home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஸ்ரீ கங்காஜி, துளசி பவன், துளசி காட், வாரணாசி


ஶ்ரீ துளசிதாஸர் பிரதிஷ்டை

பால ஹனுமார் திருக்கோயில், துளசி காட், வாரணாசி, உத்திரபிரதேசம்

ஜீ.கே.கௌசிக்


புகைப்படம் உதவி: திரு.இரகுநாதன், சென்னை
வாரணாசி

ஸ்ரீ பாலா ஹனுமான் கோயில், துளசி காட், வாரணாசியில் ஸ்ரீ துளசிதாஸ்ஜியின் வாழ்நாள் ஓவியம் 'வாமன புராண'த்தின் படி, வருணா மற்றும் அசி, ஆதி புருஷனின் உடலில் இருந்து தோன்றிய இரண்டு ஆறுகள். இரண்டு நதிகளுக்கிடையில் அமைந்துள்ள நிலப்பரப்பு 'வாரணாசி'. இது அனைத்து புனித யாத்திரை மையங்களிலும் புனிதமானது - பழங்காலத்தில் இருந்தே இந்நகரத்தில் பல ரிஷிகள் மற்றும் புனிதர்கள் அறிவொளி-அநுபூதி பெற்றுள்ளனர். இந்நகரம் கிமு 1800 ஆண்டுகளுக்கு மேல், மக்கள் தொடர்ந்து வாழும் பண்டைய நகரங்களில் ஒன்றாகும். வாரணாசி நகரில் மக்கள் வேதகாலத்திலிருந்து தொடர்ந்து பல்லாண்டுகளாக வசித்து வருகின்றனர் என்பதை வாரணாசிக்கு அருகில் உள்ள அக்தா (Aktha) மற்றும் ராம்நகரை ஆராய்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் இந்நகரில் மக்கள் கி.மு. 1800 ஆம் ஆண்டிலிருந்தே வாழ்ந்து வந்ததை உறுதிப்படுத்துகின்றனர். இந்த மாபெரும் நகரத்தால் பாதுகாக்கப்பட்ட முந்தைய கலாச்சாரம் கடந்த காலத்தின் மகத்துவத்திற்கு உறுதியான சான்றாகும். கங்கைக் கரையில் அமைந்த இந்நகர், இந்து சமயத்தினரின் ஆன்மிகத் தலைநகராகவும், அனைத்து இந்துக் கலைகளின் காப்பகமாகவும் விளங்குகிறது. இதிகாசம் மற்றும் புராணங்களால் மகிமைப்படுத்தப்பட்டு, மதத்தால் புனிதப்படுத்தப்பட்ட இது எப்போதும் ஏராளமான யாத்ரீகர்களையும் ஆத்மாவைத் தேடுவோரையும் ஈர்த்துள்ளது. இந்த நகரம் 'காசிபுரி' என்று புராணங்கள் கூறுகின்றன, 'காஸ்' என்ற வார்த்தைக்கு ’பிரகாசம்’ என்றும் பொருள்.

வாரணாசி மகான்கள்

தங்கள் வாழ்நாளை இங்கு கழித்த பல புனிதர்கள் இருக்கிறார்கள். இந்த க்ஷேத்திரம் சிறப்பான கல்வி தலமாக விளங்குகிறது. எனவே ஒவ்வொரு பண்டிதரும் இங்கு வந்து இங்கு இருக்கும் கல்வியில் சிறந்த பண்டிதர்களுடன் வாதாடி தங்கள் கோட்பாட்டின் உயர்வை நிரூபிப்பதில் பெருமைக் கொள்கிறார்கள். சமீப காலத்தினை சார்ந்தவர்களில் ஶ்ரீகோஸ்வாமி துளசிதாஸர், ஸ்ரீகபீர்தாஸ், ஶ்ரீராமநாத்ஜீ இவர்களை குறிப்பிடலாம். இவர்கள் எழுதி விட்டுச் சென்ற பல படைப்புகள் தத்துவங்களில் உயர்ந்தவைகளாகவும், படிக்க படிக்க இனிக்கும் செல்வங்களாக இருக்கின்றன. இவர்களில் ஶ்ரீகோஸ்வாமி துளசிதாஸரின் படைப்புகள் எல்லோருக்கும் சுலபத்தில் புரியும் மாதிரியான மொழியில் நடையில் எழுதப்பட்டுள்ளதால் மிகவும் பிரபலமானவை. அதே சமயம் பண்டிதர்களும் வியக்கும் வண்ணம் தத்துவங்களுக்கு விளக்கம் பொதிந்துள்ளது.

துளசிதாஸர்

துளசிதாஸர் ஒரு ஹனுமார் பக்தர் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவர் இயற்றிய "ஹனுமான் சாலீஸா" என்னும் ஹனுமாரை குறித்த நாற்பது ஈரடிகள் கொண்ட பாடலை அனைவரும் அறிவார்கள். உலகெங்கும் ஹனுமார் பக்தர்களால் ஓதப்படும் காப்பு இது. ஹனுமாரின் மீது பக்தி நிறைவை இதனை ஒதூம் பக்தர்கள் யாவரும் உணர்வார்கள், அநுபவிப்பார்கள் என்பது உண்மை. லக்ஷகணக்கான பக்தர்கள் இதனை படிக்கிறார்கள் என்றால் இப்பாடலின் மகிமையை சொல்லவும் வேண்டுமா?

அஸி காட்

வாரணாசியின் தெற்கு கடைசியில் அமைந்துள்ள காட் அஸிகாட். வாரணாசியின் முதல் காட் இது. அஸி நதி இங்கு கங்கையுடன் சங்கமிக்கிறாள். மிகவும் பிரபலமான, பெரிய, புனிதமான இந்த காட் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐந்து காட்டாக பிரிக்கப்பட்டது. தற்சமயம் இவை அஸிகாட், ரீன்வாகாட், துளசிகாட், பைதானிகாட் என்று பெயரில் அழைக்கப்படுகிறது.

ஶ்ரீதுளசிதாஸர் கங்கை கரையில் இந்த காட்டில் தனது கடைசிகாலத்தை கழித்துள்ளார். முன்னே கூறியது போல் அவர் வாழ்ந்த இடத்தை சுற்றியுள்ள கங்கை கரையை அவர் நினைவாக "துளசி காட்" என்று பெயரிட்டு அழைக்கலாயினார்கள். ராஜா தோடர் மால் அவர்கள் துளசிதாஸரிடம் அன்பும் பக்தியும் கொண்டவர். அவர் துளசிதாஸருக்காக கங்கை கரையில் ஒரு பெரிய மாளிகையை கட்டிக்கொடுத்தார்.

ராஜா தோடர் மால்

ஸ்ரீ கங்காஜி, துளசி பவன், துளசி காட், வாரணாசி தோடர் மால் ஒரு கணக்கு எழுதும் குமாஸ்தாவாக தனது வாழ்க்கையை தொடங்கினார். சுல்தான் ஷேர் ஷா சூரியின் நற்மதிப்பை பெற்று அரசில் பெரிய பொறுப்பு வகிக்கும் பதவிக்கு உயர்ந்தார். சுல்தானின் ஆட்சிக்கு பிறகு முகலாயர்கள் ஆதிக்கத்தின் பொழுதும் இவருக்கு உயர்ந்த பதவி கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். 1560 ஆண்டு முதல் அக்பர் சக்ரவர்த்தியின் ஆட்சியில் நிதி துறைக்கு தலைவராக இருந்து நிதி துறையில் பல சீர்திருத்தங்கள் செய்தார். ஸம்ஸ்கிருதம், பாரசீக மொழி, இந்தி ஆகிய மொழிகளில் வல்லமை பெற்றவராக இருந்தார். இவர் ஶ்ரீமத் பாகவதத்தை பாரசீக மொழியில் மொழிமாற்றம் செய்துள்ளார்.

சனாததன தர்மத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையுள்ள இவர் தர்மத்தின் பிரிதிநிதியான செயல்பட்டார். 1194இல் குதுப் உதீனால் தகர்த்தப்பட்ட காசி விஸ்வநாதர் திருக்கோயிலை இவர் திரும்பவும் கட்டினார். 1585இல் அக்பரின் நிதி அமைச்சரான தோடர் மாலால் திரும்ப கட்டப்பட்ட காசி விஸ்வநாதரின் திருக்கோயிலை திரும்பவும் 1669இல் ஔரங்கசீப் திரும்பவும் தகர்த்தப்பட்டது. ஔரங்கசீபால் தகர்த்தப்பட்ட திருக்கோயிலை திரும்பவும் இராணி அகில்யா பாய் ஹோல்கர் 1776இல் திரும்பவும் கட்டினார் என்பது வரலாறு.

துளசி தாஸரின் நண்பரும் பக்தருமான ராஜா தோடர் மால், துளசிதாஸர் தனது கடைசிகாலத்தை காசியில் கங்கை கரையில் கழிக்க விரும்புவதாக கூறியதும், அவருக்காக மாளிகை ஒன்றை கட்டிக்கொடுத்தார். தோடர் மால் 1589அம் ஆண்டு இயற்க்கை எய்தினார்.

துளசிதாஸரின் கடைசி காலம்

அகாரா கோஸ்வாமி துளசிதாஸ், துளசி காட், வாரணாசி துளசிதாஸர் முன்பும் காசியில் வாழ்ந்துள்ளார், ஆனால் எல்லாரையும் போல் அவர் காசியில் தனது கடைசி காலத்தை கழித்து காசியில் கடைசி மூச்சைவிட விரும்பினார். அவர் காசியில் முக்கிய இடங்களான பஞ்சகங்கா காட், ஹனுமான் பாதக் [பாலம்], கோபால் மந்திர் ஆகிய இடங்களில் வசித்துள்ளார். முடிவில் அவரது நண்பரும் பக்தருமான ராஜா தோடர் மால் இவருக்காக அஸிகாட்டில் இடம் அளித்தார்.

இந்த இடம் கங்கை நதிகரையில் அமைந்துள்ளது, கங்கையையும் கங்கையின் அமைதியான ஓட்டத்தையும், அதில் எழும்பும் மெல்லிய ஓசையும் இனிதே ரசித்த வண்ணம் எத்தனை நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம் அப்படிப்பட்ட இடத்தை தோடர் மால் இவருக்காக தேர்ந்தெடுத்து மாளிகையை கட்டி கொடுத்தார். ஸ்ரீ ராமர் மற்றும் அவரது பக்தர் ஸ்ரீ ஹனுமான் ஆகியோரின் தீவிர பக்தராக இருந்த புனிதர் துளசிதாஸர் அவர்கள் கவிதைகள் இசைப்பதிலும், சத்சங்கத்திலும் தனது நேரத்தை செலவிட்டார்.

துளசிதாஸர் அவர்கள் துளசி காட்டில் தனது கடைசி மூச்சை விட்ட செய்தியும் அவரின் இயற்கை எய்திய காலம் பற்றியும் அவரது சமகால பக்தர் ஶ்ரீபேனி மஹாதேவ்தாஸ் என்பவர் வரைந்துள்ள கவிதையில் தெளிவாகிறது.

संवत सोलह सौ असी असी गंगके तीर।
श्रवण श्यामा तीज शनि तुलसी तज्यौ शरीर॥

சம்வத ஸோலஹ ஸை அஸி கங்கே தீரே| ஶ்ரவண ஶ்யாமா தீஜ் ஶனி துலஸீ தஜ்யௌ ஶரீர||

1680 சிரவண மாதம் கிருஷ்ண பக்ஷம் திரிதிகை தனது சரீரத்தை கங்கையின் அஸியில் [அஸி காட்டில்] விட்டார் என்று பொருள் படும்

மனதிலும், நினைவிலும், பேச்சிலும், நடத்தையிலும், விடும் ஒவ்வொரு மூச்சிலும் ஶ்ரீராமனையே கண்ட இம்மகான் 1623 கி.பி.யில் இயற்கை எய்தினார்.

அகாரா கோஸ்வாமி துளசிதாஸ், துளசி காட்

அன்று தோடர் மால் அவர்களால் கட்டப்பட்ட பவனம், இன்று அகாரா [அகாடா] கோஸ்வாமி துளசிதாஸ் என்று அழைக்கப்படுகிறது. கி.பி.1968ஆம் ஆண்டு அவர் கைபட எழுதிய "ஶ்ரீராமசரித மானஸ்" ஓலைசுவடிகள், மற்றும் அவர் கங்கையில் செல்ல உபயோகித்த படகின் ஒரு பகுதி ஆகியவை சிறிது காலம் முன் வரை பக்தர்கள் பார்வைக்கு இங்கு வைக்கப் பட்டிருந்தது. வேதம், ஸம்ஸ்கிருதம் ஆகியவை கற்று கொடுக்க இங்கு பாடசாலை நடத்தப்படுகிறது. கட்டிடத்தின் மேல் பகுதியில் உள்ள ஶ்ரீராம் மந்திரில் அவரது சமகாலத்தில் தீட்டப்பட்ட அவரது ஓவியம் உள்ளது.

ஶ்ரீதுளசி தாஸர் அவர்கள் இந்த பவனத்தில் பால்கனியில் அமர்ந்து, அமைதியாக ஓடும் கங்கையையும் அதன் சலசலப்பிலும் நெகிழ்து பல கவிதைகள் புனைந்துள்ளார். கங்கை உற்சாகம் ஊட்டி அவரிடமிருந்து கவிதைகளாக வெளிவந்தாள் என்ரு சொன்னால் மிகையாகாது.

ஶ்ரீ பால ஹனுமார் திருக்கோயில், துளசி காட், வாரணாசி அவரது இக்கால கட்டத்தில் அவர் ஹனுமாருக்காக மிகவும் வசிகரமான பல திருக்கோயில்கள் நிறுவினார். அவர் ஹனுமாரிடம் அசைக்க முடியாத பக்தி வைத்திருந்தார் என்பதையும் சரித்திர புகழ் பெற்ற இக்கோயில்கள் பறை சாற்றுகிறது. அப்படி அவரால் நிறுவப்பட்ட ஹனுமார் கோயில்களில் ஒன்று தான் துளசிகாட்டில் அகாரா ஶ்ரீகோஸ்வாமி துளசிதாஸில் உள்ள ஶ்ரீபால ஹனுமார் திருக்கோயில்.

ஶ்ரீ பால ஹனுமார் திருக்கோயில்

ஶ்ரீதுளசிதாஸருக்கு ஶ்ரீபால ஹனுமாரை பூஜிக்க எழுந்த அகதூண்டலின் பெயரில் ஒரு நல்ல நாளில் அவர் ஸ்ரீ பாலா ஹனுமனை இங்கு பிரதிஷ்ட்டை செய்தார். அவர் இந்த பவனில் தங்கியிருந்த காலத்தில் ஶ்ரீபால ஹனுமாருக்கு பூஜைகள் செய்வார். பால ஹனுமர் தட்சினமுகி- தெற்கு நோக்கி இருப்பதால் அவரை பிரார்த்தனை செய்வது மிகவும் சிறப்பானது என்பர். காசியில் இவ்வனுமார் “குஃபா ஹனுமார்” [குகை ஸ்ரீ ஹனுமார்] என்ற பெயரில் மிகவும் பிரபலம். ஸ்ரீ ஹனுமனுக்கான இந்த கோயில் கட்டிடத்தின் கீழ் மட்டத்தில் இருக்கும்போது, கட்டிடத்தின் மேல் மட்டத்தில் ஸ்ரீ சீதா மற்றும் ஸ்ரீ லட்சுமணருடன் ஸ்ரீ ராமருக்கான கோயில் உள்ளது. இங்கு கிழக்கு, வடக்கு மற்றும் மேற்கு நோக்கியுள்ள ஸ்ரீ ஹனுமார்களும் உள்ளனர்.

பிரார்த்தனைகளும் விழாக்களும்

பக்தர்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்காக இங்கு வருகிறார்கள், ஶ்ரீராமசந்திர மானஸ் பாடம் படிக்கிறார்கள். அவர்அவர் விருப்பத்திற்கு ஏற்ப பால காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்திர காண்டம் என்று படிப்பார்கள். பிரிதி செவ்வாய் கிழமையும், சனி கிழமையும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் இந்த பால ஹனுமார் கோயிலுக்கு பிரார்த்தனை செலுத்த வருகிறார்கள். ஶ்ரீதுளசிதாஸ் ஜயந்தி, ஶ்ரீஹனுமார் ஜயந்தி, ஆகிய விழாக்கள் பக்தியை மையமாக கொண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

கோயில் காலை ஐந்து மணியிலிருந்து மதியம் பன்னிரெண்டு மணி வரையும், பின் மாலை மூன்று மணி முதல் இரவு பத்து மணி வரையும் திறந்திருக்கும். காலை ஐந்தரை மணிக்கும் இரவு எட்டரை மணிக்கும் ஆரத்தி நடைப்பெறும்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     துளசி காட், வாரணாசி

 

அனுபவம்
கங்கா மற்றும் துளசி மிகவும் புனிதமானவை. ஶ்ரீராமரும் ஹனுமாரும் பிரிக்க முடியாதவர்கள். துளசிதாஸ் மற்றும் ஹனுமார் இருவரும் மிக உயரிய ராமதாஸர்கள். இந்த க்ஷேத்திரத்திற்கு வாருங்கள், இந்த இணக்கங்களின் நல்லுணர்வையும் ஆசிகளையும் அனுபவியுங்கள்.  

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: டிசம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+