home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீ சஞ்சீவிராயன் திருக்கோயில், திப்பயபள்ளி, புல்லம்பெட் மண்டலம், கடப்பா ஜில்லா, ஆந்திரா


ஶ்ரீசஞ்சீவிராயன் திருக்கோயில், திப்பயபள்ளி, புல்லம்பெட் மண்டலம், கடப்பா ஜில்லா, ஆந்திரா

ஶ்ரீ பாபுஜீ, திருப்பதி


புகைப்படம் உதவி : ஸ்ரீ மோகன் ராவ், ஹைதராபாத்
கடப்பா

கடப்பா நகரம் ஆந்திர மாநிலத்தில், பென்னா நதிக்கரையில் எட்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. நகரம் மூன்று புறமும் நல்லமலா, பாலாகோண்டா மலைகளால் சூழப்பட்டுள்ளது. ’கட்டபா’ என்றால் தெலுங்கு மொழியில் நுழைவாயில் என்று பொருள், சேஷகிரியில் அருள்பாலிக்கும் ஶ்ரீவேங்கடநாதனை தரிசிக்க இவ்வழியே தான் யாத்திரை செல்வார்கள். அதனால் இவ்விடத்திற்கு தேவினி கடப்பா என்று பெயர், அதுவே இன்று கடப்பா என்று அழைக்கப்படுகிறது.

திருப்பதிக்கு யாத்திரை வழி

அடோனி, கர்நூல், அனந்தபூர் ஆகிய இடங்கள் கடப்பாவிற்கு வடக்கில் உள்ளது. விஜயநகர காலத்திலிருந்தே இங்கெல்லாம் வைணவ வழிபாட்டில் ஈடுபாடு அதிகம். அவர்கள் திருவேங்கட்முடையானை தரிசிக்க கடப்பா வழியாக செல்வது வழக்கம். மேற்கு தொடர்ச்சி மலையில் திருவேங்கடமுடையான் வசிக்கும் சேஷகிரி ஆதிசேஷனின் சிரமாகவும், அஹோபலம் நடுபாகமாகவும், ஶ்ரீசைலம் சேஷனின் வால் பகுதியாகவும் கருதப்படுகிறது. அதனால் திருவேங்கடமுடையானை காண புனித யாத்திரை செல்பவர்கள் கடப்பாவில் இறைவனை வேண்டி பின்பு யாத்திரையின் கடைசி பகுதியினை மேற்கொள்வார்கள். கடப்பாவிலிருந்து திருப்பதிக்கு கால் நடையாக யாத்திரை மேற்கொள்வது என்பது மிகவும் ருசிகரமாகவும் இனிய அனுபவத்தை தருவதாகவும் இருக்கும். வழியில் பொன்னா, பாபக்னி நதிகளின் ஓட்டமும், கரையோரம் பசுமையும் யாத்திரையை சுலபமாக்கும், மனதினை அமைதியாக்கும், திருவேங்கடமுடையானின் தரிசனத்தை அனுபவிக்க வைக்கும்.

செழிமையும் வறுமையும்

ஶ்ரீசஞ்சீவிராயன், திப்பயபள்ளி, புல்லம்பெட் மண்டலம், கடப்பா ஜில்லா, ஆந்திரா தற்சமயம் வறட்சியும் பஞ்சமும் இப்பகுதியில் மிகுதியாக உள்ள இப்பகுதியை ராயல்சீமா என்று அழைக்கிறார்கள். இப்படி பின்னடைவுகள் பல இருப்பினும், மக்கள் மன திருப்தியுடன் நல்வாழ்க்கை நடத்திவருவது இப்பகுதி மக்களின் மன ஓட்டத்தை காண்பிக்கிறது. படித்தவர்களுக்கும் பண்டிதர்களுக்கும் இப்பகுதியில் குறைவில்லை. தெலுங்கு, கன்னடம், ஸம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பலர் பல காவியங்களை படைத்துள்ளனர். தெலுங்கு பக்தி காவியங்களில் பல இப்பகுதி பண்டிதர்களால் எழுதப்பட்டவையே. விஜயநகர அரசர்களாலும் மற்றும் கண்டிகோடா பிம்மஸுனி அரசர்களாலும் இவர்கள் ஆதரிக்கப்பட்டனர்.

திப்பயபள்ளி கிராமம்

சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வீர வைஷ்ணவர் ஒருவர் தனது திருப்பதி யாத்திரையின் கடைசி பகுதியாக தேவுனி கடப்பாவில் உள்ள வேங்கடாசலபதிக்கு ஆராதனைகளை முடித்துக் கொண்டு திருப்பதி நேக்கி பயணித்தார். அவ்வாண்டு மழையின்மையால் வறட்சி சற்று கடுமையாகவே இருந்தது. அதன் காரணமாக மக்கள் பலர் நோய்வாய் பட்டனர். வறட்சியின் காரணமாக தானியங்கள் விளையவில்லை. பஞ்சம் தலைவிரித்து ஆடியது. இவை அனைத்தின் காரணத்தால் மக்கள் பல அவதிக்கு ஆளானார்கள்.

இந்த விஷ்ணு பக்தர் திப்பயபள்ளி என்னும் கிரமத்தின் அருகில் வரும் பொழுது, கிராமத்து மக்கள் ஒன்று திரண்டு அவரை வணங்கி "தாங்கள் எங்கள் கிராமத்தில் சில நாட்கள் தங்கி, மழை வருவதற்காக பூஜை செய்ய வேண்டும். தாங்களின் அன்றாட தேவையை கிரமத்து மக்களாகிய நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வரண்டிருக்கும் ஏரியை பாருங்கள், காய்ந்திருக்கும் பயிர்களை பாருங்கள். அரசரால் நிர்மாணிக்கப்பட்ட இந்த ஏரியை பாருங்கள். சமுத்திரம் போல் மிகவும் பெரியதாக இருப்பதால் இதனை ’தேவ சமுத்திரம்’ என்று பெயரிட்டோம். தாங்கள் மனமிறங்கி இங்கு தங்கி பூஜை செய்யவும். சுற்றியுள்ள கிராமங்களும் தாங்கள் பூஜையின் பயனால் பொழியும் மழையின் பயனை அடையட்டும்." என்று மனமுருகி வேண்டினார்கள்.

பக்தரின் இரக்கமும் சம்மதமும்

ஶ்ரீசஞ்சீவிராயன், திப்பயபள்ளி, புல்லம்பெட் மண்டலம், கடப்பா ஜில்லா, ஆந்திரா மக்களின் அவதியை பார்த்த விஷ்ணு பக்தர், மனமிறங்கி இக்கிராமத்தில் தங்கி பூஜை செய்வதற்கு சம்மதித்தார். அதன் படி கிராமத்தின் தெற்கு கோடி எல்லையில் தங்கி தனது தினசரி பூஜைகளை துவங்கினார். சிறிய கருங்கல்லை எடுத்து, அதில் மற்றோரு கருங்கல்லின் உதவியால் சில அக்ஷரங்களை எழுதினார், செதுக்கினார் என்றே சொல்ல வேண்டும். அக்ஷரம் என்பது சாதரணமாக எழுத்து என்பதை குறிக்கும். ஆனால் ஸம்ஸ்கிரத்தில் க்ஷர என்றால் அழிய கூடியது என்றும் அக்ஷர என்பது ’அழிவற்ற’ என்பதையும் குறிக்கும்.

தன் பூஜைக்கு பிரசாதம் வேண்டி அவர் கிராமத்து ஆண்களை பிரசாதம் செய்யச் சொன்னார். தினமும் கிராமத்து ஆண்கள் செய்த பிரசாதம் தான் அவர் பூஜையின் பிரசாதமாக ஏற்றார். தான் வடித்த இறையுரு முன் நீண்ட நேரம் அவர் தியானத்தில் அமர்ந்திருப்பார், பூஜை செய்வார். கிராமத்திலிருந்து வந்த பிரசாதத்தை இறைவனுக்கு படைத்துவிட்டு, அதனையே தனது ஆகாரமாக எடுத்துக்கொள்வார். பக்தரின் தியானமும் பூஜையும் சில நாட்களில் பலன் அளிக்க ஆரம்பித்தது. மழை பெய்ய துடங்கியது. சில நாட்களில் தேவ சமுத்திரத்தில் நீர் நிரம்பி வழிந்தது. படிப்படியாக, கிராமவாசிகள் துன்பம் குறைந்து, அவர்களின் மகிழ்ச்சியும் செழிப்பும் மீண்டும் அடைந்தனர். மக்களின் மனம் நிம்மதி அடைந்தது,

பிரிவுபசாரம்

பக்தர் கிராமத்தில் தங்கியிருந்த நாட்களில் அவருடைய அன்றாட தேவைகள் அனைத்தையும் கிராமமக்கள் செய்து கொடுத்தனர். கிராமத்தில் செழிப்பு திரும்பியதும் பக்தர் தனது திருப்பதி யாத்திரையை தொடர விரும்பினார். அவர், கிராம மக்களின் நலனுக்காக பூஜை செய்தார் அல்லவா? அதனை கிராம மக்கள் தொடர வேண்டும் என விரும்பினார்.

ஶ்ரீ சஞ்சீவிராய சுவாமி

கிராம மக்களும் அவர் கூறிய மாதரியே பூஜையை தொடர விரும்பினார்கள். ஆனால் அந்த கல்லில் எந்த சுவாமியை அந்த பக்தர் ஆராதிதிருந்தார் என்பது இவர்களுக்கு தெரியாது. பக்தரிடம் வினவிய பொழுது அவர் ஶ்ரீ சஞ்சீவிராய சுவாமியை தான் ஆவாகித்திருப்பதை தெரிவித்தார், மனம் ஒன்று பட்டு அவரை ஆராதிக்க சொல்லி பின் தன் யாத்திரையை தொடர்ந்தார்.

இன்றைய திருக்கோயில்

ஶ்ரீசஞ்சீவிராயன் திருக்கோயில் மகர சங்கராந்தி உத்ஸவம், திப்பயபள்ளி, புல்லம்பெட் மண்டலம், கடப்பா ஜில்லா, ஆந்திரா திப்பயபள்ளி கிராமம் புல்லம்பேட் மண்டலத்தில் கடப்பா ஜில்லாவில் அமைந்துள்ளது. இது ராஜம்பேட் வருவாய் கோட்டதின் கீழ் வருகிறது. இங்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்து வழிபாட்டில் உள்ள ஶ்ரீசஞ்சீவிராயன் கோயில் மிகவும் பிரபலம். வானம் பார்த்த சஞ்சீவிராயர் எப்படி அக்காலத்தில் வழிப்பட்டார்களோ அப்படியே இன்றும் வழிபடபடுகிறார். அருகாமையிலுள்ள பாவிகாடபள்ளி, கோல்லவரிபள்ளி, ஜக்குவரிபள்ளி, பிரம்மனபள்ளி, உதுகுரு ஆகிய கிராமங்களிலிருந்து தினமும் மக்கள் இங்கு வந்து ஶ்ரீசஞ்சீவிராயரை வழிபட்டு செல்கிறார்கள்.

திப்பயபள்ளியில் மகர சங்கராந்தி உத்ஸவம்

நமது தேசத்தில் பல பிராந்தியங்களில் அறுவடை ஆன முதல் தானியத்தை இறைவனுக்கு படைப்பது வழக்கம். மகர மாதபிறப்பை இந்த விழாவாக கொண்டாடுவார்கள். தமிழ்நாட்டில் பொங்கல் என்றும், பஞ்சாபில் லோடி என்றும், அஸ்ஸாமில் பிஹு என்றும் பல பெயர்களில் கொண்டாட படுகிறது.

திப்பயபள்ளி கிராமத்தில் மகர சங்கராந்தி மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்திக்கு முன் வரும் ஞாயிறு அன்று ஶ்ரீசஞ்சீவிராயருக்கு மிகவும் பக்தியுடன் புது தானியம் கொண்டு பொங்கல் படைக்கப்படுகிறது. விசேடம் என்னவென்றால் பொங்கலை கிராமத்து ஆண்களே சமைக்கிறார்கள். அன்று பெண்கள் கோயிலின் நுழைவாயிலிருந்து இறைவனை தர்சிப்பது என்பது தொன்று தொட்டு வரும் பழக்கம்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஶ்ரீசஞ்சீவிராயன் திருக்கோயில், திப்பயபள்ளி,ஆந்திரா

 

அனுபவம்
திப்பயபள்ளி ஶ்ரீசஞ்சீவிராய சுவாமி ’அரூபி’யாக இருந்து கிராமத்தையும் கிராம மக்களையும் காத்து வருகிறார். நோய் நொடி அண்டாமல், செல்வமும் செழிப்பும் வழங்க வல்ல அவரை வணங்கி நோய் நொடி அற்று செழிப்பாக வாழ்வோம் வாருங்கள்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: செப்டம்பர் 2017
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+