home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி கோயில், பெரியநாயக்கன் பாளையம், கோயம்புத்தூர், தமிழ் நாடு


ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி கோயில், பெரியநாயக்கன் பாளையம், கோயம்புத்தூர்

ஜீ கே கௌசிக்


கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. சென்னை மற்றும் மதுரைக்கு பிறகு தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும் இது. 2 ஆம் நூற்றாண்டு கி.மு. க்கு முன்பே இந்த நகரம் உருவானாதாக கருதப்படுகிறது. ஒரு நகரத்தை உருவாக்கும் பொழுது அதனை ஆற்றின் கரையில் எழுப்பது என்பது பண்டைகாலம் முதல் நடைமுறையில் இருந்ததால், இந்த நகரம் நொய்யால் ஆற்றின் கரையில் உருவாக்கப்பட்டது. ராஷ்டிரகுடா, சாளுக்கியர், பாண்டியர், ஹொய்சால, மற்றும் விஜயநகர ராயாஸ் போன்ற பல வம்சத்தினர்களின் ஆட்சியின் கீழ் இந்த இடம் இருந்திருக்கிறது.

இந்த இடத்திற்கு "கோயம்புத்தூர்" என்ற பெயர் ஏன் என்பதர்க்கு பல கருத்துகள் கூறப்படுகிறன. கோசார் குலத்தை சேர்ந்தவர் சங்ககாலத்திலிருந்து இங்கு வசித்து வந்திருக்கிரார்கள். கோவையில் வடவள்ளி பகுதி கோனான் பழங்குடியினரின் தலைமையில் இயங்கி வந்தது. தலைவருக்கு கோனி, முத்தா என்ற இரண்டு மகள்கள். அவர்களின் திருமண பரிசாக இந்த இடம் கொடுக்கப்பட்டது. அதுவே கோனி+முத்தூர் - பின்பு கோநாமுத்தூர் - பின் கோயம்புத்தூர் என மருவியதாக கருதப்படுகிறது.

விஜயநகர ஆளுகையில் கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் முன்பு மதுரை சுல்தான் ஆட்சியின் கீழ் இருந்தது. விஜயநகரப் பேரரசர் முதல் புக்காவிற்கு மனைவி தேவாயீன் மூலம், குமார கம்பன் என்று ஒரு மகன இருந்தான். அவரை கம்பன் உடையார் என்றும் அழைக்கப்படுகிறார். குமார கம்பா, போர் பயிற்சி அவரது தந்தையாரிடம் இருந்து பயின்று சிறந்த வீரராகவும் விஜயநகர சாம்ராஜ்யத்தில் படை தளபதியாகவும் பணியாற்றினார்.

கம்பன் உடையார், தொண்ட மண்டல தலைவர் சாம்பூராயனை போரில் வெற்றி கண்டார். பின்னர், காஞ்சிபுரத்தினை விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சி தலைமையிடமாக நிறுவிகொண்டு செயல்பட தொடங்கினார். 1378 ஆம் ஆண்டில், குமார கம்பன்னா மதுரை சுல்தானகத்தின் மீதான வெற்றிகரமான படையெடுப்பை நடத்தி கடைசி சுல்தானான அலா-உத்-தீன் சிகந்தர் ஷாவை தோற்கடித்தார். இதனால் மதுரை சுல்தானால் ஆளப்பட்ட எல்லா பிரதேசங்களும் விஜயநகர பேரரசின் கீழ் வந்தன- கோயம்புத்தூர் உட்பட.

பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் கோயம்புத்தூர் மைசூர் ஆட்சியாளர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் கீழ் இருந்தது. மூன்று ஆங்கிலோ-மைசூர் போர்களினால் கோயம்புத்தூரில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. மிகவும் முக்கியமாக அமைந்துள்ள கோயம்புத்தூரை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள மைசூர் துருப்புக்கள் மற்றும் பிரிட்டிஷ் துருப்புக்கள் போராடின. 1799 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

ஸ்ரீ ஹனுமானின் தீவீர பக்தர்களான ஆட்சியாளர்கள் விஜயநகர ராயாக்கள் மற்றும் மைசூர் ஆட்சியாளர்கள். இவர்களின் செல்வாக்கின் கீழ் கோயம்பத்தூர் இருந்த காலகட்டத்தில், இங்கு ஸ்ரீ ஹனுமான் பக்தர்கள் பெருமளவில் இருந்ததில் ஆச்சரியம் இல்லை.

விஜயநகர ராயர்களும் ஹனுமான் வழிபாடும்

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி கோயில், பெரியநாயக்கன் பாளையம், கோயம்புத்தூர், தமிழ் நாடு விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை 1336 ஆம் ஆண்டில் ஹரிஹார மற்றும் அவரது சகோதரன் புக்க ராயா I ஆகியோர் நிறுவினார்கள். அத்வைத தத்துவஞானி சிருங்கேரி ஸ்ரீ சங்கராச்சாரியரின் ஆலோசனையின் பெயரில் நிறுவப்பட்டது. பின்னர், இந்த வம்சத்தின் ஆட்சியாளர்கள் ஜைனவாதம் மற்றும் த்வைத தத்துவத்தையும் ஆதரித்தனர். ஸ்ரீ ஹனுமான், ஞானம், வலிமை, தைரியம் ஆகியவற்றை வழங்க கூடிய ஒரு தெய்வமாக கருதப்பட்டார், இந்த நேரத்தில், ஸ்ரீ ஹனுமான் வழிபாடு அவசியமாக இருந்தது. விஜயநகர சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிகள் எங்கு ஆட்சி செயதாலும் அங்கு ஸ்ரீ ஹனுமான் வழிபாடு காணப்பட்டது. மைசூர் ராயர்களால் ஆளப்பட்டது, இதனால் கொங்குநாடு மற்றும் மைசூர் ஆகிய இடங்களில் ஸ்ரீ ஹனுமானின் வழிபாடு முதல்மை பெற்றுள்ளது.

கோயம்புத்தூரில் ஸ்ரீ ஹனுமானுக்கான கோயில்கள்

கோயம்புத்தூர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் செல்வாக்கின் கீழ் இருந்தது அல்லது மதுரை நாயகர்கள் அல்லது மைசூர் ஆட்சியாளர்களின் வழியாக இருந்தது. எனவே, ஸ்ரீ ஹனுமான் வழிபாடு 15 ஆம் நூற்றாண்டு முதல் நடைமுறையில் இங்கு இருந்தது என கூறலாம். கோயம்புத்தூர் நகரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பல ஹனுமான் கோயில்கள் அப்பொழுத்து உருவாகின. பின்னர் இந்த கோவில்கள் மாத்வ மடங்களின் பராமரிப்பில் வந்தன. இன்று இந்த ஸ்ரீ ஆஞ்சநேய கோயில்கள் அந்த அந்த மடத்தின் பெயரில் மிகவும் பிரபலமாக உள்ளன.

பெரியநாயக்கன் பாளையில் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி கோயில்

மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் கோயம்புத்தூரிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் பெரியநாயக்கன் பாளையம் உள்ளது. பெரியநாயக்கன் பாளையத்தில் சில பழைய கோயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ஸ்ரீ ஹனுமான் கோவிலாகும். கோயம்புத்தூரிலிருந்து பெரியநாயக்கன் பாளையம் வரும் ஒரு முக்கிய சாலையில் வலது புறம் ஒரு பிரதான சாலை பிரியும். அச்சாலையில் பெரியநாயக்கன் பாளையத்தின் பிரதான காவல் நிலையம், துணை தபால் அலுவலகம் மற்றும் துணை பதிவாளர் அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளது. இடது புறத்தில் இந்த ஆஞ்சநேய கோயில் அமைந்துள்ளது.

கோயில் புராணம்

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி கோயில், பெரியநாயக்கன் பாளையம், கோயம்புத்தூர், தமிழ் நாடு முன் காலத்தில் கோபுரம் அல்லது விமானம் இல்லாமல் இக்கோயில் சாதாரண வீடு போன்று இருந்துள்ளது. ஆனால் ஸ்ரீ ஹனுமானின் கோவில், உள்ளூர் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தது. 1850 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட ஆவணங்களிலும் வரைபடங்களிலும் இக்கோயில் இடம் பெற்றுள்ளது. ஆகையால் இந்த கோவில் சுமார் இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று சொல்ல தேவையில்லை.

இந்த கோவில் எவ்வாறு பராமரிக்கப்பட்டது என்பதைக் காண்பிப்பதற்கான ஆவணங்கள் ஏதும் தற்பொழுது இல்லை, ஆனால் உள்ளூர் உதவியாளர்களால் பூஜைகள் நடைபெற்றுள்ளது. ஆனால் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதாக தெரியவில்லை. ஸ்ரீ ஆஞ்சநேயரின் விருப்பம் எப்படியோ அதன்படி அவர் தன் நோக்கத்தை பூர்த்தி செய்து கொள்வார் அல்லவா? அப்படி தான் தொடங்கியது இக்கோயிலின் வளர்ச்சி.

அறுபதுகளில், சிலர் மட்டுமே இந்த கோயிலுக்கு வருகை தந்தனர். கோவில் கட்டிடம் புல் மற்றும் புதர்களை கொண்டு மூடப்பட்டிருந்தது. ஸ்ரீ சிக்கோசி ஆச்சார் என்பவர் தனது மகளுடன் சேர்ந்து கிராம மக்களிடமிருந்து அரிசி [நைவேத்தியம் செய்ய] மற்றும் சிறிய பணம் பெற்று அன்றாட பூஜையையும் விளக்கு ஏற்றி ஆராதனையும் ஶ்ரீ ஹனுமாருக்கு செய்துவந்தார். பூஜை முடிந்து அதன் பின் பகல் மூன்று மணி அளவில் அவர் சமைத்து சாப்பிடுவார்.

எழுபதின் முற்பகுதியில் உள்ளூர் மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு சங்கம் உருவாக்கி அதற்கு "ஸ்ரீ மாருதி சேவா சங்கம்" என்று பெயரிட்டனர். பொதுமக்களிடமிருந்து பெரும் பங்களிப்புடன் கசியும் கூரை மாற்றப்பட்டு, பக்கா கூரை கட்டப்பட்டது. சஞ்சீவினி ஆஞ்சநேயா விக்கிரகம் உடைந்த நிலையில் இருந்ததால் சேதமடைந்த சஞ்சிவி ஆஞ்சனேய விக்ரஹாத்தை புதிய தாஸ ஆஞ்சாநேயர் விக்ராஹமாக மாற்றி அமைக்கப்பட்டது. கும்பாபிஷேகம் ஜூலை 1977 ல் செய்யப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட கோயில், அருகிலுள்ள கிராமங்களிலிருந்து அதிக பக்தர்களை ஈர்த்தது. ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் பஜனையும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணமும் பக்தர்களால் செய்யப்பட்டன. பக்தர்களிடை அதிக ஊக்கத்தை ஶ்ரீ ஹனுமார் தந்தனர்.

ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு கும்பத்துடன் கூடிய விமானம் அமைக்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டில் பெரியோர்களின் ஆசியாலும் ஆச்சார்யா பெருமக்களின் ஆசீர்வாதத்துடன், ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியின் "மிருத்திகா பிருந்தாவனம்" நிறுவப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் ஸ்ரீ ஆஞ்சநேய சன்னதியில் 1997 ஆம் ஆண்டு ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் பின்னால் மேடை அமைத்து ஸ்ரீ சீதா, ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

ஸ்ரீ ராயர் மடம், ஸ்ரீ பீஜவர மடம், ஸ்ரீ வியாசராயா மடம், ஸ்ரீ பாலிமர் மடம், ஸ்ரீ கன்னியூர் மடம், பண்டரிகாரே மடம் ஆகிய மடங்களிலிருந்து மடாதிபதிகள் ஹனுமானின் இக்கோயிலுக்கு விஜயம் செய்துள்ளனர்.

இன்றைய கோயில்:

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி, பெரியநாயக்கன் பாளையம், கோயம்புத்தூர், தமிழ் நாடு மேலே குறிப்பிட்ட பெரியவர்கள் பலரின் ஆசீர்வாதத்துடன், ஆஞ்சநேயர் பக்தர்கள் பலரின் தீவிர பங்களிப்புடன், இந்த வளாகத்தில் முதலாவது மாடியில் புதிய அன்னதான மண்டபம் கட்டப்பட்டுள்ளது. புதிய கிணறு, பிரதான சாலையில் நுழைவு வளைவு ஆகியன கட்டப்பட்டுள்ளது.

கோயிலில் சிறப்பு பூஜைகள்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம், வியாழக்கிழமைதோரும் பஜனை, பக்தர்களின் வேண்டுகோளுக்கு ஸ்ரீ சத்யநாராயண பூஜை, வியாழகிழமைதோரும் மாலை ஏழு மணிக்கு ஶ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு ரத உத்ஸவம்.

யுகாதி, ​​ஸ்ரீ ராம நவமி, சீதா கல்யாணம், ஸ்ரீ ஹனுமாத் ஜெயந்தி, ஸ்ரீ மாத்வ நவாமி, ஸ்ரீ மாத்வ ஜெயந்தி, ஸ்ரீ வியாசராயர் ஆராதனை போன்ற சிறப்பு பூஜைகள் கொண்டாடப்படுகின்றன.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி ஆராதனை நான்கு நாட்களுக்கு நடத்தப்படுகிறது.

ஸ்ரீ ஆஞ்சநேயர்

இந்த க்ஷேத்திரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி நின்று கொண்டிருக்கும் நிலையிலுள்ளார். மூர்த்தம் சுமார் மூன்று அடி உயரத்தில் உள்ளது. அவருக்கு பின் ஸ்ரீராமர் மற்றும் மாதா ஸ்ரீ சீதா தேவி ஒரு மேடையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த இருவருக்கும் 'திருவாச்சி' இருக்கிறது.

ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி கிழக்கு முகமாக இருக்கிறார். அவரது இரு கைககளும் கூப்பிய வண்ணம் உள்ளார். அவரது இரு தோள்களிலும் 'பூஜ பத்தனா', கைகளில் கேயூரம், மணிகட்டில் கங்கணம் என்னும் ஆபரணங்கள் அலங்கரிக்கிறது. இவைகளுடன் கூப்பிய அவரது கைகள் மேலும் அழகாக இருக்கிறது. மூன்று மணிமாலைகள் அவரது மார்பினை அலங்கரிக்கிறது. அவரது கண்களின் பார்வை கருணை நிறைந்துள்ளது. காதில் அணிந்திருக்கும் குண்டலம் அவரது தோளை தொடுகிறது. அவரது சிரத்தினை அழகிய கிரீடம் உள்ளது. எழுந்து வளைந்து இருக்கும் அவரது வால் அவரது திருதாள்களில் அருகில் முடிகிறது. தண்டை அணிந்துள்ள அவரது தாமரை பாதங்களின் அழகை காண இரு கண்கள் போதாது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில், பெரியநாயக்கன் பாளையம், கோவை"

 

அனுபவம்
தீமையை அழிப்பவர், நம்பியவருக்கு பாதுகாவலர் இந்த க்ஷேத்திர இறைவன் நமக்கு ஆசீர்வாதங்களை அளிப்பதற்காகவே திரும்பவும் வந்துள்ளார். இந்த க்ஷேத்திரத்திற்கு வந்து பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஏப்ரல் 2019
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+