home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

ஹனுமான் திருக்கோயிலின் முன்புறத் தோற்றம்-சாரங்கபூர், நிஜாமாபாத் மாவட்டம், தெலுங்கானா


ஹனுமான் திருக்கோயில், சாரங்கபூர், நிஜாமாபாத் மாவட்டம், தெலுங்கானா

ஶ்ரீ டி.ஶ்ரீஹரி, தபால் இலாக்கா, விஜயவாடா


படங்கள் உபயம் : ஶ்ரீ டி.ஶ்ரீஹரி, தபால் இலாக்கா, விஜயவாடா

ஶ்ரீ சமர்த்த ராமதாஸ்

ஶ்ரீசமர்த்த ராமதாஸர் சாரங்கபூர் திருக்கோயில் வளாகம், நிஜாமாபாத் மாவட்டம், தெலுங்கானா 1608-ல் ஶ்ரீராம நவமி தினத்தன்று மராட்வாடா பகுதியிலுள்ள ஜாம்ப என்னும் கிராமத்தில் மகான் ஶ்ரீ சமர்த்த ராமதாஸ் அவர்கள் அவதரித்தார். ஶ்ரீசூர்யாஜி பந்த், ஶ்ரீரேணுகா பாய் தம்பதியிற்கு இரண்டாவது மகனாக பிறந்தார். பெற்றோர்கள் அவருக்கு நாராயணன் என்னும் திருநாமத்தினை வைத்தனர். திருமணத்தினை தவிர்க்க குடும்பத்தினரை பிரிந்து நாசிக் பகுதிக்கு சென்றுவிட்டார் நாரயணன்.

அப்பொழுது அவருக்கு வயது பதிமூன்று. நாசிக் பகுதியிலுள்ள தாக்ளி என்னும் இடம் ’நந்தினி’ என்னும் ஆறும், கோதாவரியும் இணையும் இடம். மிக ரம்யமான சூழலில் அமைந்துள்ள இவ்விடத்தில் பல சாதுகளும், சன்யாசிகளும் தியானத்திலும் தவத்திலிருப்பதும் வழக்கம். இந்த புனிதமான தாக்ளி க்ஷேத்திரத்தில் 1621-ம் ஆண்டு மேக் மாதம் சுக்ல பக்ஷ சப்தமி தினம் - ரத சப்தமி அன்று நாராயணன் ஶ்ரீராம தியானத்தில் ஈடுபட்டான். நாரயணனின் கடுமையான தவவலிமையால் அவரின் தேஜஸ் கூடியது, ஶ்ரீராமரிடமும், ஶ்ரீமாருதியிடமும் அவருக்கு இருந்த பக்தியினை கண்ட மக்களும் அங்கிருந்த மகான்களும் அவரை ’ஶ்ரீ ராமதாஸ்’ என்று அழைக்கலானார்கள்.

ஶ்ரீ சமர்த்த ராமதாஸர் பற்றிய [ஆங்கிலத்தில்] சுறுக்கமான வரலாற்று குறிப்புக்கு சொடுக்கவும்.

தாக்ளியில் ஶ்ரீசமர்த்த ராமதாஸரின் முதல் மடம்

ஶ்ரீசமர்த்த ராமதாஸர் சாரங்கபூர் திருக்கோயில் வளாகம், நிஜாமாபாத் மாவட்டம், தெலுங்கானா தாக்ளியில் பன்னிரண்டு வருட காலம் ஶ்ரீராமரை குறித்து தவம் இருந்தார். இதற்கிடையில் அவருடைய கொள்கையில் பிடிப்பும், ஸ்ரீ ராம பக்தியில் பற்றும், அவரது போதனையில் ஈர்ப்பும் பலரை அவர்பால் அன்பு கொள்ள செய்தது. பலர் தங்கள் வாழ்க்கையை அவருடைய கொள்கைக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட முற்பட்டனர், மக்களுடன் பழகிய ஶ்ரீசமர்த்தர் அவர்களின் துக்கத்தின், துயரத்தின் காரணங்கள் குறித்து ஆராய்ந்து நமது தேசத்தின் சநாதன தர்மத்தை பின்பற்ற வேண்டியதின் முக்கியத்தை உணர்ந்தார். ஶ்ரீராமரிடம் பக்தி வைத்தால் நல்ல திருப்பம் கிடைக்கும் என்பதில் உருதியாக நம்பினார். மக்கள் இழந்திருந்த விழிப்புணர்ச்சியும், தன்னம்பிக்கையும் திரும்ப பெற வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தார். அதற்கு ஶ்ரீமாருதியின் பக்தி அவசியம் என்பது தின்னமாக தெரிந்தது.

இவ்விதம் சிந்தித்த ஶ்ரீசமர்த்தர், பசுஞ்சாணத்தினாலான ஶ்ரீமாருதியின் உருவை செய்து தான் தாக்ளியில் தியானித்த இடத்தில் வைத்திருந்தார். அங்கு தனது சீடர்களில் ஒருவரான ஶ்ரீஉத்தவ் கோஸ்வாமியை தனது கொள்கைகளை பரப்ப அங்கு நியமித்தார். மக்களின் நலம் காண தனது பாரத தேசத்தின் திக்விஜயத்தை மேற்கொண்டார்.

தாக்ளி க்ஷேத்திரத்தில் உள்ள ’கோமேய்’ மாருதி திருக்கோயிலை பற்றி மேலும் விவரங்களுக்கு சொடுக்கவும்.

மாற்றத்தை வேண்டி பயணம்

1632-ம் ஆண்டு ஶ்ரீசமர்த்தர் தாக்ளியை விட்டு கிளம்பி தனது புனித யாத்திரையை தொடங்கினார். மக்களினின் நலம் குறித்து அறிய அவர் பாரத தேசம் முழுவதும் பன்னிரெண்டு ஆண்டுகள் பயணித்தார். வெள்ளம், வறட்சி இரண்டும் மக்களை பாதிப்பதையும், முஸ்லீம் ஆட்சியாளர்களால் கண்மூடித்தனமான தாக்குதல்கள் மக்களை வெகுவாக பாதித்திருப்பதையும் கண்டார். தனது யாத்திரையின் அனுபவத்தையும், தான் கண்டறிந்ததையும் ’அஸ்மி ஸுல்தானி’ மற்றும் ’பராசக்ரனிரூபன்’ ஆகிய இரு புத்தகங்கள் மூலம் பதிவு செய்தார். அந்த காலகட்டத்தில் நமது நாட்டின் நிலைமையைப் பற்றி ஒரு சாது சந்யாசியால் எழுதப்பட்ட புத்தகங்கள் இவை மட்டுமே.

தாக்ளியிலிருந்து பயணத்தை தொடங்கிய ஶ்ரீ சமர்த்தர், முதலில் கோஹலாபூர் சென்று ஶ்ரீஅம்பா பவானியை தரிசித்து, பின் கோதாவரி நதியின் உற்பத்தி ஸ்தானமான பீமகிரிக்கு சென்றார். பின் கோதாவரி நதியின் கரையோறமாகவே தனது யாத்திரையை தொடர்ந்தார். அப்படி அவர் யாத்திரை செய்த பிரதேசத்தில், தற்போதய தெலுங்கானாவில் உள்ள நிஜாமாபாத் ஜில்லாவும் அடங்கும். அன்று இந்தூர் என்று அழைக்கப்பட்ட பிராந்தியமிது. இந்திர தத்தா என்னும் அரசனால் ஆளப்பட்ட இடம் என்பதால் இந்தூர் என்று அழைக்கப்பட்டது இந்த பிராந்தியம். அப்பிராந்தியத்தில் போதான் என்னும் இடத்தில் ஶ்ரீசமர்த்தர் அவர்கள் சில காலம் தங்கினார்.

போதான்

பிரதான மாருதி திருக்கோயில், சாரங்கபூர், நிஜாமாபாத் ஜில்லா, தெலுங்கானா போதான் முன்பு ஏகசக்ரபுரம் என்ற பெயரில் பிரசித்தம். இது வளமான நிலமும், நிறைந்த பண்பாடும் மற்றும் சிறந்த பாரம்பரியமும் மிகுந்த நகரமாக இருந்தது. இதனை பிரிதிபலிக்கும் விதத்தில் பல கோயில்கள் இருந்தது. ஶ்ரீசமர்த்தர் இங்கு பயணத்தில் வந்த பொழுது இவ்விடம் நிஜாமின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. அச்சமயம் தொடர்ச்சியாக மழையின்மையினால் பிரதேசம் வரண்டு இருந்தது. அதனால் மக்கள் பல அல்லலுக்கு உட்பட்டிருந்தனர். இந்தூர் பிராந்தியமே வரட்சியின் பிடியில் இருந்தது, ஆனாலும் போதானுக்கு அருகாமையில் இருந்த சாரங்கபூரில் வறட்சி மிக அதிகமாகவே இருந்தது. ஶ்ரீசமர்த்தர் போதான் வந்திருப்பது அறிந்து சாரங்கபூர் மக்கள் அவரிடம் வந்து முறையிட்டனர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இசைந்து அங்கு செல்ல ஶ்ரீசமர்த்தர் தீர்மானித்தார். போதானில் ஶ்ரீமாருதியை ஸ்தாபனம் செய்து தனது சீடர் உத்தவ் அவர்களிடம் மடத்தை ஒப்படைத்து விட்டு சாரங்கபூர் செல்ல தயாரானார்.

போதான் அருகிலிருக்கும் சாரங்கபூர்

போதான் அருகில் இருக்கும் சாரங்பூர் கிராமத்தில் சற்றே பாறை நிலமாக இருந்தது. மழை பற்றாக்குறை காரணமாக, கிராமம் முழுவதும் அனைத்து ஏரிகள் மற்றும் குளங்கள் வற்றி இருந்தன. கிராமத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டதினால் மக்கள் தங்கள் நிலங்களில் எந்த பயிரும் பயிரிட முடியவில்லை. எந்த பயிர்களும் அறுவடை செய்ய இயலவில்லை என்பதால், அரசாங்கத்தால் எந்த வரியும் வசூலிக்கப் முடியவில்லை. எனவே, பிராந்தியத்தை ஆண்ட நிஜாம், அனைத்து பிராமணர்களுக்கும் மழை வேண்டி பிரார்த்தனை செய்ய கட்டளையிட்டார், அப்படி மழை பெய்யவில்லை என்றால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிவரும் என்று அச்சுறுத்தினார். அனைத்து பிராமணர்களும் வற்றிய ஏரியில் நின்று அனைவரும் ஒன்றாக வருண ஜெபம் பல நாட்களக செய்தனர், ஆனால் மழை வருவதற்கான எந்த அடையாளமும் காணப்படவில்லை.

மழை கொண்டு வந்த ஶ்ரீசமர்த்தரின் பிரார்த்தனை

விளக்கு தூண், அனுமன் கோவில் கர்பகிரஹம், சாரங்கபூர், நிஜாமாபாத் மாவட்டம், தெலுங்கானா ஶ்ரீசமர்த்தர் சாரங்பூர் கிராமத்திற்கு விஜயம் செய்து அங்கு மக்களின் அவல நிலை கண்டு மிகவும் வேதனை அடைந்தார், அவர், மக்கள் காப்பாற்ற முடிவு செய்து ஶ்ரீராமரை பிரார்த்தனை செய்தார். பின்பு அவர் அங்கிருந்த பாறை மீது ஶ்ரீமாருதியின் உருவத்தை கோட்டோவியமாக வரைந்தார். பின்பு அவர் தனது புனிதமான மேல் துணியால் கோட்டோவியதினை மூடினார். அவர் அங்கு கூடியிருந்த பிராமணர்களை ஸ்ரீ மாருதியை குறித்து ஜெபம் செய்ய வேண்டினார். சில நேரத்திற்கு பின் ஶ்ரீசமர்த்தர் தன் துணி எடுத்து போது, அவர் மூலம் செதுக்கப்பட்ட கோட்டோவியம் அனுமனின் ஒரு அழகான சிற்பமாக மாறியிருந்தது!

மக்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்த போது அங்கு மழை தொடங்கியது. பின்னர் அது அடை மழையாக மாறி பெய்ய தொடங்கியது. அதனால் அந்த கிராமத்து மக்கள் பூரித்துப் சந்தோஷத்தில் திளைத்தனர் என்று சொல்ல தேவையில்லை.

ஶ்ரீசமர்த்தர் அதனைத் தொடர்ந்து அருகில் இருக்கும் கோட்டையில் படா ராமர் கோவில் ஒன்றை நிறுவினார். தற்போது அத்திருக்கோயில் ’கிலா ராமாலயம்’ என அறியப்படுகிறது.

சாரங்கபூர் அனுமன் கோவில்

இன்று இத்திருக்கோவில் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது, சுற்று சூழல் அனைத்தும் பசுமையாக அழகாக இருக்கிறது. திருக்கோயில் வாயிலுக்கு செல்லும் பாதையின் இருபுறமும் நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டங்கள் பக்தர்களை வரவேற்கிறது. தோட்டத்தில், ஶ்ரீசமர்த்த ராமதாஸரின் சிலை நிருவப்பட்டுள்ளது. கோவில் நுழைவாயிலில் மிகச்சிறப்பு வாய்ந்த கோட்டையின் நுழைவாக தெரிகிறது. பின்னணியில் பெரிய பெரிய பாறைகள் வசீகரமாக தெரிகிறது. பிரதான வாயிலில் நுழைந்த உடன் ஸ்ரீ மாருதி சிலை இடது பக்கத்தில் உள்ளது. பக்தர்கள் இங்கு இருந்தே பிரதான கோவிலின் விமானத்தை தரிசிக்க முடியும். சுமார் எண்பது அடி உயரத்தில் உள்ள பிரதான கோயிலை அடைய இரு அடுக்கு மாடிபடிகள் கொடுக்கப் பட்டுள்ளன. மேல் தளத்தை அடைந்ததும் விளக்கு தூண் பக்தர்களை வரவேற்கிறது. முன்பு தூணில் உள்ள விளக்குகளுக்கு எண்ணெய் விட்டு தீபம் ஏற்றுவார்கள், ஆனால் இந்த பழக்கம் இப்பொழுது நடைமுறையில் இல்லை. இந்த விளக்கு தூணுக்கு இருபுறமும், துளசி செடி வைக்கப்படுகிறது. இந்த தூணில் வலது பக்கத்தில், ஶ்ரீசமர்த்த ராமதாஸரின் சிலா வடிவம் சற்றே உயரமான மேடையில் வைக்கப்பட்டுள்ளது.

அனுமன் கோயில் கர்பகிரஹம், சாரங்கபூர், நிஜாமாபாத் மாவட்டத்தில் தெலுங்கானா விளக்கு தூணின் எதிரில் சற்று இருபது அடி தூரத்தில் அமைந்துள்ள ஒரு பதினாறு கால் மண்டபத்தினை பார்க்க முடியும். பிராதன தெய்வமான ஸ்ரீமாருதி இந்த பதினாறு கால் மண்டபதில் வீற்றிருக்கிறார். சுண்ணாம்பு கலவையால் செய்யப்பட்ட ஶ்ரீராம பரிவார சிலைகள் மண்டபத்தின் மேற்பகுதியில் உள்ள அலங்கார வளையத்தில் உள்ளனர். இந்த பதினாறு கால் மண்டபத்தின் இறுதியில் ஶ்ரீமாருதியின் கர்பகிரஹம் அமைந்துள்ளது. அர்ச்சகர்கள் பக்க வாசல் வழியாக கர்பகிரஹத்தை அடைய முடியும். பக்தர்கள் விளக்கு தூண் இருக்கும் இடத்திலிருந்தே ஶ்ரீமாருதியை தங்கு தடையின்றி தரிசிக்க முடியும்.

சாரங்கபூர் அனுமன்

மேற்கு நோக்கிய கர்பகிரஹத்தில் ஶ்ரீமாருதி தெற்கே நேக்கிய வண்ணம் காணப்படுகிறார். மாருதியின் இடது திருப்பாதத்தை சற்றே உயர்த்தி, மடித்து உள்ளது, பக்தர்களின் குறை நீக்க மாருதி ஓடி வருவது போலுள்ளது. இடது தாமரை திருப்பாதம் தரையிலிருந்து சற்றே மேலே உயர்ந்து காணப்படுகிறது. இறைவனின் வலது தாமரை திருக்கால் தரையில் காலூன்றி காணப்படுகிறது. அவரது இடது திருக்கையில் இறைவன் கதையை தாங்கியுள்ளார். அவரது வலது திருக்கையில் சப்ளாவை [பஜனை செய்யும் போது பயன்படுத்தப்படும் இசைக்கருவி] வைத்திருக்கிறார். வலது திருக்கரத்தின் மேல் பகுதியில் அவரின் வால் எழும்பியுள்ளது. உன்னிப்பாக கவனித்தால் ஶ்ரீமாருதி, ஶ்ரீராமரின் நாமத்தில் [ஶ்ரீராம-நாம-அமிருதம்] தன்னையே மறந்து லயித்திருப்பவராக தெரிவார். ஶ்ரீமாருதியின் கண்களிலிருந்து வெளிப்படும் ஒளி, சற்றே திறந்த வாய் உதடுகள், நீண்டு காணப்படும் காதுகள் இவை எல்லாம் ’ராம்மானந்த நிஷ்யந்த கந்தம்’ என்பதில் திளைத்திருப்பவராகவே தெரிவார்.

|| ஶ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராமா ||

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஹனுமான் திருக்கோயில், சாரங்கபூர்

 

அனுபவம்
சாரங்கபூர் க்ஷேத்திரம் இறைவன் மாருதியை பிரார்த்தனை செய்ய உகந்த நிம்மதியான சூழலை வழங்குகிறது. இது பக்தர்களுக்கு மகத்தான இன்பத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கிறது. சாரங்கபூர் ஸ்ரீ மாருதி தரிசனத்திற்கு பின் பக்தர்கள் மிகப்பெரிய திருப்தியை உணர்வது நிச்சயம், மன அமைதியுடன் திரும்புவது தின்னம்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: நவம்பர் 2016
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+