ஶ்ரீபடே ஹனுமான் மந்திர், அயோத்தியா, உத்திர பிரதேசம்

காத்தியாயினி பிரியன், பெங்களூர்

 

அயோத்தியா
சராயு நதிகரையில் அமைந்துள்ளது அயோத்தியா. பழமையான இந்த க்ஷேத்திரத்தை கௌசலதேசம் என்று வர்ணிப்பார்கள். சனாதன தர்மத்தை பின்பற்றுபர்கள் இந்த க்ஷேத்திரத்தினை மிகவும் உயர்வான க்ஷேத்திரமாக கொண்டாடுவார்கள். கருட புராணம் அயோத்தியாவை ஏழு மோக்ஷப்புரிகளில் ஒன்றாக குறிப்பிடுகிறது. கோட்டை மதில்களுடனும் பெரிய வாயிற்கதவுகளுடனும் கூடிய நகரமாக அயோத்தியா இராமாயணத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது. கோட்டை சுவர்களுகிடையே காவற்கோபுரங்கள் என்றும் அகழியால் சூழப்பட்ட கோட்டையில் நகரம் விளங்கியது. அகலமாகவும், நீளமாகவும் இருக்கும் நகரத்தின் வீதிகள் தினமும் துப்புரவு செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்திர பிரதேசம் அயோத்தியாவில் ராம்காட் பழைய பாலம்

ராமாயண காலத்திற்கு முன்பே இந்த நகரம் இருந்தது, ஆனால் இப்போது நமக்கு ராமாயணத்தில் காணப்படும் விளக்கங்களே பழைமையானவையாக தெரிகிறது. ஸ்ரீ வால்மீகி எழுதிய காவியமான இராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ள நகரத்தை விட தற்போதைய நகரம் மிகவும் சிறியது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். அயோத்தியா அதன் வரலாற்றில் பல உயர்வுகளையும் தாழ்வுகளையும் சந்தித்துள்ளது.

சூர்ய வம்சம்
வம்ச வர்ணனம் என்பது புராணத்தில் முக்கியமாக கருதப்படுகிறது. பிரம்மாவின் மானசீக மகன் மரீச்சி, அவரின் புதல்வர் காஷ்யபர், அவரின் மகன் சூர்யன். அதே பரம்பரையில் பல பிரபலமான ஆட்சியாளர்கள் பிறந்தனர் - மாந்தாது, அம்பரீஷா, சத்தியவ்ரதா, திரிசங்கு, ஹரிச்சந்திரா, திலீபன், பாகீரதன் கட்வாங்கர், ரகு, தசரதர், ராமார். இக்ஷ்வாகுவும் அவரது மகன்களும் அயோத்தியை தலைநகராக கொண்டு பாரதத்தை ஆட்சி செய்தனர். ஆகவே இந்த புனித ஸ்தலம் ’சூர்ய வம்சம்’ என்று அழைக்கப்படும் வம்சத்தின் தலைநகராக இருந்தது. பாகீரதர் அவரது தவத்தால் கங்கை நதியை பூமிக்கு கொண்டு வந்தவர். அவர்களில் சிறந்தவர் தசரதரின் மகன் - ஸ்ரீ ராமர், விஷ்ணுவின் மறுபிறவி.

இக்ஷ்வாகு வம்சத்தின் தலைநகரம் அயோத்தி
அயோத்தி என்பது கடவுளால் கட்டப்பட்ட நகரம் என்றும் அந்த நகரம் சொர்க்கத்தைப் போலவே வளமானதாகவும் இருந்தது என்றும் அதர்வ வேதம் கூறுகிறது. இந்த புனித ஸ்தலமே தசரதனின் மகன் ஸ்ரீ ராமர் பிறந்து வளர்ந்த இடம். வால்மீகி ராமாயணம் இந்த நகரத்தின் முழு விவரணத்தையும் அளிக்கிறது. இன்று வேறு எந்த பழங்கால இடத்தையும் போலவே இந்த நகரமும் மாறிவிட்டது, அதன் முதல் தோற்றத்தில், ராமராஜ்யத்தின் போது நிலவிய அனைத்து அழகையும் இழந்துவிட்டதாகத் தோன்றலாம். ஆனால், நகரத்தின் முக்கியமான இடங்களை ஒருவர் உன்னிப்பாக ஆராய்ந்தால், அது உண்மையில் அவ்வாறு இல்லை என்பது தெளிவாகிறது. ஒருவர் செய்ய வேண்டியது என்னவென்றால், இந்த புனித நகரத்தை ஒரு நாள் சுற்றுலாப் பயணிகளாகப் பார்க்கக்கூடாது, வித்தியாசத்தை அறிந்து கொள்ள அயோத்தியாவில் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து இடங்களையும் பார்த்து சில நாட்கள் தங்கும் ஒரு ’யாத்ரீகரா’க செல்லுங்கள். சனாதன தர்மத்தின் உற்சாகத்துடன் நகரம் இன்றும் துடிப்பாகதான் உள்ளது புரியும். வாழ்க்கையில் நேர்மை மற்றும் மனநிறைவு - ஒருவரின் வாழ்க்கையின் இரண்டு முக்கிய அம்சங்கள் - நவீன நகரங்களில் கிட்டத்தட்ட இல்லாதவை, அயோத்தியின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் கூட குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. இந்த ஸ்தலத்தில் உண்மையும் நன்மையும் ஏராளமாக இருப்பதால், இந்த புனித நகரத்திலிருந்து வெளியேறும்போது ஒருவர் நல்ல மனிதராக மாறிதான் வெளியே வர முடியும்.

அரசாங்க பதிவுகளிலிருந்து..
ராமாயணம் என்ற காவியத்தின்படி, அயோத்தி நகரம் அனைத்து மனித இனத்தின் முன்னோடி மனுவால் நிறுவப்பட்டது. ராமரின் தந்தை சக்ரவர்த்தி தசரத்தின் காலத்தில், இது கோபுரங்கள் மற்றும் வாயில்களால் பலப்படுத்தப்பட்டு, ஆழமான அகழிகளால் சூழப்பட்டு இருந்தது.

அயோத்தியைப் பற்றிய பின்வரும் விளக்கம் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது - 1862-3, தொகுதி 1, ப .321: -

தற்போதைய அயோத்தி நகரம், கிட்டத்தட்ட பழைய நகரத்தின் வடகிழக்கு மூலையில் மட்டுமே உள்ளது. இது இரண்டு மைல் நீளம், முக்கால் மைல் அகலம் கொண்டது; ஒரு காலத்தில் இந்த அளவின் பாதி கூட கட்டடங்கள் இருக்கவில்லை, மேலும் இவ்விடம் சிதைவுகளால் நிரம்பியிருந்திருந்தது.

பொதுவாக ஒத்த பழங்கால சிதைவடைந்த நகரங்களில் காணப்படுவது போல் உடைந்த சிலைகள் மற்றும் வடிவமைக்கப்பட்ட தூண்களால் மூடப்பட்ட இடிபாடுகளினாலான உயர் மேடுகள் எதுவும் இல்லை. அங்கு மிச்சமிருந்தவைகள் இடிபாடுகளிலிருந்து வேண்டியவைகள் எடுக்கப்பட்டு மிச்சமிருந்தவைகளே. அதிலிருந்து அண்டை நகரமான பைசாபாத்தில் வீடுகளைக் கட்டுவதற்காக அனைத்து செங்கற்களும் அகற்றப்பட்டுள்ளன. இந்த நகரம் - இரண்டு மைல் மற்றும் ஒன்றரை நீளம், ஒரு மைல் அகலம் கொண்டது - முக்கியமாக அயோத்தியின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களால் கட்டப்பட்டது. இரண்டு நகரங்களும் சேர்ந்து கிட்டத்தட்ட ஆறு சதுர மைல் பரப்பளவைக் கொண்டுள்ளன, அல்லது ஸ்ரீ ராமரால் ஆளப்படும் பண்டைய தலைநகரின் சாத்தியமான அளவின் பாதி அளவே. பைசாபாத்தில், வாரன் ஹேஸ்டிங்ஸினால் நடத்தப்பட்ட கச்சேரி கட்டிடத்தை தவிர எந்தவொரு முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடம் ஏதுமில்லை. ஓத்தின் முதல் நவாப்களின் தலைநகராக பைசாபாத் இருந்தது, ஆனால் அது 1775 இல் அசாஃப்-உத்-தவ்லாவால் கைவிடப்பட்டது.

ஸ்ரீ ராமரின் குடியிருப்பு
தற்போதைய கனக பவன் ஸ்ரீ ராமரின் இல்லமாக இருந்தது.

சீதா ரசோய்
ஸ்ரீ ராம ராஜ்ய நாட்களில், ஸ்ரீ சீதா மாதா அவர்களின் கனகபவன் வரும் அதிதிகளை முறைபடி வரவேற்று, அவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்துக்கொடுப்பதை மேற்கொண்டார். தொலைதூர இடத்திலிருந்து அயோத்தியா வருபவர்களுக்கு உணவு வழங்குவது வழக்கம், இதனை ஸ்ரீ சீதா மாதா மேற்பார்வையில் இருந்தது. ஸ்ரீ சீதா ரசோய் என்று அழைக்கப்படும் இந்த அன்ன சத்திரம் இரவு பகலாக செயல்பட்டது. அயோத்தியா வரும் எவரும் வெறும் வயிற்றில் உணவு இல்லாமல் திரும்ப வேண்டியதில்லை.

ஸ்ரீ மணி ராம் தாஸ் மற்றும் ஸ்ரீ சீதாஜி கி ரசோய்
இந்த கலியுகத்தின்போது, அயோத்திக்கு வருகை தரும் அனைவருக்கும் அன்னமளிக்கும் வழங்கும் இந்த நடைமுறை புனித ஸ்ரீ ஸ்ரீ மணிராம்தாஸ்ஜி அவர்களால் மீண்டும் துவக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. ஸ்ரீ மணிராம்தாஸ்ஜி ஸ்ரீ ஸ்ரீ ஹனுமான் தாஸ்ஜியின் சீடராக இருந்தார், ஸ்ரீ ஸ்ரீ ஹனுமான் தாஸ்ஜி ஸ்ரீ ஸ்ரீ ராம் பிரசாத்சார்யாவின் சீடராக இருந்தார். ஸ்ரீ மணி ராம் தாஸ் அவரது குரு அறிவுறுத்தியபடி சித்ரகூட் க்ஷேத்திரத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் தியானம் செய்தார். ஸ்ரீ ஹனுமான் அவருக்கு அயோத்திக்குச் சென்று ‘சீதா மாதா கி ராசோய்’ மீண்டும் துவங்க அவருக்கு ’மார்க்க-தர்ஷன்’ வழங்கினார்.

அதன்படி அவர் அயோத்திக்கு வந்து, சராயு ஆற்றங்கரையில் தாராள மனவுடையவர்களிடம் பணம் பெற்று, அயோத்தியிற்கு வருகை தரும் சாதுக்களுக்கு அன்ன தானம் [’ரோட்டி’] அளிக்க ஏற்பாடுகள் செய்தார். சில நாட்களில் அவர் ஒரு சாவ்னியை நிறுவி சாதுக்களுக்கு உணவு அளிக்கலானார். அவர் அருகிலேயே ஒரு ’கோ-சாலா’ அமைத்தார். சாதுக்களின் சபையில் துளசிதாஸரின் ’மானஸ்’ மற்றும் வால்மீகியின் ராமாயணம் இரண்டும் ஓதுவதை வழக்கமாக்கினார்.

மணி ராம் தாஸ் பாசறை
சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ மணி ராம தாஸ்ஜி நிறுவிய மணி ராம் தாஸ் சாவ்னி இப்போது பல சனாதன தர்ம நடவடிக்கைகளுக்கு மையமாக உள்ளது. இந்த வளாகத்தில் “சார் தாம்” உள்ளது, அங்கு நான்கு தாம்களின் [ஸ்ரீ பத்ரிநாத் தாம், ஸ்ரீ ஜெகநாத் தாம், ஸ்ரீ துவாரகா தாம் மற்றும் ஸ்ரீ ராமேஸ்வர் தாம்] தெய்வங்களின் பிரதி நிறுவப்பட்டுள்ளது. இதை ஒட்டியே பிரதான ஸ்ரீ மணி ராம் தாஸ் ஆசிரம் இருக்கிறது. ஆசிரமத்தில் ஸ்ரீ ரங்கநாதருக்கு கோயில் உள்ளது. ஸ்ரீ பகவத் கீதையின் அனைத்து ஸ்லோகங்களும் பொறிக்கப்பட்ட தூண் உள்ளது. இருப்பினும், முக்கிய ஈர்ப்பு “ஸ்ரீ சீதா மாதா கி ரசோய்” ஆகும், இது ஆசிரமத்தில் தங்கி, ஸ்ரீமத் ராமாயணத்தை ஓதுவதை / படிப்பதைத் தவிர வேறொன்றிலும் ஈடுபடாத புனிதர்களுக்கு உணவு அளிக்கிறது.

இந்த ஆசிரமத்திற்கு நேர் எதிரே பிரம்மாண்டமான “வால்மீகி பவன்” உள்ளது, அங்கு ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் இருபத்தி நான்காயிரம் ஸ்லோகங்களும் பளிங்கு பலகையில் பொறிக்கப்பட்டுள்ளது. பவனின் நடுவில் "ஸ்ரீ ராம் தர்பார்" உள்ளது. பவனில் பல கோடி ‘ஸ்ரீ ராம்’ நாம் எழுதப்பட்ட புத்தகங்கள் அடங்கிய பெட்டகங்கள் உள்ளன. ராமநாம எழுத புத்தகங்கள் அங்கு வழங்கப்படுகிறது. ‘ஸ்ரீ ராம்’ நாமம் எழுதி அவர்களுக்கு பக்தர்கள் அப்புத்தகத்தை சமர்ப்பிக்கலாம். நாளின் இருபத்து நான்கு மணி நேரமும் ஸ்ரீ ராம சங்கீர்த்தன் இந்த புனித இடத்தில் நடைப்படுகிறது.

"மகரிஷி வால்மீகி ஆராய்ச்சி நூலகத்தில்" ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாண்டுலிபி ஆவணங்கள் மற்றும் 30,000 சமய மற்றும் வரலாற்று புத்தகங்கள் உள்ளன. "சர்வதேச ஆராய்ச்சி மையம்" இயற்கை சிகிச்சை, யோகா சிகிச்சை, மற்றும் சமஸ்கிருதம் ஆகியவைகளுக்காக செயல் படுகின்றது. அங்கு ஒரு வைத்தியசாலையும் உள்ளது.

சாவ்னி தற்போது மகந்த் ஶ்ரீ நிருத்ய கோபால தாஸ்ஜி மேற்பார்வையில் உள்ளது. அவர் "ஸ்ரீ மணிராம் தாஸ் சாவ்னி"யின் ஆறாவது பிடாதிபதியாவார். அவருக்கு முன் ஸ்ரீ மணிராம் தாஸ்ஜி மகாராஜ், ஸ்ரீ வைஷ்ணவ் தாஸ்ஜி மகாராஜ், ஸ்ரீ ராம் சரண் தாஸ்ஜி மகாராஜ், ஸ்ரீ ராம்ஷோபா தாஸ்ஜி மகாராஜ் மற்றும் ஸ்ரீ ராம்மனோஹர் தாஸ்ஜி மகாராஜ் ஜி ஆகியோர் சாவ்னியின் முக்கிய தலைவர்களாக இருந்தனர்.

ஶ்ரீபடே ஹனுமான் மந்திர், அயோத்தியா, உத்திர பிரதேசம்

அயோத்தியின் படே ஹனுமனுக்கான கோயில்
முன்னர் குறிப்பிட்டபடி, மஹந்த் ஸ்ரீ மணி ராம் தாஸ்ஜி ஸ்ரீ ஹனுமனின் வழிகாட்டுதலின் படி அயோத்திக்கு வந்து “ஸ்ரீ சீதா மா கி ரசோய்” மற்றும் மேலே விவரிக்கப்பட்ட பிற துணை நிறுவனங்களையும் நிறுவினார். அவர் தன்னை வழி நடத்திய பகவான் ஶ்ரீஹனுமானுக்கு பயபக்தியுடன் அவர் “பிந்து சரோவர்” என்ற திருக்குளத்தின் நடுவில் கோவில் ஒன்றினை இங்கே நிறுவினார்.

பிந்து சரோவரின் நடுவில் உயரமான தூண்களில் கட்டப்பட்ட எண்கோண வடிவத்தில் அவர் கோயில் உள்ளது. சதுர வடிவிலான இந்த திருக்குளத்தில் பக்கவாட்டில் படிகள் உள்ளன, இதனால் பக்தர்கள் ஸ்ரீ ஹனுமான் தாமரை காலடியில் இருக்கும் இக்குளத்தின் தண்ணீரில் குளிக்க முடியும்.

அயோத்தியாவின் படே அனுமன்
பக்தர்களின் கண்களுக்கு விருந்தாக பிரம்மாண்டமாக ஸ்ரீ ஹனுமாரின் சுமார் பதினைந்து அடி உயரம் கொண்ட மூர்த்தம். ஸ்ரீ ஹனுமார் நிற்கும் தோரணையில் காணப்படுகிறார். இறைவன் பார்வை நேர் கொண்டதாக உள்ளது. அவரது இடது திருக்கரத்தில் வைத்திருக்கும் கதாயுதத்தை அவரது இடது தோளில் சாய்த்து பிடித்துள்ளார். அவரது வலது திருக்கரம், ஸ்ரீ ராமருக்கு சேவை செய்ய வருபவர்களைப் பாதுகாப்பேன் என்று உறுதியளிப்பது போல் ’அபய முத்திரை’ யைக் காட்டுகிறது. அவரது தலையை கிரீடம் அலங்கரிக்கிறது. எந்த கோணத்தில் இருந்து பக்தர் அவரைப் பார்த்தாலும் அவரது திருக் கண்கள் பக்தரை நேரடியாகப் பார்ப்பது போல் தோன்றுகிறது என்பது அவரது கண்களின் விசேட அமைப்பு.

 

அனுபவம்
தனது பக்தர்களையும் ஸ்ரீ ராமரின் பக்தர்களையும் பாதுகாக்க உறுதியாக இருக்கும் அயோத்தி ஶ்ரீபடே ஹனுமனின் தரிசனம் செய்தபின், வாழ்க்கையில் தனக்கு கவலைப்பட ஒன்றுமில்லை என்பதனை ஒருவர் உணருவார் என்பது திண்ணம்.

தமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி
பிப்ரவரி 2020

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.

 


காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே