home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

ரங்க விலாஸ் மண்டபம், ஶ்ரீரங்கம், தமிழ்நாடு


ஶ்ரீவீர ஆஞ்சநேயர், ரங்க விலாஸ் மண்டபம், ஶ்ரீரங்கம், தமிழ்நாடு

ஜீ.கே.கௌசிக்


ஆழ்வார்கள்

வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர். திருமாலுக்கு பக்தர்கள் கணக்கில் அடங்கார், இருப்பினும், அடியார்கள் அனைவரும் பன்னிரண்டு மகான்களை ஆழ்வார்கள் என போற்றுவர். இவர்கள் அனைவரும் ஜாதிக்கு அப்பாற்பட்டவர்கள். இறைவனின் பத்ம சரணங்களை அடைவதற்கான ஒரே வழி உயர்ந்த பக்தி என்று சொல்வதற்கு இதுவே போதுமானது. இந்த புனிதர்களின் பக்தி, வேதாந்த மற்றும் தத்துவ படைப்புகள் வைணவ மதத்தைப் பின்பற்றுபவர்களால் பாடப்படுகின்றன. இந்த புனிதர்களின் படைப்புகளில் பெரும்பாலானவை தமிழில் உள்ளன.

ஶ்ரீரங்கம் ஶ்ரீரங்கநாதர் திருக்கோயில்

ஶ்ரீ திருப்பாணாழ்வார் திருமாலின் எட்டு ஸ்வயம் வியக்த க்ஷேத்திரங்களில் ஶ்ரீரங்கம் முதன்மையானது. இக்கோயில் நூற்று எட்டு வைணவ திவ்ய தேசங்களில் முதலாவதாகவும், தலமையானதாகவும் மிகவும் முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. இந்த கோயில் திருவரங்க திருப்பதி, பெரியகோயில், பூலோக வைகுண்டம், போக மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. வைணவ மொழியில் "கோயில்" என்ற சொல் இந்த கோவிலை மட்டுமே குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பன்னிரண்டு ஆழ்வார்களில் பதினொன்று ஆழ்வார்கள் இத்திருதலத்தின் ஶ்ரீரங்கநாதரை துதிபாடியுள்ளார்கள். இவர்களில் திருப்பாணாழ்வார் இத்திவ்ய தேச ஶ்ரீரங்கநாதரை மட்டுமே பாடியுள்ளார். இவர் பாடியுள்ள பத்து பாக்களும் வைணவ சித்தாந்தத்தின் திரட்டு என்று கூறுவர். இவர் ஶ்ரீரங்கநாதனுடன் ஒன்று அற கலந்தார் என்பது விசேடம்.

ஶ்ரீ திருப்பாணாழ்வார்

திருப்பாணாழ்வார் அவர்கள் திருச்சிராபள்ளி அருகிலுள்ள உறையூரை சேர்ந்தவர். தமிழ் கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர். இவரை மகாவிஷ்ணுவின் ஶ்ரீவத்ஸத்தின் அவதாரம் என்பர்.

பண் வாசிப்பவர் என்பதால் இவருக்கு திருபாணாழ்வார் என்பது பெயராயிற்று. உரையூர் அருகில் உள்ள திருக்கோழி என்னும் கிராமத்தில் இவர் பாணர் என கூறப்படும் குலத்தினை சேர்ந்த தம்பதியர்களால் வளர்க்கப்பட்டவர். யாழ் வாசித்து தங்கள் இஷ்ட தெய்வத்தினை பாடுபவர்கள் பாணர்கள்.

ஶ்ரீ திருப்பாணாழ்வாரின் பெரிய பெருமாளின் பக்தி

ஶ்ரீரங்கத்தில் உள்ள ஶ்ரீரங்கநாதரை பெரிய பெருமாள் என்றும் அழைப்பர். அவரிடம் அதீத பக்தியுடையவர் திருப்பாணாழ்வார். பாணர் குலத்தவர் என்பதால் அவர் காவிரி நதியின் இப்புறமிருந்த படியே, ’ரங்கவிமானத்தை’ பார்த்து அரங்கன் மீது கவி பாடுவார். ஆசார அனுஷ்டானங்களை மதிக்கும் திருப்பாணாழ்வார் அரங்கனின் ஆசாரமான பூஜையை தான் பங்க படுத்தாமல் இருக்க காவிரி நதியை கடந்து ஶ்ரீரங்கம் செல்வதில்லை. கரையின் இப்புறமிருந்தபடியே ஶ்ரீ ரங்கநாதரை சேவிப்பதை வழக்கமாக கொண்டார்.

ஶ்ரீ திருப்பாணாழ்வாரின் மீது பெரிய பெருமாளின் கருணை

ஶ்ரீ திருப்பாணாழ்வார் சன்னிதி,ரங்க விலாஸ் மண்டபம், ஶ்ரீரங்கம், தமிழ்நாடு ஶ்ரீ ரங்கநாதருக்கு திருமஞ்சன தீர்த்தம் காவிரியிலிருந்து எடுத்துச் செல்வது பழக்கம். தலைமை அர்ச்சகர் ஶ்ரீலோக சாரங்கர் வழக்கம் போல் நீர் எடுக்க காவிரி வந்தார். அங்கு திருப்பாணாழ்வார் தன்னை மறந்த நிலையில் அரங்கனின் நினைவில் மூழ்கியிருந்தார். சாரங்கர் இவரை விலக சொன்னது அவருக்கு எட்டவில்லை. மெய்மறந்த நிலையில் அரங்கனுடன் ஒன்றி இருந்த பாணரின் கவனத்தை ஈர்க்க நினைத்து சாரங்கர் அவர் மீது சிறிய கல்லை எறிந்தார். தவறி அவர் நெற்றியில் பட்டு இரத்தம் வழிந்தது. இயல்புக்கு வந்த பாணர் தான் அரங்கனின் திருமஞ்சனத்திற்கு தடங்கலாக இருந்து விட்டோமே என வருந்தி அங்கிருந்து அகன்றார்.

திருமஞ்சன நீர் எடுத்து கோயில் சென்ற லோக சாரங்கருக்கு ஶ்ரீ அரங்கனை கண்டதும் அதிர்ச்சியாக இருந்தது. பாணரின் நெற்றியில் எங்கு இரத்தம் வந்ததோ அதே இடத்தில் ஶ்ரீ அரங்கனின் நெற்றியிலும் இரத்தம் வந்தது. தவறு என்ன என்பது புரிந்தது. அன்று இரவு லோக சாரங்கர் கனவில் அரங்கர் தோன்றி "பாணரை தாங்கள் தோளில் ஏற்றி கோயிலுக்கு வரவும்." தனது தவறை உணர்ந்து மறுநாள் லோக சாரங்கர் காவிரி கரையில் பாணரை கண்டு நடந்தவை அனைத்தையும் கூறி தனது தோளில் ஏறிக்கொள்ள சொன்னார். தயங்கிய பாணரிடம் இது தனது பாக்கியம் என்றும், அரங்கனின் விருப்பத்தை ஏற்க வேண்டும் என்றும் வேண்டினார்.

அவர்கள் ஶ்ரீ அரங்கனின் சன்னிதியை அடைந்தனர். திருவரங்கத் திருவான அரங்கன் முன் சென்று அவன் வடிவழகில் மயங்கி திருமுடி முதல் திருவடி வரை பாடியவர் "என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே" என்று பாடிய படி தன் பூத உடலோடு ஆண்டாள் போல அரங்கனோடு இரண்டறக்கலந்தார். இவர் பாடிய பத்துப்பாடல்கள் "அமலனாதிபிரான்" எனும் தலைப்போடு நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ திருப்பாணாழ்வாருக்கு சன்னிதி

திருப்பாணாழ்வார் பிறந்த ஊரான உறையூரில் அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் இது 2 வது திவ்ய தேசமான இத்திருக்கோயிலில் திருப்பாணாழ்வாருக்கு தனி சன்னிதி உள்ளது. கார்த்திகை மாதம் இவருடைய திருஅவதார தினத்தை ஒட்டி பத்து நாள் விழா கொண்டாடப்படுகிறது. திருப்பாணாழ்வாரின் உத்சவர் திருமேனி ஆண்டு தோறும் அவரது திரு அவதார தினத்தன்று ஶ்ரீரங்கம் வரும். ஶ்ரீரங்கநாதரை விஸ்வரூபத்தில் தரிசித்து பின் உறையூர் திருப்புவது வழக்கம்.

ஶ்ரீவீர ஆஞ்சநேயர், ரங்க விலாஸ் மண்டபம், ஶ்ரீரங்கம், தமிழ்நாடு ஶ்ரீரங்கத்தில் அரங்கனின் திருக்கோயிலில் ரங்கவிலாச மண்டபத்தில் அமைந்துள்ளது திருப்பாணாழ்வாருக்கான சன்னிதி. இங்கு இவர் தனிமையில் இல்லை. இவருடன் ஶ்ரீஆஞ்சநேயரும் எழுந்தருளியுளார்.

ஶ்ரீவீர ஆஞ்சநேயரும் ஶ்ரீ திருப்பாணாழ்வாரும்

ஶ்ரீவீர ஆஞ்சநேயரும் ஶ்ரீ திருப்பாணாழ்வாரும் ஒரே சன்னிதியில் வேறு எங்கும் காண முடியாத விதத்தில் இங்கு அருள் பாலிக்கின்றார்கள். பெரியோர்களின், ஆச்சாரிய புருடர்களின் அபிப்ராயத்தில் இவர்கள் இருவருமே மோட்சத்திற்கு ஆசைபடாதவர்கள். இருவரும் தங்கள் இஷ்ட தெய்வத்தை தவிர வேறுயாரையும் அறியாதவர்கள். ஶ்ரீஆஞ்சநேயருக்கு ஶ்ரீராமரிடமும் [பெருமாளையும்] திருப்பாணாழ்வாருக்கு ஶ்ரீரங்கநாதரிடமும் [பெரிய பெருமாள்] அதீத பக்தி. அதனால் இவ்விரு பக்தர்களும் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமில்லை. திருப்பாணாழ்வார் தன் பாசுரத்தில் "…..அணியரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே." என்றார் அல்லவா. ஶ்ரீ ஆஞ்சநேயர் பூலோகமே - ராம நாமம் இருக்கும் இடம். அவ்விடமே நமக்கு நல்லிடம் என்றவர் அல்லவா.

ஶ்ரீ வீர ஆஞ்சநேயர்

ஸ்ரீ வீர அஞ்சநேய சன்னிதியின் பார்வை சிறப்பாக, இனிமையாக அமைந்துள்ளது. இந்த க்ஷேத்திரத்தின் ஸ்ரீ ஆஞ்சநேயர் மூர்த்தம் கல்லால் செய்யப்பட்ட ‘திருவாச்சி’ உடன் காணப்படுகிறார். ஏறக்குறைய ஏழரை அடி உயரம் கொண்ட மூர்த்தத்தில் ஸ்ரீ வீர அஞ்சநேயர் நின்ற கோலத்தில் உள்ளார். பிரபு தனது இடது தாமரை பாதத்தினை முன் வைத்து தெற்கு நோக்கி நடப்பது போல் காணப்படுகிறார். அவரது கணுக்காலில் தண்டை அணிந்திருப்பதைக் காணலாம். அவரது இடுப்பில் அணிந்துள்ள அரையணியில் சங்கிலி வடிவில் உள்ளது அதில் இருக்கும் ஒரு சிறிய கத்தியும் அலங்காரமாக அமைதுள்ளது. இறைவன் தனது வலது கையால் ‘அபய முத்திரை’ காட்டி ஆசீகள் அளிக்கிறார். அவரது இடது கை மார்பை நோக்கி மடித்து ‘சௌகந்திகா’ புஷ்பத்தின் தண்டைப் பிடித்துள்ளார். புஷ்பம் அவரது இடது தோள்பட்டைக்கு சற்று மேலே காணப்படுகிறது.

இறைவனின் இனிமையான முகம் வலதுபுறம் சற்று சாய்ந்திருப்பது மேலும் முகத்தினை அழகுற செய்கிறது. இறைவன் அணிந்துள்ள குண்டலம் அவரது தோள்களை தொடுவதைக் காணலாம். அவர் அழகாக கூந்தல் ‘குடுமி’ வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. அவரது ஒளிரும் கண்களின் மூலம் இறைவனின் மகிழ்ச்சிகரமான பார்வை பக்தரின் அனைத்து துக்கங்களையும் அகற்றி விடுகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஶ்ரீவீர ஆஞ்சநேயர், ரங்க விலாஸ் மண்டபம், ஶ்ரீரங்கம்

 

அனுபவம்
எதையும் யோசிக்க வேண்டாம். பிரார்த்தனை செய்யுங்கள், ஸ்ரீ திருப்பாணாழ்வாருடன் ஸ்ரீ வீர ஆஞ்சநேயரை தரிசனம் செய்யுங்கள். பிரபுவின் மீதான அன்பை பக்தியை கொட்டி தீருங்கள், அவருடன் இரண்டற இருப்பதை உணர்வது தின்னம்.  

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: பிப்ரவரி 2021


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+