ஶ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், உசிலம்பட்டி சாலை
திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு

ஜீகே கௌசிக்

 

ஶ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், உசிலம்பட்டி சாலை திருமங்கலம், மதுரை, தமிழ்நாடுதிருமங்கலம்
மதுரை மாநகரத்திலிருந்து இருபத்தி ஐந்து கி.மீ, தொலைவில் உள்ளது திருமங்கலம். இங்கு கிடைத்திருக்கும் கல்வெட்டுகள் அடிப்படையில் இவ்விடம் பாண்டியர்கள் காலத்திலிருந்து செயலில் இருந்தது என்று கூறலாம். மதுரை நாயக்கர்கள் காலத்தில் குண்டாற்றில் பல கால்வாய்கள் கட்டபட்டு இவ்விடம் விவசாயத்தால் செழிப்பாக இருந்தது. இந்த இடத்தின் வளர்ச்சிக்கு ஆங்கிலேயர்களும் பங்களித்திருந்தனர். வைகை நதி வெள்ளம் வருவதால், மதுரைக்கு தென் பகுதி மக்கட்களுக்கென திருமங்கலத்தில் நீதிமன்றம் அமைத்தது இவர்கள் காலத்தில். அப்படி அமைக்கப்பட்ட மன்றத்தில் தான் கட்டபொம்மனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

ஶ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், உசிலம்பட்டி சாலை திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு

திருமங்கலம் பெயர் காரணம்
மதுரையில் அன்னை மீனாட்சி சிவபிரான் அவர்கள் திருமணத்திற்கு பலமான ஏற்பாடுகள் நடந்துக்கொண்டு இருந்தன. அக்காட்சியை கண்டு களிக்க தேவர்கள் பலரும் மதுரை வந்திருந்தனர், திருகல்யாணத்திற்கு திருமாங்கல்யம் செய்ய ஏற்பாடு நடந்தது. திருமாங்கல்யம் செய்ய பொன்‍உருக்கும் முன் அவர்கள் சிவபிரானை வேண்டினார்கள். அவரும் அன்னை பார்வதியுடன் காட்சிக் கொடுத்தார். இந்த தலத்தில் அவர்கள் தேவர்களுக்கு காட்சி கொடுத்தமையால் ஈசன் சுந்தரேசன் என்றும் அன்னை மீனாட்சி என்றும் திருநாமம் கொண்டு அருள்பாலிக்கிறார்கள். அன்னை மீனாட்சிக்கு திருமாங்கல்யம் இத்தலத்தில் செய்யப்பட்டதால் "திருமாங்கல்யபுரம்" என்று அழைக்கப்பட்டு, மறுவி திருமங்கலம் என அழைக்கபடுகிறது.

குண்டாறு
திருமங்கலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களின் பொருளாதாரம் அவர்கள் விளைவிக்கும் விவசாய பொருட்களை அடிப்படையாக கொண்டுள்ளது. விவசாயதிற்கான நீர் குண்டாற்றில் இருந்து பெறுகிறார்கள். குண்டாறு (குண்டு+ஆறு) பருவ கால ஆறுகளுள் ஒன்றாகும். தேனி மாவட்டதில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத் தெடரில் அமைந்துள்ள, ஆண்டிபட்டி மலையின் மலைச் சிகரங்களிலிருந்து வரும் ஓடைகளில் இருந்து குண்டாறு உருவாகின்றது. இவ் ஆறானது உருவாகும் பகுதி மேல் குண்டாறு எனவும், வங்கக் கடலில் கலக்கும் பகுதி கீழ் குண்டாறு எனவும் அழைக்கப்படுகின்றது. 

குண்டாறானது மதுரை, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாகச் சென்று தெற்கு மூக்கையூர் அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கின்றது. இதன் நீளம் 146 கி.மீ ஆகும். இதன் முக்கிய துணை ஆறுகளாக தெற்காறு காணல் ஓடை கிருதுமால் நதி மற்றும் பரலை ஆறுகள் ஆகும். குண்டாறானது ஒரு பருவ கால ஆறாகும். 

இந்த நதி திருமங்கலத்துக்குள் மேற்கிலிருந்து நுழைந்து தெற்கு நோக்கி திரும்புகிறது. திருமங்கலத்தில் நதி இரண்டு பகுதிகளாகப் பிரிந்து பின் இணையாக ஓடுகிறது, இதனால் ஒரு தீவு உருவாகிறது. இந்த தீவில் ஆற்றின் தெற்கு நோக்கிய வளைவுக்கு அருகில் ஒரு சிறிய கோயில் உள்ளது. ஆற்றின் கிழக்குக் கரையில் ஒரு பாலம் உள்ளது, இதன் மூலம் இந்த கோவிலுக்கு ஒருவர் வரலாம். 

இந்த கோயில் எதைப் பற்றியது என்று பார்ப்போமா?

ஶ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், உசிலம்பட்டி சாலை திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு

திருமங்கலத்தின் சுருக்கமான வரலாறு
மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் 1529 முதல் 1736 வரை மதுரை நாயக்கர்களால் ஆளப்பட்டன. நாயக்கர்களில், திருமலை நாயக்கர் [1623-1659] மற்றும் ராணி மங்கம்மா [1689-1706] ஆகியோர் மிகவும் பிரபலமானவர்கள், மேலும் நிர்வாகத்திலும், மக்களுக்கான நல திட்டங்களிலும் பல சீர்திருத்தங்களைச் செய்தனர். மத ஒற்றுமைபாட்டிற்காகவும் மற்றும் மேம்பாட்டிற்காகவும் இருவரும் அளித்த பங்களிப்பு மகத்தானது. ராமேஸ்வரம் வரை நெடுஞ்சாலை சாலைகளை கட்டியதற்காக ராணி மங்கம்மா நன்கு அறியப்பட்டவர். "சத்ரம்" என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை ஓய்வு இல்லங்களும் பல இவர் காலத்தில் கட்டப்பட்டன. 

மதுரை பற்றி 1906 இல் வெளியிடப்பட்ட அரசிதழின் படி, திருமங்கலத்தில் நகரா மண்டபம் [நகரா என்பது முரசு] இருப்பதைப் பற்றி ஒரு குறிப்பு உள்ளது. திருமலை நாயக்கன் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரையில் உள்ள அவரது அரண்மனை வரை சாலையோரம் நிறுவிய ஒரு தொடர் நகரா மண்டபத்தில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது, மேலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கோயிலில் கடவுளுக்கு உணவு படைத்த பின் தான் தனது உணவை சாப்பிடுவார் திருமலை நாயக்கர். அங்கு இறைவனுக்கு உணவு படைக்கப்பட்டதை தெரிவிக்க வரிசையாக முரசுகள் கொட்டப்படும், மதுரையில் உள்ள முரசு கொட்டிய பின் இவர் உணவு உட்கொள்ளுவார்.  

எனவே திருமலை நாயக்கர்கள் காலத்திலும் திருமங்கலத்திற்கு முக்கியத்வம் இருந்ததைக் காணலாம். மதுரை நாயக்கர்களின் ஆட்சியின் முடிவில் [சுமார் 1735ம் ஆண்டு], இவர்கள் ஆட்சி இருந்த எல்லா இடங்களிலும் குழப்பம் ஏற்பட்டது, மேலும் பாளையகாரர்கள் என்று அழைக்கப்படும் உள்ளூர் தலைவர்கள் சக்திவாய்ந்தவர்களாகிவிட்டனர். அதன் பின் பாளயகாரர்கள் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை செலுத்தினர். அப்படி பாளயங்கள் தனியாக இயங்கிய காலத்தில் அந்த அந்த பாளயங்களில் பல கோயில்களும் உருவாயின. 

திருமங்கலம் இதற்கு விதி விலக்கில்லை. அந்த நேரத்தில் திருமங்கலத்திலும் சில புதிய கோயில்கள் கட்டப்பட்டன, இதுபோன்று கட்டப்பட்ட ஒரு கோயில் ஸ்ரீ ஹனுமர் கோயில்.

ஸ்ரீ அனுமர் கோயிலின் தல வரலாறு
அனுமனுக்கான இந்த கோயில் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவானது என்று நம்பப்படுகிறது. இந்த கோயிலுக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் தனிநபர்களால் செய்யப்பட்ட சில நன்கொடைகள் இக்கோயிலுக்கு உள்ளன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இறைவனுக்கான வெள்ளி கவசம் சில பக்தர்களால் வழங்கப்பட்டது என்று கூறப்படுகிறது. எனவே இந்த கோவிலுக்கு குறைந்தது இருநூற்று ஐம்பது ஆண்டுகள் பழமையானது என்று கூறலாம். இந்த கோவிலில் உள்ள பூஜைகள் மத்வா சம்பிரதாயத்திற்கு ஏற்ப நடத்தப்பட்டன. சில ஆண்டுகளாக கோயிலில் தினசரி பூஜைகள் தடங்கல் பட்டு இருந்தது மற்றும் பண்டிகைகளின் போது மட்டுமே பூஜைகள் நடத்தப்பட்டன. 

சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, சில பக்தர்கள் ஒன்று கூடி, சிருங்கேரியின் ஸ்ரீ சங்கராச்சாரியாரின் ஆசீர்வாதங்களுடன் ஒரு சங்கத்தை உருவாக்கினர். ஆசாரியர் அவர்களின் ஆசீர்வாதத்துடன் அவர்கள் கோயிலை மேம்படுத்தும் பணியைத் தொடங்கினர். இறைவன் தனது பக்தர்களை மீண்டும் உயிர்ப்பிக்கவும் ஆசீர்வதிக்கவும் விரும்பியபோது, ​​பக்தர்கள் வீரியத்துடனும் பக்தியுடனும் பணியாற்றுவதை எதுவும் தடுக்கவில்லை. அம்முயற்சியின் விளைவே நாம் இன்று காணும் திருக்கோயில். இன்று இந்த கோவிலில் சுற்று சுவர், கம்பீரமான மூன்று அடுக்கு ராஜகோபுரம் மற்றும் ஸ்ரீராம பரிவருக்கு ஒரு தனி சன்னிதி என்று பல உள்ளது. 

இந்த க்ஷேத்திரத்தின் இறைவன் பக்தர்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுகிறார் என்ற நம்பிக்கை என்பதால் இவருக்கு பக்தர்கள் நிறைந்திருக்கிறார்கள். இன்று பக்தர்கள் சனிக்கிழமைகளில் கோயிலுக்கு வருகிறார்கள், குறிப்பாக அமாவாசை நாளில் பல பக்தர்கள் கோவிலுக்கு வருகிறார்கள்.  

ஶ்ரீ ஆஞ்சநேயர், உசிலம்பட்டி சாலை திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு

திருக்கோயில் இன்று
கிழக்கு நோக்கிய கோவிலில் மூன்று அடுக்கு ராஜ கோபுரம் உள்ளது, ஶ்ரீஅஞ்சநேயர் சன்னிதி தான் முக்கிய ஈர்ப்பு என்றாலும் அருகிலேயே ஸ்ரீ சீதா மற்றும் ஸ்ரீ லட்சுமணருடன் ஸ்ரீ ராமருக்கு ஒரு சன்னிதியும் உள்ளது. தவிர ஸ்ரீ வல்லப கணபதி, ஸ்ரீ வல்லி மற்றும் ஶ்ரீதெய்வானை ஆகியோருடன் கூடிய ஶ்ரீமுருகன், ஸ்ரீ மணிகண்டன், ஸ்ரீ லட்சுமி நரசிம்ஹர் ஆகியோருக்கு அருகிலேயே தனி தனி சன்னிதிகள் உள்ளன. 

பக்தர்கள் கர்பகிரகத்தைச் சுற்றி வந்து வழிபடுவதற்கு பெரிய அகலமான பிராகரம் உள்ளது.

ஸ்ரீ அஞ்சநேயர்
ஸ்ரீ ஆஞ்சநேயரின் சுமார் நான்கு அடி உயரம் கொண்ட மூர்த்தம் கிழக்கு நோக்கி உள்ளது. இந்த க்ஷேத்திரத்தின் ஸ்ரீ ஆஞ்சநேயர் கைகளை கூப்பிக் கொண்டு நிற்கிறார். ஶ்ரீஅனுமார் மிகவும் எளிமையாக, ஸ்ரீ ராம பக்தராகக் காணப்படுகிறார். இவரை காண்கையில் பக்தர்களுக்கு இறைவன்பால் இருக்கும் பக்தியைத் தூண்டுகிறது. ஶ்ரீஅனுமாரின் திருகரங்களை கங்கணம் கேயூரம் ஆகியவை அலங்கரிக்கிறது. இவரது அழகிய மார்பினை அலங்கரிக்கும் ஆபரணங்கள் அவருக்கு மேலும் அழகு சேர்கிறது. அவரது தாமரை பாதங்கள் தண்டை, மற்றும் நூபூரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீஅனுமாரின் தலை வரை உயர்ந்து இறுதியில் ஒரு வளைவுடன் உள்ள வால் முதுகுபுறம் இருப்பதால் நம்மால் காணமுடியாது. ஆனால் வளைந்த வாலின் முனையில் சிறிய மணியுடன் அவரது இடது தோள்பட்டைக்கு அருகில் நம்மால் காண முடிகிறது. காதுகளை குண்டலங்கள் அலங்கரிக்கின்றன. மற்றும் ஒரு அழகான அலங்கார கிரீடம் அவரது தலைக்கு மேல் காணப்படுகிறது. அவரது நேர்கொண்ட பார்வை பக்தியால் நிரம்பி, பக்தருக்கு ஆசீர்வாதம் கொடுக்க கத்திருக்கிறது.

 

அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தின் இறைவனின் பிரகாசமான மற்றும் ஒளிரும் கண்கள் அவரது கருணையை பக்தர்களுக்கு அளிக்கின்றன. நமது நேர்மையான பிரார்த்தனைகளுக்கு நிச்சயமாக பதில் கிடைக்கும் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம் என்பதை நாம் இங்கு உணரமுடியும்.

தமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி
ஆகஸ்ட் 2019

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.

 


காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே