home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

 யமுனா நதி, ராஜபூர், சித்திரகூடம், உ.பி.


ஶ்ரீசங்கட மோசன ஹனுமார் திருக்கோயில், ராஜாபூர், சித்திரகூடம், உ.பி

ஜீ கே கௌசிக்


ராஜாபூர்

ஸ்ரீ துளசிதாஸர் பிறந்த இடம், ராஜபூர், சித்திரகூடம், உ.பி. ராஜாபூர் என்பது இன்றைய நாட்களின் மிக பெரிய மகானான ஶ்ரீதுளசி தாஸ் அவர்கள் பிறந்த ஊர் என்பதால் பல ஹனுமார் பக்தரகளுக்கு தெரிந்த இடமாகதான் உள்ளது. இவர் ஶ்ரீராமாயணத்தை ஶ்ரீராமசரித மானஸ் என்ற பெயரில் அவதி மொழியில் இயற்றியுள்ளார். சாதாரண மனிதர்கள் இங்கு பேசும் மொழி என்பதால் மானஸ் பாடம் மிகவும் எளிமையாக எல்லோருக்கும் புரிந்து அனுபவிக்க முடிகிறது. இவர் சமிஸ்கிருத மொழியில் புலமை பெற்றிருந்தாலும், எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக அவதி மொழியில் பாடியுள்ளார். இவர் எழுதியுள்ள மானஸ் பாடம் ஶ்ரீராமசந்திர மூர்த்தியின் கதையை ஶ்ரீ பரமசிவன் கூறுவது போல் அமைத்துள்ளது விசேடம். சிவா விஷ்ணு பேதம் இல்லாமல் ஒற்றுமையை கொண்டாடும் விதமாக அமைத்துள்ளார். அக்கால கட்டத்தில் இப்படி ஒரு காவியம் சிவா விஷ்ணு பேதமின்மையை போதிக்கும் வகையில் அமைத்தது சனாதன தர்மத்தின் பெருமையை நிலைநாட்டினார் அவர்.

உத்திர பிரதேசம் சித்திரகூடம் மாவட்டத்தில் அமைந்துள்ள ராஜாபூரில் இவர் பிறந்தார். யமுனா நதிகரையில் அமைந்திருக்கும் அருமையான இடமிது. யமுனை நதி வலதுபுறம் திரும்பி இவ்வூரை தொட்டுவிட்டு செல்வது போல் ஓடுகிறாள் என்பது இவ்வூரின் விசேடம், புனித தன்மையையும் பரைசாற்றுகிறது. துளசிதாஸர் அவர்கள் ஶ்ரீ ஆத்மாராம் ஹுல்சி பிராமண தம்பதிகளுக்கு பிறந்தார். பிறந்ததும் ராம என்று அழைத்ததால் இவரை ராம்போலா என்று அழைக்கலானார்கள்.

ராம்போலா ராஜபூரிலிருந்து புறப்படுகிறார்

ஜோதிட சாத்திரப்படி ராம்போலா குழந்தை பிறந்தபொழுது கிரக நிலை சரியில்லை என்றும் அதனால் குழந்தையின் தாய் தந்தையர்களுக்கு உயிர் சேதம் ஏற்படலாம் என்றார்கள். அதனால் அக்குழந்தையை நான்காம் நாள், ஹுல்சியின் வேலைகாரி சுன்யாயுடன் அனுப்பி வைத்தார்கள். சுன்யா அவள் ஊரான ஹரிபூருக்கு ராம்போலாவை அழைத்துச் சென்றாள். ஹரிபூரில் சுமார் ஐந்தரை ஆண்டுகள் மிகவும் கவனமாக குழந்தையை சுன்யா வளர்த்தாள். அவளின் இறப்புக்கு பிறகு குழந்தை அனாதையானது, ஊர்காரர்கள் பராமரிப்பில் இருந்தது அக்குழந்தை.

ராம்போலாவின் ராஜாபூர் வருகை

அவ்வூரில் ஶ்ரீநரஹரிதாஸ் என்னும் மகான் ராம்போலாவிற்கு அடைகலம் கொடுத்தார். ஶ்ரீநரஹரிதாஸ் ஶ்ரீராமானந்தா பரம்பரையை சேர்ந்த வைணவ சித்தாந்தத்தை பின்பற்றுபவர். ஶ்ரீராமானந்தாவின் சீடர்களில் முக்கியமனாவராக கருதப்படுகிறவர். அவர் ராம்போலாவிற்கு விரக்த தீட்சை [வைராஹி தீட்சை] கொடுத்து துளசிதாஸ் என்ற பெயர் சூட்டினார். சனாதன தர்மத்தின் பல நுணுக்கங்கள் அவருக்கு உபதேசிக்கப்பட்டது. ஶ்ரீமத் வால்மீகி இராமாயணத்தின் பல நுணுக்கங்களை அவருக்கு குருநாதர் ஶ்ரீநரஹரிதாஸர் கற்றுக் கொடுத்தார். சில காலத்தில் துளசிதாஸரின் ஶ்ரீராமாயண பிரவசனத்தின் வல்லமையும் புகழும் பரவத்தொடங்கியது.

ராம் சரித் மனஸ் கையெழுத்துப் பிரதி பவன், ராஜபூர், சித்திரகூடம், உ.பி. ஒருசமயம் ராஜாபூர் கிராமம் மிகவும் கஷ்ட தசையில் இருந்தது. பெரியவர்கள் கூடி கிராமத்தில் ஶ்ரீராமாயணம் படிக்கவும் ப்ரவசனமும் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் ஶ்ரீநரஹரியின் சீடரான ஶ்ரீதுளசிதாஸரை ராஜாபூர் வருகை தந்து ஶ்ரீராமாயண ப்ரவசன்ம் நடத்த வேண்டிக்கொண்டனர். இவர்களுக்கு ஶ்ரீதுளசிதாஸர் தான் தங்கள் கிராமத்து ராம்போலா என்று தெரியாது. கிராம மக்களின் விருப்பப்படி ஶ்ரீதுளசிதாஸர் ஒரு நல்ல நாளில் கிராமத்திற்கு வந்து தனது ப்ரவசனத்தை ஆரம்பித்தார்.

ஸ்ரீ துளசிதாஸின் கிராமத்திற்கு வருகை மற்றும் ஸ்ரீமத் ராமாயணம் பற்றிய அவரது சொற்பொழிவுக்குப் பிறகு ராஜபூர் மக்கள் தங்கள் வாய்ப்புகளில் ஒரு பெரிய மாற்றத்தைக் கண்டனர். மழை காலம் தவராமல் பொழிந்தது, பயிர்கள் ஏராளமாக பயிராயின. ராஜபூர் மக்கள் செல்வம் செழிப்பாக வளர்ந்து மகிழ்ச்சியாக இருந்தனர்.

இந்த இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீ துளசிதாஸ் ராஜபூர் தான் பிறந்த கிராமம் என்பதை உணர்ந்தார்.

ஶ்ரீதுளசிதாஸரும் நாந்தி ஶ்ரீஹனுமாரும்

ராஜாபூரில் துளசிதாஸர் தங்கியிருந்த சமயம் அருகில் இருக்கும் நாந்தி என்னும் கிராமத்தில் இருக்கும் ஶ்ரீஹனுமார் திருக்கோயிலுக்கு போய் அங்கு தியானத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். நாந்தி என்பது மகிழ்ச்சி, மனநிறைவு, சந்தோஷம் என்பதனை குறிக்கும் சொல்.

ஒரு சமயம் யமுனையில் வெள்ளம் அதிகமானதால் அவரால் நாந்தி கிராமத்திற்கு செல்ல முடியவில்லை. வெள்ளம் புறண்டு ஓடும் யமுனை நதிகரையில் அமர்ந்து நாந்தி கிராமத்து ஶ்ரீஹனுமாரை குறித்து தியானத்தில் ஆழ்ந்து விட்டர். ஶ்ரீநாந்தி ஹனுமார் ஶ்ரீதுளசிதாஸர் சிந்தனையில் தோன்றி தந்திர ரூபமாக உள்ள தான் ராஜாபூரில் மந்திர ரூபமாக வருவதற்கு ஆசை படுவதால் சந்தன குழம்பில் தன்னை ராஜாபூரிலேயே பிரதிஷ்டை செய்து ஆதாரிக்கலாம் என்று ஆணையிட்டார்.

ராஜாபூரில் மந்திர ரூப ஶ்ரீஹனுமார்

நதிகரையிலிருந்து ராஜாபூர் கிராமத்திற்கு வந்த ஶ்ரீதுளசிதாஸர், ஶ்ரீஹனுமாரின் ஆணைப்படி சந்தன கட்டையை அரைக்க அச்சந்தன குழம்பினால் ஶ்ரீஹனுமார் விக்ரஹம் செய்தார். விக்ரஹத்தில் ஶ்ரீஹனுமாரை மந்திர ரூபமாக ப்ராண பிரதிஷ்டை செய்தார். ஶ்ரீஹனுமார் உபாஸனை ராஜாபூரில் தொடர்ந்தது. சில காலங்கள் கழித்து அவர் அயோத்தியா, சங்கம், வாரணாசி என்று புனித பயணம் மேற்கொண்டார்.

ராஜாபூரின் ஶ்ரீசங்கட மோசன ஹனுமார்

ஶ்ரீசங்கட மோசன ஹனுமார் திருக்கோயில், ராஜாபூர், சித்திரகூடம், உ.பி அன்று ஶ்ரீதுளசிதாஸரால் ராஜாபூரில் மந்திர பிரதிஷ்டை செய்யப்பட்ட ஶ்ரீஹனுமார் ஶ்ரீசங்கட மோசன ஹனுமார் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். சமீப காலத்தில் திருக்கோயில் வளாகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. யமுனை நதிகரையில் சற்று உள்ளடங்கி அமைந்துள்ளது இத்திருக்கோயில், துளசிதாஸர் பிறந்த ’துளசிகாட்’ டிலிருந்து சற்று தொலைவிலுள்ளது. முக்கிய பஸ் நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இத்திருக்கோயில்.

கோயில் வளாகத்தில் வலது புறம் ஶ்ரீராம, சீதா, லக்ஷ்மண சன்னிதி உள்ளது. இச்சன்னிதிக்கு நேர் எதிரே ஶ்ரீசங்கட மோசன ஹனுமாரின் கர்பகிரஹம் உள்ளது.

ஸ்ரீ சரபங்க முனிவர் வனத்தில் ஸ்ரீ ராமரின் தரிசனத்திற்காக தவம் செய்துக் காத்திருந்தார். ஸ்ரீ ராமர் தனது பக்தர்களை ஒருபோதும் கைவிட்டதில்லை/ஏமாற்றியதில்லை, அவர் ஶ்ரீசரபங்கர் ஆசிரமத்திற்கு விஜயம் செய்து முனிவரை சந்தித்தார் [அந்த இடம் சித்ரக்கூடத்திற்கு அருகில் உள்ளது]. ஸ்ரீ சரபாங்கா முனிவர் அவரது ஆசிரமத்தில் ஸ்ரீ ராமரை அவரது சகோதரர் மற்றும் ஸ்ரீ சீதையுடன் வரவேற்றார். ஸ்ரீ ராமர் முதலியோருக்கு தகுந்த அதிதி உபசாரம் செய்தப் பிறகு, இந்த உலகில் தனது காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டதாக கூறி அக்னியில் பிரவேசம் செய்தார். துளசிதாஸர் வரிகளில்:

सीता अनुज समेत प्रभु नील जलद तनु स्याम।
मम हियँ बसहु निरंतर सगुनरूप श्री राम॥

[அடர் நீல மேகத்தின் நிறத்தில் உள்ள ஶ்ரீராமர், ஸ்ரீ சீதா மாதாவுடனும் தம்பியுடனும் (ஸ்ரீ லக்ஷ்மணன்) என் இதயத்தில் நிரந்தரமாக வசிக்கிறார்]

ஶ்ரீசரபங்கர் ஸ்ரீ ராமச்சந்தர மூர்த்தியை எப்படி கடைசியில் கண்டாரோ அவ்வண்ணம் இத்திருக்கோயிலில் ஶ்ரீராமர் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஹனுமனின் மூல தெய்வமான ஶ்ரீராமரை முதலில் தர்சித்து ஆசி பெற்று பின் 7 தர்சிப்போம்.

சங்கட மோசன ஶ்ரீஹனுமார்

சில படிகள் ஏறிச் சென்று ஶ்ரீஹனுமாரை தரிசிக்க வேண்டும். இங்குள்ள சங்கட மோசன ஶ்ரீஹனுமார், நாந்தி கிராமத்திலுள்ள ஶ்ரீநாந்தி ஹனுமாரை ஒத்த தோற்றத்தில் அருள்பாலிக்கிறார். இவர் எப்பொழுதும் ஶ்ரீராமசந்தர மூர்த்தியை தரிசித்துக் கொண்டுள்ளார். ஶ்ரீராமரிடம் பெற்ற ஆசிகளை அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் என்றே கூற வேண்டும்.

உங்கள் பிரார்த்தனைகளை அவரிடம் சமர்ப்பியுங்கள், அவரது ஆசிகளையும் கூடவே ஶ்ரீராமரின் ஆசிகளையும் பெற்றுச் செல்லுங்கள்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     ஶ்ரீசங்கட மோசன ஹனுமார் திருக்கோயில், ராஜாபூர், சித்திரகூடம்

 

அனுபவம்
இந்த க்ஷேத்திரத்தில் சங்கட மோசன ஶ்ரீஹனுமாரின் தரிசனம் நம்மை மறுபிறப்பிலிருந்து விடுவிக்கும் என்பது நிச்சயம், அதனால் எல்லா சங்கடங்களிலிருந்தும் விமோசனம் கிடைப்பதும் நிச்சயம்.  

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
பதிப்பு: மார்ச் 2021


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+