home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

ஸ்ரீ சீதாராம அஞ்சநேயர் கோயில், சந்தப்பேட்டை, குடியாத்தம், வேலூர் மாவட்டம். தமிழ்நாடு


ஸ்ரீ சீதாராம அஞ்சநேயர் கோயில், சந்தப்பேட்டை, குடியாத்தம், வேலூர் மாவட்டம். தமிழ்நாடு

ஜீகே கௌசிக்


குடியாத்தம்

தீப ஸ்தம்பம், ஸ்ரீ சீதாராம அஞ்சநேயர் கோயில், சந்தப்பேட்டை, குடியாத்தம், வேலூர் மாவட்டம். தமிழ்நாடு வேலூர் நகரத்திலிருந்து சுமார் முப்பது கிலோமீட்டர் தொலைவில் வேலூர் மாவட்டத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. இது வேலூர் மாவட்டத்தின் வரலாற்று மிகு நகரமாகும். நவீன வரலாற்றில் இது மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது, இந்தியா சுதந்திரம் அடைந்து முதல் முதல் செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் மூவர்ண இந்திய தேசக்கொடி இந்ந ஊரில் நெய்யப்பட்டது என்பது சரித்திரம்.

இந்த ஊரில் பழங்கால கோவில்கள் உள்ளன. குடியாத்தத்தில் நெல்லூர்பேட்டையில் ஒரு பழங்கால சிவன் கோயில் உள்ளது. ஸ்ரீ கருப்புலீஸ்வரர் இந்த கோயிலின் பிரதான தெய்வம். இந்த கோயில் அதன் புகழ்பெற்ற தேர் திருவிழாவின் போது அருகிலுள்ள நகரங்களிலிருந்து ஏராளமான பக்தர்களை ஈர்க்கிறது. இவ்விடத்தில் தங்கி பிரபல முனிவர் கௌண்டன்ய ரிஷி அவர்கள் தவம் செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. நகரத்தின் வழியாக செல்லும் நதி அவரது பெயரில் “கௌண்டன்ய நதி” என்று அழைக்கப்படுகிறது.

நகரத்தின் வரலாறு

இந்த இடம் முதலாம் குலோத்துங்கனில் தொடங்கி ‘பிற்கால சோழர்’ வழிதோன்றல்களின் கீழ் ஒரு சம்புவராயர்கள் ஆட்சியில் இருந்தது. இந்த நகரத்திற்கு மன்னர் “குடியேற்ற-நல்லூர்” என்று பெயரிட்டார், அதாவது இந்த இடம் குடியேற சிறந்தது. உள்ளூர் தலைவர்கள் சோழ சம்புவராயர்கள் என்று அழைக்கப்பட்டனர். வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் தொண்டைமண்டலத்தின் வடக்குப் பகுதியானவை ‘பிற்கால சோழர்களின்’ கீழ் இருந்தன.

கருப்புலீஸ்வரர் கோவிலில் காணப்படும் கல்வெட்டின் படி, கோவில் பராமரிப்பிற்காகவும், விளக்குகளுக்கு எண்ணெய் வாங்குவதற்காகவும் முதலாம் குலோத்துங்க மன்னர் 90 ஆடுகளை நன்கொடையாக வழங்கியிருந்தார். குடியாத்தியத்தில் அமைந்துள்ள இந்த பழங்கால கோயில் நல்லூர் (மாற்றுப்பெயர்) “ஜெயம்கொண்டா சதுர்வேதி மங்களம்” என்ற இடத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே தொண்டை மண்டல பிராந்தியங்களின் வெற்றியைத் தொடர்ந்து இந்த நகரம் முதலாம் குலோத்துங்கனால் நிறுவப்பட்டது என்று கூறலாம். பண்டைய “நல்லூரில்” அமைந்துள்ள கருப்புலீஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதி இப்போது நல்லூர்-பெயர் மருவி நெல்லூர் பேட்டை என்று அழைக்கப்படுகிறது.

ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேயர் கோயில், சந்தப்பேட்டை

ஸ்ரீ சீதாராம அஞ்சநேயர் கோயில், சந்தப்பேட்டை, குடியாத்தம், வேலூர் மாவட்டம். தமிழ்நாடு முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்ட ஸ்ரீ கருப்புலீஸ்வரர் கோயில், பின்பு வந்த விஜயநகர மன்னர்களால் மாற்றியமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. கோயில் தொல்லியல் சான்றுகளை காண்கையில் இது சோழர் மற்றும் விஜயநகர ஆட்சியாளர்களின் ஆதரவின் கீழ் இருந்து இருக்கிறது என்பது விளங்குகிறது.

கௌண்டன்ய ஆற்றின் கரையில் உள்ள இந்த கருப்புலீஸ்வரர் கோயிலிலிருந்து வெகு அருகாமையில், ஸ்ரீ ராமருக்கு மற்றொரு புகழ்பெற்ற கோயில் உள்ளது. அருள்மிகு ஶ்ரீசீதாராம ஆஞ்சநேய சுவாமி கோயில் சந்தப்பேட்டையில் உள்ள கருப்புலீஸ்வரர் கோயிலுக்கு கிழக்கே அமைந்துள்ளது.

சம்புவராயர்கள் மற்றும் விஜயநகர் ஆட்சியாளர்கள் ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆகியோரிடம் அன்பும் பக்தியும் கொண்டவர்கள் என்பது மிகவும் பிரசுத்தம். இந்த ஊர் சம்புவராயர்கள் அல்லது விஜயநகரின் ஆட்சியில் கீழ் இருந்தபோது இந்த கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று சுலபமாக ஊகிக்க முடியும். கருடன் சன்னிதிக்கு முன்னால் உள்ள தூண்கள் மற்றும் விளக்கு இடுகை போன்ற தொல்பொருள் சான்றுகள் இதை உறுதிப்படுத்துகின்றன.

ஸ்ரீ ராமபரிவாரம்

ராஜகோபுரத்திலிருந்து கோயிலுக்குள் நுழையும் போது ஒரு பரந்த பெரிய மண்டபம் காணப்படுகிறது. மண்டபத்திற்கு முன்னால் விளக்கு கல் தூண், பாலி பீடம், பின்னர் ஸ்ரீ கருடாள்வாருக்கு ஒரு சிறிய சன்னிதி உள்ளது. பதினாறு தூண் பிரதான மண்டபம் கடினமான கிரானைட் கல்லால் ஆனது. அர்த்த மண்டபம் அடுத்ததாக காணப்படுகிறது, இந்த மண்டபத்திலிருந்து ஒருவர் பிரதான கருவறையில் ஸ்ரீ ராமரையும் மற்றும் அவரது பரிவாரத்தினையும் அதே சமயம் பக்கவாட்டில் உள்ள கருவறையில் ஸ்ரீ ஆஞ்சநேயையும் தரிசிக்கலாம்.

இந்த கோயிலின் பிரதான கருவறை கிழக்கு நோக்கி உள்ளது. பிரதான கருவறையுல் ஸ்ரீ ராமர் ஸ்ரீ சீதா மற்றும் லட்சுமணருடன் காணப்படுகிறார். கோயிலின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், கும்ப மகர ஆகிய இரண்டு மாதங்களில் கருவறைக்குள் சூரிய கதிர்கள் ராமர் மீது விழுகின்றது.

ஸ்ரீ அஞ்சநேயருக்கு தனி சன்னிதி

ஸ்ரீ அஞ்சநேயர் சன்னிதி விமானம், ஸ்ரீ சீதாராம அஞ்சநேயர் கோயில், சந்தப்பேட்டை, குடியாத்தம், வேலூர் மாவட்டம். தமிழ்நாடு ஸ்ரீ ராமரின் கருவறைக்கு இடது பக்கத்தில், ஸ்ரீ அனுமனுக்கு தனி சன்னிதி உள்ளது. இந்த கருவறை தெற்கு நோக்கி உள்ளது. ஸ்ரீ ஹனுமனின் சிலை சுமார் ஆறரை அடி உயரமும் நான்கு அடி அகலமும் அலங்கார வளைவுடனும் ஒரே கல்லில் காணப்படுகிறது. ஸ்ரீ ஹனுமனின் இத்தகைய அளவு மூர்த்தம்; ஸ்ரீ ஹனுமனுக்கான தனி சன்னிதி; கல் ‘பிரபாவலி’- தெய்வத்திற்கான அலங்கார வளைவு - இவை அனைத்தும் சம்புவராயங்கள் அல்லது விஜயநகர் ஆட்சியின் போது இந்த கோயில் இருந்ததை மேலும் உறுதிப்படுத்துகிறது.

துணுக்கு

பிரிட்டிஷ் காலத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியாளர் நோய்வாய்ப்பட்டார். அவர் இந்த கோயிலுக்கு வருகை தந்து, ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ ஹனுமான் ஆகியோரிடம் தனது நோயைக் குணப்படுத்த பிரார்த்தனை செய்தார். பிராத்தனை பலித்து அவர் நோயிலிருந்து குணமானார். நன்றிகடனாக அருகிலுள்ள பசுமாதூர் கிராமத்திலிருந்து வரி வருவாயில் ஒரு பகுதியை இந்த கோவிலுக்கு வழங்குமாறு அவர் உத்தரவிட்டார். இன்றும் கோயிலுக்கு கிராமத்திலிருந்து வரி வருவாயில் ஒரு பகுதி கிடைக்கிறது.

சமீபத்தில் ராஜகோபுரம் புனரமைத்தல், திருமண மண்டபம், சமையலறை மற்றும் தியான மண்டபம், ஊஞ்ஜல் மண்டபம் அகியவை கட்டி முடிக்கப்பட்டது.

திருவிழாக்கள்

ஒவ்வொரு அமாவாசை நாளிலும் உற்சவர் கோவிலுக்குள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறார். ஸ்ரீ ராம நவாமி, வைகுண்ட ஏகாதேசி, ஹனுமத் ஜெயந்தி ஆகியவை அனைத்தும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. இந்த கோயிலின் ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தியின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், ஸ்ரீராமர், ஸ்ரீசீதா அமர்ந்திருக்கும் ஊஞ்சலை ஸ்ரீஆஞ்சநேயர் ஆட்டுவார்.

ஸ்ரீ அஞ்சநேயர்

இந்த க்ஷேத்திரத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி தெய்வ மூர்த்தம் சுமார் ஆறரை அடி உயரமும் கடினமான கிரானைட் கல்லால் ஆனது. இவர் தெற்கு நோக்கி உள்ளார். மற்ற க்ஷேத்திரங்களைப் போலல்லாமல் ஆஞ்சநேயர் சிலை ஒரு முழுமையான சிலை. அலங்கார வளைவும் இறைவனுக்கு பின்னால் காணப்படுகிறது.

ஆஞ்சநேயர் பக்கவாட்டில் இல்லாமல் நேர் முகமாக இருக்கிறார். அவருடைய முழு முகமும் காணப்படுகிறது. அவர் ஒரு ‘யதுர் முகி’ என்பதால், இறைவனின் கண்கள் பக்தர்களுக்கு நேரடியாக ஆசீர்வாதம் அளிக்கின்றன. அவரது தாமரை பாதங்கள் நுபுரம் மற்றும் தண்டை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இறைவன் கிழக்கு நோக்கி நகரத் தயாராக உள்ளது போல், இடது தாமரைபாதம் கிழக்கு நோக்கியும் மற்றும் சற்று வளைந்த வலது தாமரைதிருப்பாதமும் மிகவும் அழகாக இருக்கிறது. அலங்கரிக்கப்பட்ட அவரது இடது திருக்கை இடது இடுப்பில் ஊன்றி சௌகந்திகா பூஷ்பத்தின் தண்டினைப் பிடிப்பதைக் காணலாம். அவரது இடது தோள்பட்டைக்கு மேலே இம்மலர் காணப்படுகிறது. அவரது மார்பு பகுதியில் பல ஆபரணங்களை அணிந்துள்ளார். அவரது உயர்ந்து காணப்படும் வலது கையால் ‘அபய முத்திரை’ காட்டி, தனது பக்தர்களுக்கு ஆசீர்வாதங்களை பொழிகிறார். அவரது தலைக்கு மேலே உயர்த்து, இறைவனின் வால் ஒரு வளைந்த முனையுடன் அதில் ஒரு சிறிய அழகிய மணியுடனும் காணப்படுகிறது. இறைவன் தனது தோள்களைத் தொடும் குண்டலங்களை அணிந்துள்ளார். அவரது கேசம் அழகாக கட்டப்பட்டுள்ளது. அவரது கண்கள் பக்தர் மீது கருணையை பொழிகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஸ்ரீ சீதாராம அஞ்சநேயர் கோயில், குடியாத்தம், தமிழ்நாடு

 

அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தின் இறைவன் தோற்றத்தில் பக்தர்கள் கண்கவர் வண்ணமுள்ளது. அவர் தனது பிரகாசமான ஒளிரும் நேரான கண்களால் பக்தருக்கு அச்சமற்ற தன்மையையும் நேர்மையுடனும் அனைத்து தயவையும் அளிக்கிறார்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: அக்டோபர் 2019
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+