home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் வளாகம், பெரக் தெரு, ஏழு கிணறு, ஜார்ஜ் டவுன், சென்னை


ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், பெரக் தெரு, ஏழு கிணறு, ஜார்ஜ் டவுன், சென்னை

ஜீ கே கௌசிக்


ஆங்கிலேயர்கள் உருவாக்கிய மதராஸ்

அப்பொழுது போர்ச்சுகியர்கள், டச்சுகாரர்கள் இந்தியாவில் வியாபாரம் செய்துக் கொண்டிருந்தனர். அவர்கள் மசூலிப்பட்டிணத்திலிருந்து பெரிய அளவில் வியாபாரம் நடத்தி வந்து கொண்டிருந்த சமயம் ஆங்கிலேயர்கள் வியாபார நோக்குடன் வர எத்தனித்தனர். மஸ்லின் துணிகளும் மற்ற துணிகளும் ஐரோப்பியர்களுக்கு வியாபார பொருட்களாக இருந்தது. ஆங்கிலேயர்கள் மசூலிப்பட்டிணத்திற்கு மாற்றாக வேறு எங்காவது கடலோர பகுதியில் தகுந்த இடத்தை தேடினர். பதினேழாம் நூற்றாண்டின் முன் பகுதியில் பவழ கடற்கரையை நோட்டம் விட்டனர்.

முதலில் ஆங்கிலேயர்கள் புலிகாட் ஏரியின் வடஎல்லையிலுள்ள தற்பொழுது ஆந்திர மாநிலத்திலுள்ள ஆர்மகொன் [துக்காராஸ் பட்டிணம்] என்னும் இடத்தில் தங்களது வியாபர கேந்திரத்தை துவங்கினர். அவர்களுக்கு அந்த இடம் திருப்திகரமாக அமையாததால் தொழிற்சாலை முதல்வர் பிரான்ஸிஸ் டே என்பவர் 1637 ஆம் ஆண்டு அங்கிருந்து பாண்டிசேரி வரை பயணித்து தங்களுக்கு பிடித்த, வியாபாரத்திற்கு பொருத்தமான இடத்தை தேடினார்.

விஜயநகர ஆசியின் உதவியுடன் புலிகாட்டை துறைமுகமாக கொண்டு போர்ச்சுகியர்கள் தங்கள் வியாபாரத்தை நடத்தி வந்தனர். அதற்கு முன் பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மைலாப்பூரில் சாந்தோமை துறைமுகமகமாக இவர்கள் உபயோகித்து வந்தனர். இதை கருத்தில் கொண்டு இவ்விரு இடங்களுக்கும் நடுவில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தனர்.

1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் நாள் ஆங்கில கம்பெனியான ஈஸ்ட் இந்டியா கம்பெனி பவழ கடற்கரையில் சுமார் மூன்று மைல் நீளம் உள்ள நிலத்தை கையொப்பியது. தர்மர்லா சின்னப்பா நாயகுடு என்னும் சந்திரகிரி ஆட்சியின் பிரதிநிதி ஆங்கிலேயருக்கு தொழிற்சாலை அமைக்கவும், வியாபரம் செய்ய கிடங்குகள் அமைக்கவும் ஒப்புதல் கொடுத்தார். மீனவர் கிராமமான "மதராஸ பட்டிணம் / மதராஸ குப்பம்" என்பதே அந்த இடமாகும்.

ஆந்திராவில் இருந்து குடியேறியவர்கள்

ஶ்ரீஆஞ்சநேய சுவாமி உத்ஸவர், பெரக் தெரு, ஏழு கிணறு, ஜார்ஜ் டவுன், சென்னை சென்னைப்குப்பம்(Chennaik Coopom), மதராஸ்குப்பம்(Madras Coopom), ஆற்றுக்குப்பம் (Arkoopam) மற்றும் மலைப்பட்டு (Maleput) என்று நான்கு கிராமங்கள் ஆங்கிலேய கம்பொனிக்கு ஒத்துக்கு விடப்பட்டது. இங்கு இருந்த தொழிளாளர்கள் நெசவு தொழிலில் போதுமான அளவு தேர்ச்சிப் பெற்றவர்களாக இல்லாத காரணத்தால். வியாபாரத்திற்கு துணியை மூலப்பொருளாக வைத்திருந்த கம்பெனி அதிக அளவில் துணிகளை ஏற்றுமதி செய்யமுடியவில்லை. அதனால் ஆந்திராவிலிருந்து நெசவாளர்களையும், சாயம் தோய்பவர்களையும் இங்கு கொண்டுவந்து குடியேற்றினார்கள்.

மசூலிப்பட்டிணத்தில் இருந்த கம்பொனி அதிகாரிகள், அங்குள்ள நெசவாளர்கள் சாயக்காரர்கள், வண்ணார்கள் ஆகியோரை மதராஸ்குப்பத்திற்கு குடியேற ஊக்குவித்தனர்.

சில ஆண்டுகளில் அவர்கள் வியாபாரம் அதிகரித்தது. இங்கு வந்த மக்கள் தொகையும் அதிகரித்தது, அதனால் அதிக நிலத்திற்கான ஏற்பாடுகள் செய்து "கருப்பர் நகரம்" "வெள்ளையர் நகரம்" என்று பட்டிணத்தை விரிவாக்கினர். பின்பு "புதிய கருப்பர் நகரம்" என்று பழைய கருப்பர் நகரத்தைப் போன்று எட்டு மடங்கு பெரிதாகா உருவாக்கினர். ஆவணங்களில் முதலில் குறிப்பிட்ட நான்கு கிராமங்களை தவிற மற்ற விரிவாக்கங்கள் நடந்த இடத்தில் இருந்த கிராமங்களின் பெயர்கள் ஏதும் தெரியவில்லை. குறைந்த பட்சம் பொதுவாக தகவல் கிடைக்கும் இடங்களில் கிடைக்கவில்லை. மதராஸ் இன்று மிகவும் விரிவடைந்திருப்பதால் "புதிய கருப்பர் பட்டிணம்" என்பது இன்று "பழைய பட்டிணம்[old town]" என்று கூறப்படுகிறது. இதன் கிழக்கு எல்லை இன்றைய துறைமுகம், மேற்கு எல்லை மேற்கு மதில் தெரு என்னும் மிண்ட் சாலை, வடக்கு எல்லை பழைய சிறைசாலை தெரு, தெற்கு எல்லை என்.எஸ்.சி.போஸ் சாலையாகும். இவ்வளவு பெரிய இடத்தில் பல கிராமங்கள் இருந்திருக்க வேண்டும், ஆனால் அவைகளின் பெயர்கள் நமக்கு கிடைக்க வாய்பில்லாமல் இருக்கிறது. முத்யால்பேட்டை, மண்ணடி, ஏழு கிணறு, சௌகார்பேட்டை என்பன பின்பு உதயமான பெயர்கள்.

பழைய பட்டிண மதில்

ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், பெரக் தெரு, ஏழு கிணறு, ஜார்ஜ் டவுன், சென்னை ஆங்கிலேயர்கள் தங்களின் மதராஸ் பட்டிணத்தின் மேல் இருக்கும் ஆதிகாரத்தை, ஆதிக்கத்தை பல படுத்திக் கொள்ள நினைத்தனர். அவர்களுக்கு பிரெஞ்சுக்காரகளிடமிருந்தும், மைசூர் சுல்தானிடமிருந்தும் அச்சுறுத்தல் இருந்தமையால், மதராஸ் பட்டிணத்தை சுற்றி கோட்டை மதில் எழுப்ப முடிவுச் செய்தர் மூன்று பக்கம் மதிலும் நான்காவது பக்கம் கடலும் எல்லையாக்க நினைத்தனர். மதிலை எழுப்புவதற்கு முன் திப்பு சுல்தானால் 1767 ஆம் ஆண்டும், இரண்டாண்டுகளுக்கு பின்பு ஹைதர் அலியும் மதராஸ் பட்டிணத்தை தாக்கினர். இதனால் அச்சமயம் ஏழு கிணற்றிலிருந்து தண்ணீர் வினயோகம் பாதிக்கப்பட்டது. அதனால் ஆங்கிலேயர்கள் மதில் சுவர் கட்டும் பணியை துரிதப்படுத்தினார்கள்.

”போட்மேன் நுழைவாயில்” ”புல்லி நுழைவாயில்” "திருவெட்டூர் நுழைவாயில்" "எண்ணூர் நுழைவாயில்" நான்கு நுழைவாயில்களுடன் வடக்கு மதில் கட்டி 1769 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. இன்றைய சூழலில் பழைய சிறைசாலை தெருவிற்கு இணையாக இருந்திருக்கும்.

பாரக் சாலை, ஏழு கிணறு

பாரக் சாலை ஏழு கிணறு பகுதியில் பழைய சிறைசாலை தெருவிற்கு இணையாக தென்பக்கம் செல்கிறது. போர்ச்சிகீயர் சர்ச் சாலையில் ஆரம்பித்து, ஏழுகிணறு சாலையில் முடிகிறது. சர்ச் சாலையிலிருந்து வரும் பொழுது வலதுகைப் பக்கம் பெரிய மதில் சுவர் இருக்கும், அது முடியும் போது ஶ்ரீஆஞ்சநேயர் கோயில் வரும். ஆனால் இடக்கைப் பக்கம் பல தெருக்கள் பிரிகின்றன. கோயிலுக்கு எதிரில் இருக்கும் வீராசாமி தெருவில் திரு அருள்பிரகாச ஶ்ரீஇராமலிங்க அடிகளார் வாழ்ந்து வந்தார்.

பாள குறிச்சி

ஒரு காலத்தில் இந்த இடம் யுத்தங்கள் நடந்திருக்க வேண்டும். சேனைகள் தங்கும் இடமாக இது இருந்திருக்க வேண்டும். மதராஸை தாக்க நினைப்பவர்கள் இப்பகுதி வழியாக தான் வர வேண்டும். திப்புவும், ஹதரும் ஏழு கிணறு பகுதியை தான் தாக்கியுள்ளார்கள். ஆங்கிலேயர்கள் முதலில் கட்டிய மதிலும் இப்பகுதியை பலப்படுத்துவதற்காக தான். மதில் கடிய பிறகு ஆங்கிலேயர்கள் தங்கள் படை வீரர்களை இங்கு தங்க வைத்திருக்க வேண்டும். காவலர்கள் குடியிருப்பை, வீரர்கள் குடியிருப்பை "பாரக்" என்று அழைப்பார்கள். பழைய சிறைசாலை தெருவும் தற்பொழுதைய பாரக் தெருவுக்கும் நடுவில் இருக்கும் பெரிய இடம் [தற்போது ஸ்டான்லி மருத்துவ மனை விடுதி மற்றும் விரிவாக்கம் இருக்கும் இடம்] இதற்கு ஏதுவாக இருந்திருக்க வேண்டும். இன்றும் அப்பகுதியில் "பாரக் கிரௌண்ட்" இருப்பது இதற்கு சான்று கூறுகிறது. இங்குள்ளவர்கள் இவ்விடத்தை "பாள குறிச்சி" என்றும் அழைக்கும் சொல்வழக்கு உள்ளது. தமிழில் "குறிஞ்சி" "குறிச்சி" என்பது மலையை ஒட்டிய பகுதியை குறிக்கும். ஆனால் இவ்விடத்திற்கு ஏன் இப்பெயர் என்பது தெரியவில்லை.

பாரக் தெரு ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில்

ஶ்ரீஆஞ்சநேய சுவாமி சன்னிதி, பெரக் தெரு, ஏழு கிணறு, ஜார்ஜ் டவுன், சென்னை பாரக் தெருவில் ஶ்ரீஆஞ்சநேயருக்காக ஒரு திருக்கோயில் உள்ளது. கோயில் வளாகத்தில் நுழைந்ததும் இடதுபுறம் ஶ்ரீராமருக்கான சன்னிதி உள்ளது. ஶ்ரீ ரேணுகாம்பாள், ராமாநுஜர், ஆண்டாள், ஈசான கணபதி, சாஸ்தா என்று பல சன்னிதிகள் இருக்கின்றன. ஶ்ரீராமரின் சன்னிதிக்கு எதிரில் ஶ்ரீஆஞ்சநேயருக்காக சிறிய சன்னிதி உள்ளது. ஶ்ரீஅருள்பிரகாச இராமலிங்க அடிகளார் இக்கோயிலில் கோயில்கொண்டுள்ள ஶ்ரீராமரை புகழ் பாடியுள்ளார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் இவர். அதனால் இத்திருக்கோயில் சுமார் இருநூறு ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என நம்பப்படுகிறது.

தலபுராணம்

இத்திருக்கோயிலை ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில் என்று பெயரிட்டு கூப்பிட்டாலும், இங்கு மற்ற தெய்வங்களுக்கு பல பெரிய சன்னிதிகள் காணப்படுகிறது என்பது உண்மை. அங்கு விசாரித்தப்போது ஶ்ரீஆஞ்சநேயர் இக்கோயிலில் யந்திர பிரதிஷ்டை என்றும், ஶ்ரீராமர் சன்னிதியில் அவர் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆராதிக்கப்படுகிறார் என்றும் கூறப்பட்டது. பழங்காலத்திலிருந்து ஶ்ரீஆஞ்சநேயரின் யந்திரம் சிந்தூரத்தால் பூஜை செய்யப்பட்டு வருகிறது.

பதினெட்டாம் நூற்றாண்டில், இன்றைய ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த படை வீரர்கள் இங்கு முகாம் இட்டுயிருந்தனர். படைவீரர்கள் சக்தியை காளியாவும் ஆஞ்சநேயரை வீரஆஞ்சநேயராகவும் உபாசிப்பார்கள் என்பது யாவரும் அறிந்த ஒரு விசயம். குறிப்பிட்ட மாநிலத்தில் ஶ்ரீஆஞ்சநேய உபாசனை அதிகம். அவர்கள் ஶ்ரீஆஞ்சநேயரை யந்திரத்தில் பிரதிஷ்டை செய்து உபாசித்து வந்தனர்.

யந்திர பிரதிஷ்டை என்பது தாந்திரிக முறையில் தேவதா மூர்த்திகளை பிரதிஷ்டிக்கும் முறை. இன்றும் பல கோயில்களில் யந்திர பிரதிஷ்டை செய்து மூர்த்தி உபாசனை செய்வது நடப்பில் உள்ளது.

படை வீரர்கள் காளிக்காம்பாளையும் இங்கு உபாசனை செய்து வந்தனர் என்று கூறப்படுகிறது. அவர்கள் உபாசித்த காளிகாம்பா இன்று ரேணுகாம்பாள் என்று இக்கோயில் வளாகத்திலேயே உபாசிக்கப்படுகிறார். ஶ்ரீராமர், ஶ்ரீசீதா, ஶ்ரீலக்ஷ்மணன் ஆகியோர்கள் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் யந்திர ரூபத்தில் உள்ள ஶ்ரீஆஞ்சநேயர் முன் பிரதிஷ்டை செய்யப்பட்டார்கள்.

மற்ற சன்னிதிகள்

மூன்று அடுக்கு இராஜகோபுரம் பக்தர்களை வரவேற்கிறது. கோயில் வளாகம் மரங்களால் சூழப்பட்டு அமைதியாக இருப்பதால், தியானம் செய்ய உகந்த சூழ்நிலையை அனுபவிக்கலாம். ஶ்ரீராம பரிவாரத்திற்கு இடது புறம் சன்னிதி உள்ளத். இச்சன்னிதிக்கு எதிரில் ஶ்ரீஆஞ்சநேயருக்கு சன்னிதி உள்ளது. ஶ்ரீராமர் சன்னிதிக்கு பின்புறம் பெரிய அரசமரம் உள்ளது. அதன் கீழ் நாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஶ்ரீரேணுகாம்பாளுக்கு வடமேற்கில் சன்னிதி உள்ளது. அடுத்து ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ளது போல் ஶ்ரீஅரங்கநாதருக்கு ஶ்ரீஆண்டாளுடன் கூடிய சன்னிதி. ஈசான்யத்தில் ஶ்ரீகணபதியும், அடுத்து ஶ்ரீசாஸ்தாவும் இருக்கிறார்கள். ஶ்ரீராமாநுஜருக்கு தனி சன்னிதி உள்ளது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீஆஞ்சநேயர் கோயில், ஏழு கிணறு, ஜார்ஜ் டவுன், சென்னை"

 

அனுபவம்
எங்கும் நிறைந்து உருவில்லாமல் யந்திர பிரதிஷ்டையாக ஶ்ரீராமரின் முன் கோயில் கொண்டுள்ளவர், முன்னோர்கள் பலரால் பக்தியுடனும் சிரத்தையுடனும் பூஜிக்கப்பட்டவர், இத்தலத்து ஶ்ரீஆஞ்சநேயர், பக்தர்களுக்கு எல்லா பத்[badh]ரங்களையும் அருள காத்திருக்கிறார்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: மே 2019
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+