home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

பல ஹனுமார் கோயில்கள் கட்டிய மகான் ஶ்ரீவியாசராயர், ஶ்ரீகிருஷ்ணதேவராயர் சபையில் இருப்பது போன்ற ஒவியம்


ஶ்ரீமுக்யப்ராணா திருக்கோயில், மேயர் சிட்டிபாபு சாலை, திருவல்லிக்கேணி, சென்னை

ஜீகே கௌசிக்


வடக்கு திருவல்லிக்கேணி

சுமார் ஐம்பத்திஐந்து ஆண்டுகளுக்கு முன், அறுபதுகளின் முன்பகுதியில் நான் வாலிபனாக இருந்தபொழுது, மட்ராஸ் [தற்போதய சென்னை] முழுவதும் சைகளில் சென்று வருவது வழக்கம். "அம்மா" என்று அப்பொழுது ஒரு சிறுவர் பத்திரிக்கை வெளி வந்துக்கொண்டிருந்தது, அந்த பத்திரிக்கை அலுவலத்திற்கு அடிக்கடி செல்வது வழக்கம். ’ஸ்டார்’ தியேட்டருக்கும் எதிரில் செல்லும் சுபத்ராள் தெருவில் அப்பத்திரிக்கையில் அலுவலகம் இருந்தது. "மட்ராஸ் ஸ்கூல் ஆப் ஆர்ட்" டில் ஓவியம் கற்ற திரு எம். வெங்கடேசன் அவர்கள் அப்பத்திரிக்கையின் ஆசிரியர். எனது கட்டுரையோ அல்லது கதையோ அப்பத்திரிக்கையில் வெளிவரும் என்ற ஆசையில் அங்கு செல்வது வழக்கம். திரு வெங்கடேசன் அவர்கள் அங்கேயே ஒரு பிரிண்டிங் பிரஸும் நடத்தி வந்தார்.

பத்திரிக்கை அலுவலகம் ஒரு பஜனை மண்டபத்திற்கு அடுத்து இருந்தது. எல்லா செவ்வாய் கிழமைகளிலும், வியாழகிழமைகளிலும் பஜனை வெகு ஜோராக நடக்கும். வயதில் அதிகம் வித்யாசம் இருந்தாலும், நாளடைவில் ஆசிரியர் எனக்கு நண்பனாகினார் [இருந்தும் எனது ஒரு கதையும் அம்மா இல் பிரசுரமாகவில்லை என்பது வேறு விஷயம்]. திருவல்லிக்கேணிக்கு எப்பொழுது சென்றாலும், ஹனுமந்தராயன் கோயில் தெருவில் உள்ள ஹனுமார் கோயிலுக்கு செல்வது என் வழக்கம். திரு வெங்கடேசன் அவர்கள் ஒரு நாள் "நமது அலுவலத்திற்கு அருகிலேயே ஒரு ஹனுமார் கோயில் இருக்கிறதே" என்று விவரம் கூறினார்.

சுபத்ராள் தெரு அருகில் ஹனுமார் திருக்கோயில்

ஶ்ரீமுக்யப்ராணா திருக்கோயில், மேயர் சிட்டிபாபு சாலை, திருவல்லிக்கேணி, சென்னை அவர் கூறிய இடம் மூன்று நிமிட நடையில் அடைந்து விடலாம். ஹனுமந்தராயர் கோயில் தெருவில் இருப்பதுப் போல் இங்கும் கோயில் சிறிதாக இருந்தது, ஆனால் மிகவும் பெரிய வளாகத்தினுள் இருந்தது. கோயில் என்பது ஒரு கர்ப்பகிரஹமும் சிறு முன் மண்டபமும் தான், இது தெருவை ஒட்டியே இருந்தது. கோயில் வளாகம் பெரிதான துளசி வனத்துடன், அர்ச்சகருக்கான சிறிய குடிலுடனும் இருந்தது. பெரிய அகலாமான கிணறு, கோயிலையும் அர்ச்சகர் வீட்டையும் பிரித்தது. அருகிலேயே ஒரு சிறிய கிணரும் இருந்தது. அருகிலிருக்கும் மக்கள் கிணற்றிலிருந்து நீர் எடுத்துச் செல்ல வந்தவண்ணம் இருந்தனர்.

மாலை வேளை ஆனாதால் அர்ச்சகர் கோயில் கதவுகளை திறந்தார். நான் ஸ்லோகம் சொல்லிக்கொண்டே கோயிலை பிரதக்ஷணம் செய்தேன். பின்பு அர்ச்சகர் தீர்த்தமும், மந்திராக்ஷதையும் கொடுத்தார். என்னை பற்றி விசாரித்தார், விவரங்கள் கூறினேன். நான்கு தலைமுறைகளுக்கு முன் ராமேஸ்வரம் தீர்த்த யாத்திரையிலிருந்து திரும்பும் பொழுது இங்கு முக்கிய ப்ராணரை இவர்களின் மூதாதயர்கள் பிரதிஷ்டை செய்தார்கள் என்றும், இவர் ஐந்தாவது தலைமுறை என்றும் கூறினார். இக்கிணற்றின் நீர் அமிர்தம் போல் இனிமையாக இருப்பதால் மக்கள் இக்கிணற்று நீரை எடுத்துச் செல்வதாக கூறினார்.

கிணற்று நீரின் மகிமையும் முக்கிய ப்ராணரின் கருணையும்

இந்த முக்கிய ப்ராணரை பூஜித்து வந்த இவரின் மூதாதர்களில் ஒருவர் திருவேணி சங்கமத்திற்கும், பத்திரிநாத்-ற்கும் யாத்திரை செய்ய விரும்பினார். ஆனால் இறைவனுக்கே தெரிந்த காரணத்தினால் அவரின் விருப்பம் பூர்த்தியாகவில்லை. ஓர் இரவு அவர் தினம் வழிபடும் முக்கிய ப்ராணர் கனவில் வந்து, இங்கிருக்கும் கிணற்று நீரில் குளித்தாலே, திரிவேணி சங்கமத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளில் குளித்த பலன் உண்டு என்று கூறி அருளினார். அவரின் நீண்ட நாள் தாபம் அன்று தீர்ந்தது. யாத்திரா பலன் அனைத்தும் கிடைத்ததை அவர் உணர்ந்தார்.

ஶ்ரீமுக்யப்ராணா சன்னிதி, மேயர் சிட்டிபாபு சாலை, திருவல்லிக்கேணி, சென்னை நான் சுபத்திராள் தெரு பிரஸ்க்கு செல்லும் போதெல்லாம் இக்கோயிலுக்கு போவதை வழக்கமாக கொண்டேன். அக்கிணற்று நீரை ப்ரோக்ஷணம் செய்தும் கொள்வேன். "அம்மா" பத்திரிக்கை வெளியீடு நின்ற பின் எனது இக்கோயில் வருகையும் நின்று விட்டது.

எனது சமீபத்திய விஜயம்

சமீபத்தில் நான் சென்னை [அந்நாள் மதராஸ்] சென்றிருந்தேன். இம்முறை சுபத்ராள் தெரு, ஹனுமார் திருக்கோயில் எல்லவற்றையும் பார்க்க வேண்டும். ஐம்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு பின் நான் அதே வழியில் முதலில் சுபத்ராள் தெருவில் நுழைந்தேன். முன்பு பஜனை மடமாக இருந்தது இராஜ கோபுரத்துடன் கூடிய கோயிலாக மாறியிருந்தது. ஆனால் "அம்மா" சிறுவர் பத்திரிக்கை வெளியீட்டு அலுவலம் இருந்த வீடு அப்படியே அதே தாழ்வான கூறையுடன் சற்றும் மாறாமல் இருந்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

இந்த ஆச்சரியத்திலிருந்து மீண்டு, ஹனுமார் கோயிலை நோக்கி நகர்ந்தேன். கோயிலுள்ள தெருவிற்கு ’மேயர் சிட்டி பாபு தெரு’ என்று பெயர் மாற்றியுள்ளனர். துலைவிலிருந்தே மூன்று அடுக்கு ராஜ கோபுரம் கோயிலை தெரிவிக்கிறது, முன்பு கோபுரம் கிடையாது. கோயிலுக்கு நான் முன்பு நுழையும் வாயில் தற்பொழுது உபயோகத்தில் இல்லை. அக்கம்பக்கம் மக்கள் கிணற்று நீர் எடுக்க வரும் நுழைவாயிலை பெரிது படுத்தி ராஜ கோபுரம் எழுப்பியுள்ளார்கள். ராஜ கோபுரம் வழியாக நுழைந்தால் பெரிய முகப்புக் கூடம். கர்ப்பகிரஹம் இடபுறம் உள்ளது. கர்ப்பகிரஹம் புதிப்பிக்கப்பட்டுள்ளது. விமானம் சற்றே பெரிதாக காணப்படுகிறது.

தற்பொழுதிய திருக்கோயில்

ராஜ கோபுரத்தின் வழி நுழைந்தால், இடது புறம் கர்ப்பகிரஹத்தின் பின்புறம் தெரியும். மதில் சுவற்றை ஒட்டி வந்தால் கர்ப்பகிரஹத்தின் முன் வரலாம் இறைவனை தரிசிக்கலாம். முன்பு கூறிய கிணறுகள் மூடப்பட்டு விட்டன. அவ்விடம் முழுவதும் பெரிய கூடமாக உள்ளது. பல ஹனுமார் கோயில்கள் கட்டிய மகான் ஶ்ரீவியாசராயர், ஶ்ரீகிருஷ்ணதேவராயர் சபையில் இருப்பது போன்ற பெரிய ஒவியம் மேற்கு சுவரில் இருக்கிறது. மிகவும் அழகிய ஶ்ரீராம பரிவார சுதை சிற்பம் வடக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. அருகிலேயே ஶ்ரீராகவேந்திர குருவின் சுதை சிற்பமும் காணப்படுகிறது. ராஜ கோபுரத்தின் வழியாக நுழைந்தால் இந்த இரு சுதை சிற்பங்களும் நம்மை வரவேற்கும்.

ஆல மரத்தடி ஶ்ரீமுக்யப்ராணா, மேயர் சிட்டிபாபு சாலை, திருவல்லிக்கேணி, சென்னை தென்கிழக்கு பகுதியில் பெரிய ஆல மரம் உள்ளது, அதன் அடியில் பல நாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்மரத்தின் கீழ் கிழக்கு நோக்கி ஶ்ரீஹனுமாரின் விக்கிரஹம் உள்ளது. இவ்விக்கிரஹம் கோயிலின் மூலவரை ஒத்ததாக காணப்படுகிறது, ஆனால் சற்று பெரியதாக உள்ளது. ஆல மரதடியில் உள்ள ஹனுமாரை பல பக்தர்கள் தாங்களே சிந்தூரம் தடவி வழிபடுகிறார்கள்.

ஶ்ரீமுக்கிய ப்ராணா

கர்பகிரஹத்தில் உள்ள மூலவர் இரண்டடி உயரமுள்ள மேடையில் நின்ற கோலமாக இருக்கிறார். ஶ்ரீராமர் பரிவாரத்துடன் மூலவருக்கு மேல் காணப்படுகிறார். உத்ஸவ மூர்த்தியும் அங்கு காணப்படுகிறது.

கனமான கருங்கல்லில் வடிக்கப்பட்ட சுமார் இரண்டடி உயரமுள்ளது மூலவர் விக்ரஹம் புடைப்பு சிற்பமாக படைக்கப்பட்டுள்ளது. தண்டையும், நூபூரமும் அணிந்துள்ள அவரது திருவடிகள் வடக்கு நோக்கி நடப்பது போல் இருக்கிறது. அவரது வலது தாமரை திருவடிகள் பூமியிலிருந்து சற்றே உயர்ந்து காணப்படுகிறது. இடது இடையில் ஊனியிருக்கும் கங்கணம் அணிந்திருக்கும் இடது திருக்கரங்களில் அவர் ’சௌகந்திகா’ புஷ்பத்தின் தண்டினை பிடித்துள்ளார். மலர்ந்து இருக்கும் புஷ்பம் அவரது இடது தோள்பட்டையில் மேல் பகுதியில் காணப்படுகிறது. மார்பினை பல விதமான மணிமாலைகள் அலங்கரிக்கின்றன. அவரது கங்கணம் அணிந்திருக்கும் வலது திருக்கரம் பக்தர்களுக்கு ஆசிகள் வழங்குகிறது. காதுகளை குண்டங்கள் அலங்கரிக்கின்றன. அவது கேசம் அழகாக சீவி முடிக்கப்பட்டுள்ளது. வளைந்த நுனியில் மணியுடன் காணப்படும் வால் உயந்து தலையின் மேல் காணப்படுகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஶ்ரீமுக்யப்ராணா திருக்கோயில், மேயர் சிட்டிபாபு சாலை, சென்னை

 

அனுபவம்
பிரகாசிக்கும் கண்களில் அன்பும் கருணையும் பொங்கி நிற்கிறது. பிரியமாக அவர் தன் ஆசிகளை பொழிவதை பத்தர்கள் தாங்களை தழுவும் ஆறுதலால் உணரமுடியும்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: நவம்பர் 2019
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+