home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

ஶ்ரீ யல்கூரேஷ் [அனுமான்] திருக்கோயில், யல்கூர், பீஜப்பூர் மாவட்டம், கர்நாடகா

டாக்டர் ஶ்ரீமதி கௌசல்யா


யல்கூர்

கிருஷணா நதியில் மேல் கட்டப்பட்டுள்ள அல்மாடி அணை கர்நாடகாவில் பீஜப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நீர் மின் உற்பத்தி நிலயம் அமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் மங்களூருக்கும் மகராஷ்ட்ரா மாநிலம் சோளாபூருக்கும் இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலை எண் 13ல் இவ்விடம் இருக்கிறது. அணைக்கட்டினையும் அதை சுற்றியுள்ள அருமையான அழகான காட்சிகளையும் ரசிக்க பலர் வருவதுண்டு.

அணை அல்மாடி கிராமத்தில் இருக்கிறது. பஸ்ஸில் வருபவர்கள் நிடிகுண்டியில் இறங்க வேண்டும். அணைக்கட்டிலிருந்து சுமார் இரண்டு மூன்று கி.மீ. தொலைவில் இருக்கிறது யல்கூர் கிராமம். கிருஷ்ணா நதியின் மறு கரையில் இக்கிராமம் இருக்கிறது. இது முத்தேபிஹால் தாலுக்காவில் இருக்கிறது. யல்கூரின் விசேடம் அங்கு இருக்கும் ஶ்ரீஹனுமாருக்கன திருக்கோயில்.

திருக்கோயில்

கிராமத்தில் நுழையும் போதே மூன்று அடுக்கு இராஜ கோபுரம் பக்தர்களை வரவேற்கும். தொலை தூரத்திலிருந்தே இராஜ கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள யோக ஆஞ்சநேயரின் சிற்பம் தெரியும். இராஜ கோபுரத்தின் கீழிருந்தே பக்தர்கள் மூலவரை தர்சிக்கலாம். அவ்வளவு விசாலமான மூர்த்தி.

பக்தர் இராஜகோபுரம் வழியாக சென்றால் பெரிய மண்டபம், மேலே தகரத்தால் ஆன கூறை வேயப்பட்டுள்ளது. அழகான கற்கள் பதிக்கப்பட்ட தரை. பின் நீண்ட பெரிய மண்டபம். மண்டபத்தில் முகப்பில் அழகான வேலைபாடுகளுடன் கூடிய அலங்கார வளைவுள்ளது. வளைவின் இருபக்கமும் இரு துவாரபாலகர்கள். இரண்டு யானை சிலைகளும் உள்ளது. மண்டபத்தின் மேலே உள்ள வளைவில் ஶ்ரீராம தர்பார் காரை சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது. அவ்வளைவின் இருபுறமும், ஶ்ரீ ஹனுமார் ஒருபுறம் சஞ்சீவி மலையுடனும், மறுபுறம் சிவ லிங்கத்துடனும் காணப்படுகிறார்.

சுற்றி வர அகலமான பிரதக்ஷண பாதையுள்ளது. இடது புறம் கோயில் அலுவலகம், மடப்பள்ளி இருக்கிறது. வலம் வரும் பொழுது விமான தர்சனம் செய்யலாம். மகராஷ்ராவில் காணப்படும் கோயில் விமானத்தை ஒட்டிய வடிவத்தில் அமைந்துள்ளது. கர்பகிரஹத்தின் வெளி சுவரில் ஶ்ரீஇராமயணத்திலிருந்து சில காட்சிகளும், ஶ்ரீமாத்வாசாரியாரின் சித்திரமும் வரையப்பட்டுள்ளது.

தல புரணம்

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அயோத்தியிலிருந்து வனவாசத்திற்கு சென்ற காலத்தில் பாரத தேசம் முழுவதும் பயணம் செய்திருந்தார். தனது பதினான்கு ஆண்டு வனவாச காலத்தின் போது அவர் வடக்கு, கிழக்கு, விந்தியாவின் கீழ் பகுதி, மேற்கு மற்றும் பின்னர் பாரதத்தின் தெற்கு என்று பாரதம் முழுவதும் பார்த்தார். அத்தகைய பயணத்தின் போது அவர் இப்போது "யல்கூர்" என்று அழைக்கப்படும் இந்த இடத்திற்கும் விஜயம் செய்துள்ளார். இந்த இடம் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ளது, இறைவன் தனது வனவாச காலத்தில் சிறிது காலம் இங்கு கழித்திருந்தார்.

இந்த இடம் ஏழு கிராமங்கள் என்று பொருள்படும் ஏழு + ஊர் என்பதிலிருந்து “யல்கூர்” என்ற பெயரைப் பெற்றது. தல புராணத்தில் குறிப்பிட்டுள்ள ஏழு கிராமங்கள் நாகச்சம்பிகா, சந்திரகிரி, அலலா டைனி, யலகுரு [யல்கூர்], கச்னகுட்டே [காஷினகுந்தி], பூதிஹாலா, மசுதி].

பாரதத்தின் இந்த பிராந்தியத்தில் ஶ்ரீஹனுமார் ஒவ்வொரு கிராமத்திலும் கிராம தெய்வமாக கொண்டாடப்படுகிறார். ஒவ்வொரு கிராமத்திலும் ஸ்ரீ ஹனுமனுக்காக ஒரு கோயில் கிராம எல்லையில் இருப்பது ஒரு வழக்கம். ஆனால் இந்த ஏழு கிராமங்களும் ஒன்றாக இணைந்து யல்கூரில் ஏழு கிராமத்திற்கும் பொதுவாக அனுமனுக்கு ஒரே ஒரு கோயில் மட்டுமே உள்ளது என்பது சுவாரஸ்யமான விசயம். இது ஸ்ரீ ராமரின் விருப்பபடி செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

கலியுகம்

கலியுகத்தில் உருவ வழிப்பாட்டில் நம்பிக்கையில்லாதவர்களால் சனாதன தர்மம், அதனை சார்ந்த கோயில்கள், தெய்வ விக்ரஹங்கள் எல்லாம் மிகுந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த கால கட்டத்தில் தெய்வ விக்ரஹங்களை மண்ணிலோ அல்லது நீர் நிலையத்திலோ மறைத்து வைப்பதும், கோயில் சிலைகளை காப்பாற்ற பெரிய மறைப்பு சுவர் எழுப்பதும் வழக்கமாக இருந்தது.

அந்த காலகட்டத்தில், கோவிந்தராஜ கரே [தற்பொழுது கோனி கரே] என்னும் கிராமத்தில் ஶ்ரீ வெங்கடேஸ்வருக்கும் எல்லையில் அனுமாருக்கும் கோயில் இருந்தது. கலவரமான அக்காலகட்டத்தில் ஶ்ரீஹனுமாரின் சிலையை ஶ்ரீவெங்கடேஸ்வர் கோயிலில் எடுத்து சென்று, இரண்டு சிலைகளையும் சுவர் எழுப்பி மறைத்து வைத்தனர்.

நிலைமை சீர் ஆன பிறகு, கோயில்கள் ஆக்கிரமிக்கப்படாது என்று மக்கள் நம்பிக்கை கொண்டனர். மீண்டும் சிலைகளை புனர்பிரதிஷ்டை செய்து பூசிக்க வேண்டி கார்யங்கள் ஆரம்பிக்க பட்டன. ஶ்ரீ ஹனுமார் கோயில் அர்ச்சகர் ஶ்ரீஹனுமாரை புனர்பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினார். சிலையை மறைவிலிருந்து எடுக்கும் போது, அர்ச்சகரின் கவனக்குறைவினால் சிலை உடைந்து விட்டது. தான் சரியாக கவனமாக இல்லாததாலும் உபயோகப்படுத்த சரியான கருவிகளை சேகரிக்காமலும் அத்தகைய பணியைத் தொடங்கியதற்காக அவர் மனமுடைந்து போனார்.

ஒன்றாக பிணைந்த அதிசயம்

அதே இரவில், உடைந்த சிலையை இன்றைய யல்கூருக்கு எடுத்து வர அர்ச்சகருக்கு தெய்வீக வழிகாட்டல் கிடைத்தது. மற்றும் உடைந்த சிலை துண்டுகளை சரியாக மூடிய அறையில் வைக்க உத்தரவு வந்தது. ஏழு நாட்களுக்கு அர்ச்சர்கர் மூடிய கதவின் வெளியில் இருந்து பூஜை செய்யும்படியும் கட்டளை. இந்த ஏழு நாள் காலகட்டத்தில் கதவுகளை திறக்க கூடாது என்றும் கூறப்பட்டது. உடைந்த சிலை துண்டுகளை இந்த இடத்திற்கு [யல்கூர்] கொண்டு வந்து சரியான உருவத்தில் செய்து வைத்தார் அர்ச்சகர். கதவுகள் மூடப்பட்டன. இறைவனின் உத்தரவின் படி கதவுக்கு வெளியிலிருந்து பூஜைகள் செய்யப்பட்டன. மனிதர்களுக்கே உரிய மனத்தில் உதிக்கும் சிந்தனை - உண்மையில் இப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதான சந்தேகம். இதற்கு விதிவிலக்கில்லா அர்ச்சகர் அவருக்கும் இச்சந்தேகம் வந்தது. ஏழு நாட்கள் பொறுத்திராத அர்ச்சகர் மூடிய கதவுகளுக்குள் என்ன நடக்கிறது என்பதை அறிய ஆர்வம் இருந்தது. ஆர்வத்தை அடக்க முடியாத் அர்ச்சகர் ஶ்ரீஹனுமாரைப் பார்க்க கதவைத் திறந்தார். அவரது ஆச்சரியத்திற்கு அவர் உடைந்திருந்த சிலையின் துண்டுகள் ஒன்றாக பிணைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். ஆனால் கீழ் பகுதிகளில் உள்ள துண்டுகள் இன்னும் ஒன்றாக பிணைக்கப்படவில்லை என்பதையும் அவர் கவனித்திருந்தார்.

சில நாட்களுக்குப் பிறகு, கிருஷ்ணா நதியிலிருந்து தண்ணீரைக் கொண்டு அபிஷேகம் செய்தபின் தெய்வத்திற்கு பூஜை தொடங்க வேண்டும் என்று அர்ச்சகருக்கு மற்றொரு தெய்வீக வழிகாட்டல் வழங்கப்பட்டது. அக்காலத்தின் பெரிய பண்டிதர்களைக் கலந்தாலோசித்த பின்னர், ஶ்ரீஹனுமாரை புனர் பிரதிஷ்ட்டை செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. பகவான் புனர்பிரதிஷ்ட்டை செய்யப்பட்டார்.

ஶ்ரீயல்கூரீஸ்வர்

ஶ்ரீயல்கூரீஸ்வர் ஏழு கிரமங்களுக்கும் கிராம தேவதையாக ஶ்ரீராமரால் நியமிக்கப்பட்ட ஶ்ரீ ஹனுமார் யல்கூர் கிராமத்தில் இன்று புனர்பிரிதிஷ்டைக்கு பின் பூஜிக்கப்படுகிறார். இன்றும் பகவானின் சிலையில் சில பகுதிகள் இணையப்படாததை காணலாம். மக்கள் அவரை ஶ்ரீயல்குரீஸ்வர் என்றோ ஶ்ரீயல்கூரிஷ் என்றே அழைக்கின்றனர்.

ஶ்ரீயல்கூரிஷ்

இறைவன் யல்குரேஷ் ஹனுமானின் தரிசனம் பக்தர்கள் கண்களுக்கு விருந்து. ஹனுமார் மூர்த்தம் சுமார் ஏழு அடி உயரத்தில் பிரமாண்டமாக இருக்கும் அர்த சிலை என்னும் புடைப்பு சிலையாக வடிக்கப்பட்டுள்ளார். பிரமாண்டமாக இருக்கும் அதே நேரத்தில் கண்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவராக காட்சி தருகிறார். விஷ்ணுவின் ‘தசாவதாரத்தை சித்தரிக்கும் புடைப்பு சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள வெள்ளி ‘திருவாச்சி’. அமைதியான தோற்றமுடைய ‘பிரசன்னா வதனம்’, ஒளிரும் பெரிய கண்களால் மேலும் அழகை கூட்டுகிறது. பிரபு தனது தோள்களைத் தொடும் பெரிய குண்டலம் அணிந்திருப்பதைக் காணலாம். புஜத்தில் கேயூரமும் மணிக்கட்டில் கங்கணமும் அணிந்த அவரது வலது திருக்கரத்தினால் பக்தர்களுக்கு ’அபய முத்திரை’ காட்டி ஆசிகள் வழங்குகிரார்கள். அவரது இடது இடுப்பில் வைத்திருக்கும் இடது திருக்கரத்தில் சௌகந்திகா மலரின் தண்டை பிடித்துள்ளார். பரந்த மார்பினை பதக்கங்களுடன் கூடிய அழகிய மாலைகள் அலங்கரிக்கிறது. அவரது இடது கால்களுக்குக் கீழே ஒரு அரக்கனை அழுத்திய நிலையில் காணப்படுகிறான். பிரபுவின் நீண்ட வால் அவரது தலைக்கு மேலே உயர்ந்து, அவரின் இடது கால்களுக்கு அருகில் தரையைத் தொட்ட வண்ணம் இருக்கிறது.

பகவான் யல்கூரேஷுக்கு பூஜைகள்

தெய்வீக வழிகாட்டுதலின் கீழ் முதல் பூசாரி ஆரம்பித்தபடி, இன்றும் பூசாரி கிருஷ்ணா நதிக்குச் சென்று, குளித்துவிட்டு, அபிஷேகம் செய்வதற்கு நதி நீரைக் கொண்டு வருகிறார். பிற்பகலில் இந்த அபிஷேகம் செய்யப்படுகிறது, இது "மகாபூஜா" என்று அழைக்கப்படுகிறது. இந்த மஹாபூஜையின் போது பஞ்சாம்ருதம் அபிஷேகம், பால் அபிஷேகம் முதலியன செய்யப்படுகிறது. அபிஷேகத்திற்குப் பிறகு இறைவன் குங்குமத்தால் அலங்கரிக்கப் படுகிறார். ஆபரணங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்படுகிறார். இறைவனுக்கு பின்னர் நைவேத்யம் செய்துவைக்கப்படுகிறது, பின்னர் இந்த மகா-ஆரத்தி செய்யப்படுகிறது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

ஸ்ரீ ராம நவமி, குடி படுவா, ஹனுமத் ஜெயந்தி போன்ற உட்சவங்கள் இந்த கோயிலின் ஆண்டு விழாக்கள். ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி நாளில் ‘தூலா உட்சம்’ இறைவனுக்கு செய்யப்படுகிறது. கார்த்திக் மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

உத்தரதிமடத்தின் கோசாலா

ஸ்ரீ உத்தரதிமடம் நிர்வாகத்தில் கோ சாலா பராமரிக்கப்படுகிறது. இது ஸ்ரீ யலகூரேஷ் கோயிலுக்குப் பின்னால் உள்ளது. தற்போது நாலு ஏக்கர் நிலம் இரண்டு கிணறு கிணறுகள் கொண்ட கோசாலாவில் சுமார் 35 மாடுகள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஶ்ரீ யல்கூரேஷ் திருக்கோயில், யல்கூர், பீஜப்பூர்

 

அனுபவம்
இந்த க்ஷேத்திரத்திற்கு வருகை ஒருவரின் வாழ்க்கையில் பெரிய விஷயங்களைக் கொண்டுவருவது உறுதி. யல்கூரேஷ் பிரபுவின் தரிசனம் மற்றும் அவர் தனது பக்தருக்கு பொழியும் பெரிய கடாக்ஷம் ஒருவரின் வாழ்க்கையில் அற்புதங்களைச் செய்யும் என்பது உறுதி.  

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: ஜனவரி 2021


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+