந்திருக்கிறது. இந்திய தொல்பொருள் ஆய்வு குழுவின் ஆராய்ச்சியில் இந்நகரம் சுமார் ஆயிரத்து அறுநூறு ஆண்டுகள் பழமையானது என அறியப்படுகிறது.

திருப்பத்தூர்- பெயர் காரணம்

ஶ்ரீ சுந்தர வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், தர்மராஜா கோயில் வீதி, திருப்பத்தூர் திருப்பத்தூர் என்றால் பத்து கிராமங்கள்/சிறு நகரம் என்று பொருள்படும். இன்றும் இந்நக்ரின் தெற்கு கோடியில் ஆதியூர் என்ற பெயரிலும், வடக்கு கோடியில் கோடியூர் என்ற பெயரிலும் அழைக்கப்படும் பகுதியுள்ளது. இதனால் பத்து கிராமங்களை கொண்ட நகரம் இது என்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது. பல கால கட்டங்களில் இவ்விடம் பல அரசின் கீழ் இருந்ததால், ஶ்ரீமாதவ சதுர்வேதி மங்களம், வீர நாராயண சதுர்வேதி மங்களம், திருபேரூர், பிரம்மபுரம், பிரம்மேச்சுவரம் என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. திருபேரூர் என்பது மறுவி திருப்பத்தூர் என்று அழைக்கப்படுவதாகவும் கூறுவர்.

திருப்பத்தூரில் கோட்டை

சுமார் எட்டுநூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்து நகரின் கிழக்கு பகுதியில் கோட்டை இருந்திருப்பதற்கான வாய்ப்புள்ளது. இக்கோட்டை யாரால் கட்டப்பட்டிருக்கும், எப்பொழுது தகர்க்கப்பட்டிருக்கும் என்பதற்கான ஆதாரமும் இல்லை. ஆனால் இன்றும் நகரின் கிழக்கு பகுதியில் காணப்படும் ஏரியை ஒட்டிய பெரும் நிலபகுதி கோட்டை வட்டாரம் என்றே அழைக்கப்படுகிறது. இந்நகரம் ஹொய்சாள [போசள] பேரரசு மற்றும் விஜயநகர பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்ததால் இவர்களின் ஆட்சி காலத்தில் கோட்டை எழுப்பப்பட்டிருக்கலாம் என்று நினைக்க வாய்ப்புள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் அருகாமையில் இருந்த வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, சித்தூர் என்று எல்லா இடங்களிலும் போர் நடந்துள்ளது. ஆங்கிலேயர்கள் அந்நூற்றாண்டில் இந்த பகுதியில் அவர்களது அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தனர். ஆங்கிலேயர்கள் தாங்கள் இந்தியர்களிடமிருந்து கைபற்றிய பகுதியில் உள்ள கோட்டையை அழித்தனர் என்பதற்கான சான்றுகள் பல உள்ளன.

1767அம் ஆண்டு நவம்பர் மாதம் மைசூர் ஹைதர் அலியின் கீழ் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வாணியம்பாடியின் மீது படையெடுத்தது. அப்படி படையெடுத்த மைசூர் படையில் முக்கிய பகுதி வாணியம்பாடியை நோக்கி சென்ற பொழுது, படையின் ஒரு பகுதியை திருப்பத்தூருக்கு அனுப்பபட்டது. இதனால் திருப்பத்தூர் மைசூரின் ஆட்சியின் கீழும் இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.

ஶ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு

இந்நகரம் ஹொய்சாள [போசள] பேரரசு, விஜயநகர பேரரசு மற்றும் மைசூரின் ஆட்சியின் கீழ் இருந்ததால் இவர்களின் ஆட்சி காலத்தில் கோட்டை இருந்திருக்க வாய்ப்புள்ளது. இவ்வாட்சியாளர்கள் எல்லோரும் ஶ்ரீஆஞ்சநேய பக்தர்கள். இவர்கள் ஶ்ரீஆஞ்சநேயரை தங்கள் காவல் தெய்வமாக கொண்டாடினார்கள். ராஜ்யத்தின் எல்லையிலும், ஒவ்வொரு கிராமத்தின் எல்லையிலும் இவர்கள் ஶ்ரீஆஞ்சநேயருக்கு கோயில் கட்டியுள்ளனர். விதிவிலக்கு இல்லாமல் இந்த ஆட்சியாளர்கள் எல்லோருமே ஶ்ரீஅஞ்சநேயருக்கு தங்கள் கோட்டையில் கோவில் கட்டியுள்ளனர். அதனால் இந்நகரத்தில் பல கோயில்கள் ஶ்ரீஆஞ்சநேயருக்காக இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நாட்டில் இருந்த அரசியல் நிலைமையில், மக்களின் நலம் குறித்து நடைமுறைகளை ஆட்சியாளர்கள் பல முறை எடுக்க முடியவில்லை. போரும், சண்டையும், சச்சரவுகளும் நிறைந்த அக்கால கட்டத்தில், பல கோயில்கள் கேட்பாரற்று சரியான பராமரிப்பற்று போயிற்று. பல முறை தெய்வ சிலைகளை அன்னியர்களிடமிருந்து காப்பாற்ற வேறு இடம் எடுத்துச்செல்லப்பட்டது. சில சிலைகள் அருகிலிருக்கும் ஆறு, ஏரி, குளம், நீர் நிலைகளில் பாதுகாப்பு குறித்து பதுக்கப்பட்டன. அன்றைய கால கட்டத்தில் இது வழக்கத்திலிருந்தது. [ நமது இணையத்தில் "வேலூர் ஹனுமார்" கோயிலை பற்றிய கட்டுரையும் பார்க்கவும்]

ஶ்ரீஆஞ்சநேயர் மெலெழுந்தார்

ஶ்ரீ சுந்தர வீர ஆஞ்சநேயர் சன்னிதியும், ஶ்ரீஇராமர் சன்னிதியும், திருப்பத்தூர் அப்படி நீர்நிலைகளில் பதுக்கப்பட்ட இறைவனின் சிலையை எப்பொழுது வெளிக்கொணர வேண்டும் என்பதனை இறைவன் தீர்மானம் செய்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடுவில் அப்படி ஒரு சம்பவம் இங்கு நடந்தது. திருப்பத்தூருக்கும் ஜோலார்பேட்டைக்கும் இடையில் தாழம்புதர் நதி ஓடுகிறது. அன்று அங்கு வழக்கம் போல் மீன் பிடிக்க சில மீனவர்கள் நதிக்கு சென்றனர். வீசிய வலையில் பெரிதாக பிடி சிக்கியது. வலுவாக இருந்ததால் எல்லோரும் சேர்ந்து இழுத்தனர். ஆனால் வலையில் சிக்கியது பெரிய பாறாங்கல். அதனை திரும்பவும் நதியில் போட்டுவிட்டு, திரும்பவும் வலையை வீசினார்கள். சிறிது நேரத்தில் திரும்பவும் வலை கனத்தது, கரையில் எடுத்து பார்த்தால் திரும்பவும் அதே கல். அவர்களுக்கு ஆச்சரியம். ஒரு கல் தானாக வலையில் நுழைய முடியாது, அதுவும் இரண்டு முறை என்றால் ஆச்சரியமாக இருந்தது. இது சாதாரண கல் இல்லை என்று நினைத்து அக்கல்லினை திரும்ப நன்கு உற்று ஆராய்ச்சி செய்தனர். ஆச்சரியம்! அக்கல்லில் ஶ்ரீ ஆஞ்சநேயருடைய உருவம் பதிக்கப்பட்டு இருப்பதை கண்டனர். அப்பொழுது அசசீரியின் வாக்கு அனைவருக்கும் கேட்டது "என்னை அரசும் வேம்பும் பின்னி வளர்ந்திருக்கும் மரத்தடியில் பிரதிஷ்டை செய்து வழிபடவும்".

ஶ்ரீஆஞ்சநேயருக்கு திருக்கோயில்

அசரீரியின் வாக்கு படி அவர்கள் வசிக்கும் இடத்திற்கு மேற்கில் அப்படி அரசும் வேம்பும் பின்னி வளர்ந்திருந்ததை கண்டார்கள். பெரியோர்களை கலந்து ஆலோசித்து அம்மரத்தருகில் ஒரு சிறிய கோயிலை கட்டினர். ஶ்ரீஹனுமத் ஜயந்தி, ஶ்ரீராமநவமி, ஶ்ரீகிருஷ்ண ஜயந்தி என்று அனேக பண்டிகைகள் கொண்டாடினர். பக்தர்களின் பங்கேற்ப்பினால் கோயில் வளர்ச்சியடைந்தது. ஶ்ரீராமநவமியை ஒட்டி ஶ்ரீசீதா கல்யாணம் கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் கொண்டாடப்படும் "ஶ்ரீவிஷ்ணு தீபம்" என்ற பண்டிகை தனி தன்மை வாய்ந்தது. கார்த்திகை தமிழ் மாதம் திருக்கோயிலுக்கு எதிரில் இருக்கும் தீப ஸ்தம்பத்தில் அன்று விளக்கு ஏற்றப்படும். சாதாரணமாக தீப ஸ்தம்பம் என்பது கொடிமரத்திற்கு அருகிலேயே கோயிலின் உள்ளேயே காணப்படும். ஆனால் இத்திருக்கோயிலுக்கும் தீப ஸ்தம்பத்திற்கும் இடையில் பொது சாலையுள்ளது.

தீப ஸ்தம்பம்

ஶ்ரீவிஷ்ணு தீப திருவிழா -ஶ்ரீ சுந்தர வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், திருப்பத்தூர் நீண்ட காலமாக விஷ்ணு தீபம் உத்ஸவம் இக்கோயிலில் மிகவும் கோலாகோலமாக கொண்டாடப் படுகிறது. கோயிலின் எதிரில் இருக்கும் காலி நிலத்தில் தீப ஸ்தம்பம் நடப்பட்டு திருவிழா கொண்டாடுவது வழக்கம். 1900அம் ஆண்டு தீப ஸ்தம்பம் நடுவதற்கு நிலத்தின் உரிமையாளர் மறுத்து விட்டார். கோயிலின் எதிரில் தான் தீப ஸ்தம்பம் இருக்கும், இந்நிலையில் நிலத்தின் சொந்தகாரர் இதற்கு மறுப்பு தெரிவிக்கவே பக்தர்கள் செய்வதறியாமல் தவித்தார்கள். ஆனால் மறுநாள் ஒரு ஆச்சரியம் நடந்தது. நிலத்தின் சொந்தகாரர் திருவிழாவை நடத்த சொல்லியும், தனது நிலத்தில் தீபம் ஏற்றலாம் என்றும் வலிய வந்து கூறினார். முந்திய இரவு தூங்கும் பொழுது அவர் கனவில் விழாவிற்கு அனுமதி கொடுக்க யாரோ கட்டளையிட்டதாகவும், அது ஶ்ரீஆஞ்சநேயராக தான் இருக்கும் என்று தான் நம்புவதாகவும், அதனால் தான் மனம் மாறியதாகவும் கூறினார். அவ்வாண்டு தீபஸ்தம்பம் நடப்பட்டு திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தீபஸ்தம்ப இடத்தை இன்றும் ஜனாப் மேக்கிரி நாயபு வம்சத்தாரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

திரும்பிய இன்னலும் தீர்வும்

1910ஆம் ஆண்டு இங்கு இரு தரப்பாருக்கும் இடையே பெரிய கலவரம் நடைப்பெற்றது. அப்பொழுது தொழுகைக்கான இடம் அருகில் இருப்பதால் மேளம் வாசிக்ககூடாது தீபம் ஏற்றக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அன்றய ஆங்கிலேய அதிகாரி ஆர்தர்ஹால் என்பவர் இதற்கு ஒப்புதல் கொடுத்து தன் பங்களாவிலிருந்து வெளிவந்தார். மாலை வேளை, வெளியே வந்தவர் "ஷூட்ஹிம், ஷூட்ஹிம்" என்று வாசல் கதவை பார்த்து கூச்சலிட்டார். பங்களாவிலிருந்தவர்கள் வெளியே வந்து பார்க்கையில் அங்கு ஒன்றும் இல்லை. மனைவி விசாரித்தப்போது அங்கு கருங்குரங்குகள் வந்ததாகவும், தன்னை பிராண்டியதாகவும் கூறினார். சற்று யோசித்த அவர் மனைவி, தாங்கள் கண்டது ஶ்ரீஆஞ்சநேயரை தான் என்று எடுத்துரைத்தார். ஆர்தர்ஹால் உடனே தான் கொடுத்த உத்தரவுக்கு எதிராணை ஒன்று பிறப்பித்தார். தீப விழா நடத்த படும், அங்கு கலவரம் நடக்காமல் இருக்க தகுந்த பாதுகாப்பும் கொடுக்கப்படும் என்பதே. ஶ்ரீஆஞ்சநேயரின் மகிமையினால் நடந்த இரண்டாவது அதிசயம் இது.

திருக்கோயிலும் சன்னிதிகளும்

இந்த இரண்டு சம்பவங்களும் திருப்பத்தூர் ஸ்ரீ சுந்திர வீரா அஞ்சநேய சுவாமியின் மகிமையையும் அவரது புகழ் பரவுவதற்கான காரணத்தை காட்ட போதுமான சான்றுகளாகும். சேலம், திருவண்ணாமலை, வேலூர் போன்ற தொலைதூர நகரங்களிலும், அண்டை கிராமம் மற்றும் நகரத்திலும் ஏராளமான பக்தர்கள் இவருக்கு உண்டு. பல ஆண்டுகளாக இந்த பக்தர்கள் கோயிலின் வளர்ச்சிக்கு தாராள பங்களிக்கிறார்கள், இவர்கள் உதவியால் கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு கவர்ச்சிகரமான மூன்று அடுக்கு ராஜகோபுரம் கட்டப்பட்டது. கும்பாபிஷேகம் 1939 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்டது.

ஸ்ரீ ராமர், சீதா மற்றும் லட்சுமணனுக்கான சன்னிதி மிகவும் கவர்ச்சிகரமானதாகவுள்ளது. ஸ்ரீ ராம பரிவாரின் ஊர்வல விக்கிரகங்களின் அழகு மனதை மயக்கும் வண்ணம் உள்ளன. கர்பகிரஹத்தைச் சுற்றியுள்ள அகலமான நடைபாதை பக்தர்களுக்கு பிரதக்ஷிணம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய், சனி மற்றும் அமாவாசை நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். ஸ்ரீ ராமநவாமி, வைகுண்ட ஏகாதேசி, ஹனுமத் ஜெயந்தி ஆகிய விசேடங்கள் அனைத்தும் கோலாகோலமாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தியின் போது ஸ்ரீ அஞ்சநேயர் ஊஞ்சல் விளையாடுவார் என்பது இங்கு விசேடம்.

ஶ்ரீசுந்தர வீர ஆஞ்சநேயர்

ஶ்ரீஆஞ்சநேயரின் சிலை சுமார் ஏழு அடி உயரமுள்ளது. இறைவன் நின்ற கோலத்தில் அஞ்சலி ஹஸ்தராக இரு கைகளையும் கூப்பிய வண்ணம் காணப்படுகிறார். அவரது சரணார விந்தத்தை தண்டையும், நூபூரமும் அலங்கரிக்கிறது. இடுப்பில் கச்சம், அதனை கவ்வியிருக்கும் ஒட்டியாணம் போன்ற அணிகலம். மார்பினை அலங்கரிக்கும் அழகான முத்து மற்றும் மணி மாலைகள், கழுத்தை ஒட்டிய அட்டிகை. இரு திருக்கரங்களையும் கங்கணம், கேயூரம் அலங்கரிக்கின்றன. மார்பருகில் குவிந்த இரு உள்ளங்கைகள். அவரது தலை வரை உயர்ந்துள்ள வால் பின்புறமிருப்பதால் காணமுடியாது. முழுமையாக தெரியும் முகம் பக்தர்களின் கவனத்தை ஈர்ப்பதில் ஆச்சரியமில்லை. கேசம் அழகாக முடிந்து வைக்கப்பட்டுள்ளது. காதுகளில் தோளினை தொடும் குண்டலங்கள். காதின் மேல் பகுதியில் கர்ணபுஶ்பம் என்னும் அணிகலம். இறைவனின் கவர்ச்சியான, ஒளிர்கின்ற கண்கள் பக்தர்கள் மீது பரிவினை வழங்குகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஶ்ரீ சுந்தர வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், திருப்பத்தூர்

 

அனுபவம்
சுந்தரா என்றால் அழகு மற்றும் கவர்ச்சி மட்டுமல்ல; இது முரண்பாடுகளில் கூட சகிப்பு தன்மை என்று பொருள். எல்லா முரண்களையும் களையவும், தாங்கள் இலக்கை அடைய விடாமுயற்சிக்கு வழியைக் காட்டி வெற்றிகரமாக வெளி வருவதற்கும் சுந்தர வீரர் அருள்புரிவார்  

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: ஜூலை 2021


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+