home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

கங்கையும் படிதுறைகளும், வாரணாசி, உத்திரப்பிரதேசம்


ஸ்ரீ படே ஹனுமான், ஹனுமன் காட், வாரணாசி, உத்தரப்பிரதேசம்

ஜீகே கௌசிக்


வாரணாசி

'வாமன புராண'த்தின் படி, வருணா மற்றும் அசி, ஆதி புருஷனின் உடலில் இருந்து தோன்றிய இரண்டு ஆறுகள். இரண்டு நதிகளுக்கிடையில் அமைந்துள்ள நிலப்பரப்பு 'வாரணாசி'. இது அனைத்து புனித யாத்திரை மையங்களிலும் புனிதமானது - பழங்காலத்தில் இருந்தே இந்நகரத்தில் பல ரிஷிகள் மற்றும் புனிதர்கள் அறிவொளி-அநுபூதி பெற்றுள்ளனர். இந்நகரம் கிமு 1800 ஆண்டுகளுக்கு மேல், மக்கள் தொடர்ந்து வாழும் பண்டைய நகரங்களில் ஒன்றாகும். வாரணாசி நகரில் மக்கள் வேதகாலத்திலிருந்து தொடர்ந்து பல்லாண்டுகளாக வசித்து வருகின்றனர் என்பதை வாரணாசிக்கு அருகில் உள்ள அக்தா (Aktha) மற்றும் ராம்நகரை ஆராய்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் இந்நகரில் மக்கள் கி.மு. 1800 ஆம் ஆண்டிலிருந்தே வாழ்ந்து வந்ததை உறுதிப்படுத்துகின்றனர். இந்த மாபெரும் நகரத்தால் பாதுகாக்கப்பட்ட முந்தைய கலாச்சாரம் கடந்த காலத்தின் மகத்துவத்திற்கு உறுதியான சான்றாகும். கங்கைக் கரையில் அமைந்த இந்நகர், இந்து சமயத்தினரின் ஆன்மிகத் தலைநகராகவும், அனைத்து இந்துக் கலைகளின் காப்பகமாகவும் விளங்குகிறது. இதிகாசம் மற்றும் புராணங்களால் மகிமைப்படுத்தப்பட்டு, மதத்தால் புனிதப்படுத்தப்பட்ட இது எப்போதும் ஏராளமான யாத்ரீகர்களையும் ஆத்மாவைத் தேடுவோரையும் ஈர்த்துள்ளது. இந்த நகரம் 'காசிபுரி' என்று புராணங்கள் கூறுகின்றன, 'காஸ்' என்ற வார்த்தைக்கு ’பிரகாசம்’ என்றும் பொருள்.

இந்த க்ஷேத்திரத்தின் புனிதத்தன்மை

பிர்லா மந்திர், பிஹெச்யூ, வாரணாசி, உ.பி.யில் சமர்த் மற்றும் சிவாஜியின் பளிங்கு செதுக்குதல் கங்கை நதி அதன் 2,525 கி.மீ. தொலைவு போக்கில், வடக்கு நோக்கி [உத்தர்வாஹினி] இங்கு வாரணாசியில் மட்டுமே பாய்கிறது, அதனால்தான் இத்தலம் புனிதமாக கருதப்படுகிறது. சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறை இந்த புனித நகரத்திற்கு வருவதில் பெருமிதம் கொள்கிறார்கள், கங்கை நதியில் புனித நீராடுகிறார்கள். மறைந்த பெற்றோருக்கு இத்தலத்தில் கங்கை கரையில் தர்பணம் செய்வதை தர்மத்தைப் பின்பற்றும் மக்கள் ஒரு பாக்கியமாக கருதுகின்றனர். முக்தி தரும் ஏழு நகரங்களில் வாரணாசியும் ஒன்று. இந்த புனித க்ஷேத்திரத்தில் கடைசியாக சுவாசித்தால், ஒருவர் பிறப்பு-மறுபிறப்பு என்னும் வாழ்க்கைச் சுழற்சியில் இருந்து விடுவிப்பார் என்பது நம்பிக்கை.

தங்கள் வாழ்நாளை இங்கு கழித்த பல புனிதர்கள் இருக்கிறார்கள். இந்த க்ஷேத்திரம் சிறப்பான கல்வி தலமாக விளங்குகிறது. எனவே ஒவ்வொரு பண்டிதரும் இங்கு வந்து இங்கு இருக்கும் கல்வியில் சிறந்த பண்டிதர்களுடன் வாதாடி தங்கள் கோட்பாட்டின் உயர்வை நிரூபிப்பதில் பெருமைக் கொள்கிறார்கள்.

வாரணாசியில் கங்கையில் ஒவ்வொரு ஸ்நான கட்டத்திலும் [காட்] ஸ்நானம் செய்வது புனிதமாக கருதப்படுகிறது. இந்த புனித கங்கையோரம் அமைந்துள்ள இத்தலத்தில் தங்கள் கடைசி மூச்சை விடவும், இத்தலத்தில் கங்கையில் தினமும் நீராடவும் இங்கு வந்து வாழும் மக்கள் உள்ளனர்.

வாரணாசியின் ஸ்நான கட்டங்கள் [காட்]

வாரணாசியின் தெற்கில் கங்கையுடன் அசி நதி கலக்கிறது. வடக்கில் வருணா நதி கலக்கிறது. இவ்விரு சங்கமத்தின் இடையில் அமைந்திருக்கும் ஸ்நான கட்டங்களில் ஸ்நானம் செய்வது புனிதமானவைகளாக கருதப்படுகிறது. எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுவதாக கருதபடிகிறது. இதற்கு முன்னர் ஸ்நான கட்டங்களுக்கு அசி காட், ஹரிச்சந்திர காட் போன்ற பெயர் இருந்தது. ஆனால் நாளடைவில் இக் கட்டங்களுக்கு அங்கு வாழ்ந்த மகான்கள், அங்கு அமைந்து இருக்கும் கோயில்கள் அவைகளின் பெயரில் அழைக்கப்படலானது[உ-ம் துளசி காட், ஓம்காரேஸ்வர் காட்].

ஒரு காலகட்டத்தில் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த பல மகாராஜாக்கள் தங்கள் இராச்சியத்திலிருந்து வாரணாசிக்கு வரும் மக்களுக்கு விருந்தினர் மாளிகைகளை கங்கை கரையோறம் கட்டிணார்கள். இவ்வாறு ஸ்நான கட்டங்கள் மகாராஜாக்களின் பெயரிலோ அல்லது அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் ராஜ்யத்திலோ மறுபெயரிடப்பட்டது.

ஹனுமான் காட்

ஹரிச்சந்திர காட் அருகே ஹனுமான் காட் உள்ளது. பதினேழாம் நூற்றாண்டின் படிவம் ‘கீர்வானபாதமஜ்ஜரி’ என்பதின் படி இந்த காட்டின் பண்டைய பெயர் ராமேஸ்வரம் காட் என்பதாகும். ஆனால் இன்று ஹனுமான் காட் என்ற பெயர் தங்கியுள்ளது. இங்குள்ள ’அகாடா’ வில்[குஸ்தி சண்டை பயிலும் இடம்] இருக்கும் ‘படே அனுமன்’ இருப்பதால் இன்று இந்த காட் ஹனுமான் காட் என்று அழைக்கப்படுகிறது.

மகான் சமர்த்த ராமதாஸ்

படே ஹனுமான் மந்திர், ஹனுமான் காட், வாரணாசி, உ.பி. மகாராஷ்டிராவைச் சேர்ந்த துறவி மகான் சமர்த்த ராமதாஸ் அவர்களை தனது குருவாக சத்ரபதி சிவாஜி ஏற்றுக் கொண்டார். சனாதன ஆட்சியை மீண்டும் ஸ்தாபிக்க அவர் கருவியாக இருந்தார். சத்ரபதி வீர சிவாஜி, ஶ்ரீசமர்த்த ராமதாஸரின் வழிகாட்டுதலின் கீழ் பல பகுதிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிந்தது. முகலாய ஆட்சியாளர் ஔரங்கசீப் தனது குடிமக்களில் பெரும்பாலோரை இஸ்லாமிய நம்பிக்கைக்கு மாற்றியிருந்தார், மேலும் மற்ற சனாதன வழிபாட்டுத் தலங்களையும் அழித்தார். முகலாய ஆட்சியாளர் ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்கு எதிராகவும், இந்த நிலத்தின் சனாதன தர்மத்தைப் பாதுகாப்பதற்காகவும் சத்ரபதி வீர சிவாஜி எழுந்த காலம் அது.

சமர்த்த ராமதாஸின் போதனைகள் அவருக்கு இதற்கு உத்வேகம் அளித்தது. ஸ்ரீ ராமரின் அதீத பக்தராக சமர்த்த ராமதாஸ் தனது பங்கில் ஸ்ரீ ராம பக்தியை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரசங்கள் செய்து வந்தார். நாட்டில் பல்வேறு இடங்களுக்கு நீண்ட பயணத்தை மேற்கொண்ட அவர், அதர்மத்திற்கு எதிராக மக்கள் ஒன்றுபட வேண்டிய அவசியத்தையும் வற்புறுத்தினார்.

முகலாயர்களின் ஆரம்ப காலகட்டத்தில் ஸ்ரீ துளசிதாஸ் சனாதன தர்மத்தின் வெவ்வேறு பிரிவுகளுக்குள் இருந்த சகிப்பின்மையை அகற்றுவதில் கவனம் செலுத்தினார். சமர்த்த ராமதாஸர் இச்சமயத்தில் சனாதன தர்மம் எதிர்கொள்ளும் ஆபத்தை முன் வைத்து வெவ்வேறு குழுக்களை ஒன்றிணைவதின் முக்கியத்தை எடுத்துரைத்தார். அதற்காக பாடுபட்டார்.

வாரணாசி என்னும் காசியில் மகான் சமர்த்த ராமதாஸர்

பாரதம் முழுவதும் பரவலாகப் பயணம் செய்த சமர்த்தர், சித்ரகூடத்தை விஜயம் செய்த பிறகு வாரணாசிக்கு பயணம் செய்தார். அவரைத் தொடர்ந்து சித்ரகூடம் முதல் வாரணாசி வரை பல மகான்களும், சன்யாசிகளும் வந்தனர். ஒழுக்கம், ‘சூர்ய நமஸ்காரம்’ மற்றும் உடல் பயிற்சி இவைகளுக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தார், இவைகளை தினசரி வாழ்க்கையில் எல்லோரும் கடைபிடிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தினார். அவர் தனது தொண்டர்களுடன் வாரணாசியில் முகாமிட்டுக் கொண்டிருந்தார், அவர்கள் வழக்கமாக கங்கையில் குளித்துவிட்டு நகரத்தின் மூலை முடுக்கு எல்லம் சென்று ‘ஸ்ரீ ராம நாம’ மகிமையைப் பரப்பி, அதர்மத்திற்கு எதிராக மக்கள் ஒன்றுபடும்படி கேட்டுக்கொண்டார்கள்.

ஸ்ரீ துளசிதாஸ் நிறுவிய ’ஸ்ரீ சங்கட மோச்சன் ஹனுமான் மந்திர்’ சென்று வழிப்பட்டு விட்டு தனது தினசரி பிரசங்கத்தை ஊரில் தொடங்குவது என்பது அவரது வழக்கம். வாரணாசியின் பண்டிதர்கள் சமர்த்திற்கு நகரத்திலிருந்தே பல தொண்டர்கள் இருப்பதைக் கண்டனர், எனவே அவரது உரையில் என்ன சிறப்பு இருக்கிறது, எதனால் மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் அறிய விரும்பினர். எனவே இவர்கள் ‘தர்ம மகாசபா’ நிகழ்ச்சியில் கலந்துரையாட வருவதற்கு சமர்த்தற்கு அழைப்பு விடுத்தனர்.

காசி தர்ம மஹாசபையில் சமர்த்தர்

படே ஹனுமான், ஹனுமான் காட், வாரணாசி, உ.பி. அன்று எப்பொழுதும் போல் சமர்த்தர் சங்கட மோசன ஹனுமார் கோயிலுக்கு சென்றார். அங்கு பெரிய பாறையில் ஶ்ரீஹனுமாரின் சித்திரத்தை வரைந்தார். பூஜைக்கு பின் அதனை அவரது சீடர்கள், கல்யாண்ஜி உட்பட தலையில் தூக்கிக் கொண்டனர். சமர்த்தர் ஹரிச்சந்திரா காட்டை நோக்கிச் சென்று ஸ்ரீ ஹனுமர் வரையப் பட்டிருந்த பாறையை ஆலமரத்தின் கீழ் மேடையில் வைத்தார். அவர்கள் ஶ்ரீஹனுமாரை பிரார்த்தனை செய்தனர், பின்பு நகரத்தில் ‘பிக்ஷா’வுக்காக தினசரி வழக்கம் போல் செல்வதற்கு முன் பஜனைகளைப் பாடினர்.

அந்த நேரத்தில் தர்ம மகாசபாவின் பிரதிநிதி ஒருவர் கலந்துரையாடலுக்கான அழைப்பை வழங்க வந்தார். அடுத்த நாள் தர்ம மகாசபாவிலிருந்து சமர்த்தரை சந்திக்க வந்த பண்டிதர்கள் தெய்வீக பாடல்களுடன் அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அவரது கருத்துக்கள், காலத்தின் தேவை மற்றும் சனாதன தர்மத்தை மீண்டும் நிறுவ வேண்டியதன் அவசியத்தை சமர்த்தர் காசி பண்டிதர்களிடம் எடுத்துரைத்து அவர்களின் சம்மதத்தை பெற முடிந்தது.

காசி க்ஷேத்திர படே ஸ்ரீ ஹனுமான்

ஹரிச்சந்திர காட்டில் கங்கைக் கரையில் ஸ்ரீ சமர்த்தர் நிறுவிய ஸ்ரீ ஹனுமர் இன்று படே ஹனுமான் என்று அழைக்கப்படுகிறார். படே ஹனுமான் இன்று அனுமன் காட்டின் ஜூனா அகாடாவில் இருக்கிறார்.

ஸ்ரீ சமந்தர் ஸ்ரீ ஹனுமரின் விக்ரஹத்தை நிறுவிய ஹரிச்சந்திர காட்டின் பகுதி இன்று ஹனுமன் காட் என்று அழைக்கப்படுகிறது. இந்த தெய்வத்தின் செல்வாக்கு மற்றும் சக்தி அத்தகையது, ஸ்நான கட்டமே "ஹனுமான் காட்" என்று பெயர் மாற்றப்பட்டது. அவர் படே ஹனுமான் என்று அழைக்கப்படுகிறார், இவரின் உருவம் மட்டும் பெரிதல்ல, புகழ், சக்தி மற்றும் ஆசீ வழங்கும் வள்ளள் தன்மை எல்லாமே மிகப்பெரியவை தான்.

ஸ்ரீ ஹனுமார் உருவம் மிகப்பெரியதாக இருக்கிறது. அவரின் உடல் முழுவதும் செந்தூரம் தடவப் பட்டுள்ளது. அவரது வலது கை "அபய முத்திரை" தரித்து அவரது பக்தர்களுக்கு ஆசீர்வாதம் கொடுக்கிறார், அதே நேரத்தில் அவரது இடது கையில் ஒரு கதையை வைத்துள்ளார். சுழன்று சுழன்று மேலே செல்லும் அவரது வால் மிகவும் பிரதானமாக காணப்படுகிறது. ஸ்ரீ ஹனுமனின் மிகப்பெரிய வாலும் அதன் வடிவமைப்பும், இறைவனுக்கு ஒரு மர்மமான மந்திர சக்தி இருப்பதாகக் கூறுகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     " ஸ்ரீ படே ஹனுமான், ஹனுமன் காட், வாரணாசி, உத்தரப்பிரதேசம்"

 

அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தில் ஹனுமான் காட் வாருங்கள். ஸ்ரீ சமார்த்தரால் நிறுவப்பட்ட படே ஹனுமரிடம் பிரார்த்தனை செய்யுங்கள். பக்தர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்தவொரு கடினமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள நம்பிக்கையையும் தைரியத்தையும் பெறுவது உறுதி.

தமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+