home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

கண்‍ஆஸ்பத்திரி ஆஞ்சநேயர் திருக்கோயில், மின்டோ கண் ஆஸ்பத்திரி, பெங்களூரூ


கண்‍ஆஸ்பத்திரி ஆஞ்சநேயர் திருக்கோயில், மின்டோ கண் ஆஸ்பத்திரி, பெங்களூரூ

ஜீ.கே.கௌசிக்


பெங்களூரூ கோட்டையும் விக்டோரியா மருத்துவமனையும்

ஆஞ்சநேயர் திருக்கோயில், மின்டோ கண் ஆஸ்பத்திரி, பெங்களூரூ திப்பு சுல்தானின் ஆட்சி காலம் வரை பெங்களூரூ கோட்டை ஆட்சியாளர்களின் தலமையமாக இருந்தது. திப்புவின் வீழ்ச்சிக்கு பிறகு ஆங்கிலேயர்கள் கோட்டையை பராமரிப்பதில் அக்கறைக் காட்டவில்லை மைசூர் ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்தது. கோட்டையின் ஒரு பகுதியில் விக்டோரியா மருத்துவமனையை நிறுவினார்கள். மைசூர் மஹாராணி கெம்ப நஜ்ஜமணி - வாணிவிலாஸ சன்னிதானா அவர்கள் ஆங்கில மகாராணி விக்டோரியாவின் அறுபது ஆண்டு ஆட்சியை குறித்து 1897ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் நாளன்று இம் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டினார். 1900ஆம் ஆண்டு டிசம்பர் எட்டாம் நாள் மருத்துவமனை "விக்டோரியா மருத்துவமனை" என்று பெயரிடப்பட்டு செயல்பட துவங்கியது. நூற்று நாற்பது படுக்கையுடன் ஆரம்பித்த இம்மருத்துவமனை தற்பொழுது ஆயிரம் நோயாளிகளுக்கான வசதிகளுடன் இயங்கி வருகிறது. நகரத்தின் மைய்யபகுதியில் இருப்பதால் மக்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. இங்கு இயங்கும் "பெங்களூரு மருத்துவ கல்லூரி" இந்தியாவின் தலைசிறந்த மருத்துவ கல்லூரிகளில் ஒன்று.

மின்டோ கண் மருத்துவமனை

சிக்பெட்டில் சிறிய மருந்தகமாக 1896ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கண் சிகிச்சைசாலை இது. சாம்ராஜ் பேட்டில் இன்று இருக்கும் இடத்திற்கு 1913ஆம் ஆண்டு நூறு படுக்கை வசதியுடன் கொண்ட மருத்துவமனையாக மாற்றப்பட்டது. 1994ஆம் ஆண்டு முன்னூறு படுக்கை வசதிகளுடன் இது விரிவுபடுத்தப்பட்டது. பல நூதன வசதிகளுடன் இயங்கும் கண் மருத்துவமனை இது.

சாமராஜ் பேட்டை

பேட்டைகளுடன் துவங்கப்பட்ட பெங்களூர் பல விதத்தில் பெருகிவிட்டதால், பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் பெங்களூரை விரிவு படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு புதிய மனைப்பிரிவுகள் உருவாக்கப்பட்டது. அப்படி அமைக்கப்பட்ட விரிவாக்கங்களில் முதலாவதாக உருவாக்கப்பட்ட பேட்டை இது. இது திப்புவின் கோடை அரண்மனையின் மேற்கில் கே.ஆர்.மார்கெட்டுக்கும் பஸவன்குடிக்கும் இடையில் சிறப்பாக திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது. 1892ஆம் ஆண்டு ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளில் வடிவமைப்பை பூர்த்தி செய்தார்கள். 1894ஆம் ஆண்டு மரணம் எய்திய மைசூர் மகாராஜா திரு சாமராஜேந்திர உடையார் அவர்களின் பெயரில் சாமராஜ் பேட்டை என்று அழைக்கப்படுகிறது.

1920ஆம் ஆண்டு ஆவணங்களின் படி சாமராஜ் பேட்டை இணையாக அமைக்கப்பட்ட ஐந்து முக்கிய வீதிகளையும், குறுக்காக அமைக்கப்பட்ட ஒன்பது குறுக்கு வீதிகளையும் கொண்டது. ஆல்பர்ட் விக்டர் வீதி என்று அழைக்கப்பட்ட முதல் மெய்ன் இன்று அலூர் வெங்கடராவ் வீதி என்று அழைக்கப்படுகிறது. இரண்டாவது மெய்ன் ஆஞ்சநேயர் கோயில் வீதி, மூன்றாவது மெய்ன் ராமேஸ்வரா கோயில் வீதி, நான்காம் மெய்ன் சென்ட்ரல் பாங்க் வீதி, ஐந்தாவது மெய்ன் புட்டண்ணா செட்டி வீதி என்று அழைக்கப்படுகிறது.

கோட்டை பகுதியில் ஆஞ்சநேயர்

1689ஆம் ஆண்டு முகலாயார்கள், மைசூர் மகாராஜா திரு சிக்கதேவராயாவிற்கு பெங்களூரை குத்தகைக்கு விட்டார்கள். மகாராஜா கோட்டை பகுதியை தெற்காக விரிவுபடுத்தி அங்கு ஶ்ரீவெங்கடரமண திருக்கோயில் கட்டினார். திப்புவின் கோடை அரண்மனையை ஒட்டி ஶ்ரீஆஞ்சநேயருக்கு ஒரு கோயில் இருந்தது என்பதை பழைய ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. அதனால் சாம்ராஜ் பேட்டையின் இரண்டாம் மெய்ன் ஆஞ்சநேயர் கோயில் வீதி என்று பெயரிடப்பட்டுள்ளது. இவ்வீதிக்கு பெயர் கொடுத்த ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில் இன்று மின்டோ கண் மருத்துவமனைக்கு எதிர்புறம் காணப்படுகிறது.

மின்டோ கண் மருத்துவமனைக்கு எதிர்புறம் ஆஞ்சநேயர் கோயில்

ஆஞ்சநேயர், மின்டோ கண் ஆஸ்பத்திரி, பெங்களூரூ மின்டோ கண் மருத்துவமனைக்கு எதிர்புறம் அமைந்துள்ள ஶ்ரீஆஞ்சநேயருக்கான இத்திருக்கோயில், திப்புவின் கோடை அரண்மனைக்கு மேற்காக இருக்கிறது. சுல்தான் பேட்டை என்பது இவ்விடத்தின் பழையப் பெயராகும். கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள், அங்கு பணிபுரியும் பலர், சாம்ராஜ் பேட்டைவாசிகள் என பலராலும் பூஜிக்கப்படுபவர் இவர். பல சமயங்களில் குடும்பத்துடன் சாம்ராஜ் பேட்டைவாசிகள் இக்கோயிலுக்கு வந்து பிரார்த்தனை செய்வது வழக்கம்.

ஆஞ்சநேயர் கோயிலின் தலபுராணம்

கண் மருத்துவமனைக்கான கட்டிட வேலை கோட்டை பகுதியில் தொடங்கிய பொழுது, திரு சோனப்பன் என்பவருக்கு ஶ்ரீஆஞ்சநேயர் விக்ரஹம் கிடைத்தது. அவர் அவ்விக்ரஹத்தை அருகிலேயே ஸ்தாபனம் செய்து சிறிய கூரை வேய்து பிரார்த்தனை செய்து வந்தார். அந்த கால கட்டத்தில், உடுப்பி அட்முரு மடத்தை சார்ந்த ஶ்ரீ விட்டலதாஸாசாரியார் என்பர் மந்திராலயத்திற்கு வழிபாட்டுக்கு சென்றிருந்தார். அந்த க்ஷேத்திரத்தில் அவருக்கு பெங்களூருக்கு சென்று ஶ்ரீமுக்கியபிராண தேவரை [ஆஞ்சநேயர்] பூஜை செய்யுமாறு ஶ்ரீஇராகவேந்திரரின் தெய்வீக கட்டளை கிடைத்தது. அவர் பூஜை செய்ய வேண்டிய ஶ்ரீமுக்கியபிராணதேவரின் தரிசனமும் கிடைத்தது. ஶ்ரீ விட்டலதாஸாசாரியார் அவர்கள் பெங்களூருக்கு வந்து இரயில் நிலயத்திற்கு அருகாமையில் இருக்கும் "தோதப்ப சத்திரத்தில்" தங்கியிருந்தார். ஆனால் அவருக்கு ஶ்ரீஇராகவேந்திரரால் பூஜை செய்யச்சொன்ன ஶ்ரீஆஞ்சநேயரை எப்படி காண்பது என்பது தெரியவில்லை. சில நாட்கள் கழித்து சத்திரத்தில் தங்கியிருந்த ஒருவர், இவரை தன்னுடன் வருமாரும், தனக்கு தெரிந்து ஆஞ்சநேயர் விக்ரஹம் ஒன்று சரியான பூஜைகள் நடக்காமல் இருப்பதாகவும் கூறினார். ஶ்ரீ விட்டலதாஸாசாரியார் அவருடன் சென்றார். அவர் மின்டோ கண் மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றார். அங்கே அவர் காட்டிய ஶ்ரீமுக்கியப்ராணரை கண்டதும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏன்னென்றால் அவர் தனக்கு ஶ்ரீஇராகவேந்திரரால் மந்திராலயத்தில் காண்பிக்கப் பட்ட ஶ்ரீமுக்கியப்ராணரே தான். அன்று முதல் ஶ்ரீ விட்டலதாஸாசாரியார் அவர்கள் இங்கு ஶ்ரீமுக்கியப்ராணரை மாத்வ சம்பிரதாய முறைபடி பூஜை செய்யலானார். நாளடைவில் அருகாமையில் இருக்கும் வியாபாரிகளின் உதவியால் உயரமான மேடை கட்டி அங்கு ஶ்ரீஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்தார்கள். ஶ்ரீஆஞ்சநேயரின் புகழ் பரவி மக்கள் உதவியால் கோயிலும் விரிவடைந்தது.

இன்று நாம் காணும் கற்கோயில் மைசூர் திவானாக இருந்த ஶர் மிர்ஸா முகமத் ஸ்மைல் அவர்கள் கட்டியது. அருகில் இருக்கும் வியாபாரிகள் கோயில் கோபுரம் கட்டினார்கள், ஶ்ரீமாதவராவ் அவர்கள் கோயில் மணி வழங்கினார். சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்ட தலைவர்களான திரு நேரு, திரு ராஜாஜி, பாபு ராஜேந்திர பிரசாத் மற்றும் மவுண்பாட்டன் முதலியோர் இக்கோயிலுக்கு வருகை தந்திருக்கிறார்கள்.

ஶ்ரீ ஆஞ்சநேயர்

பிரபாவளியுடன் கூடிய ஒரே கல்லில் வடிக்கப்பட்ட விக்ரஹம். பிரபு வடக்கு நோக்கி இருக்கிறார். மேற்கு நோக்கி நடப்பது போல் காணப்படுகிறார். அவரது தாமரை பாதங்களில் தண்டை மற்றும் நூபுரம் காணப்படுகிறது. இரவணனின் மகன் அக்ஷ்யகுமார் ஆஞ்சநேயரின் பாதத்தின் கீழ் காணப்படுகிறான். அவரது திடமான தொடையை கச்சம் கவ்வி பிடித்துள்ளது. அவரது இடையை அலங்காரமான ஆபரணம் அலங்கரிக்கிறது. அவரது மார்பினில் இரண்டு மணி மாலைகள் அணிந்துள்ளார், ஒன்றில் பதக்கம் காணப்படுகிறது. கழுத்தை ஒட்டி ஒரு மாலை காணப்படுகிறது. முப்புரி நூல் அணிந்துள்ளார். இடையில் வைத்துள்ள கங்கணம் அணிந்துள்ள இடது திருக்கரத்தில் சௌகந்திகா புஷ்பத்தின் தண்டினை பிடித்துள்ளார். புஷ்பம் அவரது இடது தோளுக்கு மேல் தெரிகிறது. பிரபுவின் வலது திருக்கரத்தை ’அபய முத்திரை’யில் வைத்துள்ளார். அவரது சிரசுக்கு மேல் அவரது வால் உயர்ந்து காணப்படுகிறது. வளைவுடன் முடியும் வாலின் முடிவில் மணி அலங்கரிக்கிறது. காதுகளை குண்டலங்கள் அலங்கரிக்கின்றன. அழகாக சீவி முடியப்பட்ட கேசத்தை ’கேச பாந்தம்’ என்னும் அணிகலம் அணிந்துள்ளார். குளுமையான பார்வைக்கொண்ட அவரது கண்கள் பிரகாசமாக ஒளிவீசுகிறது.

விசேடங்களும் பூஜைகளும்

மாத்வ சம்பிரதாயத்தை பின்பற்றி பூஜைகள் செய்யப்படுகின்றன. பிரபுவிற்கு அபிஷேகம் செய்யும் பொழுது ஹரிவாயு ஸ்துதி சொல்லப்படுகிறது. சந்திரமான்ய சிரவண, கிருத்திகா, தனுர் மாதங்களில் விசேடமான பூஜைகள் செய்யப்படுகிறது. ஶ்ரீஹனுமத் ஜயந்தியும், ஶ்ரீராம நவமியும் மிகவும் விமர்சையாக கொண்டாடபடுகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     கண்‍ஆஸ்பத்திரி ஆஞ்சநேயர் திருக்கோயில், பெங்களூரூ

 

அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தின் பிரபுவின் முன் கைகூப்பி நின்று பிராத்தனை செய்யுங்கள். ’நிசப்தம்’ என்பதின் பொருள் புரியும்படியான ஒரு அனுபவம் நம் இதயத்தை தழுவுவதை நம்மால் உணரமுடியும்.  

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: டிசம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+