ஶ்ரீ வியாசராஜா பிரதிஷ்டை செய்த ஹனுமான்:

ஶ்ரீ ஆஞ்சனேயர் திருக்கோயில் :: சத்தியவிஜய நகரம் :: ஆரணி :: தமிழ்நாடு

ஜீ.கே.கௌசிக்

 

பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் வளாகம், பஞ்சமுகி, ரைச்சூர், கர்நாடகாஆரணி
தமிழ்நாட்டிலுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் கமண்டல நாகா ஆற்றின் கரையில் வரலாற்று பிரபலமான ஆராணி. வேலூர் நகரிலிருந்து 38 கி.மீ தூரத்திலும், திருவண்ணாமலைக்கு 60 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

நன்கு அமைக்கப்பட்ட சாலைகளால் இந்த நகரத்தை நாம் அடையலாம். மாநில நெடுஞ்சாலை எஸ்.எச்.-4 (ஆற்காடு - ஆரணி - செஞ்சி - விழுப்புரம் சாலை), எஸ்.எச்.-132 (கண்ணமங்கலம் - ஆரணி சாலை) ஆகியவை ஆராணியை இணைக்கும் முக்கிய சாலைகள் ஆகும். இந்த நகரத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டு நூல் 'அரணி சில்க்' என்று பிரபலமாக அறியப்படுகிறது.

ஆராணி பெயர் காரணம்
ஆரணி என்று இவ்விடத்திற்கு பெயர் வர மூன்று வேறுபட்ட கருத்துகள் உண்டு. தமிழ் மொழியில் ஆர் என்றால் அத்தி மரம். இப்பகுதியில் அத்தி மரங்கள் ஏராளமாக இருந்ததால், இந்த இடம் அராணி என்று பெயர் பெற்றது. இரண்டாவதாக சமஸ்கிருத வார்த்தையான ஆரண்யம் காடு என்று பொருள்படுவதால் இவ்விடத்திற்கு ஆரணி என்று பெயர் வந்தது. கமண்டல ஆறு இவ்விடத்தை அணைத்த வண்ணம் ஓடுவதால் ஆறு+அணி என்பதால் ஆரணி என்று பெயர் வந்தாது. ஆரணி அருகில் ஓடும் கமண்டல நதி ஜவாத்து மலையில் துவங்குகிறது, நாக நதி ஆறு கண்ணமங்கலம் அருகே அமர்த்தி மலைகளிலிருந்து உருவாகிறது. இந்த இரண்டு ஆறுகளும் அரணிக்கு அருகிலுள்ள சம்புராயர்நல்லூரில் சங்கமித்து ஆரணி வழியாக ஓடுகிறது.

ஆரணி ஜாகிர்
மராட்டிய படை தலைவர் சாஷாஜி (சத்திரபதி சிவாஜி தந்தை) 1640 ஆண்டு ஆரணியில் ஜாகிர் துவங்கி, கர்நாடக போரில் தனது படைக்கு பக்க பலமாக இருந்ததால் ஶ்ரீ வேதாஜி பாஸ்கர் பந்த் அவர்களை முதல் ஜாகீராக நியமித்தார். ஶ்ரீ மாத்வாசாரியாரின் சித்தாந்தமான ’த்வைதத்தை கொள்கையாக கொண்டு பின்பற்றுபவர்கள் மாத்வர்கள் எனப்படுவர். ஆரணி ஜாகிர்கள் பரம்பரை, மாத்வர்கள் ஆவார்கள். 1948ஆம் ஆண்டு ஜமீந்தாரி முறை ஒழிப்பு மசோதா வந்தது, அதுவரை ஶ்ரீ வேதாஜி பாஸ்கர் பந்த் அவர்களின் பரம்பரை ஆரணி ஜாகிர்களாக இருந்தனர். ஸ்ரீநிவாஸ் ராவ் சாகேப் அல்லது திருமலா ராவ் சாகேப் என்ற அடைபெயரில் ஜாகிர்தார்களின் பெயர்கள் அமைக்கப்பட்டு இருப்பது ஆரணி ஜாகிர் பழக்கம்.

Sri Anjaneya temple, Sathya Vijaya Nagaram, Arni ஆரணிக்கு அருகில் ஒரு க்ஷேத்திரம்
ஶ்ரீமாத்வ த்வைத சித்தாந்தத்தை பின்பற்றும் ஸ்ரீ வியாசராஜா தீர்த்தர் (1460-1539), ஆஞ்சநேயருக்காக 732 திருக்கோயில்கள் தென் இந்தியாவில் நிர்மானித்து உள்ளார். இந்த கோயில்களில் ஒன்று ஆரணியிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அந்த புனித இடத்தினை பல மாத்வ பெரியவர்கள் விஜயம் செய்துள்ளனர். இன்று இந்த இடம் ஒரு மாத்வ ஆசாரியரின் பெயரில் ஸ்ரீ சத்ய விஜய நகர் என்று அழைக்கப்படுகிறது. இந்த புனித இடத்திற்கு அவருடைய பெயரை வைத்ததற்கான காரணம் மற்றும், ஸ்ரீ வியாசராஜரால் நிறுவப்பட்ட ஸ்ரீ ஹனுமானின் முக்கியத்துவமும் ஸ்ரீ சத்யா விஜய தீர்த்தரின் சரிதை நமக்கு சொல்லும்.

சுயசரிதை

ஸ்ரீ சத்யா விஜய தீர்த்தர்: [1726-1737]
ஶ்ரீ உத்திராதி மடாதிபதி ஶ்ரீ சத்யபூர்ண தீர்த்தர் அவர்கள் ஶ்ரீ ராமாசார் என்னும் இளைஞனை அடுத்த மடாதிபதியாக்க முடிவு செய்தார். அவ்விளைஞனை ஶ்ரீ சத்யபிரிய தீர்த்தர் என்ற பெயரிட்டு சன்யாச ஆச்ரமம் வழங்கினார். சில தினங்களில் ஶ்ரீ சத்யபிரிய தீர்த்தர் த்வைத சித்தாந்தத்தை பரப்புவதற்காக வட இந்திய யாத்திரை மேற்கொண்டார். சில வருடங்கள் கழிந்து ஶ்ரீ சத்யபூர்ண தீர்த்தர் அவர்கள் தனது பூத உடலை துறந்து பிருந்தாவனம் எய்த நினைத்தார். அச்சமயம் மடத்தின் அடுத்த மடாதிபதியாக வேண்டிய ஶ்ரீ சத்யபிரிய தீர்த்தர் தனது யாத்திரையிலிருந்து திரும்பவில்லை. இந்நிலையில் மன்னார்குடியை செர்ந்த ஶ்ரீ பாலாசார் என்பவரை ஶ்ரீசத்யவிஜய தீர்த்தர் என்று சன்யாசம் கொடுத்து அடித்த மடாதிபதியாக நியமித்தார். ஆனால் ஶ்ரீசத்யபிரிய தீர்த்தர் யாத்திரையிலிருந்து திரும்பியதும் மடத்தின் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று விதித்தார். கிருஷ்ணா நதிகரையிலுள்ள கோல்பூர் என்னும் க்ஷேத்திரத்தில் ஶ்ரீசத்யபூர்ணர் பிருந்தாவனம் எய்தினார்.

ஸ்ரீ சத்யபிரிய தீர்த்தர் யாத்திரையிலிருந்து திரும்பி வராத நிலையில், ஸ்ரீ சத்யவிஜய தீர்த்தர் ஸ்ரீ உத்திராதி மடத்தின் மடாதிபதியாக தொடர்ந்தார். அவர் ஒரு விஜய யாத்ராவின் போது ஆரணிக்கு வந்தார். அந்த நேரத்தில் ஆரணியின் ஜாகிர்தார் மாத்வ சித்தாந்தத்தில் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர். குரு ஶ்ரீசத்யவிஜயர் அவர்களின் ஆரணி விஜயத்தினால் அவர்கள் கௌரவிக்கப்பட்டதாக உணர்ந்தார். பூஜையை அமைதியான முறையில் நடத்துவதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். ஒரு நாள், பூஜையை ஶ்ரீசத்ய விஜய தீர்த்தர் முடித்துக் கொண்டு ஜாகிர்தாருடன் வெளியில் நடக்க ஆரம்பித்தார். அப்படி நடந்து செல்லும் பொழுது ஒரு இடத்தில் அவர்கள் ஒரு பாம்பினை[ஸ்ரீ நாகராஜர்] கண்டனர். பாம்பை அவ்விடத்தில் பார்த்ததின் முக்கியத்துவத்தை அறிய ஜாகீர்தார் அவர்கள் விரும்பினர். ஸ்ரீகுருகளு போர் நடக்க இருப்பதாகவும் ஜாகிர்தார் அவரது குடியிருப்புப் பகுதியை மாற்ற வேண்டியிருக்கலாம் என்றும் கூறினார்.

Sri Anjaneya temple, Sathya Vijaya Nagaram, Arni ஶ்ரீசத்யவிஜய தீர்த்தருக்கு பிருந்தாவனம்
ஶ்ரீ சத்யவிஜய தீர்த்தருக்கு தனது பூத உடலை விட்டு பிருந்தாவன பிரேவேசம் செய்யும் நாள் நெருங்கி விட்டது என்பதை உணர்ந்தார். ஶ்ரீசத்யபிரிய தீர்த்தர் யாத்திரையிலிருந்து திரும்பிய பாடில்லை. தனக்கு குருநாதர் ஶ்ரீசத்யபூர்ணர் கொடுத்த நிபந்தனையை எப்படி நிறைவேற்றுவது என முடிவு செய்தார். ஜாகிர்தாரை அழைத்து சில விசயங்களை அறிவுறுத்தினார். தன் பூத உடலை தூக்கி செல்லும் போது தூக்கிச் செல்பவர்கள் எந்த இடத்தில் தன் உடலை மிகவும் பாரமாக உணர்கிறார்களோ, அந்த இடத்தில் தனக்கு பிருந்தாவனம் அமைக்கும் படி சென்னார். மடத்தில் உள்ள பொருள்களுக்கு பட்டியல் தயார் செய்து இரண்டு பிரதிகள் தயாரித்தார். ஒன்று ஶ்ரீவிஜயபிரிய தீர்த்தருக்கும், மற்றொன்று ஜாகிர்தாரிடமும் தரப்பட்டது. பூஜை பெட்டியை புதைத்து விடவும், அதனை ஶ்ரீசத்யபிரியர் மட்டுமே திறக்கலாம் என்றும் மற்றும் தனது தண்டத்தை ஶ்ரீசத்யபிரியர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறித்தினார்.

சைத்ர கிருஷ்ண ஏகாதேசி அன்று ஶ்ரீசத்யவிஜய தீர்த்தர் அவர்கள் தன் பூத சரீரத்தை துறந்தார். முன்பே ஏற்பாடு செய்தது போல் அவரது பூத உடலை எடுத்து சென்றார்கள். என்ன ஆச்சரியம் முன்பு ஜாகிர்தாரும் குருஜியும் பாம்பை பார்த்தார்களே அவ்விடம் [இவர்கள் இருவருமே அறிந்த நிகழ்ச்சி] வந்த பொழுது அவரது உடல் மிகவும் கனப்பதாகவும் அங்கு சற்றே நின்றனர். ஜாகிர்தார் அவர்கள் குருஜியின் ஆணைபடி அந்த இடத்திலேயே ஶ்ரீசத்யவிஜய தீர்த்தருக்கு பிருந்தாவனம் எழுப்பினார். பிறகு அந்த கிராமத்திற்கு குருஜியின் நினைவாக ஶ்ரீசத்யவிஜய நகரம் என்று பெயரிட்டார்.

Sri Vyasaraja Tirtha ஶ்ரீசத்யபிரிய தீர்த்தர் திரும்பினார்
ஶ்ரீசத்யபிரிய தீர்த்தர் தனது யாத்திரையை முடித்துக்கொண்டு சத்யவிஜய நகரம் திரும்பினார். ஆரணி ஜாகிர்தார் நடந்த எல்லா விசயங்களையும் கூறினார். ஶ்ரீசத்யபிரிய தீர்த்தர் பூஜை பெட்டியை எடுத்துக் கொண்டார். நல்லவை எல்லாம் நல்ல விதமாக முடியும் தருவாயில், ஜாகிர்தார் ஶ்ரீசத்யவிஜய தீர்த்தர் அவர்கள் தண்டத்தை பற்றி கூறியதை ஶ்ரீசத்யபிரிய தீர்த்தரிடம் கூறினார். சற்று தர்ம சங்கடமான விசயம் இது. முதலாவதாக ஶ்ரீசத்ய விஜயர் இவருடைய ஆச்ரம குரு அல்ல. சாதாரணமாக சந்யாச ஆச்ரம் கொடுக்கும் குருவிடம் தான் தண்டம் பெறுவது வழக்கம். இரண்டாவதாக சந்யாசார்மத்தில் ஶ்ரீசத்ய விஜயர் இவரை விட இளையவர். இவ்விரு காரணத்தினால் குழம்பிய மனத்துடன் பூஜை பெட்டியுடன் சத்யவிஜய நகரத்தை விட்டு கிளம்பினார்.

ஶ்ரீசத்ய விஜய நகர ஶ்ரீஅனுமான் கோயில்
கிராமத்தின் எல்லையில் உள்ள ஶ்ரீவியாசராஜரால் பிரிதிஷ்டை செய்யப்பட்ட ஶ்ரீமுக்ய பிராணர் கோயிலை ஶ்ரீ சத்யபிரிய தீர்த்தர் அடைந்தார். அதற்கு மேல் அவரை போக விடாமல் பல குரங்குகள் சூழ்ந்து கொண்டன. திரும்பவும் கிராமத்தினுள் செல்ல நினைத்தார், அப்பொழுது அவரிடம் இருந்த பூஜை பெட்டி அவரது கண்ணில் தென்படவில்லை. ஶ்ரீசத்ய விஜயரின் மகிமை அவருக்கு அப்பொழுது புலனாயிற்று. அவர் ஶ்ரீசத்ய விஜயரின் மகிமையை பாட்டாக வடித்தார். பின் தண்டத்தை மாற்றிக் கொண்டு தனது த்வைத சித்தாந்தத்தை பரப்பும் பணியினை தொடர்ந்தார்.

Vyasaraja pradeshta Sri Hanuman, Sathya vijaya nagaram ஶ்ரீவியாசராஜா பிரதிஷ்டை செய்த ஶ்ரீஅனுமான்
ஆரணியிலிருந்து பஸ்ஸில் எஸ்.வி.நகரம் வந்தால் ஶ்ரீவியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஶ்ரீஅனுமானுக்கான கோயில் நகரத்தின் நுழைவில் உள்ளது. ஶ்ரீசத்ய விஜயரின் பிருந்தாவனம் இங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது. ஶ்ரீஉத்திராதி மடத்தினால் சமீபத்தில் இத்திருக்கோயில் புதிப்பிக்க பட்டுள்ளது.

ஶ்ரீ அனுமார் இச்க்ஷேத்திரத்தில் எதிர்முகியாக அருள் பாலிக்கிறார். நீண்டு வளர்ந்த திருஉருவம். ஶ்ரீ அனுமார் தெற்கு நோக்கி உள்ளார். அவருடைய கமல திருபாதங்களில் தண்டை, நூபுரம் அணிந்துள்ளார். வலிய இரு தொடைகளையும் அலங்காரமான கச்சை கட்டிய வேட்டி கவ்வி பிடித்திருக்கிறது. இடையில் ஒட்டியாணம் மாதரியான அணிகலம் ஒன்று அணிந்திருக்கிறார். அதன் வலது புறம் பிச்சுவா கத்தி ஒன்று இருக்கிறது. இரு திருகரங்களிலும் ’புஜவலயம்’ என்னும் புய அணியும் மற்றும் மணிகட்டில் கங்கணமும் அணிந்துள்ளார். பரந்த மார்பில் இரட்டைசாரி கொண்ட அழகிய உருட்டு மாலை அணிந்திருக்கிறார். ஒற்றைசாரி மாலை ஒன்றும் அதில் ஶ்ரீராம, சீதா, லக்குமணன் உருவம் கொண்ட பதக்கம் இருக்கிறது. கழுத்தை ஒட்டி ’உபகிரிவா’ என்னும் அணிகலம் அணிந்துள்ளார். இரு செவிகளையும் குண்டலம், ’கர்ணபுஷ்பம்’ ஆகியவை அலங்கரிக்கிறன. தலை கேசத்தை அழகாக இருக்கமாக பிடித்து இருக்கும் சிகாமணி மாலை. அவரது வலிமை மிகு வால் ’ஓம்’ வடிவத்தில் வளைந்து தலைற்கு மேல் உயர்ந்து செல்கிறது. வாலின் நுனியில் அழகிய சிறிய மணி ஒன்று இருக்கிறது. பார்க்க கொள்ளை அழகாக இருக்கும் இவர் தனது வலது திருகரத்தை உயர்த்தி பக்தர்களுக்கு அபயம் அளிக்கிறார். அவரது இடது திருகரம் இடையை ஒட்டி சௌகந்திகா புஷ்பத்தின் தண்டை பிடித்துள்ளது. சௌகந்திகா புஷ்பம் இடது தோளுக்கு மேல் தெரிகிறது.

சத்தியவிஜய நகர்
கமண்டலா நதிகரையில் ஆரணியிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் ஆரணி தாலுகாவில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது சத்தியவிஜய நகரம் என்னும் கிராமம். எஸ்.வி. நகர் அல்லது நகரம் என்று அழைக்கப்படும் இவ்விடம் ஆரணி ஜாகிர்தாரால் அவரது குருவான ஸ்ரீ சத்யவிஜய தீர்த்தரின் பெயரில் உருவாக்கப்பட்டது. முன்பு த்வைத சித்தாந்தல் முதிர்ந்தவர்கள் பலரும் இங்கு இருந்து, சித்தாந்தத்தை பரப்புவதில் முக்கிய க்ஷேத்திரமாக இருந்திருக்கிறது. ஆரணி ஜாகிர்தார்கள் இவர்களை ஆதரித்தனர். ஆனால் இன்றய நிலமை வேறு. ஆரணி ஜாகிரின் அரண்மனை கூட இன்று பாழடைந்து கிடக்கிறது. ஆனால் அவர்களின் குருவாகிய ஶ்ரீசத்தியவிஜய தீர்த்தரின் மூல பிருந்தாவனம் இன்றும் செயல்பாட்டுடனும் உயிரோட்டத்துடன் உள்ளது. ஜாகிரின் வம்சாவளியினரும் மற்றும் பல பக்தர்களும் இந்த க்ஷேத்திரத்திற்கு வந்து ஶ்ரீசத்திய விஜய தீர்த்தரிடமும் ஶ்ரீவியாசராஜா பிரதிஷ்டை செய்த ஶ்ரீமுக்கிய பிராணரிடமும் [அனுமார்] ஆசி பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குருகளின் பிருந்தாவனமும் ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயிலும் ஶ்ரீஉத்திராதி மடத்தின் நிர்வாகத்தில் மிகவும் நன்றாக செயல் படுகிறது. இந்த க்ஷேத்திரம் அமைதியான சூழலில் அதிகம் வியாபர நோக்கில்லா இடமாக உள்ளது. ஆன்மீக சிந்தனை வளர்த்துக் கொள்ள அருமையான அமைதியான இடம் இது என்பதில் சந்தேகம் வேண்டாம்.

மாத்வ சித்தாந்தத்தில் அதரவாளர்களான ஆரணி ஜாகிரின் அரண்மனையும் இக்கிராமத்தில் உள்ளது. ஶ்ரீ சத்யவிஜய தீர்த்தரின் பிருந்தாவனம் இவர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. ஜமீந்தாரி முறை ஒழிப்பு மசோதா வந்த பிறகு பிருந்தாவனத்தின் பராமரிப்பு உத்திராதி மடத்திற்கு மாறியது. இன்று பக்தர்கள் இச்க்ஷேத்திரத்தில் வந்து தங்கி ஶ்ரீகுருவின் ஆசியையும் ஶ்ரீ வியாச பிரதிஷ்ட ஶ்ரீஆஞ்சநேயரின் அசியையும் பெறலாம்.

 

அனுபவம்
ஶ்ரீசத்யவிஜய தீர்த்தர் அவர்களின் அருளாசிகளையும், ஶ்ரீவியாசராஜா பிரதிஷ்டை செய்த ஶ்ரீமுக்கிய பிராணரின் அருளாசியும் கிடைக்கும் மிக புண்ய க்ஷேத்திரத்திற்கு வாருங்கள், ஆசிகள் இரட்டிப்பாக பெற்று வாழ்க்கையில் சாந்தி அடைவோம்.

தமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி
மார்ச் 2019

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.

 


காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே