home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

வீர அழகர் பெருமாள் திருக்கோயில், மானாமதுரை, சிவகங்கா, தமிழ்நாடு


வீர அழகர் பெருமாள் கோயிலின் ஸ்ரீ ஆஞ்சநேயர்
மானாமதுரை, சிவகங்கா, தமிழ்நாடு

ஜீகே கௌசிக்


மானாமதுரை

மானாமதுரை என்பது மண் பானைகள் மற்றும் பிற களிமண் பொருட்களுக்கு புகழ் பெற்ற இடம். இந்த இடத்தின் பெரிய வணிகங்களில் இதுவும் ஒன்றாகும். வைகை நதி இந்த நகரம் வழியாக பாய்கிறது. முந்தைய நாட்களில் இது மிகச்சிறந்த விவசாய நிலங்களில் ஒன்றாகும். இந்த இடம் பல பெரிய மன்னர்களால் நிர்வகிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வைகையின் ஓட்டமும் திசையும் புனிதமாக கருதப்படுகிறது, எனவே மன்னர்கள் பெரும் கோயில்களைக் கட்டியிருந்தனர்.

வீர அழகர் பெருமாள் திருக்கோயில், மானாமதுரை, சிவகங்கா, தமிழ்நாடு நான் மதுரைக்கு ஒரு பயணத்தைத் திட்டமிட்டுக் கொண்டிருந்தேன் அச்சமயத்தில் மானாமதுரையும் பார்க்க விரும்பினேன். வழக்கம் போல், அந்த இடத்தில் உள்ள ஸ்ரீ அனுமன் கோயில்களைப் பற்றி அறிய இணையம் வழியாகச் சென்றேன். வரைபடத்தில் சில புகைப்படங்களுடன் “பிருந்தவன் அனுமன் கோயில்” என்று குறிக்கப்பட்ட ஒரு இடம் இருந்தது. ஆனால் அங்கு காணப்பட்ட புகைப்படம் கோயிலைப் பற்றியதாக தெரியவில்லை ஆனால் கல்வெட்டுகளுடன் கூடிய கல் தூண்கள் காட்டப்பட்டிருந்தது.

நான் அந்த இடத்திற்குச் சென்று தூணைப் பற்றி விசாரித்தபின், தூணில் உள்ள கல்வெட்டுகள் முதலாம் ராஜராஜ சோழனின் உடன் தொடர்புடையவை என்பதை அறிந்தேன். கல்வெட்டின் அதிசயம் என்னவென்றால், ஒரே தூணில் சுமார் இருபது வருட இடைவெளியுடன் முதலாம் ராஜராஜனின் பற்றிய இரண்டு கல்வெட்டு செய்திகள் உள்ளன. இந்த இடத்திற்கு ஹனுமான் கோயிலுடன் எந்த தொடர்பும் இல்லை.

மானா மதுரை பெயர்

சத்திய விஜய நகரத்தில் ஶ்ரீஆஞ்சநேயர் கோயிலையும், உத்திராதி மடத்தின் ஸ்ரீ சத்தியவிஜய தீர்த்தத்தின் பிருந்தாவனையும் கண்ட நாளிலிருந்து மானாமதுரை சென்று பார்க்க வேண்டும் என்ற ஒரு சிறப்பு ஆர்வம் என்னுள் வந்தது, சத்திய விஜய நகர் ஸ்ரீ ஆஞ்சநேய கோயில் பற்றிய கட்டுரை எழுதிய பொழுது எஸ்.வி.நகரத்துக்கும் மானாமதுரைக்கும் இடையே எனக்குத் தெரிந்த ஒரே தொடர்பு ஸ்ரீ சத்தியவிஜய தீர்த்தமும், உத்திராதி மடத்தின் அடுத்த பீடாதிபதியான ஸ்ரீ சத்தியப்பிரிய தீர்த்தரும் தான். தற்போதைய தமிழ்நாட்டில் ஒரு மாத்வா குருவின் பெயரிடப்பட்ட ஒரே இடம் சத்திய விஜய நகரம். அடுத்த குருவான ஸ்ரீ சத்தியப்பிரிய தீர்த்தத்தின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இந்த இடத்திற்கு “மானாமதுரை” என்ற பெயரைக் கொடுத்தது என்பது எனக்கு புதிது.

உள்ளூர் புராணத்தின் படி இந்த இடத்தின் பெயர் “வீர வானர மதுரை” என்பது காலத்துடன் வானர மதுரை, பின்னர் வானா மதுரை மற்றும் பின்னர் மானா மதுரை என மாறியது.

தல புராணம்

பூஜைக்கு பயன்படுத்தப்படும் மணி - ஹனுமான் சிலையுடன் ஸ்ரீ சத்தியப்பிரியா தீர்த்தர் ராமேஸ்வர யாத்திரை சென்றார், யாத்திரையிலிருந்து திரும்பும் போது அவர், இன்றைய மனாமதுரையில் வைகை கரையில் தங்கினார். அந்த நாட்களில், அந்த பகுதி அடர்ந்த காடாக இருந்தது. அவர் அந்த இடத்தில் முகாமிட்டிருந்தபோது, ​​சில திருடர்கள் மடத்தை தாக்கி பூஜா பெட்டியை ஒரு நகை பெட்டி என்று நினைத்து திருடிச் சென்றனர். இந்த விபத்தை கண்டு குரு அதிர்ச்சியடைந்து, மடத்தின் ஶ்ரீமூல ராமர் பூஜையை மீட்டெடுக்க முக்கிய பிராணரை [ஸ்ரீ ஹனுமான்] பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். பொதுவாக மடத்தில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் மணியில் ஸ்ரீ ஹனுமான் சிலை இருக்கும் - இங்கு கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை காண்க. ஒரு அதிசயம் அப்பொழுது நிகழ்ந்தது. மடத்தில் பூஜைக்காக வைத்திருந்த மணியில் இருந்த ஹனுமான் சிலையிலிருந்து ஒரு குரங்கு வெளிப்பட்டது. இந்த முதல் குரங்கைத் தொடர்ந்து மேலும் பல வெளிப்பட்டது. ஏராளமான குரங்குகள் தங்களை நோக்கி வெறித்தனமாக அலறுவதைக் கண்ட திருடர்கள் அதிர்ச்சியடைந்தனர். பயந்துபோன திருடர்கள் பூஜை பெட்டியை திருப்பி கொடுத்துவிட்டு குருவிடம் மன்னிப்பு கோரினர், இனிமேல் தாங்கள் வேலை செய்து தங்கள் உணவை சம்பாதிக்க போவதில் உறுதியாக இருப்பதாகவும் குருவிடம் வாக்களித்தார்கள்.

இந்த சம்பவம் “வீர வானர மதுராபுரி” என்ற பெயரை இந்த இடத்திற்கு கொடுத்தது. காலப்போக்கில் அது வானர மதுரை, பின்னர் வானா மதுரை, பின்னர் மானாமதுரை ஆகியவையாக மாறியது.

தல புராணக்கதையின் இரண்டாவது வடிவமும் உண்டு. அதன்படி விபீஷணர் இலங்கையின் அரசரான பிறகு ஸ்ரீ ஹனுமான் இலங்கைக்கு மற்றும் பல வானரங்களுடன் பயணம் மேற்கொண்டார். வழியில் இந்த க்ஷேத்திரம் மிகவும் இனிமையாக இருப்பதை அவர் கண்டார்கள், இனிமையான இச்சூழலில் காலம் போவது தெரியாமல் அவர்கள் நீண்ட காலம் தங்கிவிட்டார்கள். இலங்கையில் ஸ்ரீ ஹனுமான் மற்றும் பரிவாரங்களை எதிர்பார்த்து காத்திருந்த விபீஷணர், இந்த க்ஷேத்திரத்திற்கே வந்தார். அவர் தனது கிரீடத்தை ஸ்ரீ ஹனுமான் சிரத்தில் வைத்து இலங்கைக்கு எல்லோரையும் அழைத்துச் சென்றார். வீர வானரங்களுடன் ஸ்ரீ ஹனுமார் இந்த இடத்தில் தங்கியிருந்ததால், இது “வீர வானர மதுராபுரி” என்று அறியப்பட்டது, இது பிற்காலத்தில் மானாமதுரை ஆனது.

இந்த க்ஷேத்திரத்தின் அருட்தொண்டர்கள்

இந்த க்ஷேத்திரத்தில் மோக்ஷத்தைப் பெற்ற இரண்டு பெரிய புனிதர்கள் உள்ளனர். த்வைத தத்துவத்தை சார்ந்த ஸ்ரீ சத்தியப்பிரிய தீர்த்தமும் மற்றவர் அத்வைத தத்துவத்தை சார்ந்த ஸ்ரீ சதாசிவ பிரம்மந்திரரும் ஆவார். ஸ்ரீ சத்தியப்பிரியா தீர்த்தரின் மூல பிருந்தாவனம் வைகை கிழக்குக் கரையில் உள்ள உத்திராதி மடத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீ சதாசிவ பிரம்மந்திரலின் ஆதிஷ்டனம் வைகை கரையில் உள்ள ஸ்ரீ சோமநாதர் கோவிலில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவாக மனமதுரையில் இசை விழா நடத்தப்படுகிறது. [அவரது ஆதிஷ்டனம் நேருரிலும் அமைந்துள்ளது என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மோக்ஷத்தை எடுத்ததாக நம்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது]

வீர அழகர் பெருமாள் கோயில்

வீர அழகர் பெருமாள் திருக்கோயில், மானாமதுரை, சிவகங்கா, தமிழ்நாடு மாவலி வானதிராயார் அப்போது இந்த இடத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தார். கள்ளழகரை வழிபடுவதற்காக மதுரை அழகர் கோயிலுக்குச் செல்வது அவருக்குப் பழக்கம். தொடர்ச்சியாக சில நாட்கள், அவர் கள்ளழகரை தரிசனம் செய்ய அழகர் கொயிலுக்குச் செல்ல முடியவில்லை. கள்ளழகர் அவருக்கு கனவில் தரிசனம் அளித்து, இங்கேயே தனக்கு ஒரு கோவிலைக் கட்டும்படி அறிவுறுத்தினார். வைகை கரையில் ஒரு இடத்தினை கோவிலைக் கட்டியதற்காக இறைவன் சுட்டிக்காட்டினார். அந்த இடம் வேற்று இடமில்லை, ஸ்ரீ ஹனுமான் தங்கியிருந்த இடமும், ஸ்ரீ விபீஷணர் அவரைச் சந்தித்த இடமும் தான் அது.

மன்னர் மாவலி வானதிராயார் ஸ்ரீ அழகருக்கு பிரமாண்டமான கோயிலையும், கோவிலில் ஸ்ரீ அனுமனுக்கு சிறப்பான பெரிய சன்னிதியும் கட்டினார். மதுரையின் அழகர் கோவில் போலவே சுந்தரராஜ பெருமாள் கிழக்கு நோக்கிய தெய்வம். ஸ்ரீ அழகர் உத்சவ மூர்த்தி பிரதான கருவறையில் உள்ளது. ஸ்ரீ சௌந்தரவல்லி தாயாருக்கு தனி சன்னிதி பிரதான சன்னிதியின் கிழக்குப் பகுதியில் உள்ளது.

மூன்று அடுக்கு ராஜகோபுரத்தில் கோயிலின் வெளிப்புற சுவரில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. ஸ்ரீ ஹனுமனுக்கான சன்னிதி தெற்கு நோக்கியுள்ளது. மதுரை அழகர் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் இந்த கோவிலிலும் கொண்டாடப்படுகின்றன. தெற்கு நோக்கியுள்ள அனுமார் சிலை இக்கோயில் காலத்திற்கும் முந்தியது எனக் கூறப்படுகிறது. இந்த கோயில் சிவகங்கை தேவஸ்தானத்தின் நிர்வாகத்தில் உள்ளது.

ஸ்ரீ அனுமன்

இந்த க்ஷேத்திரத்தின் ஸ்ரீ ஹனுமான் சிலை சுமார் ஆறரை அடி உயரம் உடையது. இறைவன் தெற்கு நோக்கி நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். அவரது கமலத் திருபாதங்களில் தண்டையுடன் காட்சியளிக்கிறார். பிரபு தனது இரு திருக்கரங்களை மடித்து இரு உள்ளங்கைகளையும் சேர்த்து அஞ்சலி ஹஸ்தனாக காட்சியளிக்கிறார். மணிக்கட்டில் கங்கணம் காணப்படுகிறது. கழுத்தில் இறைவன் மாலை அணிந்துள்ளார். அவர் காதுகளில் குண்டலம் அணிந்துள்ளார். கர்ண புஸ்பமும் காதுகளில் காணப்படுகிறது. அவர் தலையில் கிரீடம் அணிந்திருப்பதைக் காணலாம். அவரது பிரகாசமாய் ஒளிரும் கண்களின் பார்வை மிகவும் கூர்மையாக இருக்கிறது. புராணத்தின் படி, பிரபு ராம பக்தரான விபீஷணனையும் அவரது ராஜ்யத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் - கண்களில் காணப்படும் ஒளியின் காரணம் இதுவே.

 

திருக்கோயில் இருப்பிடம் :     " வீர அழகர் பெருமாள் திருக்கோயில், மானாமதுரை, சிவகங்கா, தமிழ்நாடு "

 

அனுபவம்
ஸ்ரீராம பக்தர்களின் பாதுகாவலரான ஸ்ரீ ஹனுமாரை இந்த க்ஷேத்திரத்தில் தரிசனம் செய்யுங்கள். விபீஷணர் தர்மத்தின் பக்கம் நின்றது போல் நாமும் தர்மத்துடன் இருந்தால் ஹனுமார் நம்மையும் பாதுகாப்பார் என்பது உறுதி.

தமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: ஜூலை 2020


 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+