home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

தாணுமலையான் திருக்கோயில், சுசீந்திரம், கன்யா குமரி, தமிழ் நாடு


விஸ்வரூப ஶ்ரீஹனுமார், சுசீந்திரம், கன்யா குமரி, தமிழ் நாடு

திருமதி பா.சௌமியா


தாணுமலயன்

ஸ்தானு-மால்-அயன் திருக்கோயில் கன்யாகுமரியிலிருந்து சுமார் பதிமூன்று கி.மீ. தொலைவிலுள்ள சுசீந்தரத்தில் உள்ளது. இத்திருக்கோயில் மும்மூர்த்திகள் - ப்ரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் இருக்கும் தலமாகும். மூல விக்ரஹத்தின் மேல் பகுதி சிவனையும்[ஸ்தானு], மத்திய பகுதி விஷ்ணுவையும் [மால்], கீழ் பகுதி ப்ரம்மாவையும் [அயன்] குறிக்கும் என்பதால் ஸ்தானு-மால்-அயன் என்பது தாணுமலயன் என்று ஆயிற்று.

கணவர் அத்ரி மகரிஷியின் பெயரில் மனைவி அனுசுயா தேவி கொண்டுள்ள ஒப்பற்ற காதலை சோதனை செய்ய மும்மூர்த்திகள் இங்கு வந்தனர். அதிதிகளான அவர்களுக்கு உணவு பரமார வந்த அனுசுயா தேவிக்கு மும்மூர்த்திகளும் உணவை ஏற்றுக்கொள்ள நிபந்தனை விதித்தனர். அதிதிகளுக்கு உணவு அளிப்பதற்காகவும் அதே சமயம் மும்மூர்த்திகளின் நிபந்தனையையும் ஏற்கவும் அனுசுயா வந்திருந்த மூவரையும் தன் பதிவிரதா சக்தியால் குழந்தைகளாக்கினாள். பின் சேலையில்லமல் மூவருக்கும் உணவு பரிமாரிணாள். இப்படி மும்மூர்த்திகளும் இங்கு வந்ததினால் இந்த க்ஷேத்திரத்திற்கு ’தாணுமலையான்’ க்ஷேத்திரம் என்று பெயர் வந்தது என்பது புராணங்கள்

மூலவர் உருவமில்லா லிங்க உருவில் உள்ளார், இவரே ’தாணுமலயன்’ என்று அழைக்கப் படுகிறார்.

சுசீந்திரம் பெயர் காரணம்

தேவேந்திரன் தனது சாபத்தை போக்கிக் கொள்ள தாணுமலையானை தவமிருந்து பூஜை செய்து விமோசனம் பெற்றான் அதாவது சுத்தமானான் என்பது தலபுராணம். சுசீந்திரம் = ச்சீ [சுத்தமாகுதல்-அப்பழுக்கற்ற நிலை] + இந்திரன் [தேவேந்திரன்]. இன்றும் தேவேந்திரன் நள்ளிரவில் "அர்த்தஜாம" பூஜை இத்திருதலத்தில் செய்வதாக சொல்லப்படுகிறது.

எனது சுசீந்திரம் பயணம்

புகழ்மிகு பிரகாரம், தாணுமலையான் திருக்கோயில், சுசீந்திரம், கன்யா குமரி, தமிழ் நாடு நாகர்கோயிலிலிருந்து கன்யாகுமரி செல்லும் பஸ்ஸில் பயணித்து சுசீந்திரத்தில் இறங்கிக் கொண்டேன். பஸ் நிற்குமிடத்திற்கு அருகில் இருக்கும் பெரிய தோரண வாயில் தாணுமலயான் திருக்கோயிலுக்கு செல்லும் பாதை என்பதை அறிவித்தது. இயற்கை கொஞ்சும் அழகை எப்படி வர்ணிப்பது? உடலை தழுவி செல்லும் மெல்லிய பூங்காற்றும், கண்களுக்கு குளிர்ச்சியை தரும் சுற்றுமுள்ள பசுமையும் கோயிலுக்கு செல்வதற்கான மனதினை அளித்தது. தோரண வாயிலை கடந்து சற்றே தூரத்தில் வலபுறமாக கோயிலின் திருக்குளம். அடேயப்பா எவ்வளவு பெரிய குளம், தண்ணீர் நிரம்பியிருந்தது, குளத்தின் சில படிகளே தெரிந்தன. [தண்ணீர் நிரம்பியிருக்கும் திருக்குளத்தை பார்த்து வெகு நாட்கள் ஆயிற்றல்லவா?] 134அடி உயரமுள்ள மிக கம்பீரமான ராஜகோபுரத்தின் பக்கவாட்டு தோற்றம் நம்மை வரவேற்கிறது. சுசீந்திரம் தலம் திருமூர்த்திகள் தலம் இருந்தும், இங்குள்ள நேடிய ஶ்ரீஹனுமாரின் தோற்றத்திற்கே இக்கோயில் பிரபலம்.

ராஜகோபுரம்

வானளாவி நிற்கும் இந்த ராஜ கோபுரம் ஏழு நிலையும் 134 அடி உயரமுமாக உள்ளது. மிகுந்த கலை நுட்பங்களுடனும் கூடிய ஆயிரக்கணக்கான சுதை சிற்பங்கள் இந்த ஏழு நிலையையும் அலங்கரிக்கிறது. புராணங்களிலிருந்து கருத்து மிக்க வலிய கதைகளை சித்தரிக்கும் சிற்பங்கள் காண, ரசிக்க பல நாட்கள் வேண்டும். சிற்பங்களுக்கு நிறங்கள் பூசாதது அதன் அழகை மேலும் எடுத்து காண்பிக்கிறது. கிழக்கு நோக்கி இருக்கும் ராஜ கோபுரத்தில் காலை வேளையில் சூரியனின் கதிர்கள் பட்டு வெண்மையான சிற்பங்கள் மேலும் பிரகாசமாக தெரிகின்றன. இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட கலர்களால் வரையப்பட்ட மிக அருமையான சித்திரங்கள் கோபுரத்தின் ஒவ்வொரு நிலையிலும் உள்சுவர்களில் பாதுகாப்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

தாணுமலையான் திருக்கோயில்

இத்திருக்கோயில் மிக பழைமையானது. சோழர்கள், சேரர்கள், நாயகர்கள், வேநாடு வம்சத்தினர் என பலர் இத்திருக்கோயிலுக்கு பலவிதத்தில் கைங்கரியம் செய்துள்ளனர்கள். இவர்களின் பங்களிப்பினால் பல தரப்பட்ட கலை உந்நதம் வாய்ந்த வேலைபாடுகள் இத்திருக்கோயிலில் இடம் பெற்றுள்ளது. அலங்கார மண்டபத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பல சுவரங்களில் ஒலி எழுப்பும் இசை தூண்கள், கலை வேலைபாடுகளுடன் கூடிய 1035 தூண்களுடன் கூடிய மிக பெரிய நடன சபை என்று பலவற்றை கூறலாம்.

பதிமூன்று அடி உயரமும் பத்து அடி அகலமும் உள்ள, சுண்ணாம்பு கலவையால் செய்யப்பட்ட மிக நேர்த்தியான நந்தியின் சிலாரூபம் பாரதத்திலேயே மிக பெரிய உருவம் என கூறப்படுகிறது.

நவகிரஹ மேடையின் கூறை, தாணுமலையான் திருக்கோயில், சுசீந்திரம், கன்யா குமரி, தமிழ் நாடு நந்தி சன்னிதிக்கு சற்று எதிரில் நவகிரஹங்களுக்கு சன்னிதி உள்ளது. நவகிரஹ தேவதைகளின் உருவம் சிலாரூபத்தில் கூறையின் உட்புறம் உள்ளது. அந்தந்த நவகிரஹங்களுக்கு நேர் கீழே சிறிய மேடையுள்ளது. பக்தர்கள், அந்தந்த நவகிரஹத்திற்கு இம்மேடையில் தீபம் எற்றி வழிபடுகிறார்கள்.

தாணுமலையான் சன்னிதியை தவிர மற்ற தேவதைகளுக்கும் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. மஹாவிஷ்ணு, உதய மார்த்தாண்ட வினாயகர், வீரபத்திரர்,சித்தபாரீஸ்வரர், இந்திர விநாயகர், பால சுப்பிரமணியம், சித்திர சபா-நடராஜர், வல்லப வினாயகர், தர்மசம்வர்த்தினி, காலபைரவர், கனக துர்க்கா, மஹாதேவா, ஶ்ரீராமா, சாட்சி வினாயகர், தத்தாத்ரேயா என பல சன்னிதிகள் இருக்கின்றன.

மிகவும் பளபளக்கும் அருமையான சிலைகள் கொண்ட தூண்கள் அக்காலத்தின் கலைதிறனை எடுத்துக் காட்டிகின்றது. மூலவர் தாணுமால்யன் சன்னிதி மிக வெகு காலமாக இருந்த பொழுதும், பல இதர சன்னிதிகள் காலப்போக்கில் உருவாக தொடங்கி கோயில் வளாகத்தை மிக பெரியதாக ஆக்கி விட்டது. இருந்தும் இக்கோயிலின் விசேடம் இங்கு ஒரே பிரகாரம் தான். மதுரை, ராமேஸ்வரம் பிரகாரத்துடன் போட்டிக்கு தயார் என்பது போல் அவ்வளவு பெரியது.

ஶ்ரீஆஞ்சநேய மூர்த்தியின் மூர்த்தம்

வடக்கு பிரகாரத்தில் மேற்கு மூலையில் சீதா தேவியின் தனியாக இருப்பதை தர்சிக்கலாம், சற்றே நடந்தால் வலது புறமுள்ள தூணில் ஶ்ரீஆஞ்சநேயர் ஶ்ரீராமரிடம் சீதா தேவியை கண்ட செய்தியை சொல்வது போல் சிற்பத்தை காணலாம். இன்னும் சற்றே வடக்கு பிரகாரத்தில் நடந்து கிழக்கு மூலை வந்தால் ஶ்ரீஆஞ்சநேயரை தர்சிக்கலாம். இங்கு ஶ்ரீஆஞ்சநேயர் விஸ்வரூபத்தில் காட்சி தருகிறார். இவரை நாம் வந்திக்கும் முன், இந்த இருப்பது இரண்டு அடி உயரமுள்ள ஒற்றை கருங்கல்லில் உயிருடன் இருப்பது போல் எப்படி உள்ளார் என்பது தெரிய சற்றே இராமயண காலத்திற்கு செல்வோம்.

ஶ்ரீஆஞ்சநேயரின் விஸ்வரூப தர்சனம் - இராமாயணத்திலிருந்து.

ஶ்ரீஆஞ்சநேயர் ஶ்ரீசீதா தேவியை அசோக வனத்தில் சந்திக்கிறார். சீதா தேவி அவர்கள் தனது துக்கத்தினை தெரிவுபடுத்துகிறார். ஒரு கட்டத்தில் தாயாரின் சோகத்தை பொறுக்க முடியாமல் ஆஞ்சநேயர், கவலைபட வேண்டாம், தாயாரை தான் முதுகில் சுமந்து சென்று ஶ்ரீராமரிடன் சேர்ப்பிபதாக கூறுகிறார். சீதா தேவி அவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து எப்படி இந்த ’அல்பசரீரம்’ கொண்டா? குரங்கு புத்தியாக இருக்கிறதே [கபீஸம்] என்பது போன்று வினவுகிறார். ஶ்ரீஆஞ்சநேயருக்கு இச்சொல் சுடுச்சொல்லாக, அவமானமாக [பரிபவம்] தோன்றியது. தாயாருக்கு தன்னுடைய ஆற்றலை காண்பிக்க வேண்டும் என்னும் எண்ணம் எழுந்தது. அவர் காமரூபி அல்லவா? [காமரூபி என்றால் வேண்டிய உருவை எடுக்க வல்லவர்கள் எனப் பொருள்]. மரத்தில் இருந்து இறங்கி வந்து தனது சரீரத்தை வளரச் செய்தார். வானரங்களில் மிக சிறந்த வானரமான ஹனுமார் மேரு மலையையும் மந்தார மலையையும் ஒத்த பிரகாசத்துடன், தீ ஜ்வாலைகளை ஒத்த ஜ்வலிப்புடனும் காணப்பட்டார். அப்படியாக ஹனுமார் சீதா மாதாவின் முன் நின்றார். வால்மீகி இராமாயணத்தில் சுந்திர காண்டத்தில் வரும் காட்சி இது. ஶ்ரீஹனுமான் இங்கு மட்டுமே விஸ்வரூபம் எடுக்கிறார். இராமாயணத்தில் ஹனுமாரின் விஸ்வரூப தர்சனம் சீதா மாதாக்கு மட்டுமே கிடைக்கிறது. வால்மீகியின் வர்ணனையை பாருங்கள் - "மேரு மலையையும் மந்தார மலையையும் ஒத்த பிரகாசத்துடன், தீ ஜ்வாலைகளை ஒத்த ஜ்வலிப்புடனும்". அப்பபா என்ன உச்சம்! நம்மால் கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாத உச்சம்! அது மட்டும் அல்ல அவரின் பிரகாசத்தையும் அவரிடமிருந்து ஒளிரும் கதிர்களின் திறனும்! அவரின் இவ்ரூபத்தை வார்த்தைகள் இதனை இதற்கு மேல் சொல்ல முடியுமா? அனுபவிக்க வேண்டுமல்லவா?

சுசீந்திரம் ஶ்ரீஆஞ்சநேயர்

விஸ்வரூப ஶ்ரீஆஞ்சநேயர், தாணுமலையான் திருக்கோயில், சுசீந்திரம், கன்யா குமரி, தமிழ் நாடு நாம் கொடுத்து வைத்தவர்கள். வால்மீகியால் கொடுக்கப்பட்ட விவரமான விஸ்வரூபத்தை சுசீந்திரத்தில் நமக்கு கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் சிற்பி. சீதா மாதா பார்த்த அதே ஹனுமாரின் ரூபத்தை இங்கு நாம் காண்பது ஒரு வைபவமே. அங்கு நிற்பது கல்லில் வடிக்கப் பட்ட சிலை என்பது நமக்கு தெரியாது ஶ்ரீஹனுமானாகவே தான் தோன்றுவார் என்பது கண்கூடு அனுபவம். அங்கு அவர் முன் நிற்கும் பொழுது நாம் நம் சுற்றத்தை மறந்து, சுற்றி நடக்கும் விஷயங்களை மறந்து, உலகை மறந்து, ஏன் நம்மையே மறந்து விடுவோம். நம்மால் சாதாரண உல்லாச பிரயாணிகள் போல் பார்த்தோமா நகர்ந்தோமா சென்றோமா என்று இருக்க முடியாது. அவரின் காந்த சக்தி நம்மை இழுக்கும், நம் வேதனைகளை, வேண்டுதலை சொல்லச்சொல்லும், சொல்ல வைக்கும். நம் மனம் இளகுவது நமக்கு புரியும், நரம்புகள் தளர்வது தெரியும்; சஞ்சலங்கள் விலகுவதும் துக்கங்கள் ஓடுவதும் மெல்லப்புரியும். மனம் லேசாவதும், சாந்தாம் நம்மை கவ்வுவதையும் நாம் உணர்வோம். வாழிய நாமங்கள் நம் மனதில் நிறையும்.

தலபுராணம்

இரண்டு விதமான புராணங்கள் சுசீந்திரம் ஶ்ரீஹனுமர் எப்படி வடகிழக்கு மூலையில் பிரதிஶ்டை ஆனார் என்பதாக கூறப்படுகிறது. 1740 ஆண்டின் பொழுது திப்பு சுல்தானின் ஆக்ரமிப்பிலிருந்து காப்பாற்ற பல சிலைகள் ஒளித்து வைக்கப்பட்டன. அச்சமயம் இக்கோயிலிலும் இந்த ஹனுமாரின் சிலையை காப்பாற்ற அதனை மணலில் புதைத்து விட்டனர். புதையுண்ட சிலை சுமார் இருநூறு ஆண்டுகள் புதைந்தே இருந்திருக்கிறது. மக்களால் மறக்கப்பட்ட விசயங்களில் இதுவும் ஒன்று.

பின்பு திருவனந்தபுரம் ராஜா சித்திரை திருநாள் [1924-1949] ஆட்சி காலத்தில், அவரது ஸமஸ்தான தேவோஸம் போர்ட்க்கு காரியதரிசியாக இருந்தவர் திரு எம்.கே.நீலகண்ட அய்யர் என்பவர். அவர் சுசீந்தரம் கோயிலுக்கு 1930ஆம் ஆண்டு வந்திருந்த போது கோவிலை பிரதக்ஷணம் செய்கையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இடறி விழுந்துவிட்டார். நல்ல சமமான இருந்த இடத்தில் ஏன் விழுந்தார் என்பது தெரியவில்லை. முறைப்படி ’ப்ரசனம்’ பார்க்கப்பட்டது. ’ப்ரசன’த்தில் பூமிக்கு அடியில் ஏதோ தெய்வசக்தி வாய்ந்த சிலை இருக்கும் என காணப்பட்டது. தோண்டியதில் ஹனுமாரின் இந்த விக்ரஹம் கிடைத்தது. ப்ரசனத்தில் கண்ட படி இச்சிலையை வடகிழக்கு மூலையில் பிரதிஷ்டை செய்தார்கள்.

இரண்டாவது புராணம் : முன்பு ராஜகோபுரம் இருக்கும் இடத்தில் நிலைபடிகள் மட்டுமே இருந்தது, நிலைகள் [கோபுரம்] இல்லை. திருவனந்தபுரம் ஶ்ரீமூல திருநாள் அவர்கள் ஆட்சியில் [1885-1924] இருந்த பொழுது அவர் பேச்சிபாறை நீர்தேக்கம் கட்டினார். அப்பொழுது சுசீந்திரம் திருக்கோயிலுக்கு ராஜகோபுரமும் கட்டுவது என தீர்மானிக்கப்பட்டது. அப்பொழுது கட்டுமான வேலைகள் துவங்கிய போது, பூமிக்கு அடியிலிருந்து ஶ்ரீஹனுமாரின் இந்த சிலை வெளிக்கொணரப்பட்டது. பின்பு வடகிழக்கு மூலையில் இச்சிலையை பிரதிஷ்டை செய்வதென்பது முடிவாயிற்று.

சுசீந்திரம் விஸ்வரூப ஶ்ரீஆஞ்சநேயர்

இந்த க்ஷேத்திரத்தில் ஶ்ரீஆஞ்சநேயர் ஆஜனுபாகுவாக இருபத்தி இரண்டு அடி உயரமாக அஞ்சலி ஹஸ்தனாக நின்ற திருமேனியாக இருக்கிறார். சிலாரூபம் ஒவ்வொரு அணுவும் மிக அற்புதம் காண காண பரவசமூட்டும். அவரின் அழகையும் கம்பீரத்தையும் வர்ணிக்க வார்த்தைகள் கிடையாது. கூர்ந்து கவனித்தால் இந்த மகானுபாவர் சீதா மாதாவிற்கு விஸ்வரூப தரிசனம் தருகிறார் என்பது புரியும். அவ்வளவு கம்பீரத்திலும், கர்வம் கலக்காத செயல், அவர் சற்றே சாய்ந்து-தளர்ந்து-தாழ்மைபாவத்தில் இருப்பதிலிருந்து புரியும். அவருடைய முக பாவத்தை கவனித்தால் அதில் சற்று வெட்கம் கலந்திருப்பது தெரியும். இவை எல்லாம் கூட்டி பார்க்கையில் அவர் சீதா மாதாவின் முன் நிற்கிறார் என்பது விளங்கும். இப்பொழுது புதிதாக வடிக்கப்படும் ஹனுமார் சிலைகளுக்கு இவர் முன்னோடியாக இருக்கிறார் என்பது உண்மை. ஆனாலும் இந்த க்ஷேத்திரத்தில் தான் அவர் உண்மையில் விஸ்வரூபம் தருகிறார் என்பதும் மறுக்க முடியாத மற்றொரு உண்மை.

 

திருக்கோயில் இருப்பிடம் :     தாணுமலையான் திருக்கோயில், சுசீந்திரம்

 

அனுபவம்
சுசீந்திரம் விஸ்வரூப ஹனுமாரின் தரிசனம் நமது எல்லா கவலைகளையும் களையும், துக்கங்களை விரட்டும், புதுதெம்புடன் செயல்பட நம்முள் ஊக்கம் ஊரும். வாருங்கள் அவரின் அருளாசிகளை பெற.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: ஜனவரி 2017
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+