கரே கல்லு ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், மைசூரு ரோடு, பெங்களூரு

ஜீ.கே. கௌசிக்

 

பெங்களூரூ
Inside View of the fort in Bangalore, Bangaluru

பெங்களூரூ விஜயநகர சாம்ராஜ்யத்தின் அங்கமாக இருந்தது, கெம்பகௌடா (1513-1569) அவர்களின் பிரதிநிதியாக யலங்காவை தலைநகரமாக கொண்டு நிர்வாகித்து வந்தார். தனது தலைநகரை யலங்காவிலிருந்து பெங்களூரூக்கு மாற்றுவதால் உள்ள பல நன்மைகளை கவனித்த கெம்பகௌடா புதிய தலைநகரை மிகவும் கவனத்துடன் திட்டமிட்டு கோட்டையை மைய்யப்படுத்தி கட்டலானார். சனாதன தர்மத்தில் ஈடுபாடு உள்ளவரான அவர் பல திருக்கோயில்களையும் அதை சுற்றி அக்ரஹாரங்களையும் கட்டினார். அவர் பெங்களூரை ஒரு வியாபார மையமாகவும் கலாசார மையாமாகவும் உருவாக்கினார். மாற்றார் வியக்கும் வண்ணம் இவரின் பரம்பரை பெங்களூரை வளர்த்தது. உண்மையில் இது வியாபாரத்திற்கு மிகவும் சிறப்பான இடமாக இல்லாவிட்டாலும் கௌடா தலைமுறை பெங்களூரை மேம்படுத்திய விதம் மாற்றார்களுக்கு கண்ணை உருத்தியது. பீஜப்பூர் சுல்தான் பெங்களூரை கைப்பற்றினார். பின்பு முகலாயர்களுக்கு சென்றது. கடைசியில் உடையார்களுக்கு பெங்களுரை விற்றனர்.

புதியதாக கோட்டை ஒன்றை பழைய கோட்டைக்கு தென்புறமாக கட்டப்பட்டது. ஆட்சி உடையார்களிடமிருந்து ஹைதர் அலி-திப்புவுக்கும் பின் ஆங்கிலேயருக்கும் மாறியது. ஹைதர் கோட்டையை பலப்படுத்தி கற்கோட்டையாக கட்டினான். பெங்களூர் போர்த்திற நடவடிக்கைக்கு முக்கியத்வம் வாய்ந்த இடமாக மாறியது. உடையார்களும் ஹைதர் அலி, திப்பு திறம்பட உருவாக்கிய கோட்டை ஆங்கிலேயர்கள் காலத்தில் புறக்கணிக்கப்பட்டது.

கோட்டையில் போர்த் தளவாடக் கிடங்கு
This view of the ruined fort at Bangalore was taken by Nicholas Bros
Pic. Courtesy :wikipedia.org

பழைய அரசினர்களின் போர்த் தளவாட கிடங்கு, மற்றும் இராணுவ அலுவலங்கள் அனைத்தும் திப்பு சுல்தான் காலம் வரை கோட்டையிலிருந்து நடந்துவந்தது.

டச்சு, பிரஞ்சு மற்றும் ஆங்கில மக்களின் செல்வாக்கால், புதிய போர் முறைகள் நடைமுறைக்கு வந்தன. உள்ளூர் ஆட்சியாளர்களும் இதை ஏற்று பின்பற்ற வேண்டிய கட்டாயம் வந்தது. அதன்படி போருக்கான ஆயுதங்களை மாற்ற வேண்டியிருந்தது. இதனால் ஹைதர் அலி பாரம்பரிய ஆயுதங்களுடன் புதிய ஆயுதங்களையும் அறிமுகப்படுத்தினார். எதிரிகளின் வளர்ச்சியுடன் ஆயுதங்களுக்கான சரக்கு அதிக அளவு வேண்டியதாயிற்று. பெரிய அளவிலான ஆயுதங்களை பாதுகாப்பாக சேமிப்பது முக்கியமானது. கோட்டைக்குள் இதற்கு வழி செய்ய, அதுவரை கோட்டைக்குள் வசித்த அதிகாரிகளை வெளியே நகர்த்த வேண்டி வந்தது.

ஸ்ரீ ஆஞ்சநேய வழிபாட்டாளர்கள்
கெம்பே கவுடாவின் நாட்களிலிருந்தே, ஸ்ரீ ஹனுமனை தைரியத்தையும் வெற்றிகளையும் வழங்குவதற்கான தெய்வமாக வணங்கும் விஜயநகர் பாரம்பரியம் நடைமுறையில் இருந்தது. ஆட்சிகள் மாறியிருந்தாலும் கோட்டைக்குள் வாழ்ந்த மக்கள் ஹனுமான் வழிபாட்டைத் தொடர்ந்தனர். கோட்டையின் உள்ளே பல ஸ்ரீ ஆஞ்சநேய பக்தர்கள் இருந்தனர். அவர்கள் கோட்டையிலிருந்து வெளியே செல்லும் நிலையில், அவர்கள் ஸ்ரீ ஆஞ்சநேய விக்கிரகத்தையும் தங்களுடன் எடுத்துச் சென்றார்கள். கோட்டையின் நிர்வாகிகள் பக்தர்களுக்கு கோட்டையிலிருந்து சிறிது தூரத்தில் ஆஞ்சநேயருக்கு கோயில் கட்ட போதுமான இடம் அளித்தனர்.

கரே கல்லு ஸ்ரீ ஆஞ்சநேயார்
Main enterance of Kare Kallu Sri Anjaneya Swamy Temple, Mysore Road, Bangaluru

அப்படி கோட்டையிலிருந்து வெளியே வந்தவர் "கரே கல்லு ஸ்ரீ ஆஞ்சநேயா" என்று பிரபலமாக அழைக்கப்படும் தெய்வம். கன்னடத்தில் “கரே” என்றால் கருப்பு என்றும் “கல்லு” என்றால் கல் என்றும் பொருள். ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் சிலை இருண்ட கருப்பு கிரானைட் கல்லிலிருந்து தயாரிக்கப்பட்டது, எனவே இந்த பெயர். கரே கல்லு ஸ்ரீ அஞ்சநேயர் கோட்டையின் உள்ளே இருந்தபோது, அனைத்து ஆயுதங்களையும் இவர் முன் வைத்து வணங்கி பின்பே உபயோகிக்கும் பாரம்பரியம் இருந்தது, அதன் பின்பே அவ்வாயுதங்கள் போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டன. கோட்டைக்கு வெளியே புதிய இடத்திற்கு மாற்றப்பட்ட பின்னரும் இந்த பாரம்பரியம் தொடர்ந்தது. ஸ்ரீ கரே கல்லு ஆஞ்சநேயரின் ஆசீர்வாதத்தால் எதிரி அழிக்கப்பட்டு வெற்றி உறுதி செய்யப்படும் என்று முழுமையாக நம்பப்பட்டது.

கரே கல்லு ஶ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில்
Kare Kallu Sri Anjaneya Swamy Temple, Mysore Road, Bangaluru

இன்று ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கான இந்த பெரிய கோயில் பிரதான மைசூர் சாலையில் உள்ள காவல் குடியிருப்புக்கு எதிரே அமைந்துள்ளது. இது பெங்களூர் கோட்டையிலிருந்து மிகக் குறுகிய தூரத்தில் உள்ளது. மைசூர் சாலை கிழக்கு-மேற்காக அமைந்துள்ளது. கோட்டையிலிருந்து வருகையில் இந்த கோயில் சாலையின் இடதுபுறத்தில் உள்ளது. கோயில், பிரதான சாலையில் இருந்தாலும், வற்றெ உள்வாங்கி அமைந்துள்ளது. சாலையில் கோயிலுக்கு செல்லும் வழிச்சொல்லும் அலங்கார் வளைவைக் காணலாம். இந்த கோவிலில் மூன்று அடுக்குகளைக் கொண்ட “விமானம்” உள்ளது.

வடக்கு நோக்கியுள்ள கோயிலுக்கு இவ்வளைவு வழியாக செல்ல வேண்டும். கோயில் சற்றே உயரமான நிலையில் உள்ளதால் சில படிகள் ஏற வேண்டும். உயரமான மற்றும் அழகாக வடிவமைக்கப்பட்ட முன் தாழ்வாரம், மையத்தில் அலங்கார பிறை. அவ்வலங்கார பிறையில் பட்டாபிஷேக கோலத்தில் ஶ்ரீ ராம பரிவாரத்துடன், ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ கருடர் ஆகியோரால் சூழ இருக்கிறார். இந்த அலங்கார வளைவு வழியாக சென்றால் திறந்தவெளி. திறந்தவெளியின் மையத்தில் ‘த்வஜ ஸ்தம்பம்’ உள்ளது. கோயிலின் மொட்டை மாடியில் மூன்று சிறிய வளைவுகளைக் காணலாம். வளைவுகளில் முறையே ஸ்ரீ ராம பரிவராவும், வலதுபுறத்தில் ஸ்ரீ கோபாலகிருஷ்ணாவும், இடதுபுறத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணுவும் உள்ளனர்.

த்வஜ ஸ்தம்பத்திற்கு அருகில் இருந்து கரே கல்லு ஶ்ரீஅஞ்சநேயரை தெளிவான தரிசிக்கலாம்.

கரே கல்லு ஶ்ரீஆஞ்சநேயர்

Kare Kallu Sri Anjaneya Swamy, Mysore Road, Bangaluru ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் சிலை சுமார் ஆறு அடி உயரம் உடையது, புடைப்பு சிலை [‘அர்த்த ஶிலா’] வகையைச் சேர்ந்தது. கிழக்கு நோக்கிய இறைவன் முன்னால் இடது தாமரை பாதத்துடன் வடக்கு நோக்கி நடந்து செல்வது போல் காணப்படுகிறார். அவரது வலது தாமரை கால் சற்று உயர்ந்து, அவரது கால்விரல் பகுதி மட்டுமே தரையைத் தொடுகிறது. அவரது இரண்டு கால்களும் தண்டை ஆபரணத்தால் அலங்கரிக்கப்பட்டுயிருக்கிறது. அவரது வேட்டி- ஒரு இறுக்கமான கச்சத்தில் - அவரது தொடைகளில் இறுக்கமாக ஒட்டிக்கொண்டுள்ளது. அவரது இடுப்பு அழகான அரைக்கச்சினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, அதில் ஒரு சிறிய கத்தியும் உள்ளது. அவரது இடது திருக்கை சௌகந்திகா பூவின், இலையுடன் காணப்படும் தண்டினை பிடித்துக் கொண்டிருக்கிறது. மலர இருக்கும் நிலையில் அம்மலர் அவரது இடது தோள்பட்டைக்கு மேலே காணப்படுகிறது. அவரது எழுப்பிய வலது கை ‘அபய முத்திரை’ காண்பிக்கிறது- அவரது பக்தர்களுக்கு ஆசீகள் பல வழங்கும் வண்ணம் அமைந்துள்ளது. அவரது இரண்டு திருக்கைகளின் மணிக்கட்டில் கங்கணமும், மேல் கையில் கேயூரமும் அலங்கரிக்கின்றன. அவர் இரண்டு மாலைகளை அணிந்துள்ளார், அதில் ஒன்று பதக்கத்துடன் காணப்படுகிறது. புனித முப்புரிநூல் அவரது மார்பை அலங்கரிக்கிறது. அவரது தோள்களில் ‘உத்தரீயம்’ - மேல் ஆடை உள்ளது. இறைவனின் உயரும் வால் “ஓம்” வடிவத்தில் இருப்பது போல் காணப்படுகிறது. வளைந்த முனையில் சிறிய அழகான மணியுடன் கூடிய அவரது வால் அவரது தலையில் இடப்பக்கம் காணப்படுகிறது. இறைவன் காதினில் குண்டலம் அணிந்துள்ளார். அவரது கேசம் அழகாக பிணைக்கப்பட்டுள்ளது. அவர் கிரீடம் அணிந்துள்ளார். அவரது முகம் அமைதியுடனும் தெளிவுடனும் காணப்படுகிறது, அதே நேரத்தில் வலுவான துணிச்சலையும் காட்டுகிறது. அவரது நீளமான பற்கள் இந்த வலிமையை உறுதிப்படுத்துகின்றது. அவருடைய பிரகாசமான, புத்திசாலித்தனமான மற்றும் அச்சமற்ற கண்கள் இறைவனின் பிரமாண்டமான தோற்றத்திற்கு மேலும் அழகு சேர்க்கின்றது.

 

அனுபவம்
வாருங்கள் இந்த க்ஷேத்திரத்தில் இருக்கும் கரே கல்லு ஶ்ரீஆஞ்சநேயரை தரிசனம் செய்யுங்கள், இழந்த அனைத்து தைரியத்தையும் மீண்டும் பெற்று வாழ்க்கையில் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.

தமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி
மார்ச் 2020

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.

 


காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே