home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

குஞ்சிடிகரா ஶ்ரீஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், கில்லாரி ரோட், பெங்களூரு

ஜீ. கே. கௌசிக்


பெங்களூரு பேட்டேகள் [பேட்டைகள்]

1890 களில் எடுக்கப்பட்ட பெங்களூர் பேட்டையின் புகைப்படம், கர்சன் சேகரிப்பின் விஜயநகர சாம்ராஜ்யத்தின் நிலப்பிரபுத்துவரான கெம்பே கவுடா பெங்களூரூவை நிறுவியவர். அவர் ஒரு தொலைநோக்கு பார்வையாளர், புதிய தலைநகரத்தை முன்யோசனையுடன் நிருவினார். நகரத்திற்கு தேவையான நீர் விநியோகம் செய்ய பெரிய ஏரிகளின் உருவில் நீர்நிலைகளை உருவாக்கினார். அவர் வர்த்தகத்திற்காக தனி தனி பகுதிகளை ஒதுக்கியிருந்தார், அங்கு மேற்கொள்ளப்பட்ட வணிகத்தின் தன்மைக்கு தகுந்து அவ்விடத்திற்கு பெயரிட்டார். உதாரணமாக - பருத்தி வர்த்தகத்திற்காக இடம் அராலேபேட்டே, அரிசிக்கு அக்கி பேட்டே, வளையல்களுக்கு பலேபேட்டே, மட்பாண்டங்களுக்கு கும்பராபேட்டே போன்றவை. அனைவருக்கும் வசிக்கும் இடங்களை சமூகங்கள் மற்றும் சாதிகளைப் பொறுத்து, குடியிருப்புகளுக்கான பகுதிகள் குறிக்கப்பட்டன. நன்கு திட்டமிடப்பட்ட இந்த நகரத் திட்டங்களுடன், கெம்பேகவுடா கி.பி 1539 இல் தலைநகரத்தினை யெலஹங்காவிலிருந்து பெங்களூருக்கு மாற்றினார்.

படம் உபயம்: wikipedia.org

கில்லாரி ரோட் மற்றும் குஞ்சிடிகரா பேட்டே

பலேபேட்டில் அமைந்துள்ள கில்லாரி சாலை மேற்கில் பலேபேட்டே பிரதான சாலையில் இருந்து கிழக்கில் அவென்யூ சாலை வரை செல்கிறது. பி.வி.கே ஐயங்கார் சாலைக்கும் பலேபேட்டே பிரதான சாலைக்கும் இடையிலான பகுதி குஞ்சிடிகரா பேட்டே என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் குஞ்சிடிகா வோக்காலிகா சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வந்தனர். இவர்கள் விவசாயிகள், மற்றும் விளைப்பொருள்கள் விற்கும் வியாபாரிகளாகவும் இருந்தனர். ஆனால் முழு குஞ்சடிகா பேட்டே பலேப்பேட்டே என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

குஞ்சிடிகர பேட்டே ஸ்ரீ அஞ்சநேயேர் திருக்கோயில்

Kunchatigara Sri Anjaneya Swamy Temple, Killari Road, Bangaluru குஞ்சிடிகா பேட்டேயில் பி.வி.கே ஐயங்கார் சாலை கடப்பதற்கு மேற்கே - அமைந்துள்ள கில்லாரி சாலையில் ஸ்ரீ அஞ்சநேய சுவாமிக்கு ஒரு பெரிய கோயில் உள்ளது. இந்த அனுமன் கோயில் “குஞ்சிடிகர ஸ்ரீ அஞ்சநேய சுவாமி” என்று அழைக்கப்படுகிறார். கில்லாரி சாலையில் தெற்கு நேக்கி மூன்று அடுக்கு ராஜ கோபுரத்துடன் இந்த கோயில் உள்ளது. ராஜ கோபுரம் வழியாக நுழைந்ததும் ​​அலங்கார பித்தளை வேலைகளால் மூடப்பட்ட த்வஜ ஸ்தம்பம் நம்மை வரவேற்கிறது. த்வஜ ஸ்தம்பத்தை கடந்து சென்றால் கருவறையை காணலாம். ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை பிரதான மண்டபத்தில் இருந்தவாரே தரிசிக்க முடியும்.

மண்டபத்தின் தூண்களில் பஞ்சமுக, யோகா, வீர அஞ்சநேய வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் இடது பக்கத்தில், ஸ்ரீ ராமர் அவரது பரிவருங்களுடன் சன்னதியில் அருள்பாலிக்கிறார். அருகிலேயே உத்சவ மூர்த்தி வைக்கப்பட்டுள்ளது. பிரதக்ஷணம் செய்ய வசதியாக கர்பகிரகத்தை சுற்றி எட்டு அடி அகல பிரகாரம் உள்ளது.

கர்பகிரஹத்திற்கு நன்கு அலங்காரமான கதவு உள்ளது, அதில் மர சிற்பங்கள் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது. கர்பகிரஹத்தின் பிரதான கதவினை சுற்றி வெள்ளி தகடில் அழகிய வேலைபாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கண்களைக் கவரும் நல்ல கலைப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் வெவ்வேறு தோற்றங்கள் உள்ளன - ஒவ்வொன்றும் தனி தனி கதையைச் சொல்கின்றது. இவ்வமைப்பினால் கருவறை நுழைவாயிலின் ஒட்டுமொத்த அழகு பக்தர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

குஞ்சிடிகர அஞ்சநேயேர்

Kunchatigara Sri Anjaneya Swamy, Killari Road, Bangaluru இந்த கோயிலின் ஸ்ரீ அஞ்சநேய சுவாமியின் சிலை சுமார் ஆறு அடி உயரமுள்ள கடினமான கிரானைட் கல்லால் ஆன ’அர்த்த ஶிலா’ என்னும் புடைப்பு சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளார். தெற்கு நோக்கி இருக்கும் ஶ்ரீஆஞ்சநேயர் கிழக்கு நோக்கி நடக்கும் பாவனையில் உள்ளார். அவரது இடது தாமரை பாதம் முன்னால் இருக்கிறது. அவரது வலது தாமரை பாதம் தரையில் உறுதியாக உள்ளது. அவரது வலது காலின் விரல்களால் அவர் அக்ஷய குமாரை அழுத்தியுள்ளார். அக்ஷய குமார், ராவணனின் மகன் - ராவணனின் வம்சத்தின் ஸ்ரீ அனுமனுக்கு முதல் பலியானவர். அவரது இரண்டு கணுகால்களையும் தண்டை அலங்கரிக்கிறது. அவர் தனது வழக்கமான ஆடையை அணிந்துள்ளார் - வேட்டியை கச்சம் கட்டியுள்ளார் அது அவரது இரு தொடைகளையும் இருக்கமாகப் பிடித்துக் கொண்டுள்ளது. அவரது இடுப்பு அழகான அரைக்கச்சினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவரது இடது கை சௌகந்திகா பூவின் தண்டுகளை ஒரு கொத்து இலைகளுடன் சேர்த்து வைத்திருக்கிறது. மலரயிருக்கும் நிலையில் இருக்கும் மலர் அவரது இடது தோள்பட்டைக்கு மேலே காணப்படுகிறது. அவர் எழுப்பிய வலது கையால் ‘அபய முத்திரை’ காட்டி அவர் தனது பக்தர்களுக்கு ஆசீகள் அளிக்கிறார். மணிகட்டில் கங்கணம் மற்றும் மேல்கையில் கேயூரம் அவரது இரு கைகளையும் அலங்கரிக்கிறது. அவர் மூன்று மாலைகளை அணிந்திருப்பதைக் காணலாம், அதில் ஒன்று பதக்கத்துடன் உள்ளது. அவரது தோள்களில் ‘உத்தரியம்’ - மேல் ஆடை உள்ளது. இறைவனின் வால் அவரது தலைக்கு மேலே உயர்ந்து காணப்படுகிறது. வளைந்த முனையில் சிறிய அழகான மணியுடன் கூடிய அவரது வால் முடிகிறது. அவரது காதுகளில் குண்டலம் அணிந்துள்ளார், அவருடைய கேசம் அழகாக கட்டப்பட்டுள்ளது. அவரது பிரகாசமாக ஒளிறும் கண்களால் பக்தர்களுக்கு அவர் பரிவை கடாக்ஷிகிறார்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     குஞ்சிடிகரா ஶ்ரீஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயில், பெங்களூரு

 

அனுபவம்
தாங்கள் விருப்பங்கள் நிறைவேறவும் இறைவனின் ஆசீகள் பெறவும் இந்த க்ஷேத்திரத்திற்கு வந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி :: முதல் பதிப்பு: மார்ச் 2020
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+