வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக் கோயில், மயிலாப்பூர், சென்னை

ஶ்ரீ ஜி.கே. கௌசிக்

 

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் திருக்குளம்மயிலாப்பூர் வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக் கோயில்-1999இல்சென்னை மாநகரில் அக்காலத்தில் ஆஞ்சநேய ஸ்வாமிக்கு என்று தனி கோயில்கள் மிகக் குறைவு. அப்பொழுது சென்னை முழுவதிலுமே மூன்று நான்கு ஆஞ்சநேயர் கோவில்கள் தான் உண்டு. ஆனால் இப்பொழுது மயிலாப்பூரிலேயே மூன்று நான்கு ஆஞ்சநேயர் கோவில்கள் இருக்கின்றன. இந்த கோவிலை அப்பொழுது மயிலாப்பூர் ஆஞ்சநேயர் கோவில் என்றுதான் அழைப்பார்கள், இப்பொழுது இது லஸ் ஆஞ்சநேயர் கோவில் என ப்ரபலம். சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் மைசூர் மாநிலத்திலிருந்து அரசியல் கொந்தளிப்பின் காரணமாக வெளியேறிய ஷேட்டி எனப்படும் வணிக குலத்தவர்கள் சென்னையை தங்கள் இருப்பிடமாக கொண்டனர். அவர்கள் தங்கள் குல தெய்வமான ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியின் சிலையினை தங்களுடன் கொண்டு வந்தனர். சென்னையில் அவர்கள் மயிலாப்பூரில் குயவர்பேட்டையில் குடிப்புகுந்தனர். தங்கள் இல்லத்திற்க்கு அருகாமையில் அவர்கள் மைசூரிலிருந்து கொண்டு வந்த ஆஞ்சநேயர் சிலையையும் குடி வைத்தனர். ஆஞ்சநேய ஸ்வாமிக்கு சிறியக் கோயில் கட்டிணார்கள். அக் கோயில் 'அனுமந்தராயர் குடி' என்று அழைக்கப் பட்டது. நாளடைவில் ஷேட்டி இனத்தவர்கள் தமிழ் நாட்டில் உள்ள செட்டியார் இனத்தவருடன் இனைந்து விட்டனர் இந்த மயிலாப்பூரில் குயவர்பேட்டை வாசிகள்.


மயிலாப்பூரில் குயவர்பேட்டையில் தண்ணிர்துரை மார்கெட் அருகாமையில் உள்ள இந்த ஆஞ்சநேயர் கோயில் மிக வரப்பிரஸித்தி. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன் வரை சென்னையின் பல பகுதிகளிலிருந்து ஆஞ்சநேய பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருவார்கள். ஸ்ரீ காஞ்சி காமகோடி சங்கராசாரியார் ஸ்ரீ பரமாசாரியார் அவர்கள் இக்கோயிலுக்கு அருகாமையிலுள்ள ஸம்ஸ்கிருத கல்லூரியில் முகாம் இட்டு இருந்தார்கள், அவர்கள் இங்கு ஆற்றிய பல உபந்யாசங்கள் புத்தகவடிவில் இப்பொழுது கிடைக்கின்றன. இந்துமதத்தின் பல நுணுக்கமான விஷயங்களை எல்லொரும் சுலபமாக புரிந்து கொள்ள அவர்கள் அன்று ஆற்றிய உபந்யாசங்கள் உதவின. இதே ஸம்ஸ்கிருத கல்லூரியில் பல வித்வான்கள் இராமயணம் சொல்லியிருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் அனுபவித்தவர் இந்த கோயிலில் குடியிருக்கும் வீர ஆஞ்சநேயர்.

இந்த கோயிலில் குடியிருக்கும் வீர ஆஞ்சநேயர் மேற்கு நோக்கி உள்ள சிலாரூபி. தெற்கு நோக்கி நடப்பதுப் போல் உள்ள இவர் கண்களிலே ஒரு ஜ்வலிப்பு, 'நான் இருக்கையில் பயம் ஏன்' என்பது போல். பக்கவாட்டில் விழும் தலைமுடி கட்டு, காதிலே குண்டலம், வலது கை அபயமுத்திரை காட்டுகிறது, இடது கை கதையை பிடித்துள்ளது. கைகளில் கங்கணமும், புஜங்களில் கேயுரகமும், திவ்யதிரு பாதங்களில் தண்டையும் அணிந்துள்ளார். எதிரிகளை அழிக்கவல்ல வால் தலைக்கு மேல் தெற்கு நோக்கி முடிகிறது. இந்த க்ஷேத்திரத்தில், லக்ஷ்மி சரஸ்வதி மாதரி கமல பீடத்தில் உள்ளார் பகவான் ஆஞ்சநேய ஸ்வாமி .

மயிலாப்பூர் வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக் கோயில்-2017இல்பகவான் ஆஞ்சநேய ஸ்வாமி சந்நதியில், ஆஞ்சநேய ஸ்வாமியின் உத்ஸவ மூர்த்தியுடன் ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமியின் உத்ஸவ மூர்த்தியும் உள்ளது. அர்ச்சனை, ஆரத்தி எல்லாம் இருவருக்கும் உண்டு. பகவான் ஆஞ்சநேய ஸ்வாமி சந்நதியின் தென்புறம் அவரின் ஆஸான் ஸ்ரீராமபிரானுக்கு தனி சந்நதி உள்ளது. இங்கு ஸ்ரீராமபிரான் மாதா ஸ்ரீஸீதாவுடனும் இளயப் பெருமாள் லக்ஷ்மணருடனும் உள்ளார்.

திரு ராஜாஜி அவர்கள் 'சக்ரவர்த்தி திருமகன்' என்கிற பெயரில் எழுதிய இராமாயணம் முதல் முதலில் இக்கோயிலில் பூஜைக்கு வைக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

சிறியதாக இருந்த இக்கோயில் இப்பொழுது பக்தர்களின் கைங்கரியத்தாலும், தர்மகர்த்தாவினாலும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. ராஜகோபுரம், கல்யாணமண்டபம் ஆகியவைகளும் கட்டபட்டுள்ளது.

இந்த க்ஷேத்திரத்தில் வடமாலை மிக ப்ரசுத்தம். ஆங்கில வருடபிறப்பு அன்று ஐநூறு வடமாலைக்கு மேல் பகவான் ஆஞ்சநேய ஸ்வாமிக்கு சாத்தப் படுகிறது. இந்த க்ஷேத்திரத்தின் வீர ஆஞ்சநேய ஸ்வாமி வாஞ்சிதாய ப்ரதாயானன், நினைத்ததை நினைக்ககும் முன் நிறைவேற்றி வைப்பவன்.

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே