home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
    மின்னஞ்சல் விருந்தினர் ஏடு
boat

கல்லணையில் காவேரி :: courtesy-The Hindustan Times


ஶ்ரீவீர ஆஞ்சநேயர் திருக்கோயில், கல்லணை, தமிழ்நாடு

ஜி.கே.கௌசிக்


காவிரி

ஜீவநதியாம் காவிரி கர்நாடகா மாநிலத்தில் குடகுகிலிருக்கும் பிரம்மகிரி மலைத் தொடரில் உற்பத்தியாகிறது. 4400அடி உயரத்தில் இருக்கும் இவ்விடம் தலைகாவிரி என்று அழைக்கப்படுகிறது. சுமார் மூன்னூற்று எண்பதைந்து கிலோமீட்டர் கடந்து காவிரி தமிழகத்தில் மேட்டூர் அருகில் இருக்கும் ஹோகனேகல் வந்தடைகிறாள்.

அங்கிருந்து பவானி வரை அவள் தென்நோக்கி பயணிக்கிறாள். நீலகிரி மலைத்தொடரில் ஊட்டியிலிருந்து தென்மேற்கே சுமார் 800அடி உயரத்திலிருந்து உற்பத்தியாகும் பவானி நதியுடன் காவிரி பவானி என்று அழைக்கப்படும் இங்கு சங்கமிக்கிறாள். இங்கிருந்து இவள் கிழக்கு நோக்கி பயணிக்கிறாள். வழியில் நொய்யல், அமராவதி நதிகளும் காவிரியுடன் கலக்கின்றன. இப்பொழுது அவளின் நடையில் கம்பீரம் அதிகரித்துயிருப்பதை நாம் பார்க்கலாம். மிகவும் அகலமாகவும் பாய்வாள் காவிரி.

காவிரியும் கொள்ளிடமும்

அவளின் அகலம் அதிகமாகியதால், திருச்சிக்கு அருகாமையில் எலநநூர் என்னும் இடத்தில் அவள் இரண்டாக பிரிந்து ஓடுகிறாள். வடக்கால் ஓடும் பிரிவுக்கு கொள்ளிடம் என்று பெயர். தெற்கால் ஓடும் பிரிவு காவிரி. இவ்விரு ஓட்டமும் திரும்பவும் கல்லணை அருகில் இணைய முயற்ச்சிகிறது. இப்படி இரண்டாக ஓடுவதால் நடுவில் தீவு ஏற்படுகிறது. இத்தீவில் தான் பிரசுத்தமான ஶ்ரீஇரங்கநாதர் கோயிலும், ஶ்ரீதிருவானைகாவல் கோயிலும் அமைந்துள்ளது. கொள்ளிடம் நதி காவிரியை விட சற்றே தாழ்வான நிலையில் பாய்வதால் கல்லணை அருகில் இவ்விரு நதிகளும் ஒன்று சேர முடிவதிலை.இவ்விரு நதிகளும் இணையாக பக்கத்தில் ஓடுகின்றன. காவிரியில் நீர் அதிமாகி வெள்ளம் வரும் போது, அதிகமான நீர் வடப்பக்கம் சென்று கொள்ளிடத்தில் கலந்துவிடும். இதனால் நீர்பாசன வசதியினை பராமரிக்க ஆண்டுதோறும் காவிரியின் வடகரையை செப்பனிட வேண்டியதாகியது.

இந்நிலையை மாற்றி அமைத்தவர் மாபெரும் சோழ வம்சத்தின் அரசன் கரிகாலன். அகண்ட காவிரி, கொள்ளிடம் மேல் அவர் கட்டிய அணை நிலமையை மாற்றி, நீர்பாசன வசதியை சீராக பராமரிக்க உதவியது.

கல்லணை

கரிகால சோழன் ஆட்சியில் காவிரி கரை உடைவதை தடுக்க திட்டம் உருவாக்கப்பட்டது. பாசனத்திற்கான நீரை எப்படி கரை சேதாரம் இல்லாமல் எடுப்பது என்பதற்கான ஆய்வுகளுக்கு பின் அணை கட்ட மிகவும் சரியான இடத்தை தேர்ந்தெடுத்தார். இன்று இவ்விடத்தின் பெயர் "கல்லணை" என்பதாகும். கறுங்கற்களையும் மண்ணையும் மட்டும் வைத்து சுண்ணாம்பு குழம்பு ஏதுமில்லமல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி ஒரு அணை கட்ட முடிந்தது என்பது இன்றும் வியக்கவைக்கும் உண்மை.

மாபெரும் அணைக்கட்டு

கரிகாலன் வெறும் கற்களைக் கொண்டு கட்டிய 1,079 அடி நீளமும், 66அடி அகலமும் கொண்ட இம்மாபெரும் அணை காலத்தால் அழிவின்றி இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலையாக நிற்கிறது என்பது பெரும் சாதனை. இதுதான் மனிதனால் உலகில் முதன்முதல் கட்டப்பட்ட அணை என்பதும் இன்றும் பழுதின்றி இருக்கிறது என்பதும் மகிழ்ச்சியுரிய செய்தி. ஆங்கிலேயர்களின் ஆட்சிகாலத்தில் கரிகாலன் கட்டிய கல்லணையின் மீது மதகுகள், நீர் ஒழுங்கியக்கிகள், வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டன. ஆங்கிலேயர்கள் இவ்வணையை கண்டு அத்தனை ஆச்சரியப்பட்டு இதனை "கிராண்ட் அணைகட்" [மாபெரும் அணைக்கட்டு] என்று அழைக்கலாயினர்.

கரிகால சோழன்

கல்லணையில் கரிகால சோழன் சிலை சங்க காலத்து சோழர்களில் [முற்கால சோழர் என்றும் சொல்வர்] ஒருவர் கரிகால சோழன் என்னும் மன்னர். இளஞ்சேட்சென்னியின் என்பவரின் மகனான இவர் கி.மு 270ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்திருக்கிறார். இவரை கரிகால பெருவளத்தான் என்றும் திருமாவளவன் என்றும் பட்ட பெயர்களாலும் அறியப்படுகிறார்.

கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று. மகன் கரிகாலன் சிறு வயது இருக்கும் போழுதே மன்னர் இளஞ்சேட்சென்னி மறைந்தார். பின் கரிகாலனுக்கு அரியாசனம் ஏறுவதற்குகான உரிமையை சூழ்ச்சியின் காரணம் இழந்தார். சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டார். அரண்மனையும் சிறைசாலையையும் எதிரிகள் தீ வைத்தனர். சிறையினின்று இவன் தப்பிச்சென்று அவரது மாமனின் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றினார். அச்சமயம் ஏற்பட்ட தீ விபத்தில் மன்னரது கால் கருகியதால் இவர் கரிகாலன் என்று அழைக்கப்படலானார்.

கரிகாலனும் ஆங்கிலேயர்களும்

தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் என்றும் பொன்னியால் [காவிரி] பொன் விளயும் பூமி என்றும் தஞ்சாவூர் டெல்டாவிற்கு பெயர். அச்சமயம் இந்தியா, இலங்கை, பர்மா முதலியவை ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியில் "வளத்தின் மகுடமாக" ஆண்டுக்கு மூன்ரு போகம் அரிசி தரும் தஞ்சாவூர் டெல்டாவை குறிப்பிட்டனர். தங்கள் அரசின் வருவாயை பெருக்க இவர்கள் நதி நீர் பாசனத்தில் முதலீடு செய்தனர். இவர்களின் கவனத்தை முதலில் ஈர்த்தது காவிரி நீர் பராமரிக்கும் கல்லணை தான். இதனை சரியானபடி நிர்வாகித்தால் வருடம் முப்போகாம் கிடைக்கும் என்பதால், நீர் வினயோகத்தை கவனிக்க முன்வந்தனர். காவிரி நதியின் மீதும், கொள்ளிடம் நதியின் மீதும் பல நீரொழுங்கிகள் இவர்களால் 19ஆம் நூற்றாண்டிலும், முன்20ஆம் நூற்றாண்டிலும் நிறுவி பராமரிக்கப்பட்டது. காப்டன் கல்ட்டீல், சர் ஆர்தர் காட்டன், டபிள்யூ.ஏம்.எல்லீஸ் ஆகிய பொறியாளர்கள் இதனை சாத்தியமாக்கினர்கள்.

ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட மதகு

கரிகால சோழனால் கட்டப்பட்ட அழியா கல்லணையை கோடைகாலத்தில் நதிகளில் நீர் இல்லாத பொழுது மட்டுமே பார்க்க இயலும். ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட நீரொழுங்கிகளும் [sluices] மதகுகள் [bridges] கல்லணையயின் மேல் இருப்பதால், இவைகளையும் சேர்த்தே கல்லணை என்று பார்க்க வேண்டும். மற்றொரு அழகிய கட்டுமானத்தை கல்லணையில் ஆங்கிலேயர்களை கட்ட வைத்தது பற்றி உங்களுக்கு தெரியுமா, பார்த்திருக்கிறீர்களா என்பது ஐய்யமே. அது தான் ஶ்ரீஆஞ்சநேயருக்கான திருக்கோயில். கொள்ளிடம் நதியில் அமைக்கப்பட்டுள்ள நீரொழுங்கிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது.

கொள்ளிடம் நதியின் மேலிருக்கும் நீர் ஒழுங்கியக்கியங்கள்

கரிகாலனின் கல்லணை மேல் ஆங்கிலேயர்களால் கொள்ளீடம் நதியின் மேல் நீர் ஒழுங்கியக்கிகளும் மதகுகளும் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டன. காப்டன் ஜே.எல்.கல்ட்டீல் அவர்கள் தலைமையில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. பணிகள் திட்டமிட்டபடி நிறைவேறிய வண்ணம் இருந்தது, ஆனால் 19ஆம் நீர் ஒழுங்கியை கட்டும்போது என்ன முயற்சித்தும் முடிக்க முடியவில்லை. திரும்ப திரும்ப விடாமல் முயற்சித்தும் பணி முடியவில்லை. தலத்தில் வேலை செய்யும், ஆங்கிலேய மேலாளருக்கு [காப்டன் ஜே.எல்.கல்ட்டீல்] இரவு தூக்கம் கெட்டது, என்ன செய்வதென்பதே தெரியவில்லை.

ஆங்கிலேய மேலாளரும் ஶ்ரீஆஞ்சநேயரும்

தலைமை பொறியாளர் காப்டன் ஜே.எல்.கல்ட்டீல் அவர்கள் ஓர் வித்யாசமான கனவு ஒன்று கண்டார். எவ்விடத்தில் முயற்சிகள் நீர் ஒழுங்கியை கட்டவிடவில்லையோ அந்த இடத்தில் தனக்கு ஒரு கோயில் கட்ட சொல்லி ஶ்ரீஆஞ்சநேயர் அவரை அறிவுறித்தினார். அந்த ஆங்கிலேயருக்கு நம்பிக்கையில்லாமையால் கனவை புறம் தள்ளிவிட்டு திரும்பவும் திரும்பவும் கட்டுவதற்கு முயற்சி செய்தார். கனவை பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை இருந்தும் ஒருநாள் குரங்கு கூட்டமாக வந்து அவரை சூழ்ந்து கொண்டு கூச்சலிட்டு கனவை நினைவுபடுத்திவிட்டு சென்றன. அப்படியும் காப்டன் அசையவில்லை. ஆனால் மறுநாளே அவரிடம் வேலைபார்க்கும் மேஸ்திரி தனது கனவில் ஶ்ரீஆஞ்சநேயர் தனக்கு கோயில் அமைக்க சொன்னதாக அவரிடம் கூறினார். மேஸ்திரி கூறிய தனக்கு வந்த அதே கனவின் நகலாக இருந்தது அந்த விவரமான கனவை கேட்டதும் காப்டனுக்கு தூக்கிவாரி போட்டது. ஶ்ரீஆஞ்சநேயர் கூறியது போல் அந்த இடத்திலேயே கோயில் அமைக்க சம்மதம் தெரிவித்து கோயிலை கட்ட தொடங்கினார் காப்டன்.

தற்போது கோயிலின் ஓர் மூலையில் கற்வெட்டு ஒன்று இதனை தெரிவிக்கிறது. “Repaired this colling LHA & Erected the 26s upright stones by Cap. J.L.Calddel AD 1804” என்ற வாசகங்கள் காணப்படுகிறது. இதன் கீழ் அரசாங்க ஆணையின் பெயரில் இக்கல் நாட்டப்பட்டதாக தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கற்வெட்டின் பின்புறம் ஶ்ரீஆஞ்சநேயரின் புடைப்பு சித்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.

கல்லணையினை காப்பவர் ஶ்ரீஹனுமார்

ஶ்ரீவீர ஆஞ்சநேயர் திருக்கோயில், கல்லணை, தமிழ்நாடு இரண்டாயிரம் ஆண்டு பழமையான கல்லணையை கட்டி காப்பவர் ஶ்ரீஹனுமார் என்பதனை ஊர்ஜிதம் செய்ய நடந்த இச்சம்பவத்தின் பிறகு புதிதாக வந்த நீர் ஒழுங்கிகளையும் இருநூறு ஆண்டுகளாக சிலா ரூபத்தில் இருந்து காத்து வருகிறார் ஶ்ரீஹனுமார். தஞ்சாவூர் சீமையும், டெல்டா பகுதிகளுக்கு நீர் பாசன வசதியையும் சீராக வைத்திருக்கும் பொருப்பினை இவர் தானே ஏற்றிருக்கிறார். இன்றும் கல்லணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்து விடுவதற்கு முன் ஶ்ரீஆஞ்சநேயருக்கு நேர்த்திகள் செய்யப்படுகின்றன. முதல் போகத்திற்கு விதைக்க உள்ள மணிகளை இவருக்கு அர்பணித்துவிட்டு, பின் நதிநீருக்கு அர்பணித்துவிட்டு பின்பே விவசாயத்திற்கு, ஒழுங்கள் திறந்து நீரை விடுவது வழக்கமாக உள்ளது. மானில விவசாயிகள், பொறியாளர்கள், மந்திரிகள் என பலரும் இப்பூஜையில் கலந்துகொள்வார்கள்.

கல்லணையில் மற்றும் மூன்று கோயில்கள் முறையே ஶ்ரீவினாயகர், ஶ்ரீகாளியம்மன், ஶ்ரீகருப்பணசாமி இவர்களுக்கும் அப்பொழுது பூஜைகள் நடத்தப்படுகிறது.

கோயிலுக்கு இது மிகவும் வினோதமான இடம்

ஶ்ரீவீர ஆஞ்சநேயர் திருக்கோயில், கல்லணை, தமிழ்நாடு வழக்கமீறிய இந்த இடத்தை ஶ்ரீஆஞ்சநேயர் தனக்கு தெர்ந்து எடுத்திருப்பது வினோதமான செயலாகும். 2008 ஜனவரியில் நான் இங்கு சென்றிருந்த பொழுது முன் மண்டபத்தில் கனுகால் அளவு தண்ணீர் இருந்தது. கொள்ளிடத்தில் நீர் திறந்து விட்ட பிறகு, கோயிலின் அடிதளமும், முன்மண்டபத்தின் தளமும் தெரியாதாம், நீர் கர்ப்பகிரஹத்தின் கதவை ஒட்டி ஓடுமாம். கற்பனைக்கு எட்டாத வர்ணனை, பார்த்தால் தான் புரியும் என்கிறார் கோயிலில் பூஜை செய்பவர். ஒரு கோயிலுக்கு இப்படிப்பட்ட இடம் நினைத்து பார்க்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு இடத்தை தனக்கு தேர்ந்தெடுத்து அமர்ந்திருக்கும் ஶ்ரீஆஞ்சநேய சுவாமிக்கே இதன் இரகசியம் வெளிச்சம்.

பத்துக்கு பத்து அடி இருக்கும் கோயில் என்பது கர்ப்பகிரஹம் மட்டுமே. கோயிலின் முன் பெரிய மண்டபம் உள்ளது. கர்ப்பகிரஹத்தை சுற்றி இரண்டடி அகலத்திற்கு பாதை உள்ளது. நெருக்கமான கம்பிகிராந்தியினால் மூடப்பட்டுள்ளது.

மேலே காணும் வரைபடத்தைப் பற்றி:
நான் வரைந்திருக்கும் இந்த வரைபடத்தில் கோயில் முன் மண்டபத்திலிருந்து எப்படி இருக்கும் என்பதை காட்டியுள்ளேன். கோயில் விமானம் மண்டபத்திலிருந்து தெரியாது, ஆனால் பக்கத்தில் உள்ள படிகள் வழியாக சென்றால் பார்க்கலாம். கூரையில்லாமல் முன் மண்டபத்திலிருந்து பார்த்தால் எப்படியிருக்கும் என்பதற்காக இவை இரண்டையும் ஒன்று சேர்த்து வரையப்பட்ட படம் இது.

ஶ்ரீஜய வீர ஆஞ்சநேயர்

மூலவரின் மூர்த்தம் புடைப்பு சிலை ரூபத்தில் இருக்கிறது. மூலவர் வடக்கு நோக்கியிருக்கிறார். வடக்கு நோக்கி நடப்பது போல் இருக்கிறார். அவரது இடது திருக்கரம் இடுப்பில் வைத்துள்ளார் அதேசமயம் "சௌகந்திகா புஷ்ப"த்தின் தண்டையும் பிடித்துள்ளார். புஷ்பம் அவரது இடது தோளின் மேல் காணப்படுகிறது. அவரது வலது திருக்கரம் அபய முத்திரையை தரித்து நம் எல்லோருக்கும் பயத்தை அகற்றுகிறது. அவரது நீண்ட வால் உயர்ந்து தலைக்கு மேல் வளைந்த நுனியில் மணியுடன் காணப்படுகிறது. கழுத்தில் மூன்று மணிமாலைகள் இருக்கின்றன. கூர்மையான தீர்க்கமான உளிர்விடும் கண் பார்வை நம்மை மெய்மறக்க செய்கிறது.

தினசி பூஜை ஶ்ரீமாத்வ சம்பிரதாயத்தின் விதிபடி நடத்தப்படுகிறது.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "ஶ்ரீவீர ஆஞ்சநேயர் திருக்கோயில், கல்லணை"

 

அனுபவம்
இரண்டாயிரம் ஆண்டு பழமையான கல்லணையை இருநூறு ஆண்டுகளாக கட்டி காப்பவர் ஶ்ரீஜய வீர ஆஞ்சநேயர், வழக்கமீறிய இடத்தை தனக்கென்று தேர்ந்தெடுத்து காத்திருக்கிறார். உண்மைக்கு புறம்பில்லா அதிசயம்! எல்லாவரையும், எல்லோரையும் காப்பவர் ஶ்ரீஆஞ்சநேயர். இவரிடம் தஞ்சமடைவோம், அதனால் நமக்கு கற்பனைக்கும் அப்பால் பட்டவை கிடைப்பதை அனுபவிப்போம்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: பிப்ரவரி 2018
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+