home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

லக்ஹெரி மாருதி மந்திர், ராஸ்தா பேட், பூனே, மஹாராஷ்ட்ரா


லக்ஹெரி மாருதி மந்திர், ராஸ்தா பேட், பூனே, மஹாராஷ்ட்ரா

ஜிகே கௌசிக்


முந்தைய கால பூனே

மனிதர்கள் எப்போதும் ஒரு நதியை ஒட்டியே குடியேறுவார்கள், பழங்காலத்திலிருந்தே இது பழக்கத்தில் இருக்கிறது. இதே வழியில் முத்தா நதிக்கரையில் ஒரு குடியேற்றம் இருந்தது. முத்தா நதியும் மூலா நதியுடன் சங்கமிக்கின்ற இடத்தின் அருகில் முத்தாவின் வலது கரையில் அமைந்துள்ளது இக்குகுடியேற்றம். இதுவே இன்றைய பூனேவின் விதைப்பு அல்லது தொடக்கமாகும். இந்த குடியேற்ற பகுதி தற்போது கசாபே என்று அழைக்கப்படுகிறது. பூனே மகாராஷ்டிராவின் கலாச்சார தலைநகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

சிவாஜி மகாராஜ் ஒரு காலத்தில் கசாபேவில் வாசி. 1630 ஆம் ஆண்டில் ஏழாவது பிஜாப்பூர் மன்னர் மெஹமூத்தின் படை தளபதி-மந்திரி முரார் ஜக்தேவினால் கசாபே முற்றிலுமாக அழிக்கப்பட்டது. சிவாஜி மகாராஜ் காலத்தில்தான் கசாபேவை மையமாக கொண்டு புனேவுடன் நகரமாக மீண்டும் உருவாக்கப்பட்டது. கசாபே கணபதி கோயில் மற்றும் தனது தாயிற்காக கட்டிய லால் மஹால் ஆகிவற்றுடன், புனே மீண்டும் வாழக்கூடிய பகுதியாக மாறியது.

பாஜிராவ் பேஷ்வா தனது நிர்வாகத்தின் தலைமையகமாக புனேவில் குடியேறியவுடன் புனேவின் உண்மையான வளர்ச்சி தொடங்கியது. பேட் என்று அழைக்கப்படும் புதிய பகுதிகள் உருவாக்கப்பட்டது. பேட் அடிப்படையில் ஒரு வணிக தலம். [பெங்களூரு கூட பல பேட்களுடன் உருவாக்கப்பட்டது என்பதை நாம் காண முடிகிறது.] புதிய பேட் ஒன்று அதை உருவாக்கிய நபரின் பெயரால் பெயரிடப்பட்டது அல்லது அது வாரத்தின் ஒரு நாளின் பெயரால் அழைக்கப்பட்டது.

பெயர் பூனே:

வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, புனேவில் முத்தா நதிக்கரையில் ஒரு பூனேஷ்வர் சிவன் கோயில் இருந்தது. பூனேஷ்வருடன் நாராயணேஸ்வர் என்ற மற்றொரு கோயிலும் இருந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பூனேஷ்வர் கோயில் இடிக்கப்பட்டு தற்போது "இளைய ஷேக் சல்லா தர்கா" என்று அழைக்கப்படும் தர்காவாக மாற்றப்பட்டு, இது இன்றுவரை அதே இடத்தில் உள்ளது.

ராஸ்தா பேட்:

ராஸ்தா பேட் என்பது பூனேவில் ஒரு பிரபலமான இடம். இது பூனே ரயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்தில் உள்ளது. கிங் எட்வர்ட் மேமோரியல் மருத்துவமனை நகரின் பிரபலமான சுகாதார மையங்களில் ஒன்றாகும் இது ராஸ்தா பேட்டில் உள்ளது. இந்த பேட்டை ராஸ்தா குடும்பத்தினரால் உருவாக்கப்பட்டது. ராஸ்தா என்பது மராட்டிய சாம்ராஜ்யத்திலிருந்த ஒரு முக்கியமான நிலப்பிரபுத்துவ குடும்பத்தின் குடும்பப்பெயராகும். அவர்களின் அசல் குடும்பப்பெயர் கோகலே. பிஜப்பூர் முடியாட்சியிலிருந்து அவர்களின் நேர்மை மற்றும் நேர்மைக்காக நியாயத்தை [மராத்தியில்-ராஸ்தா] காண்பிப்பவர், அதனால் அவர்களுக்கு ராஸ்தா பட்டத்தை அவர்கள் பெற்றனர், பூனேவின் ஒரு பகுதியான ரஸ்தா பேட், முதலில் சிவபுரி பேட் என்று அழைக்கப்பட்டது, பின்பு இக்குடும்பத்தினரால் புனர்நிர்மானம் செய்யப்பட்டதால் ராஸ்தா பேட் என்று பெயரிடப்பட்டது. பேஷ்வாகளின் குஜராத், மால்வா மற்றும் கர்நாடக இராணுவ படையெடுப்பில் ராஸ்தாகள் பெரும் பங்கு வகித்தனர். ராஸ்தாகள் பூனே மற்றும் வாய் போன்ற இடங்களில் பல கோயில்கள், நதிகரையில் ஸ்நான கட்டம், அரண்மனைகளைக் கட்டினார்கள்.

அவர்களது குடும்ப வீடான "ராஸ்தா வாடா"வை நானாசாகேப்பின் மகன் தோரலே மாதவ்ராவ் என்பவரால் 1779 மற்றும் 1784 க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. ரஸ்தா பேட்டில் அமைந்துள்ள "ராஸ்தா வாடா" பூனேவில் மீதமுள்ள மிகப்பெரிய வாடாக்களில் ஒன்றாகும்.

ராஸ்தாகளின் ஒட்டக மற்றும் குதிரைப்படை

ஒட்டகங்கள் மற்றும் குதிரைகளை உள்ளடக்கிய படையை ராஸ்தாக்கள் பராமரித்து வந்தனர். அப்படையில் அனைத்து மதநம்பிக்கை உள்ளவர்களும் இருந்தனர். அப்படி இருந்த வீரர்களுக்கு வழிப்பாடிற்காக வழிபாட்டு தலங்கள் அமைக்க அவர்கள் அனுமதி அளித்தனர். அப்படி ராஸ்தா வாடா அருகே பல கோயில்கள் கட்டப்பட்டிருந்தாலும், படையினர் முகாமிட்டிருந்த இடங்களிலும் சில கோயில்கள் கட்டப்பட்டன.

லக்ஹெரி மாருதி மந்திர் சாலை:

ராஸ்தா வாடா அரண்மனையிலிருந்து மூன்று நிமிட நடைதூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இச்சாலையின் பெயரே லக்ஹெரி மாருதி கோயில் சாலை என்பதாகும். உன்டேட் மாருதி கோயில் பலருக்கும் தெரிந்தாலும், இந்த கோயில் உன்டேட் மாருதி கோயிலை விட பழமையானது. ராஸ்தா வாடா அரண்மனையிலிருந்து நேர் செங்குத்தாக நடந்து சென்றால் சர்தார் மூட்லியர் சாலையைக் கடந்ததும் [கூகிள் வரைபடத்தில் இது முதலியார் சாலை] ஒருவருக்கு லஹேரி மாருதி கோயில் சாலை கிடைக்கும். மூட்லியர்கள் புனேவின் பிரபலமான மக்கள் மற்றும் 1912 ஆம் ஆண்டில் கே.இ.எம். மருத்துவமனைக்கு நிலத்தை நன்கொடையாக வழங்கியவர் சர்தார் மூட்லியர்.

மாருதிக்கு மந்திர்:

லக்ஹெரி மாருதி மந்திர், ராஸ்தா பேட், பூனே ராஸ்தாகளின் படையின் குதிரைப்படை முகாம் ராஸ்தா வாடாவிலும் அதைச் சுற்றியும் முகாமிட்டிருந்தது. இன்றைய லக்ஹெரி மாருதி கோயில் சாலையில் முகாமிட்டிருந்த அத்தகைய ஒரு குதிரைப்படை ஸ்ரீ மாருதிக்கு அவர்களின் வழிபாட்டிற்காக ஒரு கோவிலைக் கட்டியிருந்தது. சில காலமாக இறைவனுக்கே நன்கு தெரிந்த காரணத்தினால் இறைவன் வழிபாட்டில் இல்லை. சிலை கைவிடப்பட்டு மறக்கப்பட்டது.

இது சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு சிலர் வளர்ந்து வரும் கல்லைக் கண்டார்கள் அதாவது இந்த இடத்தில் தரையில் இருந்து ஒரு கல் எழும்புவது என்று வேண்டுமாலும் கூறலாம். சந்தேகித்த நபர்கள் அந்த இடத்தை ஆய்வு செய்யத் தொடங்கினர். அவர்கள் அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்தபோது, ​​ஸ்ரீ மாருதியின் சிலையுடன் பெரிய அளவிலான செந்தூரமும், ருத்திராஷ மாலைகளும் மற்றும் துளசி மாலைகளும் கிடைத்தன. இந்த இடத்தில் ஸ்ரீ மாருதியை வழிபட்டு வந்த குதிரைப்படையினருக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில் ஸ்ரீ மாருதி அதே இடத்தில் புனர்பிரதிஷ்டை [மீண்டும் நிறுவுவது] செய்தனர். அப்போதிருந்து, தனது பக்தர்களை ஆசீர்வதிப்பதற்காக மீண்டும் தோன்றிய இந்த மாருதி ஏராளமான பக்தர்களை ஈர்த்து வருகிறார். இறைவன் பிரபலமாக லக்ஹெரி மாருதி என்று அழைக்கப்படுகிறார்.

லக்ஹெரி மாருதி மந்திர்:

இந்த கோயில் லக்ஹெரி மாருதி மந்திர் சாலை மற்றும் ரஸ்தா பேட்டில் உள்ள விட்டல்ராவ் கங்கல் சாலை சந்திக்கும் இடத்தில் நடுவே உள்ளது. இந்த கோயில் ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் உள்ளது. கோயிலின் நுழைவாயில் வடக்கு நோக்கி கோயிலின் பெயரை முகவரியுடன் அறிவிக்கும் பலகையுடன் உள்ளது. எட்டடிக்கு பத்தடி நீண்ட அறையில் நுழைந்து அடுத்தகா உள்ள பெரிய அறையை அடையலாம். இவ்வறைக்கு இரு பக்கவாட்டிலும் நுழைவாயில்கள் உள்ளன. ஒருபக்கம் கணபதியும் மறுபக்கம் பாண்டுரங்கர்-ரகுமாயி சன்னிதிகளும் எதிரில் முக்கிய சன்னிதியின் கர்பகிரஹத்தையும் காணலாம்.

பின்னர் எட்டுக்கு பத்து என்று பெரிய மண்டபம், அதன் நடுவில் அழகாக கட்டப்பட்ட மற்றொரு சிறு மண்டபம். இம்மண்டபத்திற்கு அழகிய விமானம் அமைக்கப்பட்டு ஸ்ரீ மாருதியின் மூர்த்தம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளர். சிறிய மண்டபத்தில் ஸ்ரீ மாருதி எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக அமைதியாக குடிக் கொண்டுள்ளார். அச்சிறிய மண்டபத்தின் முன்பாக சிறிய மேடையில் ஒரு மாருதியின் மூர்த்தத்தை காணலாம் இவரும் அமைதியே வடிவாக இருக்கிறார். .

முன்னால் காணப்படும் ஶ்ரீமாருதி தலத்தில் ஆவிர்பவித்தவர், பழமையானவர். மண்டபத்தில் காணப்படுபவர் பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இரண்டு மாருதிகளும் ஒரே பெயரில் “ஸ்ரீ லக்ஹெரி மாருதி” என்றே அழைக்கப்படுகிறார்கள்.

முதலாம் லக்ஹெரி மாருதி:

இந்த மூர்த்தம் பல ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட அதே இடத்தில் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மூர்த்தம் கடினமான கிரானைட்டால் ஆனது, சற்றே சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. ஸ்ரீ மாருதியின் மூர்த்தி சுமார் நான்கு அடி உயரம் கொண்டது. மூர்த்தம் 'அர்த்த சிலா' என்னும் புடைப்பு சித்திரம் வகையை ஒட்டியுள்ளது. ஸ்ரீ மாருதி வடக்கு நோக்கி நிற்கும் கோலத்தில் உள்ளார். அவரது இடது உயர்த்திய திருவடியின் கீழ் ஒரு அரக்கன் காணப்படுகிறான். சற்றே நளினமாக வளைந்துள்ள அவரது வலது கால், திருபாதங்கள் பூமியில் உறுதியாக இருக்கிறது. பிரபுவின் வால் உயர்ந்து அவருடைய தலையின் பின்னால் செல்கிறது. அவரது மடிந்த வலது திருக்கரத்தில் அவர் கதையை வைத்திருக்கிறார். அவரது இடது திருக்கரத்தில் அவர் சஞ்சீவி பர்வதத்தை வைத்திருக்கிறார். இறைவன் தலையில் கிரீடம் அணிந்திருப்பதைக் காணலாம். அவரது அழகிய வனப்பான முகம் அவரது பெயர் “சுந்தரம்” என்பதை பக்தர்களுக்கு நினைவூட்டுகிறது. அவரது பிரகாசமான ஒளிவீசும் கண்கள் அவரது பக்தர்களுக்கு ஆசீகள் பொழிகின்றன.

இரண்டாம் லக்ஹெரி மாருதி:

இறைவனின் மூர்த்தி முதலாம் லக்ஹெரி மாருதி இன் பின்னணியில், உயர்த்தப்பட்ட மேடையில் காணப்படுகிறது. பிற்கால பிரதிஷ்டையான மூர்த்தம் ஒரு முழு சிலை. ஸ்ரீ மாருதியின் மூர்த்தி சுமார் ஐந்து அடி உயரம் கொண்டது. இறைவன் நிற்கும் தோரணையில் காணப்படுகிறார். அவரது இடது உயர்த்திய திருவடியின் கீழ் ஒரு அரக்கன் காணப்படுகிறான். சற்றே நளினமாக வளைந்துள்ள அவரது வலது கால், திருபாதங்கள் பூமியில் உறுதியாக இருக்கிறது. பிரபுவின் வால் ஒரு முழு வட்டத்தை எடுத்து பின் அவரது தலைக்கு பின்னால் செல்கிறது. அவரது மடிந்த வலது திருக்கரத்தினால் இறைவன் "அபய முத்திரை" காண்பிக்கிறார், அவருடைய பக்தர்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை எபதை உணர்த்தும் வண்ணம். அவரது இடது திருக்கரத்தில் அவர் கதையை வைத்திருக்கிறார். இறைவன் தலையில் கிரீடம் அணிந்திருப்பதைக் காணலாம். இறைவனின் நேர்கொண்ட அழகிய முகம், அவர் ஏன் "சுந்தரம்" என்று அழைக்கப்படுகிறார் என்பதை அவருடைய பக்தர்களுக்கு நினைவூட்டுகிற வண்ணம் உள்ளது. அவரது பிரகாசமான கண்கள் அவரது பக்தர்கள் மீது அனைத்து ஆசீர்வாதங்களையும் பொழிகின்றன.

 

திருக்கோயில் இருப்பிடம் :     லக்ஹெரி மாருதி மந்திர், ராஸ்தா பேட், பூனே, மஹாராஷ்ட்ரா

 

அனுபவம்
ஒரு பக்தருக்கு நேர்மையான வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் இறைவனின் ஒளிரும் பிரகாசமான கண்கள் வழங்குகின்றன. இன்று பக்தருக்கு இது அதிகம் தேவைப்படுகிறது; எனவே இந்த க்ஷேத்திரத்தின் இறைவனின் நான்கு கண்கள் ஆசீர்வாதங்களை வழங்க காத்திருக்கின்றன. ஏன் காத்திருக்க வேண்டும்? வந்து ஆசீகளை அள்ளிச்செல்லுங்கள்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஜூன் 2020
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+