home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

ஹனுமந்தராயன் கோவில், கிழக்கு ஹனுமந்தராயன் கோவில் தெரு, மதுரை


ஹனுமந்தராயன் கோவில், கிழக்கு ஹனுமந்தராயன் கோவில் தெரு, மதுரை

ஜிகே கௌசிக்


மதுரை மகிமை

ஸ்ரீ மீனாட்சி கோயிலின் மேற்கு கோபுரம், மதுரை பாண்டிய வம்சத்தின் ஆட்சியில் இருந்த நாட்களில் இருந்தே மதுரை வரலாறு புகழ் பெற்ற ஊராக இருக்கிறது. மதுரை நகரம் பண்டைய காலங்களிலிருந்தே திட்டமிட்ட கட்டமைப்பு கொண்ட நகரமாக இருக்கிறது. மேலும் எந்த நவீன நகரம் திட்டமிட பட்டாலும் மதுரையின் கட்டமைப்பை முன் மாதரியாக கொண்டு திட்டமிடுவார்கள். இந்த நகரம் "தூங்கா நகரம்" என்று அழைக்கப்படுகிறது, அதாவது ஒருபோதும் தூங்காத நகரம். இந்த நகரம் ஸ்ரீ மீனாட்சி சுந்தேரேஸ்வரர் கோயிலுக்கும் அதன் மயக்கும் புகழ்பெற்ற கோயில் கோபுரங்களுக்கும் பிரபலமானது. மெட்ராஸ் அரசுக்கு (இப்போது தமிழ்நாடு அரசு) இலச்சினையை வடிவமைக்கும் பணியை ஒப்படைத்த மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸின் ஸ்ரீ ஆர். கிருஷ்ண ராவ், ஸ்ரீ மீனாட்சி கோயிலின் மேற்கு கோபுரத்தை மாதிரியாக தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமில்லை. (ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் என்றும் சில கூற்றுகள் உண்டு.)

கடந்த கால மதுரை

பாண்டியர்கள் மற்றும் சோழர்கள் பெரும் ஆட்சிக்குப் பிறகு, மதுரையை வடக்கிலிருந்து முஸ்லீம் அரசுகள் மூன்று முறை படையெடுக்கப்பட்டது. 1311 இல் மாலிக் காஃபூர் தலைமையிலான முதல் படையெடுப்பில் மதுரையின் செல்வத்தை கொள்ளையடிப்பது என்ற நோக்கத்தில் சூறையாடப்பட்டது. மதுரை அடையாளம் தெரியாத அளவுக்கு அழிக்கப்பட்டது. மாலிக் காஃபூர் படையெடுப்புப்பை தொடர்ந்து இரண்டு படையெடுப்புகள் நடந்தது. முதலாவதாக 1314ஆம் ஆண்டு குஸ்ரவ் கான் தலைமையிலும் பின் 1323 இல் இரண்டாவதாக தில்லி சுல்தானின் படைகள் உலுத் கான் தலைமையில் படியெடுத்தன. முந்தைய படையெடுப்பாளர்கள் கொள்ளையடிப்பதில் திருப்தியடைந்த நிலையில், உலுக் கான் படையெடுப்பு முந்தைய பாண்டிய ஆதிக்கத்தை தில்லி சுல்தானின் பகுதியாக (அதாவது அதிக்கத்தின் கீழ்) கொண்டுவந்தான். பின்னர் மதுரை, மதுரை சுல்தானகளின் கீழ் நாற்பத்து மூன்று ஆண்டுகள் இருந்தது. எட்டு வெவ்வேறு சுல்தான்கள் இக்காலத்தில் ஆட்சி புரிந்துள்ளனர்.

1336 ஆம் ஆண்டில் சங்கம வம்சத்தைச் சேர்ந்த முதலாம் ஹரிஹாராவும் அவரது சகோதரர் புக்கா ராயாவும் விஜயநகர பேரரசினை நிறுவினர்கள். விஜயநகர பேரரசின் எழுச்சியுடன் பல சுல்தான்களை அவர்களுக்கு கீழ் கொண்டு வந்தனர். முதலாம் புக்காக்கு அவரது மனைவி தேவாய் வழியாக குமார கம்பனா என்று மகன் இருந்தார், இவரை கம்பனா உடையார் என்றும் அழைக்கப்படுகிறார். குமார கம்பனா தனது தந்தையிடம் போர் பயிற்சி பெற்று விஜயநகர பேரரசில் இராணுவ அதிகாரியாக பணியாற்றி வந்தார். குமார கம்பனா தலமையில் விஜயநகர இராணுவம் 1378 இல் மதுரை மீது படையெடுத்தார். கடைசி மதுரை சுல்தான அலாவுத்-தின் சிக்கந்தர் ஷா தோற்கடிக்கப்பட்டார். இவ்வாறு சுல்தான்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, அப்பிரதேசங்களை விஜயநகர பேரரசு தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது.

அத்வைத தத்துவத்தை சார்ந்த ஞானி சிங்கேரியின் ஸ்ரீ சங்கராச்சாரியாரின் ஆலோசனையின் பேரில் விஜயநகர பேரரசு உருவானது. அதைத் தொடர்ந்து, இந்த பேரரசின் ஆட்சியாளர்கள் சமண மதத்தையும், த்வைத தத்துவத்தையும் ஆதரித்தனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த ராஜ்யத்தின் பேரரசர்களால் ஞானத்தையும் வலிமையையும் தைரியத்தையும் வழங்கக்கூடிய தெய்வமாக ஸ்ரீ ஹனுமான் கருதப்பட்டார். வரலாற்றின் இந்த கட்டத்தில், ஸ்ரீ ஹனுமான் வழிபாடு ஒரு தேவையாகிவிட்டது. இவ்வாறு விஜயநகர சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிகள் எங்கு ஆட்சி செய்தாலும், அங்கு ஸ்ரீ அனுமனின் வழிபாடு காணப்பட்டது.

ஸ்ரீ வியாச ராஜா மற்றும் ஸ்ரீ ஹனுமான்

மேற்கண்ட விதிக்கு விதிவிலக்கு இல்லாமல், மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அனுமன் சுவாமியாக மட்டுமே கோயில்கள் இருந்தன. விஜயநகர சாம்ராஜ்யத்திற்கு ராஜ குருவாக இருந்த ஸ்ரீ வியாசராஜா அவர்கள் ஸ்ரீ மாதவ சம்பிரதாயம் மற்றும் த்வைத தத்துவத்தினை பின்பற்றுபவர். மாதவர்கள் ஸ்ரீ ஹரி [ஸ்ரீ விஷ்ணு] மற்றும் முக்யப்பிராணா [ஸ்ரீ ஹனுமான்] ஆகியோரை தங்கள் பிரதான வழிபாட்டு தெய்வமாக கருதுபவர்கள். விஜயநகரத்தில் சுலுவ வம்சத்திலிருந்து துலுவ வம்சம் வரை பாதுகாப்பு மாற்றம் ஏற்பட்டது, ஆனால் ஸ்ரீ வியாசராஜா தொடர்ந்து பேரரசின் ராஜ குருவாக இருந்தார். அவர் துலுவ பேரரசர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் உயிரைக் காப்பாற்றினார் என்பது பரவலாக அறியப்படுகிறது.

ஸ்ரீ வியாசராஜர் ஸ்ரீ ஹனுமனின் சிறந்த பக்தர்; மெத்தப் படித்த இந்த குரு, ஸ்ரீ ஹனுமனுக்காக பல கோயில்களைக் கட்டியிருந்தார். மக்கள் தைரியமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டியது அந்தக் காலத்தின் அவசியமாக இருந்தது; ஸ்ரீ ஹனுமான் இந்த குணங்களில் சிறந்தவர் எனவே அவரை வழிபட்டால் மக்கள் தைரியமாக இருப்பார்கள் என்று அவர் கோயில்களை நிறுவினார். பல இடத்தில் மாதவ தத்துவத்தைப் பின்பற்றுபற்றுபவர்களுடன் சென்று த்வைத தத்துவத்தைப் பரப்பும் பணியைத் தொடர்ந்தார்.

மதுரையும் ஸ்ரீ கிருஷ்ணதேவராயரும்

1378 ஆம் ஆண்டு மதுரை சுல்தானேட்டை அகற்றுவதன் மூலம் ஸ்ரீ குமார கம்பண்ணா மதுரைக்கு அமைதியைக் கொண்டுவந்த போதிலும், அதிகாரத்திற்கான மோதல் போட்டி தொடர்ந்தது. ஆனால், விஜயநகரத்தின் பெரும் பேரரசர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் ஆட்சியின் போதுதான் நீடித்த அமைதி இறுதியாக மதுரைக்கு வந்தமைந்தது.

விஜயநகரத்தின் பாதுகாப்பில் இருந்த பாண்டியரகளை சூறையாடிய வீரசேகர சோழனை தண்டிக்க, விஜயநகரத்தின் பேரரசர் கிருஷ்ணதேவராயர், தனது தளபதி நாகம நாயக்கை மதுரைக்கு அனுப்பினார். சோழனை தோற்கடித்த நாகமா, மதுரை தமக்கு சொந்தம் என்று அறிவித்தார். அதிர்ச்சியுற்ற கிருஷ்ணதேவராயர் நாகம நாயக்கின் மகன் விஸ்வநாத நாயக்கின் தலைமையில் படையை அனுப்பினார். விஸ்வநாத நாயக் தனது தந்தையை அரச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தனது நேர்மையை நிருப்பித்தார். அவரது விசுவாசத்திற்கான வெகுமதியாக 1530 ஆம் ஆண்டில் விஸ்வநாத நாயக் மதுரை ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார். விஸ்வநாத நாயக்கும் அவரது மகன் கிருஷ்ணப்ப நாயக்கும் 1565 வரை விஜயநகரத்தில் வந்த அடுத்தடுத்த ராயாக்களை ஆதரித்தனர், அதன்பின்னர் கிருஷ்ணப்ப நாயக் தனது தந்தையின் உதவியுடன் ஒரு சுயாதீன மதுரை இராச்சியத்தை அமைத்தார். இவ்வாறு மதுரை நாயக்கின் வம்சம் 1530 முதல் தொடங்கியது.

மாத்வர்கள் குடியேற்றம்.

ஸ்ரீ மாதவச்சார்யாவின் த்வைத தத்துவத்தைப் பின்பற்றுபவர்களான மாதவாக்கள், ஸ்ரீ ஹரி [ஸ்ரீ விஷ்ணு] மற்றும் முக்யபிராணா [ஸ்ரீ ஹனுமான்] ஆகியோரை அவர்களின் பிரதான வழிபாட்டு தெய்வங்களாக போற்றினர். மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் பல மாதவ குடியேற்றங்கள் உள்ளன, குறிப்பாக இவர்கள் ஸ்ரீ ஹனுமாருக்கான கோயில்கள் கட்டியுள்ளார்கள். ஸ்ரீ ஹனுமாருக்கு கோயில்களுக்குச் செல்லாமல் தங்கள் உணவை எடுத்துக் கொள்ளாத பல மாத்வர்கள் உள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை ஹனுமார் தான் அவர்கள் தலைவர் அதாவது ராயா. எனவே அவர்கள் ஸ்ரீ அஞ்சநேயர் / ஸ்ரீ ஹனுமான் ஆகியோரை ஸ்ரீ ஹனுமந்தராய என்று அழைக்கிறார்கள். அத்தகைய ஒரு குடியேற்றமும் அவர்களின் கோயிலும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் மேற்கு கோபுரத்திற்கு அருகில் உள்ளது.

கோயிலின் "ஹனுமந்தராயன் கோவில் தெரு” என்ற பெயர்க் கொண்டு இரண்டு தெருக்கள் உள்ளன, அவை கோயில் இருக்கும் தெரு “கிழக்கு ஹனுமந்தராயன் கோவில் தெரு” என்றும், கோயிலுக்கு மேற்கே உள்ள தெரு “மேற்கு ஹனுமந்தாராயன் கோவில் தெரு” என்றும் அழைக்கப்படுகிறது.

ஹனுமந்தராயன் கோவில்

ஹனுமாருக்கான கோயில் கிழக்கு ஹனுமந்தாராயன் கோவில் தெருவில் அமைந்துள்ளது. நேதாஜி சாலை ஓரத்தில் இருந்து ஒருவர் வருவதால் கோயில் இடது பக்கத்தில் உள்ளது. கோயிலுக்குள் நுழை வாயில் கடைகளின் வரிசைக்கு இடையில் உள்ளது. கோபுரம் இல்லை, ஆனால் கட்டிடத்தின் மேற்புறத்தில் உள்ள அலங்கார வளைவும் அதில் ஶ்ரீராம பரிவாரத்தின் புடைப்பு சித்திரமும் கோயிலின் நுழைவாயிலை அறிவிக்கிறது. அலங்கார வளைவுக்குள் இருக்கும் புடைப்பு சித்திரத்தில் ஸ்ரீ ராமர் ஸ்ரீ சீதாதேவியுடன் ஒரு அரச இருக்கையில் அமர்ந்திருக்கிறார். அவர்களுக்கு பின்னால் ஸ்ரீ லட்சுமணர், ஸ்ரீ பாரத, ஸ்ரீ சத்ருகுணா, ஸ்ரீ விபீஷணன் நிற்கிறார்கள் மற்றும் ஸ்ரீ ஹனுமார் ஸ்ரீ ராமரின் தாமரை கால்களுக்கு அருகில் அமர்ந்திருக்கிறார்கள். ஸ்ரீ வியாசர் ஸ்ரீ ராமருக்கு அருகில் அமர்ந்திருப்பதைக் காணலாம். வளைவுக்கு வெளியே இடது புறம் ஸ்ரீ பீமனும் வலதுபுறம் ஸ்ரீ ஹனுமாரும் உள்ளனர்.

ஸ்ரீ ஹனுமார், ஸ்ரீ பீமா, மற்றும் ஸ்ரீ வியாசர் ஆகியோர் வளைவில் காட்டப்பட்டிருந்தார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த கோயில் மாத்வ சம்பிரதாயத்தின் படி பராமரிக்கப்படுகிறது என்பதற்கான அறிகுறியாகும்.

இந்த கோயில் சுமார் முந்நூற்று ஐம்பது ஆண்டுகள் பழமையானது, அந்த நாட்களில் மதுரையின் உள்ளூர் மாத்வ சமூகத்தின் நலனுக்காக கோயிலின் தற்போதைய பண்டிதரின் மூதாதயர்களால் நிறுவப்பட்டது.

ஹனுமந்தராயன்

இந்த க்ஷேத்திரத்தின் இறைவன் வடக்கு நோக்கி இருக்கிறார். மூர்த்தம் சுமார் மூன்றரை அடி உயரம் கொண்டது. இறைவன் ஒரு மல் யுத்ததிற்கு தயாராகி வருபவர் போல் இருப்பதைக் காணலாம். அவரது தண்டை அணிந்த திருப்பாதம் நகரத் தயாராக உள்ளது போல் இருக்கிறது. அவரது வலது முழங்காலுக்கு அருகில் அவர் ஒரு ஆபரணம் அணிந்துள்ளார். அவரது திருகரங்களின் மணிக்கட்டில் கங்கணம் மற்றும் மேல்கையில் கேயூரம் அணிந்திருக்கிறார். அவரது இடது திருக்கரம் சற்று மடித்து இடது தொடையில் வைத்துள்ளார். அதே நேரத்தில் கதாயுதத்தையும் பிடித்திருப்பதையும் காணலாம். அவரது வலது திருகரம் எதிரிகளை குத்தத் தயாராக இருப்பது போல, முஷ்டியை மடித்து உயர்த்தியிருப்பதைக் காணலாம். அவரது வால் அவரது வலது கையின் பின்புறத்தில் உயர்ந்து, தலைக்கு மேலே சென்று ஒரு வளைவை எடுக்கிறது. மேலும் வால் முடிவில் அழகாக கட்டப்பட்ட சிறிய மணி உள்ளது. இறைவனின் வால் மற்றும் வலது திருக்கரத்தையும் சேர்த்து பார்க்கையில் தேவநாகரியில் ஒரு பிரணவ அக்ஷரமான "ஓம்" வடிவத்தை உருவெடுப்பதை காணலாம். இறைவன் தனது கழுத்துக்கு அருகில் ஒரு ஆபரணத்தையும் மூன்று மாலாக்களையும் அணிந்துள்ளார், அவற்றில் ஒன்று பதக்கத்தைக் கொண்டுள்ளது. இறைவனின் முகம் பக்தர்களின் பார்வையை ஈர்க்கிறது. அவர் காதில் குண்டலம் அணிந்துள்ளார், அது நீளமாக தோள்களைத் தொடுகிறது. அவரது தலையில் இருக்கும் சிறிய கிரீடம் பிரபுவிற்கு அழகு சேர்க்கிறது. பிரபு நேர் பார்வை கொண்டுள்ளார், அதனால் அவரது கண்கள் பக்தத்களை நேரடியாக ஆசீர்வதிக்கின்றன.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஹனுமந்தராயன் கோவில், மதுரை

 

அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தின் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி பக்தர்களின் வாழ்க்கையில் உள்ள அனைத்து முரண்பாடுகளையும் மல்யுத்தம் செய்வதற்கான சக்தியை அளிக்கிறார். இப்பிரபுவின் தர்சனம் பக்தர் எதிர்கொள்ளும் எந்தவொரு சிரமத்தையும் எதிர்கொள்ள தைரியத்தையும் சக்தியையும் தருவது உறுதி.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஜூன் 2020
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+