home-vayusutha: ஸ்லோகம் கோவில்கள் கட்டுரைகள்
boat

பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் வளாகம், பஞ்சமுகி, ரைச்சூர், கர்நாடகா

பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், பஞ்சமுகி, ரைச்சூர், கர்நாடகா

ஜீ.கே.கௌசிக்


குரு ஶ்ரீஇராகவேந்திரா

குரு ஶ்ரீஇராகவேந்திரா மகான் குரு இராகவேந்திரா அவர்கள் ஶ்ரீமாத்வாசாரியார் பரம்பரையை சேர்ந்த த்வைத சித்தாந்தத்தை பின்பற்றியவர். அவர் மாச்சல்லா என்னும் தலத்தில் ஜீவ சமாதி எய்துவதற்காக ஆயத்தங்கள் செய்துக்கொண்டிருந்தார். இன்று அத்தலம் மந்திராலயா என்னும் பெயரில் அறியப்படுகிறது.

மாச்சல்லாவில் தங்கியிருந்த காலத்தில் ராயரு [குரு இராகவேந்திரா] அவர்கள் அருகிலிருக்கும் புனித தலங்களுக்கு செல்வது வழக்கம். அப்படி ராயரு விஜயம் செய்த கிராமங்களில் இரண்டு மிகவும் பிரசுத்தம். முதலாவதாக தனது சீடரும் சீரிய த்வைத வேதாந்தியுமான ஶ்ரீஅப்பனசாரியாரை காண துங்கபத்ரா நதிகரையில் அமைந்துள்ள பிக்ஷாலயா [பிச்சாலி என்றும் பெயர்] என்னும் கிராமமாகும். இரண்டாவதாக கானாதலம் [கந்தால் கிராமம், ரைச்சூர். காலந்தாலா என்றும் பெயர்] என்னும் கிராமத்தில் இருக்கும் ஒரு குகைக்கு வருவார், பல நாட்கள் அங்கேயே தவம் இருப்பார். மாச்சல்லா கிராமத்திலிருந்து துங்கபத்திரா நதியை தாண்டி அக்கரையில் இந்த இரு கிராமங்களும் இருக்கின்றன.

நமது இணைய தளத்தில் குரு இராகவேந்திராவின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஶ்ரீஹனுமத் பக்தர் -குருஇராகவேந்திரா - சொடுக்கவும்

நமது இணைய தளத்தில் ஶ்ரீஅப்பனாசாரியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஶ்ரீஹனுமத் பக்தர்-ஶ்ரீஅப்பனாசாரியா - சொடுக்கவும்

கந்தால் கிராமம்

பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் முகப்பு, பஞ்சமுகி, ரைச்சூர், கர்நாடகா மாச்சல்லா தலம் இப்பொழுது மந்திராலயா என்றே அழைக்கப்படுகிறது. இது கர்நூல் மாவட்டம் ஆந்திர பிரதேசத்தில் உள்ளது. இங்கிருந்து கந்தால் கிராமம் - ஆட்டோவில் சென்றால் சுமார் முப்பது நிமிடம் தான் ஆகும். மந்திராலயாவிலிருந்து ரைசூர் நெடுஞ்சாலையில் வந்தால் கர்நாடகாவின் உள் நுழைந்ததும், வலது புறம் திரும்பினால் கந்தால் கிராமம் வரும். இடது புறம் திரும்பினால் பிக்ஷாலயா என்னும் பிச்சாலி கிராமம் செல்லலாம்.

வலதுபுறம் திரும்பினால் மிகவும் மோசமான சாலை வழியாக கந்தால் கிராமத்தை அடையலாம். இந்த கிராமத்தில் கோயிலுக்கு அருகாமையில் சில கடைகள் உள்ளன. மற்றப்படி அவ்வளவு பரபரப்பு ஏதுமில்லா கிராமம்.

ஶ்ரீ ராயரு தவம் புரிந்த குகை

ஶ்ரீராயரு அவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் தவம் செய்த குகை ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது. சுற்றும் பல பாறைகளால் ஆன இயற்கையாகவே தோன்றிய பல அழகான வடிவங்கள் காணப்படுகிறன. இவைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் வினோதமாகவும் இருக்கின்றது. குகை இருக்கும் குன்றின் மேல் ஏறுவதற்கு சுமார் ஐம்பது படிகட்டுகள் அமைத்துள்ளனர். குன்றின் நாம் ஏறியதும் சிறிய குறுகலான பாதை வழியாக குகைக்கோயிலுக்கு செல்ல வேண்டும். குகையின் புனிதத்துவத்தை அங்கு நுழைந்ததுமே நம்மால் உணரமுடிகிறது. குரு இராகவேந்திரர் இவ்விடத்தை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பது அதன் பவித்திரத்தை நாம் உணரும் போழுது நமக்கு புரிகிறது. இன்றும் இவ்விடத்தின் பவித்திரத்வத்தை பராமரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சமுகி தல வரலாறு

பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி பாதரக்ஷை இக்குகையில் ஶ்ரீராயரு ஶ்ரீமூலைராமருக்கு பூஜைகளை முடித்த பிறகு, தியானத்தில் ஆழ்ந்து விடுவார். பன்னிரண்டு ஆண்டுகள் இப்படி அவர் இக்குகையில் தவம் இருந்திருக்கிறார். இப்பன்னிரண்டு ஆண்டில் ஶ்ரீராயரு அவர்கள் ஶ்ரீவெங்கடேஸ்வரரையும் ஶ்ரீலக்ஷ்மியையும் அங்கு இருக்கும் பாறையில் பதித்திருக்கிறார்.

இப்படி ஶ்ரீராயரு அவர்கள் இக்குகையில் தவம் இருந்த பொழுது, ஒரு நாள் ஶ்ரீஆஞ்சநேயர் மிகவும் தனிசிறப்பான ரூபத்தில் காட்சிதந்தார். அவர் ஹனுமார், ஹயக்கீரீவர், நரசிம்மர், கருடர், வராஹர் என ஐந்து முகங்களுடன் ஶ்ரீராயருக்கு முன் காட்சி தந்தார். ஶ்ரீராயரு தனக்கு எப்படி ஹனுமார் காட்சி தந்தாரோ அப்படி ஒரு புடைப்பு சித்திரத்தை அங்கு பாறையில் பதிப்பித்தார். இன்றும் இம்மூர்த்ததிற்கு பூஜைகள் முறைபடி செய்யப்படுகிறது.

பஞ்சமுக ஹனுமார் வரலாறு

இராமருக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் தான் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காக எல்லவிதமான வழிகளையும் பயன்படுத்தினான் இராவணன். தனது பாதாள லோக அரசன் மாயாவி தம்பி அஹிராவணனை தனக்கு உதவிக்கு அழைத்து ஶ்ரீஇராம லக்ஷ்மணர்களை அழிக்குமாறு வேண்டினான். அஹிராவணனும் தனது மாயாவி சக்தியால் விபீஷணனைப் போல் ஶ்ரீஇராமரையும் லக்ஷ்மணனையும் காவல் புரிந்துக்கொண்டிருந்த ஹனுமாரிடம் வந்தான். ஹனுமாரை நம்பவைத்து தான் அவர்களை ராவணன் என்னும் மாயாவியிடம் இருந்து காப்பதற்காக காவல் புரிவதாக கூறினான்.

MMMMM

பஞ்சமுகி தல வரலாறு ஹனுமார் சற்றே நகர்ந்ததும் இராமலஷ்மணர்களை தனது இராஜ்ஜியமான பாதாளத்திற்கு அபகரித்துச் சென்றான். உண்மை விபீஷணர் வந்ததும் எல்லாம் விளங்கியது, இது அஹிராவணனின் கைவேலை என்பது புரிந்தது. அஹிராவணனை எப்படி அழிப்பது என்பதை ஹனுமாருக்கு எடுத்துரைத்து ஹனுமாரை பாதாள லோகத்திற்கு அனுப்பினார்கள்.

பாதாளலோகம் சென்ற ஹனுமார் அஹிராவணனை அழிக்க முற்பட்டார். விபீஷணன் கூறிய படி அஹிராவணனின் பூஜையில் இருக்கும் ஐந்து விளக்குகளையும் ஒரே சமயத்தில் அணைக்க வேண்டும். இதனை நடத்தி முடிக்க ஹனுமார் ஐந்து முகங்களை -பஞ்சமுகி- தரித்துக் கொண்டார். அப்படி தரித்துக்கொண்ட ஐந்து முகத்திலிருந்து ஒரே சமயத்தில் ஐந்து விளக்குகளையும் அணைத்து, அஹிராவணனை அழித்து இராமலக்ஷ்மணரை காப்பாறினார்.

பஞ்சமுகி தலம்

இந்த பஞ்சமுகமாக தான் இருந்தப்பொழுது எப்படியோ அப்படியே குரு ராயருக்கு ஹனுமார் தரிசனம் கொடுத்தார். அதனால் இந்த க்ஷேத்திரமே பஞ்சமுக க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இக்குகைகோயிலில் தினசரி பூஜை ஶ்ரீபஞ்சமுகி ஹனுமாருக்கு நடக்கிறது. பின்பு ஒரு சமயம் ஶ்ரீஅனந்தாசாரியா என்னும் பூஜகர் ருத்ரதேவரு, கணபதி ஆகியோரையும் இங்கு ஆவாகனம் செய்துள்ளார்.

இக்கோயிலில் பல ஹோமங்கள் நடத்தப்படுகிறது. அப்படி நடத்தப்படும் ஹோமத்தில் கிடைக்கும் ரக்ஷையையே [சாம்பல்] பிரஸாதமாக வழங்குகிறார்கள்.

குகைக்கோயிலும் சுற்றுபுறமும்

துவஜ ஸ்தமபத்தின் அருகில், கல்லான ஹனுமார் கதை ஒன்று உள்ளது, கதைக்கு அருகில் இருக்கும் சன்னிதியில் ஒரு ஜோடி காலணி காணப்படுகிறது. இது ஹனுமாரின் காலணி என்கிறார்கள்.

சுற்றும் பல பாறைகளால் ஆன இயற்கையாகவே தோன்றிய பல அழகான வடிவங்கள் காணப்படுகிறன. இவைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் வினோதமாகவும் இருக்கின்றது. ஒரு வடிவம் படுக்கையும் தலைக்கணியும் போலும், மற்றொன்று பறக்கும் விமானம் போலும் இருக்கிறது, இப்படி பல வடிவங்களை பார்க்கலாம்.

இக்குகைகோயிலுக்கு வடக்கே அரை கிலோமீட்டர் தொலைவில் கிராம தேவதை ஶ்ரீயரகாலம்மா உள்ளாள். பஞ்சமுகி க்ஷேத்திரம் வருபவர்கள் ஶ்ரீயரகாலம்மாவையும் தரிசனம் செய்வது பாரம்பரியம்.

 

திருக்கோயில் இருப்பிடம் :     "பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில், பஞ்சமுகி, ரைச்சூர்"

 

அனுபவம்
பஞ்சமுகி ஹனுமார் நமக்கு தைரியம், வித்தை, நேர்மை, பக்தி, ஞானம் எல்லாம் அளிக்கவல்லவர். தரிசித்து எல்லாம் பெற்றுச்செல்வோம்.

தமிழாக்கம் :திருமதி. ஸ்ரீமதி
முதல் பதிப்பு: பிப்ரவரி 2019
திருத்தப்பட்ட பதிப்பு: செப்டம்பர் 2020


 

 

ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே
+