home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ சீதாரம்பாக் கோயில், மல்லே பள்ளி நாம்பள்ளி, ஹைதராபாத்


ஹனுமான் கோயில், ஸ்ரீ சீதாரம்பாக் கோயில், மல்லே பள்ளி நாம்பள்ளி, ஹைதராபாத்

ஸ்ரீ கே.எச்.ராவ், ஹைதராபாத்


ஹைதராபாத்

தற்போது தெலுங்கானாவின் தலைநகராக உள்ள ஹைதராபாத் முதலில் ஐக்கிய ஆந்திராவின் தலைநகராக இருந்தது, . ஹைதராபாத்தின் சார்மினார் மற்றும் ஹைதராபத் நிஜாமின் ஆபரண புதையல்/நிதி அனேகமாக பலருக்கும் தெரிந்ததே. ஹைதராபாத் சுதேச அரசு முஸ்லிம் நிஜாமால் ஆளப்பட்டது. 1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ​​மற்ற எல்லா சுதேச மாநிலங்களையும் போலவே, ஹைதராபாத் மாநிலத்திற்கும் இந்தியாவின் டொமினியனில் சேருவதற்கான அழைப்பு விடப்பட்டது. ஹைதராபாத் நிஜாம் இந்தியாவில் சேர தயங்கினார்.

இந்த போராட்டத்தின் போது ரசாக்கர் என அழைக்கப்படும் ஒரு தனியார் போராளி படை காசிம் ராஸ்வி என்பவரால் நிருவப்பட்டது. நிஜாம் ஒஸ்மான் அலிகான், அசாஃப் ஜா VII இன் ஆட்சிக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்ட இவர்கள், ஹைதராபாத் மாநிலத்தை இந்தியாவின் ஆதிக்கத்துடன் இணைப்பதை எதிர்த்தார். இறுதியில் ஹைதராபாத்தின் நிஜாம் மற்றும் காசிம் ரஸ்வியின் ரசாக்கர்கள் ஆகியோருக்கு எதிரான சுருக்கமான “போலிஸ் நடவடிக்கைக்கு” ​​பின்னர், ஹைதராபாத் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியது.

அப்பொழுதைய ஹைதராபாத்

ரசாக்கர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஹைதராபாத் மக்கள் பின்னர் ஒற்றுமையாக வாழ்ந்தனர். தற்போதைய பழைய நகரத்தில் உள்ள பல பழைய கோயில்கள் மற்றும் மடங்கள் இதற்கு உறுதிசெய்கிறது. அத்தகைய ஒரு கோயில் ஹைதராபாத்தில் நாம்பள்ளி மங்கள்ஹாட்டில் அமைந்துள்ள ஸ்ரீ சீதாராம் கோயில். இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் துவங்கப்பட்டது. இந்த கோயிலின் நிறுவனர் வடஇந்தியாவிலிருந்து வந்து இந்த கோயிலை ஹைதராபாத்தில் நிறுவியுள்ளார் என்பது சுவாரஸ்யமான செய்தி.

ஸ்ரீ பூரண்மல்ஜி கனேரிவால்

அஜ்மீரில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ராஜஸ்தானில் கனேரி என்ற கிராமத்திலிருந்து ஸ்ரீ பூரண்மல்ஜி கனேரிவால் ஹைதராபாத் வந்தார். அடிப்படையில் கனேரி கிராமவாசிகள் வர்த்தகம் மற்றும் நிதி கொடுக்கல் வாங்கல் தொழிலில் ஈடுபடுபவர்கள். ஸ்ரீ பூரண்மல்ஜி ஹைதராபாத் வர்த்தகம் செய்ய வந்திருந்தார். காலப்போக்கில் அவர் நிஜாமுடன் தொடர்பு கொண்டார். நிஜாமின் நம்பிக்கையைப் பெற்ற அவரை மாநில நிதி நிர்வகிப்பதில் நிஜாம் ஈடுபடுத்தினார். பல வருவாய் அதிகாரிகளிடமிருந்து மீட்கப்படாத பணம் ஸ்ரீ பூரண்மல்ஜியின் திறமையான நிர்வாகத்தால் மீட்கப்பட்டது. இந்நிதி மீட்ப்பு பணிக்கு இவரது மகன் ஸ்ரீ பிரேம் சுக்தாஸ்ஜி உதவி புரிந்தார்.

ஸ்ரீ சீதாராம் மந்திர்

ஸ்ரீராமகோடி ஸ்தூபம், ஸ்ரீ சீதாரம்பாக் கோயில், மல்லே பள்ளி, நாம்பள்ளி, மெஹதிபட்டிணம் அருகே, ஹைதராபாத் பூரண்மல்ஜி ஒரு ராம பக்தர். அவர் ஶ்ரீசீதாராமருக்காக 1832 ஆம் ஆண்டு "சபுத்ரா" என்று வழங்கபடும் நான்கு தூண்களுடன் அழகிய கூரையுடன் கூடிய ஆலங்கார மேடையைக் கட்டினார். அவர் மல்லேப்பள்ளி கிராமத்தில் இதை கட்டினார். முந்தைய மல்லேப்பள்ளி கிராமம், இப்போது ஹைதராபாத்தின் ஒரு பகுதியாகி விட்டது. அப்போதைய நிஜாம் இங்கு வருகை தந்தார். பூரண்மல்ஜி அவருக்காக ஒரு சிறிய விழாவை ஏற்பாடு செய்து பரிசுகள் [நஸ்ரானா] வழங்கினார். பதிலுக்கு நிஜாம் பூரண்மல்ஜிக்கு ஒரு ஜாகீரையே கொடுத்தார். கோயிலை பராமரிக்கும் செலவுகளை கவனித்துக்கொள்வதற்காக ’பெராரி’ல் (இப்போது விதர்பாவில்) இரண்டு கிராமங்களின் வருவாய் வழங்கப்பட்டது.

ஸ்ரீ சீதாராம்ஜி மந்திரிரும் அதன் நிர்வாகமும்

பூரண்மல்ஜி கனேரிவால் ராமானுஜ வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர். அவர் ஸ்ரீ பிரதிவாடி பயங்கர் மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ அனந்தாச்சார்யா அவர்களை குருவாக வரித்திருந்தார். அம்மடத்தின் கொள்கைகளை பின்பற்றும் சீடராகவும் இருந்தார். எனவே அவர்களின் பாரம்பரியத்தைப் பின்பற்றி ஸ்ரீ சீதாராம் மந்திரில் பூஜைகள் நாரத பஞ்சராத்திரத்தில் விதிக்கப்பட்டுள்ளபடி நடத்தப்படுகின்றன. அவர் வேதங்கள், சமஸ்கிருதம் மற்றும் உபநிஷதங்கள், இதிஹாசாங்கள் போன்றவற்றைப் பற்றிய அறிவை வழங்கும் “வேத வேதாந்த வர்தனி பாடசாலை” என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். பல ஆண்டுகளாக இந்த நிறுவனம் உஸ்மானியா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது மற்றும் “ஓரியண்டல் மொழிகளில்” டிப்ளோமா வழங்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் நிர்வாகம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திரடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சீதாராம்பாக் கோயில் மற்றும் வளாகம்

சீதாராம்பாக் கோயில் இருப்பத்தந்து ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ளது மற்றும் முழு வளாகமும் இருபத்தைந்து அடி உயர சுவரால் பாதுகாக்கப்படுகிறது, இது கோயிலுக்கு ஒரு கோட்டையின் தோற்றத்தை அளிக்கிறது. அந்த நாட்களில் ரசாக்கர்களிடமிருந்து வந்த தாக்குதலின் போது இது ஒரு பாதுகாப்பு கட்டமைப்பாக செயல்பட்டது. இந்த வளாகத்திற்கு மூன்று நுழைவாயில்கள் உள்ளன, நுழைவாயில்கள் அளவிலும் பாணியிலும் பிரமிக்கும் படி கட்டப்பட்டுள்ளன, அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு பாணியில் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கோவிலில் படி கிணறுகள் ஆறு உள்ளன, அவற்றில் ஒன்று உபயோகத்தில் உள்ளது. கோயிலைச் சுற்றி மூன்று மசூதிகள் உள்ளன. இந்த வளாகத்தில் ஒரு பழைய குதுப் ஷாஹி மசூதியும் அருகிலேயே படி கிணறும் உள்ளது, அதன் அருகே பூரண்மல்ஜி கோயில் வளாகத்தை கட்டினார். மந்திர் மற்றும் மசூதி இரண்டும் ஒரே படி கிணற்றிலிருந்து தண்ணீரைப் பயன்படுத்துகின்றன.

பிரதான கருவறையில் பூஜிக்கப்படும் சீதா மற்றும் ராம சிலைகள் பளிங்கினால் செய்யப்பட்டது. இந்த சன்னிதியின் முகப்பில் ஒரு அழகான வண்ணமயமான புடைப்பு கலைப் படைப்பு உள்ளது, இது ஸ்ரீ ராமரை தரிசனம் செய்வதற்கு முன்பு பக்தரின் சிந்தனையை மயக்கி மனதினை சாந்த நிலைக்குக் கொண்டு வரும். பிரதான கருவறைக்கு எதிரே உள்ள தனி சன்னிதியில் ஸ்ரீ கருடர் மற்றும் ஸ்ரீ அஞ்சநேயர் உள்ளர். இதற்கு எதிர் கல்யாண மண்டபம். ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ சீதா-ராம கல்யாணம் செய்யப்படுகிறது.

சுதர்சன புஷ்காரிணி, ஸ்ரீ சீதாரம்பாக் கோயில், மல்லே பள்ளி, நாம்பள்ளி, மெஹ்தி பட்டிணம் அருகே, ஹைதராபாத் ஸ்ரீ வரதராஜசாமி, லட்சுமணன், கோதா [ஆண்டாள்], விநாயகர், மகாதேவர், சதுர்பூஜ மாதாஜி போன்றவற்றுக்கு வெவ்வேறு சன்னிதிகள் உள்ளன. இந்த கோவிலில் காணப்படும் பல்வேறு செயல்பாடுகளுக்கு சுக்ரவர மண்டபம், முக மண்டபம், வைகுண்ட மண்டபம், கல்யாண மண்டபம் என பல மண்டபங்கள் உள்ளன. இந்த சன்னிதிகளின் மற்றும் மண்டபகளின் கட்டடக்கலை பாணிகள் வித்தியாசமாக இருப்பதால் இவைகள் பல்வேறு சமயங்களில் கட்டப்பட்டுள்ளன என்பது தெரிகிறது.

நுழைவாயில்கள் மற்றும் சன்னிதிகள் வெவ்வேறு புடைப்பு சித்திரங்களால் அலங்காரங்கரிக்கப் பட்டுள்ளது, மேலும் கைவண்ண ஓவியங்களும் சுவாரஸ்யமாக உள்ளன. இவை அனைத்தும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்கப்படுகின்றது. இவை எல்லாம் பார்க்கும் பொழுது இக்கோயில் பல விருதுகளை வென்றதில் ஆச்சரியமில்லை.

இந்த கோயில் ஹைதராபாத் நகர அபிவிருத்தி ஆணையம் (ஹுடா) - கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை (இன்டாக்) விருதை 2001 ஆம் ஆண்டு வென்றது. முழு கோயிலும் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தினால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வளாகத்தில் உள்ள ஸ்ரீ ஹனுமான் கோயில்

இந்த வளாகத்தில் ஸ்ரீ அனுமனுக்கு ஒரு தனி கோயில் உள்ளது. இந்த கோயில் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. பிரதான நுழைவாயில் வழியாக ஒருவர் நுழையும் போது, ​​முதலில் பார்ப்பது ஸ்ரீராமகோதி ஸ்தூபம் என்று அழைக்கப்படும் பெரிய சதுர வடிவமுடைய தூண். ஒரு கோடி ராம நாம இங்கே ஸ்தூபத்தில் வைக்கப்பட்டுள்ளது. இடதுபுறத்தில் ஸ்ரீ சீதாராம் மந்திரின் பிரதான நுழைவாயில் உள்ளது. ஸ்தூபத்தின் மறுபுறத்தில் படி கிணறு ஒன்றைக் காணலாம் - இந்த புஸ்கர்ணி சுதர்ஷன் புஸ்கர்ணி என்று அழைக்கப்படுகிறது. படிக்கிணற்றை கடந்துச் செல்லுங்கள், பாதையின் முடிவில் ஸ்ரீ அனுமன் கோயிலுக்கு அழைத்துச் செல்லும் அலங்கார நுழைவு வளைவினை காணலாம்.

ஸ்ரீ ஹனுமனுக்கான கோயில் மிகவும் பெரியது. பத்து சதுர அடி இருக்கும் கர்பகிரஹம். கர்பகிரஹத்தை சுற்றி ஐந்து அடி பாதை உள்ளது. கர்பகிரஹத்தின் மேல் சுமார் பத்து அடி உயரமுள்ள விமானம் கோயிலின் கிரீடம் போன்று தெரிகிறது. விமானத்தின் கிழக்கில் அபய ஹனுமான், தெற்கில் வீர ஹனுமான், மேற்கில் பக்த ஹனுமான் மற்றும் வடக்கில் தாச ஹனுமான் சுதை சிற்பங்களைக் காணலாம்.

மீண்டும் தோன்றிய ஸ்ரீ ஹனுமானைப் பற்றிய குறிப்பு

அனுமன் கோயில், ஸ்ரீ சீதாரம்பாக் கோயில், மல்லே பள்ளி, நாம்பள்ளி, மெஹ்திபட்டிணம் அருகே, ஹைதராபாத் சீதாராம் கோயிலின் 185 ஆம் ஆண்டு கொண்டாட்டத்திற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டில் புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீ அனுமன் கோயிலும் புதுப்பிக்கப்பட்டு வந்தது. கர்பகிரஹத்தையும் மூலவரையும் புதுப்பிக்கும் போது, ​​ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அந்த நேரத்தில் வழிபாட்டில் இருந்த ஸ்ரீ ஹனுமான் முழங்கால் வரை மட்டுமே காணப்பட்டார். பாரம்பரியத்தின் படி, மூலவரை சுத்தம் செய்வதற்கு சியக்காய், ரீட்டா, மோர், தயிர், முல்தானி மிட்டி [முல்தான் மண்] ஆகியவற்றால் செய்யப்பட்ட செறிவூட்டப்பட்ட திரவத்தினை ஊறவைத்த நனைத்த தேங்காய் நார் உதவியுடன் சுத்தம் செய்வது வழக்கம். அப்படி ஸ்ரீ அனுமனின் சிலையை சுத்தம் செய்யும் போது, ​​முழு திரவமும் சிலையை ஒட்டி இருந்த விரிசல் வழியாக செல்வதைக் காண முடிந்தது. மெதுவாக ஆராய்ந்தபோது, தரையில் கீழே பாதி சிலை இருப்பதைக் காண முடிந்தது. சிலையைச் சுற்றியுள்ள இடத்தினை அகழாய்வு செய்து பார்த்தபோது, தெய்வத்தின் முழு சிலையும் காண எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இறுதியாக அது 6.5 அடி உயரமும், 4 அடி அகலமும், 3.5 அடி பருமனும் கொண்ட ஹனுமாரின் அற்புதமான சிலை வெளிப்பட்டது. சிலையை பூமி மட்டத்திற்கு மேல் அதே இடத்தில் வைக்கப்பட்டு புனார்-பிரதிஷ்டை மார்ச் 4, 2015 அன்று செய்யப்பட்டது.

ஸ்ரீ சீதாரம்பாக் மந்திரின் ஸ்ரீ ஹனுமான்

ஸ்ரீ சீதாரம்பாக்கின் பிரபு ஸ்ரீ அஞ்சநேய சுவாமியின் சிலை நடைக்கும் தோரணையில் கடினமான கிரானைட் கல்லில் வடிக்கப்பட்டுள்ளார். புடைப்பு சிலை வகையைச் சேர்ந்தது இச்சிலை. சிலை வடிக்கப்பட்டுள்ள கல்லில் சங்கு வலது மூலையிலும், சக்ரம் இடது மூலையிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

பிரபு தெற்கு நோக்கி நடந்து செல்வது போல் காணப்படுகிறார். நூபுரம் மற்றும் தாண்டை அணிந்த அவரது இடது தாமரை திருப்பாதம் பூமியிலிருந்து சற்றே தூக்கிய நிலையிலுள்ளது. அவரது இரு திருக்கரங்களில் மணிக்கட்டில் கங்கணமும் மோல்-கையில் கேயுரமும் அலங்கரிக்கின்றன. அவரது உள்ளங்கைகள் இரண்டும் இணைக்கப்பட்டு வந்திக்கும் தோரணையைக் காட்டுகின்றன. அவர் பதக்கத்துடன் கூடிய மாலை அணிந்துள்ளார். பிரபுவின் வால் அவரது தலைக்கு மேலே உயர்ந்து, ஒரு அழகிய வளைவுடன் முடிகிறது. பிரபுவின் காதில் அணிந்திருக்கும் குண்டலம் அவரது தோள்களைத் தொடுகிறது. அவரது கேசத்தை அழகாக பிணைந்து குடுமி கட்டியுள்ளார். இது அவருக்கு மேலும் அழகை சேர்க்கிறது. அவரது கண்கள் மிகவும் கவர்ச்சிகரமாகவும், காந்தமானதாகவும் உள்ளன. பிரபுவின் கண்களைப் பார்க்கும்போது பக்தர் அமைதியையும் அமைதியையும் தனது எண்ணங்களையும் இதயத்தையும் சூழ்ந்திருப்பதை உணர முடியும்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஸ்ரீ சீதாரம்பாக் கோயில், மல்லே பள்ளி, நாம்பள்ளி, ஹைதராபாத்

 

அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தின் ஸ்ரீ ஹனுமான் முழுமையாக வெளிப்பட்டு, பக்தராக ஸ்ரீ சீதாராமரை தியானிக்கிறார் என்பது நாம் நமது ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்க்கவும், வீரியத்துடன் உன்னத ஆத்மாவாக இருக்கவும் நமக்கு சக்தியைத் தருவார் என்பது உறுதி.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: மே 2020
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+